search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து காவல்துறையினர்
    X
    போக்குவரத்து காவல்துறையினர்

    பைக்கில் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் - இன்று முதல் அமல்

    மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்கப்பட உள்ளது.
    சென்னை:

    சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என மாநகர போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

    சென்னையில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் மரணம் தொடர்பாக மாநகர போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தினர்.

     இதில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் போது ஹெல்மெட் அணியாத காரணத்தால் தலை நசுங்கி உயிரிழப்பது தெரிய வந்தது.

    இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் கடந்த 15-ந்தேதி வரையில் ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்கு எடுக்கப்பட்டது. இதில் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் ஹெல்மெட் அணியாமல் சென்று 98 பேர் உயிரிழந்திருப்பதும். 841 பேர் காயம் அடைந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது. 

    இவர்களில் 80 பேர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர்கள் என்பதும், மீதம் உள்ள 19 பேரும் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது. ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற 714 பேரும், பின்னால் அமர்ந்து சென்ற 127 பேரும் காயம் அடைந்து இருக்கிறார்கள்.

    இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதற்காக இன்று முதல் சென்னையில் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை ஒட்டிச்செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து விபத்தில்லா சென்னையை உருவாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாநகர போலீஸ் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, சென்னையில் உள்ள 312 போக்குவரத்து சந்திப்புகளிலும் இன்று மறுநாள் முதல் அதிரடி சோதனை நடத்தப்படும். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்கப்பட உள்ளது. எனவே மோட்டார் சைக்கிளில் செல்லும் இருவருமே கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
    Next Story
    ×