search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெல்மெட்"

    மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் இல்லையென்றால் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஹெல்மெட் அணியாதவர்களிடம் இருந்து கடந்த மாதம் 23-ந் தேதி முதல் போக்குவரத்து போலீசார் மீண்டும் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தனர்.

    இதன்படி தினமும் அபராதம் விதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் இல்லையென்றால் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதன்படி கடந்த 12 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 21 ஆயிரத்து 984 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு ஹெல்மெட் அணியாமல் பயணித்த 18 ஆயிரத்து 35 பேர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது.

    கடந்த 12 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டிச் சென்றவர்களிடம் இருந்து ரூ.21 லட்சத்து 98 ஆயிரத்து 400 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பின்னால் அமர்ந்து சென்றவர்களிடம் ரூ.18 லட்சத்து 3 அயிரத்து 500 அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது.

    இதன் மூலம் ஹெல்மெட் அணியாதவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் வரையில் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே வாகன விதிமீறல் வழக்குகளில் தொடர்புடையவர்களிடம் இருந்து தொடர்ந்து அபராதம் வசூலிக்க நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 10 அழைப்பு மையங்கள் அமைத்து போலீசார், போனில் தொடர்பு கொண்டு பேசி அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதன்படி கடந்த 50 நாட்களில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 66 பேர் பழைய வழக்குகளுக்கான (மார்ச் 2019 முதல் பதியப்பட்ட பழைய வழக்குகள்) அபராதத் தொகையாக 1 கோடியே 93 லட்சத்து 75 ஆயிரத்து 970 ரூபாய் விதி மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டது.

    இதில் 67 வாகன ஓட்டிகள் 100க்கும் அதிகமான விதி மீறல்களில் ஈடுபட்டு அபராதம் செலுத்தி உள்ளனர். ஒரே வாகன ஓட்டி அவருடைய ஒரே வாகனத்திற்காக 274 விதிமீறல்களில் ஈடுபட்ட அபராதம் செலுத்தி உள்ளார்.

    குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்கிய 1181 வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ. 1 கோடியே 19 லட்சத்து 12 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதில் பெரும்பாலனோர் சராசரியாக ரூ.10000 அபராதம் செலுத்தி இருக்கிறார்கள்.

    மொத்தம் 1 லட்சத்து 28 ஆயிரத்து 247 பழைய வழக்குகளில் ரூ.3 கோடியே 12 லட்சத்து 87 ஆயிரத்து 920 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இது மட்டுமில்லாமல் புதிய வழக்குகளுக்காக ரூ. 3 கோடியே 37 லட்சத்து 34 ஆயிரத்து 800 அபராதமாக வசூலித்துள்ளனர்.

    சென்னை போலீசார் கடந்த 50 நாட்களில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 284 வழக்குகளில் ரூ.6 கோடியே 50 லட்சத்து 22 ஆயிரத்து 770 அபராத தொகையாக வசூலித்து உள்ளனர்.

    இந்தியாவில் சாலை விபத்து, உயிரிழப்புகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகின்றன.
    மும்பை:

    சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் மரணம் தொடர்பாக போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தியதில், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும்போது ஹெல்மெட் அணியாத காரணத்தால் தலை நசுங்கி உயிரிழப்பது தெரியவந்தது.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என மும்பை போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டனர். அடுத்த 15 நாட்களில் இது அமலுக்கு வரும் என போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹெல்மெட் கட்டாயம் விதியை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.500 அபராதம் மற்றும் 3 மாதத்திற்கு லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சென்னையிலும் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    அனைத்து வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் விதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர், சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக  சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கைகளை நடத்தி வாகன விதி மீறுபவர்களை கண்காணித்தும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரின் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

    வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (23.05.2022) சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. ஹெல்மெட் அணியாததற்காக 1,903 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீதும், 2,023 வழக்குகள் பின்னிருக்கை பயணிகள் மீதும் பதியப்பட்டுள்ளது. 

    எனவே, அனைத்து வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் விதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என எச்சரிக்கப்படுகிறது.  ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சிறப்பு தணிக்கை மேலும் தொடரும்.

    அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்கவும், விபத்தில்லா நகரை அடையவும் சென்னை காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்கப்பட உள்ளது.
    சென்னை:

    சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என மாநகர போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

    சென்னையில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் மரணம் தொடர்பாக மாநகர போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தினர்.

     இதில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் போது ஹெல்மெட் அணியாத காரணத்தால் தலை நசுங்கி உயிரிழப்பது தெரிய வந்தது.

    இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் கடந்த 15-ந்தேதி வரையில் ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்கு எடுக்கப்பட்டது. இதில் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் ஹெல்மெட் அணியாமல் சென்று 98 பேர் உயிரிழந்திருப்பதும். 841 பேர் காயம் அடைந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது. 

    இவர்களில் 80 பேர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர்கள் என்பதும், மீதம் உள்ள 19 பேரும் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது. ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற 714 பேரும், பின்னால் அமர்ந்து சென்ற 127 பேரும் காயம் அடைந்து இருக்கிறார்கள்.

    இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதற்காக இன்று முதல் சென்னையில் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை ஒட்டிச்செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து விபத்தில்லா சென்னையை உருவாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாநகர போலீஸ் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, சென்னையில் உள்ள 312 போக்குவரத்து சந்திப்புகளிலும் இன்று மறுநாள் முதல் அதிரடி சோதனை நடத்தப்படும். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்கப்பட உள்ளது. எனவே மோட்டார் சைக்கிளில் செல்லும் இருவருமே கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
    ×