search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    • சூரியனார் கோவில் ஸ்ரீ சூரியநாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை.
    • காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகப்பெருமான் தேரோட்டம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-6 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : ஏகாதசி பிற்பகல் 2.53 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : அஸ்தம் நாளை விடியற்காலை 4.09 மணி வரை பிறகு சித்திரை

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    நாளை சுப முகூர்த்த தினம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரியநாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. மதுரை ஸ்ரீ கூடலழகர் கருட வாகனத்தில் புறப்பாடு. திருப்புகழூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் சகோபுரசகித வெள்ளி விருஷப சேவை. காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகப்பெருமான் தேரோட்டம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நிறைவு

    ரிஷபம்-ஆர்வம்

    மிதுனம்-முயற்சி

    கடகம்-பரிவு

    சிம்மம்-ஓய்வு

    கன்னி-சிந்தனை

    துலாம்- நற்செயல்

    விருச்சிகம்-வரவு

    தனுசு- சாதனை

    மகரம்-உண்மை

    கும்பம்-வரவு

    மீனம்-பயணம்

    • வைகாசி விசாக தினத்தன்று அவரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    • ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேற்றே கோவிலில் குவியத்தொடங்கிவிட்டனர்.

    திருச்செந்தூர்:

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கோவிலில் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. முருக பெருமான் அவதரித்த வைகாசி விசாக தினத்தன்று அவரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது.

    விசாக திருநாளான வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.

    23-ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேற்றே கோவிலில் குவியத்தொடங்கிவிட்டனர்.

    மேலும், கோடை விடுமுறையையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்து, கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் குவியும் பக்தர்கள் ஆங்காங்கே குழுக்களாக அமர்ந்து முருகபெருமானின் திருப்புகழை பாடி வழிபடுகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கிணறு, பம்ப் தீய பலன்களைத் தரும்.
    • வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும்.

    வாஸ்து சாஸ்திரம் என்பது இயற்கை, கோள்கள் மற்றும் பிற ஆற்றல்களின் ஐந்து கூறுகளை சமநிலைப்படுத்தும் இந்திய திசை அறிவியல் ஆகும். கலை, வானியல் மற்றும் ஜோதிடம் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் இது யோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மிகவும் பயனுள்ள வாழ்க்கை இடங்களை உருவாக்க உதவுகிறது. இது குடியிருப்பாளர்களின் ஆரோக்கியம், நிதி மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.

    வாஸ்து பகவானை வழிபட தடைபட்டிருந்த வீடு மனை கட்டிடப்பணிகள் சிறப்படையும். வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்க நாம் சில விசயங்களை செய்தால் தோஷங்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

    வீட்டுமனை சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ அமைய வேண்டும். வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம். மழைநீர் ஈசானிய மூலை வலியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது. வீட்டுக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது.

    வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு இருப்பது நல்லது. மனையில் வீடு கட்டும் போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில் கிணறு அல்லது பம்ப் அமைத்து நீர் எடுத்து பயன்படுத்த வேண்டும். வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கிணறு, பம்ப் தீய பலன்களைத் தரும்.

    வீட்டின் தெற்கும், மேற்க்கும் குறைந்த இடமும், வடக்கு, கிழக்கில் அதிக இடமும் விட்டு கட்ட வேண்டும். வீடு கட்ட கடைக்கால் தோண்டும் போது முதலில் ஈசானியத்தில் ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும். வீடு கட்டுமானப் பணியின் போது முதலில் தென்மேற்கில் ஆரம்பித்து ஈசானியத்தில் முடிக்க வேண்டும்.

    தென்மேற்கு மூலை 90 டிகிரி சரியாக இருக்க வேண்டும். வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும்.

    பஞ்சபூத ஆற்றல் கிடைக்க ஈசானிய மூலை காலியாக இருக்க வேண்டும். மாலையில் விளக்கேற்ற சுபிட்சமுண்டாகும். வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள், ஜன்னல்கள் அமைய வேண்டும். வீட்டிற்கு ஜன்னல், கதவுகள் இரட்டைப்படையில் இருப்பதே நல்லது.

    • இரும்பு உலோகத்தால் செய்யப்பட்ட சனி பகவான் விக்கிரகத்தை வழிபடுவது கூடுதல் சிறப்பு.
    • மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

    செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது. இவை அனைத்தும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமெனில் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம். மற்ற விரதங்களை காட்டிலும் சனிக்கிழமை விரதத்திற்கென்று தனி மகத்துவம் உண்டு. ஒரு மாதத்தின் வளர்பிறையில் வரும் சனிக்கிழமையில் இந்த விரதத்தை தொடங்கலாம். இந்த விரதம் 11 வாரம் முதல் 51 வாரங்கள் வரை கடைப்பிடித்தால் அது நன்மையை தரும் என்பது நம்பிக்கை. நவக்கிரகங்களில், சனிபகவானை 'ஆயுள்காரகன்' என்று அழைக்கிறோம். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுட்காலம் அமையும்.

    இந்த சனிக்கிழமை விரதத்தை அனுசரிப்பவர்கள், காலையில் எழுந்து புனித நீராடி கருப்பு அல்லது அடர் நீல நிறத்தில் உடையணிந்து கொள்ளலாம். இரும்பு உலோகத்தால் செய்யப்பட்ட சனி பகவான் விக்கிரகத்தை வழிபடுவது கூடுதல் சிறப்பு. பூஜையின்போது கருமையை ஒட்டிய மலர்கள், எள்ளு, கருப்பு வஸ்திரம் ஆகியவற்றை சனி பகவானுக்கு படைக்க வேண்டும். அதனுடன் வேக வைத்த அரிசியையும் வைக்கலாம்.


    இந்த பூஜையை அனுசரிக்கும் பக்தர்கள், அனுமன் அல்லது பைரவர் கோவிலுக்குச் செல்லலாம். ஒரு நாள் முழுவதும் விரதம் இருந்து, சூரிய அஸ்தமனத்திற்கு பின் உணவை உட்கொள்ளலாம். பகலில் பழமும், நீர் கலந்த பானத்தை மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

    சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைப்பிடிக்கத் தொடங்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமையில் தொடங்குவது மிகவும் விசேஷம். சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டும் என்றால், சனிக்கிழமை விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

    • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை
    • உப்பிலிய்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-5 (சனிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : தசமி மதியம் 12.53 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : உத்திரம் நள்ளிரவு 1.39 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம் : மரணயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருக்கண்ணபுரம் ஸ்ரீகவுரிராஜப் பெருமாள் காலை பரவாசுதேவ சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் ராஜாங்க சேவை. பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி காமதேனு வாகனத்தில் பவனி. நாட்டரசன்கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி காலை பல்லக்கிலும், இரவு அன்ன வாகனத்திலும் பவனி. சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் ரதோற்சவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலிய்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பக்தி

    ரிஷபம்-பண்பு

    மிதுனம்-நலம்

    கடகம்-உறுதி

    சிம்மம்-திடம்

    கன்னி-சுகம்

    துலாம்- பாராட்டு

    விருச்சிகம்-உழைப்பு

    தனுசு- உயர்வு

    மகரம்-அமைதி

    கும்பம்-அன்பு

    மீனம்-பாசம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி கிழமை என்பது செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவிக்கு உகந்த நாளாகும்.
    • அன்னை மகாலட்சுமியின் அருள் இருந்தால் வாழ்வில் அளவற்ற மகிழ்ச்சியும் வளமும் உண்டாகும்.

    கடன் சுமை அதிகரிக்க பெரும்பாலும் வீட்டில் இருப்பவர்கள் மகாலட்சுமி கடாட்சத்துடன் வைக்காமல் இருப்பதே காரணமாக இருக்கும்.

    வெள்ளிக்கிழமை அன்று யாருக்கும் பணம் கடனாகக் கொடுக்க கூடாது அப்படி கொடுத்தால் வீட்டில் உள்ள லட்சுமி போய் விடுவாள் என்பது அனைவருக்கும் தெரிந்த பொதுவான ஒன்றாகும். தங்க நகை ஆபரணங்களையும் யாருக்கும் வெள்ளிக்கிழமை கடனாகத் தரக்கூடாது. சுக்கிரனுக்கும் மகாலட்சுமிக்கும் உகந்த வெள்ளிக்கிழமை என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

    கடன் சுமை அதிகரிக்க பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை மகாலட்சுமி கடாட்சத்துடன் வைக்காமல் இருப்பதே காரணமாக இருக்கும். வாரத்தின் ஏழு நாட்களில் வெள்ளிக்கிழமையே பெரும்பாலும் தெய்வத்திற்கு உகந்த நாளாக அனைவரும் கடைபிடிக்கின்றனர். வெள்ளிக்கிழமை அன்று வீட்டை சுத்தப்படுத்தி விரதமிருந்து தெய்வ வழிபாடுகள் செய்வார்கள்.


    எல்லாக் கிழமையிலும் எல்லாவற்றையும் நாம் செய்துவிடக் கூடாது. குறிப்பிட்ட கிழமைகளில் குறிப்பாக வெள்ளிக்கிழமையில் சுத்தம் செய்யக் கூடாத சில விஷயங்கள் உள்ளன. இவற்றை செய்வதால் வீட்டில் கடன் பிரச்சினை ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. உதாரணத்திற்கு வெள்ளிக்கிழமையில் ஒட்டடை அடிப்பது தவிர்க்க வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. அதிலும் வெள்ளிக்கிழமையில் பெண்கள் ஒட்டடை அடிப்பது கூடவே கூடாது.

    வெள்ளிக்கிழமை அன்று அடுப்புகளை துடைக்கக் கூடாது வியாழக்கிழமை இரவே துடைத்து வைத்துவிடுவது நல்லது. வெள்ளிக்கிழமை என்றால் அனைத்து பெண்களும் வாசலில் கோலம் போடுவர் அவ்வாறு போடும் கோலம் புள்ளி வைத்து போடக்கூடாது ரங்கோலி கோலம் போட்டாலே போதுமானது.

    வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களை கழட்டுவதோ அல்லது கழட்டி சுத்தம் செய்வதோ கூடாது. தங்க ஆபரணங்களை பிறருக்கு கடன் கொடுக்கக் கூடாது. பணத்தையோ, தயிர், உப்பு, ஊறுகாய், இட்லி, தோசைக்கு அரைத்து வைத்த மாவை பிறருக்கு கொடுக்கக் கூடாது.


    வெள்ளிக்கிழமை அன்று பூஜை பொருட்களை விளக்கவும் அல்லது தொடைக்கவும் கூடாது பூஜை பொருட்களை சுத்தம் செய்வதற்கு உகந்த நாள் வியாழக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமையில் பூஜை அறையை சுத்தம் செய்வது மிகவும் நல்லது. அதே போல் வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று மட்டும் அழுக்கு துணிகளை சேர்த்து வைத்திருப்பது கூடவே கூடாது. வெள்ளிக்கிழமை அன்று துவைப்பதை தவிர்க்க வேண்டும். பொதுவாகவே வெள்ளிக்கிழமையில் அழுக்கு துணிகள் வீட்டில் இருக்கக்கூடாது. இதனால் வீட்டில் கடன் சுமை அதிகரிக்கும்.

    பாத்ரூம், கழிவறையையும் இந்த நாளில் சுத்தம் செய்யக்கூடாது. அதே போல் சமையலறையில் அலமாரிகளில் போடப்பட்டிருக்கும் பேப்பர்களை புதிதாக மாற்ற கூடாது. மளிகை பொருட்களை எதுவாக இருந்தாலும் அதனை துடைத்து எடுக்க கூடாது. அதை எல்லாம் மறுநாள் தாராளமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் வெள்ளிக்கிழமை அன்று எந்த ஒரு பொருளையும் சுத்தம் செய்வது கூடாது.

    வெள்ளிக் கிழமையில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. அதேபோல் முடி வெட்டுவதும் முகசவரம் செய்வதும் கூடாது. வெள்ளி கிழமை அன்று தேவையற்ற செலவுகளை செய்வது தவிர்த்துக் கொள்ள வேண்டும். முடி, நகம் இரண்டையும் வெள்ளிக்கிழமை வெட்டக்கூடாது என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். இந்த இரண்டுமே நம் உடலில் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது . இதனால் வெள்ளிக்கிழமை நம் உடலில் உள்ள இந்த அங்கத்தை நான் இழக்கக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு சொல்லப்படுகிறது. இவற்றையெல்லாம் தவிர்ப்பதன் மூலம் இருக்கின்ற கடன் பிரச்சனையையும் சுலபமாக குறைக்க முடியும்.


    வெள்ளி கிழமை என்பது செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவிக்கு உகந்த நாளாகும். இந்நாளில் லட்சுமி தேவிக்கு விரதம் இருந்து சிறப்பு பூஜை செய்வதால், மகா லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைகிறாள். அன்னை லட்சுமி தேவியை மகிழ்விக்க வெள்ளிக்கிழமை செய்யப்படும் சில பரிகாரங்கள் மற்றும் பூஜைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அன்னை மகாலட்சுமியின் அருள் இருந்தால் வாழ்வில் அளவற்ற மகிழ்ச்சியும் வளமும் உண்டாகும்.


    வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஓரையில் உப்பு, அரிசி, தானியங்கள் போன்றவற்றை வாங்கி நிரப்பி வைக்கலாம். இதனால் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்பார்கள். மேலும் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். கடன் சுமை குறையும். உங்கள் வீட்டில் அன்னை மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்ய வேண்டுமென்றால், வெள்ளிக்கிழமையன்று, 5 சிவப்பு மலர்களை கையில் எடுத்து, அன்னை லட்சுமியை தியானித்து, அந்த மலர்களை பெட்டகத்திலோ அல்லது பணப்பெட்டியிலோ வைக்க பண வரவு அதிகரிக்கும்.

    • திருப்பத்தூர் ஸ்ரீதிருத்தணி நாதர் திருக்கல்யாணம்.
    • பழனி ஸ்ரீபாலதண்டாயுதபாணி தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, வைகாசி 4 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : நவமி காலை 10.55 மணி வரை. பிறகு தசமி.

    நட்சத்திரம் : பூரம் இரவு 11.03 மணி வரை. பிறகு உத்திரம்.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை

    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருப்பத்தூர் ஸ்ரீதிருத்தணி நாதர் திருக்கல்யாணம். காளையார்கோவில் ஸ்ரீசிவபெருமான் திருக்கல்யாணம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீநரசிம்மாழ்வார் ஒன்பது கருட சேவை. பழனி ஸ்ரீபாலதண்டாயுதபாணி தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருவடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

    நாளைய ராசிபலன்

    மேஷம்-ஓய்வு

    ரிஷபம்-கவனம்

    மிதுனம்-கடமை

    கடகம்-ஆரோக்கியம்

    சிம்மம்-ஜெயம்

    கன்னி-நட்பு

    துலாம்- அமைதி

    விருச்சிகம்-ஆர்வம்

    தனுசு- கவனம்

    மகரம்-முயற்சி

    கும்பம்-பண்பு

    மீனம்-பணிவு

    • ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர ஆரம்பித்து அது முடியும் நாள் வரை இந்த அபிஷேகம் நடத்தப்படும்.
    • திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தாராபிஷேகத்திற்கு தனி சிறப்பு உண்டு.

    அக்னி நட்சத்திரம் நேரத்தில் எல்லா சிவன் கோவில்களிலும் தாராபிஷேகம் நடைபெறும். அதிலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மிகச் சிறப்பாக நடைபெறும்.

    ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர ஆரம்பித்து அது முடியும் நாள் வரை இந்த அபிஷேகம் நடத்தப்படும். அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க சன்னதியில் தாராபிஷேகம் தொடங்கப்படும். அனைத்து சிவன் கோவிலிலும் உள்ள மூலவருக்கு மேலே பாத்திரம் ஒன்றைக் கட்டி தொங்க விடுவார்கள். இந்த பாத்திரத்தில் பன்னீர், வெட்டிவேர், விளாமிச்சை வேர் பச்சிலை, ஜடா மஞ்சி, பன்னீர், பச்சை கற்பூரம் ஏலக்காய். ஜாதிக்காய். கடுக்காய். மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்த நீரை நிரப்புவார்கள் பாத்திரத்தின் அடியில் உள்ள சிறிய துவாரம் வழியே அருணாச்சலேஸ்வரர் லிங்கம் மீது குளிர்ச்சியான பன்னீர் சொட்டு சொட்டாக விழும்.

    இந்த தாராபிஷேகம் அக்னி நட்சத்திரம் முடியும் நாளான மே 28ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். அதேபோல் மற்ற சிவன் கோவில்களிலும் தாராபிஷேகம் தொடங்கப்பட்டுவிட்டது.


    அக்னி நட்சத்திரத்தை ஒட்டி வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவில் மூலவருக்கு தாராபிஷேகம் தொடங்கிவிட்டது தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாராபிஷேகம் நடைபெறும். இதே போல் ஏராளமான கோவில்களில் அக்னி நட்சத்திரத்தை ஒட்டி சிவனுக்கு தாராபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிவனுக்கு தாராபிஷேகம் செய்வதால் கோடையின் வெயிலின் உக்கிரகம் தணிந்து ஓரளவு இதமான சூழ்நிலை ஏற்பட மேகக் கூட்டங்கள் கூடி வரும் சிவபெருமானின் அருள் கிடைக்கும். அதனால் நமக்கு அக்னி நட்சத்திரத்தின் சூட்டின் வேகம் குறையும். முதல் வாரம் அக்னி நட்சத்திரத்தில் இருக்கும். சூட்டின் வேகம் செல்ல செல்ல படிப்படியாக குறைந்து இதமான சூழ்நிலை ஏற்பட்டுவிடும். பல நூறு ஆண்டுகளாக இந்த தாராபிஷேகம் அனைத்து சிவன் கோவில்களிலும் நடைபெறுகின்றன. அதிலும் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தாராபிஷேகத்திற்கு தனி சிறப்பு உண்டு. ஏனென்றால் அது அக்னி தலம் அல்லவா!


    கோடையில் தாக்கம் குறைந்து போதிய மழை பெய்யும் என்பது நம்பிக்கை சில தலங்களில் தோஷ நிவர்த்தியாகவும், இந்த அபிஷேகம் செய்யப்படுகிறது. மே 28 தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    நீங்களும் தாராபிஷேகம் நடைபெறும் கோவிலில் தாராபிஷேகத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து சிவபெருமானின் அருளை பெறலாமே.

    • வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    • மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகத் தேரோட்டம் 22ந் தேதி நடக்கிறது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவிழா கொண்டாடப்படுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களில் வைகாசி விசாகம் பிரசித்தி பெற்றதாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு வேல், சேவல், மயில் உருவம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உட்பிரகாரமாக வலம் வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 9 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் கோவில் கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. அப்போது வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு வழிபட்டனர்.


    திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேதரராக முத்துக்குமாரசாமி ரத வீதிகளில் தங்க மயில், தந்த பல்லக்கு, காமதேனு, ஆட்டுக்கிடா, சப்பரம், வெள்ளியானை, வெள்ளி மயில் உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் வருகிற 21ந் தேதி மாலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் நடைபெறுகிறது.

    மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகத் தேரோட்டம் 22ந் தேதி நடக்கிறது. அன்று காலை 11.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் சிம்ம லக்கனத்தில் தேரேற்றம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.

    10 நாட்களும் பக்தி சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி, நடனம், கிராமிய பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர். 

    • வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும்
    • வசந்த உற்சவ நாட்களில் இரவு 8 மணிக்கு பிறகு ஆரியபடாள் வாசலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    திருச்சி:

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த உற்சவத்தின் போது நம்பெருமாள் கோவிலின் நான்காம் பிரகாரமான ஆலிநாடன் திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி வடபுறம் அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார்.

    உற்சவத்தையொட்டி தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ் தனத்திலிருந்து புறப்பட்டு வசந்த மண்டபதிற்கு மாலை 6 மணிக்கு சென்றடைவார். அங்கு மண்டபத்தில் நடுவில் நம்பெருமாள் ஒய்யாரமாக வீற்றிருப்பார்.

    வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும். வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணா பிஷேகம் கண்டருளினார். பின்னர் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 9மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.


    வசந்த உற்சவ விழாவின் 7ம் நாளான்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறார். 9ம் திருநாள் அன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுவார்.

    வசந்த உற்சவ நாட்களில் இரவு 8 மணிக்கு பிறகு ஆரியபடாள் வாசலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி சிறப்பு குருவார திருமஞ்சன சேவை.
    • உத்தமர்கோவில் ஸ்ரீ சிவபெருமான் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-3 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: அஷ்டமி காலை 9.06 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம்: மகம் இரவு 8.33 மணி வரை பிறகு பூரம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி உற்சவம் ஆரம்பம். உத்தமர்கோவில் ஸ்ரீ சிவபெருமான் சேஷ வாகனத்தில் திருவீதி உலா. மதுரை ஸ்ரீ கூடலழகர் உற்சவம் ஆரம்பம், அன்ன வாகனத்தில் பவனி. சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் பெரிய ரிஷப வாகனத்திலும், அம்பாள் தபசுக் காட்சி, இரவு திருக்கல்யாணம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான கொண்டைக் கடலைச்சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குருவார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-சுபம்

    கடகம்-தாமதம்

    சிம்மம்-ஆதாயம்

    கன்னி-நட்பு

    துலாம்- விருப்பம்

    விருச்சிகம்-உதவி

    தனுசு- விவேகம்

    மகரம்-கவனம்

    கும்பம்-கடமை

    மீனம்-பக்தி

    • மனந்திரும்பி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.
    • தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்

    "மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது" (மத்தேயு 4:17).

    ஒரு காலத்தில் இயற்கையின் அழகை கண்டு ரசித்து வாழ்ந்த மனிதர்கள், இன்று இயற்கையின் அழிவைக் கண்டு கலக்கம் அடைகின்றனர். சிறிது சிறிதாக பூமி தன்நிலை இழந்து மனிதர்கள் வாழத் தகுதியில்லாத சூழ்நிலை வந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படக்கூடிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    எப்படிப்பட்ட சூழ்நிலையில் மனிதர்கள் வாழ்ந்தாலும், நாம் வாழ்வதற்கு தகுதியான இன்னொரு இடம் உண்டு. ஒருநாள் அனைவரும் அங்கு ஒன்றுகூடி வாழ்வோம் என்ற எதிர்பார்ப்பு எல்லா மனிதர்களுக்குள்ளும் உள்ளது. அவ்விடம் பரலோகம், மோட்சம், சொர்க்கம் என பல பெயர்களில் பலராலும் அறியப்படுகிறது.

    பரிசுத்த வேதாகமம் 'பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது' என்று கூறுகிறது. அதாவது பரலோக ராஜ்ஜியம் அருகில் இருக்கிறது அல்லது நமக்கு நெருங்கிய தூரத்தில் உள்ளது. இது குறுகிய காலத்தைக் காட்டுகிறது. எனவே சீக்கிரம் தாமதிக்காமல் மனந்திரும்ப வேண்டும் என்று எச்சரிக்கிறது.

    'நீதிமான்களை அல்ல, பாவிகளையே மனந்திரும்புவதற்கு அழைக்க வந்தேன்' (மத்தேயு 9:13) என்று இயேசு கூறுகிறார்.

    இந்த உலகில் துன்மார்க்கமாக வாழ்கிறவர்களை யாரும் விரும்புவது இல்லை. பொதுவாக எல்லா மனிதர்களுமே நல்லவர்களாக, நற்குணங் களோடு, சமுதாயத்தில் மிகுந்த மதிப்போடு, உயர்ந்த நிலையில் இருப்பவர்களையே விரும்புவர். ஆனால் இயேசு மட்டுமே பாவிகளை தேடி இந்த உலகிற்கு வந்தார். ஏனென்றால் அவர் பாவிகளையும் நேசிக்கிறார்.

    சிலர் தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு தேவைக்காக காத்திருந்து அது நிறைவேறாது போகும்போது அந்த விரக்தியினால் ஏற்படும் கவலை, பயம் போன்ற உணர்வுகளோடு வாழ்கின்றனர். சிலர் அதில் இருந்து விடுபட வழி தெரியாமல் தவறான பாதையில் செல்கின்றனர். சிலர் மதுவுக்கும், மாதுக்கும் அடிமையாகி விடுகின்றனர்.

    ஆரம்பத்தில் சிறியதாக தோன்றிய பாவங்கள், பின்னர் அதில் இருந்து விடுபட நினைத்தாலும் முடியாதபடி அவர்களை அடிமைப்படுத்தி விடுகிறது. `பாவத்தில் இருந்து விடுபட்டு வெளியே வர நினைக்கிறேன், என்னால் முடியவில்லை' என்று பலர் கூறுவதை கேட்கலாம். இப்படிப்பட்டவர்கள் மனந்திரும்பி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

    பாவிகள் தங்களுடைய பாவத்திலேயே வாழ்வது அவருக்கு விருப்பம் அல்ல. அவர்கள் மனம் திரும்பி வாழ வேண்டும். மனிதன் தன் சுய முயற்சியால் பாவத்தில் இருந்து விடுபட முடியாது. ஆனால் இயேசுவிடம், 'இயேசுவே நான் பாவம் செய்யாமல் வாழ விரும்புகிறேன் எனக்கு உதவி செய்யும்' என்று அவரை அழைத்தால் அவர் நிச்சயமாக உதவி செய்வார்.

    'மனம் திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்'. (எசேக்கியேல் 18:32).

    'தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்' (நீதிமொழிகள் 28:13) என வேதம் கூறுகிறது. ஆனால் யாரிடம் அறிக்கையிட்டு மனந்திரும்ப வேண்டும்?

    'நீர் சர்வ வல்லவரிடத்தில் மனம் திரும்பினால் திரும்ப கட்டப்படுவீர்' (யோபு 22:23) என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.

    நாம் யாரிடம் நம்முடைய பாவங்களை சொல்லுகிறோம்? யாரிடம் மனந்திரும்புகிறோம்?

    நம்மில் சிலர் பாவத்திற்கு பரிகாரம் என்று புண்ணிய தலங்களுக்கு செல்வதும், தன்னை வருத்திக்கொள்வதும் உண்டு. பாவ பழக்கங்களால் இடிக்கப்பட்டு பழையதாகி போனது போன்ற நிலைமையில்உள்ள ஒருவருடைய வாழ்க்கையை திரும்ப கட்டப்பட வேண்டும் என்றால், சர்வ வல்லவராகிய இயேசு கிறிஸ்துவிடம் தன்னுடைய பாவங்களை அறிக்கை செய்து மனம் திரும்ப வேண்டும்.

    அப்பொழுது அவனுக்கு கர்த்தருடைய கண்களில் இரக்கம் கிடைக்கும். தான் இழந்து போன தொழில், நிலம், செல்வம், சரீர சுகம் போன்ற உலக ஆசீர்வாதங்கள் மட்டுமல்லாது, அவனது ஆத்துமா மரணத்துக்கு நீங்கலாக்கி கர்த்தருடைய இரக்கத்தால் பாதுகாக்கப்படும்.

    நம்முடைய மனம் குற்றமில்லாது இருக்க வேண்டும். 'மனுஷனுடைய இதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், கொலை பாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்ட தனங்களும், கபடும், காம விகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதுகேடும் புறப்பட்டு வரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனை தீட்டுப்படுத்தும்' (மாற்கு 7:21-22) என்று இயேசு கூறினார்.

    இப்படியான பாவங்கள் நம் இதயத்துக்குள் இருந்து புறப்பட்டு நம்மை தீட்டுபடுத்தாதபடிக்கு நம்மை காத்துக் கொள்ள வேண்டும். கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தையே நம்மிலும் இருக்க வேண்டும் (பிலிப்பியர் 2:5).

    நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். உங்களுடைய துக்கம் சந்தோஷமாக மாறவேண்டும். பரலோக வாழ்க்கையைக் குறித்த உணர்வு வேண்டும் என்பதே கர்த்தருடைய விருப்பம்.

    எனவே நாம் சர்வ வல்லவராகிய நம்முடைய கர்த்தரிடத்தில் மனந்திரும்பி சகல ஆசிர்வாதங்களையும் பெற்றுக்கொள்வோம்.

    ×