search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    • உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி உறைதல் பணிக்கு மட்டுமே இந்த திரவ நைட்ரஜனை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • ஆய்வு மதுரை முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    மதுரை:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த வாரம் திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்ட ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவனின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நிலை தேறி வரும் நிலையில் தமிழகத்தில் இந்த திரவ நைட்ரஜன் பயன்பாட்டிற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

    திரவ நைட்ரஜனை நேரடியாக உணவுப்பொருட்களில் கலந்து விற்பனை செய்யக்கூடாது, அதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி உறைதல் பணிக்கு மட்டுமே இந்த திரவ நைட்ரஜனை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் மதுரை நகர் பகுதி முழுவதும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தும் கடைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நேற்று மதியம் முதல் இரவு வரை மதுரை தெப்பக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவு கடைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அதில் திரவ நைட்ரஜன் பயன்படுத்தும் ஸ்மோக் பிஸ்கட் கடையின் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழை ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் கடை சுற்றியும் ஒட்டப்பட்டுள்ள விளம்பர ஸ்டிக்கர்களும் அகற்றப்பட்டு உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த ஆய்வு மதுரை முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    • கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
    • ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கு தனி தனியாக தடுப்பு கம்பிகள், காங்கிரீட் அமைப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலமான மணிமுத்தாறு அருவியில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினமும் குளித்து சென்றனர்.

    இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    இதில் மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்கும் தடாகம், தடுப்பு கம்பிகள் உள்ளிட்டவை கடும் சேதமாகின. தொடர்ந்து வனத்துறை சார்பில் மணிமுத்தாறு அருவியில் ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கு தனி தனியாக தடுப்பு கம்பிகள், காங்கிரீட் அமைப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    தொடர்ந்து தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று முதல் பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை வனவிதிகளுக்கு உட்பட்டு குளிக்க வனத் துறையினர் அனுமதித்தனர்.

    அதன்படி வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் வழக்கத்தைவிட ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 

    • ரெயில் பென்னாத்தூர், கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி ரோடு, மடிமங்கலம், போளூர் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
    • கடந்த சில வருடங்களுக்கு முன்பு கடற்கரை-வேலூர் மின்சார ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்க திருச்சி டிவிசன் திட்டமிட்டது.

    சென்னை:

    சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு தினமும் மின்சார ரெயில் இயக்கப்படுகிறது.

    பாஸ்ட் மின்சார ரெயிலான இவை மாலை 6 மணிக்கு கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்பட்டு வேலூர் கண்டோன் மென்ட்டிற்கு இரவு 9.35 மணிக்கு சென்றடைகிறது.

    இந்த ரெயில் மே மாதம் 2-ந்தேதியில் இருந்து வேலூரில் இருந்து திருவண்ணாமலை வரை நீட்டிக்க ரெயில்வே வாரியம் பச்சைக் கொடி காட்டியுள்ளது.

    இந்த ரெயில் வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல மே மாதம் 3-ந்தேதி மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு 5.40 மணிக்கு வந்து சேரும்.

    வேலூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 9.50 மணிக்கு தற்போது உள்ள கால அட்டவணைப்படி வந்து சேர திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் பென்னாத்தூர், கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி ரோடு, மடிமங்கலம், போளூர் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு கடற்கரை-வேலூர் மின்சார ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்க திருச்சி டிவிசன் திட்டமிட்டது.

    ஆனால் அதனை செயல்படுத்த பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. பவுர்ணமி கிரிவலத்தையொட்டி ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில் ஏற்கனவே இயக்கப்படுகிறது. இது தவிர கூடுதலாக ஒரு ரெயிலை திருவண்ணாமலைக்கு இயக்க நாங்கள் திட்டமிட்டோம். பாஸ்ட் மின்சார ரெயில் மே மாதம் முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுகிறது.

    இவ்வாறு கூறினர்.

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சிறப்பு நாட்களில் பக்தர்கள் லட்சக்கணக்கில் வருகிறார்கள். சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீபம் போன்ற விசேஷ நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரெயில் சேவை இல்லை. பஸ்கள் மூலம்தான் பெருமளவில் பக்தர்கள் செல்லும் நிலை உள்ளது. அதனால் வேலூர் வரை இயக்கப்படும் மின்சார ரெயில், திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுவதால் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் என்று ரெயில்வே நிர்வாகம் கருதுகிறது.

    • தெப்ப குளத்தில் தெப்ப தேர் விழா நடந்தது.
    • தேரோட்டம் 3 நாட்கள் நடைபெற்றது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை தேரோட்ட திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நடந்தது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் 3 நாட்கள் நடைபெற்றது. நேற்று இரவு அவினாசிலிங்கேசுவரர் கோவில் எதிரே உள்ள தெப்ப குளத்தில் தெப்ப தேர் விழா நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மின் ஒளியில் சந்திரசேகர் - அம்பாள் சாமிகள் சிறப்பு அலங்கார தோற்றத்தில் தெப்ப குளத்தில் வளம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    தெப்ப தேர் விழாவை காண குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தெப்ப குளத்தின் படிக்கட்டிலும், குளத்தின் மதில் சுவர் மீதும் அமர்ந்து கண்டுகளித்தனர்.

    • விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கலை:

    குமரி மாவட்ட தக்கலை அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜின். இவருக்கு சொந்தமாக தென் ஆப்பிரிக்கா நாட்டில் முந்திரி பருப்பு பதனிடும் தொழிற்சாலை உள்ளது. அங்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 50 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக இரணியல் அருகே வட்டம் பகுதியை சேர்ந்த ஷைபின் (வயது 32) என்பவரும், மேலாளராக தக்கலை அருகே புங்கறை பகுதியை சேர்ந்த ஜெயசந்திர சேகர் என்ற சதீஷ் (42) என்பவரும் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 22-ந்தேதி ஷைபின் பாஸ்போர்ட் புதுப்பிப்பதற்காக தென் ஆப்பிரிக்கா பகுதியில் உள்ள கானா என்னும் இடத்துக்கு செல்ல அப்பகுதியை சேர்ந்த தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த ஒருவரின் சொகுசு காரில் ஷைபின், ஜெயசந்திரசேகர் உள்பட 3 பேர் சென்றனர். அப்போது டெமா என்னும் இடத்தில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வாகனத்தில் வேகமாக மோதினர். இதில் சம்பவ இடத்திலேயே ஜெயசந்திர சேகரும், ஷைபினும் உயிரிழந்தனர்.

    இந்த விபத்து குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியானவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து விபத்தில் பலியான ஷைபின் மற்றும் ஜெயசந்திரசேகர் ஆகியோரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். மேலும் தென் ஆப்பிரிக்காவில் பலியானவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உறவினர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். பலியான ஷைபின் மற்றும் ஜெயசந்திர சேகர் உடல்கள் நாளை (27-ந்தேதி) விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டு நாளை மறுநாள் (28-ந்தேதி) அவர்களின் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இறந்துபோன ஷைபினுக்கு சுஷ்மி என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஜெயசந்திர சேகருக்கு மினி என்ற மனைவியும், 7 வயதில் ரியான்ஸ் என்ற மகனும். 3 வயதில் ரியானா என்ற பெண் குழந்தையும் உள்ளது. இதில் ரியானாவுக்கு தந்தை இறந்த அதே நாளில் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடந்த விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்துவிட்டு பேட்டி அளித்த சசிகலா சிலர் எடுத்துள்ள தவறான முடிவுகளுக்கு இந்த தேர்தல் முடிவு பாடமாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.
    • எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் ஏற்கனவே கொடி பிடித்துள்ள நிலையில் சசிகலா அவர்களோடு சேர்ந்து செயல்படுவாரா? இல்லை தனி அணியை உருவாக்குவாரா? என்கிற கேள்வியும் எழுந்து உள்ளது.

    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலா அதே வேகத்தில் முதலமைச்சர் நாற்காலியிலும் அமர நினைத்தார்.

    ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் வெளியான தீர்ப்பால் அவர் சிறை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார்.

    இதன் பின்னர் அ.தி. மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அவர் கட் சியை வழிநடத்தி வருகிறார்.

    பெங்களூரு சிறையில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் சசிகலா விடுதலையாகி வெளியே வந்தார். பெங்களூரில் இருந்து சென்னை வரை சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை பார்த்ததும் அரசியல் களத்தில் அவர் புலிப் பாய்ச்சல் பாய்வார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். அதற்கேற்ற வகையிலேயே சசிகலாவின் பேச்சுக்களும் அமைந்திருந்தன.

    அ.தி.மு.க.வுக்கு நானே தலைமை தாங்குவேன். ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு செல்வேன் என்றெல்லாம் அவர் கூறியிருந்தார்.

    ஆனால் இவையெல்லாம் வெறும் பேச்சுக்களாகி போனது. சிறையில் இருந்து வெளியில் வந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் சசிகலா இன்னும் அதிரடி காட்டாமலேயே உள்ளார்.

    2021 சட்டமன்றத் தேர்தல், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல்களில் தனது நிலைப்பாடு என்ன? என்பதைகூட வெளிப்படுத்தாமல் மவுனம் காத்துள்ள சசிகலா தற்போது புதிய வியூகத்துடன் களம் இறங்கி உள்ளார். அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு 15 கேள்விகள் அடங்கிய படிவத்தை கடிதம் போல அனுப்பி உள்ள சசிகலா 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார்.

    பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்துவிட்டு பேட்டி அளித்த சசிகலா சிலர் எடுத்துள்ள தவறான முடிவுகளுக்கு இந்த தேர்தல் முடிவு பாடமாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டே சசிகலா இப்படி கூறியிருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வினருக்கு சசிகலா படிவங்களை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எந்த அளவுக்கு கை கொடுக்கப் போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் ஏற்கனவே கொடி பிடித்துள்ள நிலையில் சசிகலா அவர்களோடு சேர்ந்து செயல்படுவாரா? இல்லை தனி அணியை உருவாக்குவாரா? என்கிற கேள்வியும் எழுந்து உள்ளது.

    அதே நேரத்தில் அ.தி.மு.க.வை மீட்கவும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தவும் சசிகலா எடுக்கும் எந்த நடவடிக்கைகளும் அவருக்கு பலன் அளிக்கப்போவதில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

    • வாக்களிக்க முடியாத பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கோவை பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 லட்சத்து 6 ஆயிரத்து 124 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் பல வாக்காளர்களால் வாக்களிக்க முடியவில்லை. இவ்வாறு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார்.

    இதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார்பாடி விளக்கம் அளித்து இருந்தார். ஆனால் அந்த விளக்கம் ஏற்கும்படியாக இல்லை என பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் வாக்காளர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி கோவையில் நேற்று வாக்களிக்க முடியாத பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார் பாடி, பொது மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் 2-வது முறையாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 2023 அக்டோபர் 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது. கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5 தொகுதிகளில் (பல்லடம் தவிர்த்து) 16 லட்சத்து 71 ஆயிரத்து 3 வாக்காளர்கள் இருந்தனர். இதில் புதிதாக 47 ஆயிரத்து 559 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். 6,181 இறப்பு, 18 ஆயிரத்து 934 நிரந்தர குடிபெயர்வு, 3,249 இரட்டை பதிவு காரணமாக மொத்தம் 28 ஆயிரத்து 364 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

    இந்த விவரங்களை சரிபார்த்து கருத்து தெரிவிக்க கட்சியினருக்கு நகல் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான மார்ச் 27-ந் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை (ஜனவரி 22-ந் தேதி முதல் மார்ச் 17-ந் தேதி) வரை மீண்டும் திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு படிவங்கள் பெறப்பட்டன.

    மார்ச் 27-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி பட்டியலில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கோவை வடக்கு மற்றும் தெற்கு ஆகிய சட்டசபை தொகுதிகளில் 17 லட்சத்து 8 ஆயிரத்து 369 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 26 ஆயிரத்து 504 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். இப்போது 1090 இறப்பு, 6998 நிரந்த குடிபெயர்வு, 245 இரட்டை பதிவு என 8,333 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

    திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் சட்டசபை தொகுதிக்கான வாக்காளர்கள் 3 லட்சத்து 97 ஆயிரத்து 755 சேர்த்து கோவை பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 லட்சத்து 6 ஆயிரத்து 124 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அங்கப்பாபள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறுகையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். வீடு- வீடாகச் சென்று ஆய்வு செய்து பெயரை நீக்கியதாக ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள் கூறி உள்ளனர். நீக்கப்பட்டதாக கூறப்படும் பட்டியலில் உள்ள 40-45 வாக்காளர்கள் ஓட்டளிக்க வந்ததாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார். எதன் அடிப்படையில் பெயர்கள் நீக்கப்பட்டன என அறிக்கை கேட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.88-க்கும் பார் வெள்ளி ரூ.88ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்த வண்ணம் இருந்து வருகிறது. இருப்பினும் நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,680-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 54,040-க்கும் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,755-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.88-க்கும் பார் வெள்ளி ரூ.88ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    • கோடை சீசனையொட்டி நாளை முதல் மே மாதம் இறுதி வரை நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் குளுகுளு கோடை சீசன் நிலவும்.

    இந்த சீசனை அனுபவிக்க தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

    ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.

    இந்தாண்டுக்கான மலர் கண்காட்சி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அடுத்த மாதம் 17-ந்தேதி தொடங்குகிறது. அன்று தொடங்கி 22-ந் தேதி வரை 6 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

    அதேபோல் அடுத்த மாதம் 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 3 நாட்கள் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64-வது பழக்கண்காட்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக 62 மலர் வகைகளில், 262 ரகங்களைக் கொண்ட 60 ஆயிரம் தொட்டிகளில் டேலியா, சால்வியா, கேண்டிடப்ட், ஜெனியா, பால்சம், அஜிரேட்டா உள்ளிட்ட ரகங்களில் மலர் செடிகள் பராமரிக்கப்பட்டு வந்தன.

    தற்போது அந்த செடிகள் அனைத்தும் பூத்து குலுங்குகின்றன. இதையடுத்து, கண்ணாடி மாளிகை அருகே உள்ள புல்வெளி மைதானத்தில் உள்ள மலர் மாடங்களில் பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் 15 ஆயிரம் மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. அதில் பூக்கள் பூத்து குலுங்குவது அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது.

    அதேபோல் பூங்காவில் புல்வெளி மைதானங்களை சீரமைக்கும் பணியிலும் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வண்ண மலர்களை கொண்டு பல்வேறு வகைகளில் அலங்காரங்களும் செய்யப்பட உள்ளது.

    கோடை சீசனையொட்டி நாளை முதல் மே மாதம் இறுதி வரை நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரும் அனைத்து வாகனங்களும் குன்னூர் வழியாக ஊட்டிக்கு செல்ல வேண்டும். ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக செல்ல வேண்டும்.

    பால், பெட்ரோலியம், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் தவிர அனைத்து கனரக வாகனங்களும் நாளை, நாளை மறுநாள் மற்றும் கோடை விழாவான 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஊட்டி நகருக்குள் வர அனுமதி கிடையாது.

    • வனத்துறையினர் இவைகள் சிறுத்தை கால் தடம் இல்லை இவைகள் நாய்கள் கால்தடம் என்று தெரிவித்தனர்.
    • சிறுத்தை நடமாட்டம் முந்திரி காடுகளில் இருப்பதாகவும் யாரும் முந்திரி கொட்டை பறிக்க செல்ல வேண்டாம் என்றும் கால் தடங்களை வைத்து பதிவிட்டனர்.

    செந்துறை:

    மயிலாடுதுறை பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கடந்த 11-ந்தேதி அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொன்பரப்பி முந்திரி காடு, செந்துறை அரசு மருத்துவமனை, நின்னியூர் பகுதியில் உலவியது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வாத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு சிறுத்தையை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

    இந்நிலையில் செந்துறை அரசு மருத்துவமனையில் தென்பட்ட சிறுத்தை இன்னமும் செந்துறை பகுதியில் சுற்றி வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் சிறுகளத்தூர் தனியார் முந்திரி காட்டில் சிறுத்தை நடமாற்றம் இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

    அதேபோல் இரவு துளாரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலை சுரங்கம் மற்றும் இருளாக்குறிச்சி ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அங்கு இருந்த லாரி ஓட்டுநர் ஒருவர் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சமூக வலைதளங்களில் சிறுத்தை நடமாட்டம் முந்திரி காடுகளில் இருப்பதாகவும் யாரும் முந்திரி கொட்டை பறிக்க செல்ல வேண்டாம் என்றும் கால் தடங்களை வைத்து பதிவிட்டனர்.


    இந்த தகவல் அப்பகுதியில் காட்டு தீயாக பரவியது. இதனால் முந்திரி விவசாயிகள் மிகவும் அச்சம் அடைந்தனர்.

    இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் சிறுத்தையை பிடிக்க திரண்டதால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் இவைகள் சிறுத்தை கால் தடம் இல்லை இவைகள் நாய்கள் கால்தடம் என்று தெரிவித்தனர். இருப்பினும் இந்த பகுதி மக்கள் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக அச்சத்தில் உள்ளனர். இதனை போக்கு வதற்காக வனத்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • டாஸ்மாக் கடைகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பீர் விற்பனை அதிகரித்து வருகிறது.
    • கடந்த 3 நாட்களாக பீர் கேட்டால் இல்லை என்ற பதில் தான் வருகிறது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை வட்டாரத்தில் ஈங்கூர், வெள்ளோடு, பெருந்துறை ஆர்.எஸ். உட்பட 14 இடங்களில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படுகிறது.

    தற்போது கோடை வெயில் வெழுத்து வாங்குவதாலும், 109 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருப்பதாலும், டாஸ்மாக் கடைகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பீர் விற்பனை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் சென்னிமலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் திடீரென பீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக பீர் கேட்டால் இல்லை என்ற பதில் தான் வருகிறது. இதனால் குடிமகன்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல கடைகளில் தேடி அழைந்தும் பீர் கிடைக்காத விரக்தியில் சரக்கு குடித்து செல்கின்றனர்.

    மேலும் டாஸ்மாக் கடைகளில் உயர் ரக சரக்குகள் வரவு அதிகரித்துள்ளதாலும், "குடிமகன்கள்" விரும்பும் சரக்குகள் கிடைப்பதில்லை. குடிமகன்கள் விரும்பி கேட்கும் பிராண்டுகள் படிப்படியாக குறைந்து விட்டன.

    விலை அதிகரிப்பு உள்ள சரக்குகள் தான் கிடைக்கின்றன. என்ற குற்றசாட்டுகள் நீண்ட நாட்களாக உள்ள நிலையில், தற்போது பீர் பிரியர்களும் குளு குளு பீர் வகைகள் கிடப்பதே இல்லை என குறைபட்டு கொள்கின்றனர்.

    டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுபாடு இன்றி கிடைக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிமகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆஸ்டர், மேரி கோல்டு, பேன்சி வகைகள், பெட்டுன்னியா, குட்டை ரக சால்வியா, கேலண்டுல்லா, பிளாக்ஸ், டேலியா மற்றும் ரோஜா உள்ளிட்ட பூக்கள் ம‌ல‌ர் ப‌டுகைக‌ளில் பூக்க‌த் தொடங்கியுள்ளது.
    • சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்களை ஆர்வமுடன் கண்டு ரசித்து அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த காலக்கட்டத்தில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்க நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

    இந்த வருடம் 61வது மலர்கண்காட்சி நடைபெற உள்ளதால் பூங்கா நிர்வாகத்தினர் அதற்கான பராமரிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 கட்டமாக ஊட்டி, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் சுமார் 2½ லட்சம் மலர் நாற்றுகள் வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டது. அந்த நாற்றுகள் தற்போது பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளது. இதில் சால்வியா,பாப்பி, டெல்பினியம், ஆஸ்டர், மேரி கோல்டு, பேன்சி வகைகள், பெட்டுன்னியா, குட்டை ரக சால்வியா, கேலண்டுல்லா, பிளாக்ஸ், டேலியா மற்றும் ரோஜா உள்ளிட்ட பூக்கள் மலர் படுகைகளில் பூக்கத் தொடங்கியுள்ளது.

    இது பார்ப்பவர்களின் கண்களை கவரும் வகையிலும் அமைந்துள்ளது. மேலும் வரும் வாரங்களில் லட்சக்கணக்கான பூக்கள் பூத்து குலுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பல வண்ணங்களில், பல்வேறு வகைகளில் பூக்கள் பூத்து குலுங்க தொடங்கியுள்ளது. கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்களை ஆர்வமுடன் கண்டு ரசித்து அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    மேலும் மலர்கண்காட்சி நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என தோட்டக்கலை துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    ×