search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "leopard movement"

    • வனத்துறையினர் 12 பேர் இரவு முழுவதும் ரோந்து
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அவசர அறிக்கை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஊனை மோட்டூர் கிராமத்தில் ஒருவரின் வீட்டின் முன்பு பூனை இறந்து கிடந்தது.

    அந்த பூனை எப்படி இறந்தது என்பதை அறிய, வீட்டின் உரிமையாளர் தனது வீட்டு வாசலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

    அதில் வீட்டின் வாசலில் இருந்த பூனையை ஏதோ பெரிய விலங்கு ஒன்று கடித்து குதறியது காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த விலங்கு சிறுத்தை போல் உள்ளது.

    அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

    இது குறித்து தகவல் அறிந்த ஒடுகத்தூர் வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பூனையை சிறுத்தை தான் கொன்றதா? இல்லை வேறு ஏதாவது விலங்கு கொன்றதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு தீ போல் பரவியது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் பொது மக்கள் பீதி அடைந்து அச்சத்தில் உள்ளனர்.

    இது குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அவசர அறிக்கை ஒன்று வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-

    ஊனை மோட்டூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம், வீட்டிலே உஷாராக இருக்க வேண்டும். மேலும் கிராமத்தில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இதனை தொடர்ந்து கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் மாவட்ட வன அலுவலர் கலாநிதி உத்தரவின் பேரில், ஒடுகத்தூர் மற்றும் வேலூர் வனச்சரகத்தினர் இணைந்து 12 பேர் கொண்ட குழு அந்த கிராமத்தில் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-

    தற்போது கண்காணிப்பு கேமரா காட்சிகள் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த வீடியோவில் இருப்பது சிறுத்தை தானா என்பது முழுமையாக தெரியவில்லை. நாய் போன்ற உருவம் பதிவாகி உள்ளது.

    பூனையை துரத்தி சென்று கடித்துக் குதறியது நாய் தான் என்பது 60 சதவீதம் உறுதியாகி உள்ளது.

    எனவே இதனை ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். அங்கு இருக்கும் அதிகாரிகள் ஆய்வு செய்து கூறிய பிறகே, அது என்ன விலங்கு என தெரியவரும்.

    இருப்பினும் அது என்ன விலங்கு? என்பதை கண்டறிய 12 பேர் கொண்ட குழுவினர் கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வனத்துறையினர் கால் தடங்களை ஆய்வு செய்து சிறுத்தை வந்துள்ளதை உறுதி செய்தனர்.
    • தோட்டத்தில் சிறுத்தையை கண்காணிக்க 3 இடங்களில் கண்காணிப்பு கேமிராவை பொருத்தினர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொங்கர்பாளையம் வெள்ளக்கரடு தோட்டம் பகுதியில் நஞ்சப்பன் (51) என்பவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் அவர் 4 ஆடுகள் மற்றும் 5 மாடுகளை வளர்த்தும் வருகிறார்.

    இவரது விவசாய தோட்டத்திற்கு அதிகாலை சுமார் 3 மணியளவில் வந்த சிறுத்தை அங்கு கட்டி வைக்கப்பட்டு இருந்த ஆடு ஒன்றை கடித்து கொன்று வனப்பகுதிக்குள் இழுத்து சென்றதாக நஞ்சப்பன் டி.என்.பாளையம் வனத் துறையினரிடம் தெரிவித்து உள்ளார்.

    இந்த தகவலின் பேரில் நஞ்சப்பன் தோட்டத்திற்கு வந்த வனத்துறையினர் கால் தடங்களை ஆய்வு செய்தும், ரத்த தாரை அடையாளங்களை வைத்தும் சிறுத்தை வந்துள்ளதை உறுதி செய்தனர்.

    இதனையடுத்து அவரது தோட்டத்தில் சிறுத்தையை கண்காணிக்க 3 இடங்களில் கண்காணிப்பு கேமிராவை வனத்துறையினர் பொருத்தினர்.

    இந்த தகவல் பரவியதும் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சமடைந்த நிலையில் உள்ளதால் வனத் துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு நஞ்சப்பன் வீட்டில் வளர்த்து வந்த நாய் ஒன்றை சிறுத்தை கடித்து கொன்று இழுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

    • வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் காலை, மாலை நேரங்களில் காட்டு விலங்குகளை அதிகம் பார்க்க முடியும்.
    • வனவிலங்குகளுக்கு தொந்தரவு தரும்வகையில் நடக்கக்கூடாது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இங்கு சிறுத்தை, யானை, புலி, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

    அதிலும் குறிப்பாக வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் காலை, மாலை நேரங்களில் காட்டு விலங்குகளை அதிகம் பார்க்க முடியும். வால்பாறையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் வால்பாறையை சேர்ந்த ஒருவர் நேற்று காரில், அந்த வழியாக சென்று உள்ளார். அப்போது வால்பாறை புதுத்தோட்டம் பகுதியில் ஒரு சிறுத்தை சாலையோரம் படுத்து கிடந்தது. எனவே அவர் இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்து உள்ளார். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வனவர்களுக்கு உஷாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வால்பாறை வனச்சரக அதிகாரி வெங்கடேஷ் கூறுகையில், வால்பாறையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுத்தோட்டம் பகுதியில் வனவிலங்குகள் அதிகம் உள்ளன. எனவே அங்கு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வனவிலங்குகளுக்கு தொந்தரவு தரும்வகையில் நடக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக சிறுத்தை, யானை உலா வந்தால், மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அவை இருக்கும் இடத்தில் இருந்து முடிந்தவரை விலகி செல்ல வேண்டும். அதனை விடுத்து வனவிலங்குகளை போட்டோ எடுப்பது, சத்தம் போட்டு கூச்சலிடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • அடுத்தடுத்த நாட்களில் நடந்த சம்பவத்தால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.
    • 4 இடங்களில் சிறுத்தையை கண்காணிக்க கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    வால்பாறை,

    வால்பாறை அடுத்து சிறுகுன்றா எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு தேயிலை தோட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில பெண்ணை சிறுத்தை தாக்கியது.

    இதை தொடர்ந்து அதே பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில வாலிபரையும் சிறுத்தை தாக்கியது. அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்ற சம்பவங்களால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.

    தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வடமாநில தொழிலாளர்கள் எஸ்டேட் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் 4 இடங்களில் சிறுத்தையை கண்காணிக்க கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கண்காணிப்பு காமிராவையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    • கொடுமுடி தீயணைப்பு துறை அதிகாரிகள் குழுவினர் ஊடையம் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
    • சிறுத்தையின் கால் தடம் ஏதாவது பதிந்து உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.

     காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே ஊடையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் நாய் ஒன்று நேற்று முன்தினம் இரவு முதல் காணாமல் போனது. இந்த நிலையில் ஊடையம் கிராமத்திற்கு சிறுத்தை ஒன்று வந்து காணாமல் போன நாயை கொன்று தின்று விட்டதாகவும், சிறுத்தையை ஈரோடு மாவட்டம், அஞ்சூர் ஊராட்சி, கொளந்தபாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் நேரில் பார்த்ததாகவும், தொிவித்தார்.

    எனவே வேலம்பாளையம், முத்தூர், அஞ்சூர், கார்வழி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வேகமாக பரவியது. மேலும் சமூக வலைத்தளங்களில் சிறுத்தை ஒரு மரத்தின் மேல் உட்கார்ந்து இருப்பது போல் தவறாக சித்தரிக்கப்பட்ட படம் ஒன்று வெளியானது.

    இதனால் ஊடையம் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த பீதி அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த தாராபுரம் கோட்டம் மற்றும் காங்கயம் துணை கோட்ட வனத்துறை அதிகாரிகள், கொடுமுடி தீயணைப்பு துறை அதிகாரிகள் குழுவினர் ஊடையம் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    ஊடையம் கிராம பகுதிகளில் கரும்புத்தோட்டம், வண்டி தடம் பாதை, மண் சாலை பகுதிகளில் சிறுத்தை நடமாடி, உலாவியதற்கான அறிகுறி ஏதாவது கிடைக்கிறதா என்றும், சிறுத்தையின் கால் தடம் ஏதாவது பதிந்து உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் ஊடையம் சுற்றுவட்டார கிராமத்தில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதற்கான எவ்வித அறிகுறியும் வனத்துறை அதிகாரிகள் குழுவினர்களுக்கு கிடைக்கவில்லை.

    இதனை தொடர்ந்து வனத்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் ஊடையம் சுற்றுவட்டார பகுதி கிராம பொதுமக்களிடம் கூறியதாவது:-

    ஊடையம் கிராம பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததற்கான எவ்வித அறிகுறியும் மற்றும் எவ்விதமான தகவலும் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஏதாவது தகவல் கிடைத்தால் கிராம பொதுமக்கள் உடனடியாக வனத்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது போல் சமூக வலைதளங்களில் வெளியான தகவல் குறித்து கிராம பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். வீண் வதந்திகளை உண்மை என நம்பி பொதுமக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை. இருப்பினும் இப்பகுதி கிராம பொதுமக்கள் அனைவரும் பகல், இரவு நேரங்களில் எச்சரிக்கையாகவும், மிகுந்த பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • கிராம மக்கள் பீதி
    • வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

    குடியாத்தம்:

    குடியாத்தம் சேம்பள்ளி ஊராட்சி உப்பிரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் உப்பிரப்பள்ளி- தட்டப்பாறை கூட்ரோடு ஊத்துமலை அருகே உள்ளது.அந்த நிலத்திற்கு 200 மீட்டர் தொலைவில் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. தட்சிணாமூர்த்தி கால்நடைகளை வனப்பகுதியை ஒட்டி உள்ள தனது நிலத்தில் கட்டி வைப்பது வழக்கம்.

    நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7-30 மணி அளவில் தட்சிணாமூர்த்தியின் நாய் தொடர்ந்து குறைத்தபடி இருந்ததால் மாடுகள் கட்டியிருந்த பகுதிக்கு சென்று பார்த்துள்ளார்.அப்போது பசுமாடு ஒன்றை சிறுத்தைகள் கடித்தபடி இருந்ததுள்ளன.

    அருகில் டார்ச் லைட் அடித்து பார்த்தபோது சிறுத்தைகள் அந்த மாட்டை கடித்து குதறி கொண்டு இருந்தது. லைட் வெளிச்சம் கண்டதும் சிறுத்தைகள் தப்பி ஓடி உள்ளன. பயந்துபோன விவசாயி தட்சிணாமூர்த்தி மீண்டும் வீட்டிற்கு வந்து விட்டார்.

    இது குறித்து அக்கம் பக்கத்து விவசாயிகளுக்கு தெரிவித்து அனைவரும் சென்று பார்த்த போது அந்த பசு மாடு இறந்து விட்டிருந்தது.

    சிறுத்தைகள் பசு மாட்டை கொன்ற சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா, வனவர் நேதாஜி உள்ளிட்ட வனத்துறையினர், கிராம நிர்வாக அலுவலர் செந்தில் உள்ளிட்ட வருவாய் துறையினர் பசு மாட்டை சிறுத்தை கொன்ற பகுதிக்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர் கார்த்தி பசுமாட்டை பரிசோதனை செய்தார்.

    உப்பிரப்பள்ளி கிராமத்தை ஒட்டியபடி வனப்பகுதி உள்ளதால் மாலை வேலைகளில் அந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும், இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் நகர்ப்புறத்தில் இருந்து சொந்த கிராமத்திற்கு செல்லும் கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் தொழிலாளர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

    • ஆட்டை கடித்து கொன்றது
    • நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி முதலியார் ஏரி வனப்பகுதியை ஒட்டியபடி தோனிகான் பட்டி உள்ளது இங்கு வனப்பகுதியை ஒட்டி ஒரு சில விவசாயிகள் வசித்து வருகின்றனர் அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும் மேய்த்து வருகின்றனர்.

    இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு சற்று தொலைவில் வன ஊழியர்கள் தங்கும் கொட்டகையும் உள்ளது. அங்கு வசிக்கும் விவசாயிகள் தவமணி, கணபதி ஆகியோர் வீட்டு கொட்டகையில் கட்டி இருந்த பெரிய ஆடு மற்றும் குட்டி ஆடு, கன்று குட்டியை 2மாதங்களுக்கு முன்பு முன்தினம் சிறுத்தைகள் வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று தின்றுள்ளது.

    இந்நிலையில் கடந்த வாரம் இதே தோனிகான் பட்டி பகுதியில் வசிக்கும் முனிரத்தினம் விவசாயி இவர் வீடு நிலத்தில் இருப்பதால் பாதுகாப்பிற்காக வீட்டில் நாய்களை வளர்த்து வந்துள்ளார்.

    இரவு நேரங்களில் சிறுத்தைகள் இவர் வசிக்கும் வீட்டு அருகே உலா வருமாம் அந்த சிறுத்தைகள் அவரின் வளர்ப்பு நாய் கடந்த வாரம் கடித்துக் கொன்றுள்ளது.

    இந்நிலையில் நேற்று முன் இதே பகுதியான கல்லப்பாடி தோனிகான் பட்டியில் வசிக்கும் கணபதியின் ஆட்டை நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாலை பெரிய சிறுத்தை ஒன்று கவ்வி இழுத்துச் சென்றுள்ளது ஆட்டின் அலறல் சத்தம் கேட்ட கணபதி குடும்பத்தினர் சத்தம் கேட்ட திசையில் ஓடி சென்றபோது பெரிய சிறுத்தை ஆட்டின் கழுத்தை கல்வி இழுத்து செல்வது தெரிய வந்தது.

    உடனே இவர்கள் கூச்சலிட்டு சத்தம் எழுப்பியதும் சிறுத்தை ஆட்டை விட்டு விட்டு ஓடிவிட்டது உடனடியாக அந்த ஆட்டை கொண்டு வந்து சிகிச்சை அளித்தனர்.நேற்று காலையில் அந்த ஆடு பரிதாபமாக இறந்து விட்டது.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே வளர்ப்பு நாய் மற்றும் ஆட்டை சிறுத்தைகள் கொன்ற சம்பவத்தால் தோனி கான்பட்டி பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்து உயிருக்கு பயந்தபடி வாழ்ந்து வருகின்றனர்.

    திருப்பதி மலைப்பாதையில் நடமாடும் சிறுத்தைகளை விரைவில் கூண்டுவைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கு வனத்துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். #Tirupati
    திருமலை:

    திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் 2-ம் மலைப்பாதையின் தொடக்கத்தில் உள்ள விநாயகர் கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சிறுத்தை ஒன்று மலைப்பாதையை கடந்து சென்றது.

    அந்த சிறுத்தை மலைப்பாதையை வேகமாகக் கடந்து சென்றதால் பக்தர்களை அது பொருட்படுத்தவில்லை. இருப்பினும் அப்பகுதியைக் கடந்த பக்தர்கள் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டு அதிர்ச்சியில் வேகமாக கடந்து சென்றனர்.

    இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

    மலைப்பகுதியில் சிறுத்தைகள் பக்தர்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத அடர்ந்த வனப்பகுதிக்குள் வசிக்கின்றன. ஆனால் அவை தண்ணீர் தேடி அவ்வப்போது மலைப்பாதையில் உள்ள குடிநீர் தொட்டி பகுதிக்கு வருவது வழக்கம்.

    இந்நிலையில், பக்தர்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிக்கு சிறுத்தை வந்து சென்றது வனத்துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    சிறுத்தை ஊர் பகுதிக்குள் நுழைவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால், அதன் கால் தடத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    விரைவில் அதை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். #Tirupati

    திருப்பதி மலைப்பாதையில் 7-வது மைல் பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று நடமாடியது. அதனை பார்த்து பக்தர்கள் பீதியடைந்தனர். #Tirupati
    திருமலை:

    அலிபிரி நடைப்பாதையில் தினமும் ஏராளமான திவ்ய தரிசன பக்தர்கள் பாத யாத்திரையாக திருமலைக்கு வருகின்றனர். திருப்பதி மலைப்பாதையில் 7-வது மைல் என்ற இடத்தில் ஆஞ்சநேயர் சிலை அருகில் சுரங்கப்பாதை உள்ளது.

    அதன் அருகில் 3 நாட்களுக்கு முன்பு பக்தர்கள் பலர் அமர்ந்திருந்தனர். சுரங்கப்பாதை ஓரம் ஒரு மரத்தின் கீழே சிறுத்தைப்புலி ஒன்று அமர்ந்திருந்ததைப் பக்தர்கள் பார்த்துப் பீதியடைந்தனர்.

    இதுபற்றி பக்தர்கள், திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை ஊழியர்கள், வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுத்தைப்புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அந்தச் சிறுத்தைப்புலி வனப்பகுதிக்குள் சென்று விட்டது. வனத்துறையினர் ஒலி பெருக்கி மூலம் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அந்தத் தகவலை கேள்விப்பட்ட பக்தர்கள் பீதியடைந்தனர். சிறுத்தைப்புலியை பிடிக்க 7-வது மைல் பகுதியில் கூண்டு வைக்கப்பட உள்ளது.

    திருமலையை அடுத்த பாலாஜிநகர் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை வேட்டையாடவும், அப்பகுதியில் வீசப்படும் உணவு பொருட்களை சாப்பிடவும் சிறுத்தைப்புலிகள் நடமாடுகிறது.

    3 நாட்களுக்கு முன்பு 7-வது மைல் பகுதியில் நடமாடிய அதே சிறுத்தைப்புலி நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வாகனங்கள் செல்லும் திருமலை-திருப்பதி முதலாவது மலைப்பாதையில் உள்ள 52-வது வளைவுப் பகுதியில் நடமாடியது. அதனை வனத்துறை ஊழியர்கள் பார்த்துள்ளனர்.

    திருப்பதி-திருமலை மற்றும் திருமலை-திருப்பதி ஆகிய இரு மலைப்பாதைகளில் நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 3 மணிவரை வாகனப் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது.

    அந்த நேரத்தில் அலிபிரி டோல்கேட்டும் மூடப்படுகிறது. மக்கள், பக்தர்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் இல்லாத நேரத்தில் வனப்பகுதியில் உள்ள சிறுத்தைப்புலிகள், மான், முயல் உள்ளிட்ட வன உயிரினங்கள் காட்டை விட்டு வெளியேறி சாலைக்கு வருகின்றன.

    இரு மலைப்பாதைகளில் வாகனப் போக்குவரத்தை தடை செய்யும் நேரமான நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 3 மணிவரை என இருப்பதை மறு பரிசீலனை செய்து, அந்த நேரத்தை மாற்றி அமைக்க ஆலோசனை செய்து வருகின்றனர். வாகன போக்குவரத்துச் சத்தத்தைக் கேட்டால் வன உயிரினங்கள் காட்டை விட்டு வெளியே வராது என வனத்துறையினர் தெரிவித்தனர். #Tirupati
    தேன்கனிக்கோட்டை அருகே 2 சிறுத்தை புலிகள் நுழைந்து உள்ளதால் வனப்பகுதியையொட்டி உள்ள கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், ஜவுளகிரி அய்யூர், நொகனூர், உரிகம், அஞ்செட்டி, பெட்டமுகிலாளம ஆகிய கிராமங்கள் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டையொட்டி அமைந்து உள்ளன. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் வரை ராகிப்போரை குறிவைத்து 100-க்கும் அதிகமான யானை கும்பல் நுழைவதும் வழக்கமான ஒன்று.

    வருடம் முழுவதும் யானைகள் மேற்கண்ட காப்புக்காடுகளில் தஞ்சம் அடைவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண்காணிப்பு கேமிராவில் கர்நாடக மாநிலமான பன்னேர்கட்டா வனப்பகுதியில் இருந்து 2 சிறுத்தை புலிகள் ஜவுளகிரி காப்புக் காட்டுக்குள் நுழையும் காட்சி பதிவாகி உள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக் பில்ஜிக்கு கிடைத்த அதிகாரப்பூர்வமான செய்தியின் அடிப்படையில் ஜவுளகிரி காப்புக்காட்டுக்குள் நுழைந்த 2 சிறுத்தை புலிகளின் நடமாட்டம் குறித்து கண்காணிக்க ஜவுளகிரி வனச்சரகர் முருகேசனுக்கு உத்தரவிட்டார். அவரின் உத்தரவுப்படி ஜவுளகிரி வனச்சரகர் முருகேசன் மற்றும் வனத்துறையினர் இரவு பகலாக கண்காணிப்பு கேமராவில் பதிவான சிறுத்தை புலிகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் தீபக்பில்ஜி பொதுமக்களுக்கு விடுத்து உள்ள வேண்டுகோளில் கூறி இருப்பதாவது:-

    காப்புக்காட்டின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் ஆடு, மாடுகளை வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக அனுப்ப வேண்டாம். அப்படி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    2 சிறுத்தை புலிகள் நுழைந்து உள்ளதால் வனப்பகுதியையொட்டி உள்ள கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
    புளியங்குடியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் கூண்டு வைத்து பிடிக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புளியங்குடி:

    புளியங்குடி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் மான், காட்டுப்பன்றி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது விளை நிலங்களுக்குள் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. கோடை காலத்தில் யானைகள் தண்ணீரை தேடி ஊருக்குள் அடிக்கடி வரும்.  

    இந்நிலையில் முதன்முறையாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். புளியங்குடி மேற்கு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு உள்ளது. இங்கு சிறுத்தை வந்ததற்கான கால் தடம் பதிந்துள்ளது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் வந்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுத்தை வந்தது உறுதி செய்யப்பட்டது. 

     இதையடுத்து சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×