search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி
    X

    சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி

    • வனத்துறையினர் 12 பேர் இரவு முழுவதும் ரோந்து
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அவசர அறிக்கை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஊனை மோட்டூர் கிராமத்தில் ஒருவரின் வீட்டின் முன்பு பூனை இறந்து கிடந்தது.

    அந்த பூனை எப்படி இறந்தது என்பதை அறிய, வீட்டின் உரிமையாளர் தனது வீட்டு வாசலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

    அதில் வீட்டின் வாசலில் இருந்த பூனையை ஏதோ பெரிய விலங்கு ஒன்று கடித்து குதறியது காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த விலங்கு சிறுத்தை போல் உள்ளது.

    அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

    இது குறித்து தகவல் அறிந்த ஒடுகத்தூர் வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பூனையை சிறுத்தை தான் கொன்றதா? இல்லை வேறு ஏதாவது விலங்கு கொன்றதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு தீ போல் பரவியது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் பொது மக்கள் பீதி அடைந்து அச்சத்தில் உள்ளனர்.

    இது குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அவசர அறிக்கை ஒன்று வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-

    ஊனை மோட்டூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம், வீட்டிலே உஷாராக இருக்க வேண்டும். மேலும் கிராமத்தில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இதனை தொடர்ந்து கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் மாவட்ட வன அலுவலர் கலாநிதி உத்தரவின் பேரில், ஒடுகத்தூர் மற்றும் வேலூர் வனச்சரகத்தினர் இணைந்து 12 பேர் கொண்ட குழு அந்த கிராமத்தில் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-

    தற்போது கண்காணிப்பு கேமரா காட்சிகள் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த வீடியோவில் இருப்பது சிறுத்தை தானா என்பது முழுமையாக தெரியவில்லை. நாய் போன்ற உருவம் பதிவாகி உள்ளது.

    பூனையை துரத்தி சென்று கடித்துக் குதறியது நாய் தான் என்பது 60 சதவீதம் உறுதியாகி உள்ளது.

    எனவே இதனை ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். அங்கு இருக்கும் அதிகாரிகள் ஆய்வு செய்து கூறிய பிறகே, அது என்ன விலங்கு என தெரியவரும்.

    இருப்பினும் அது என்ன விலங்கு? என்பதை கண்டறிய 12 பேர் கொண்ட குழுவினர் கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×