search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமலாக்கத்துறை"

    • மதுபான கொள்கை மூலம் பெற்ற பணத்தை கோவா, பஞ்சாப் தேர்தல் பயன்படுத்தியதாக ஆம் ஆத்மி மீது குற்றச்சாட்டு.
    • கோவா தேர்தலின்போது ஆம் ஆத்மியின் நிதியை நிர்வகித்தவர் சன்பிரீத் சிங் என அமலாக்கத்துறை குற்றச்சாட்டு.

    டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். லைசென்ஸ் வழங்குவதற்கு பதிலாக சுமார் 100 கோடி ரூபாய் பணம் பெற்றதாகவும் இந்த பணம் கோவா, பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்காக செலவிடப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த நிலையில்தான் நேற்று அமலாக்கத்துறை சன்பிரீத் சிங் என்பரை கைது செய்துள்ளது. இவர் கோவா தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சியின் நிதியை நிர்வகித்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

    பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சன்பிரீத் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவலில் எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ஆனால் சன்பிரீத் சிங் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பா.ஜனதா கட்சிகளுக்காக வேலை செய்துள்ளார். தற்போது ஆம் ஆத்மி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி என ஆம் ஆத்மியின் டெல்லி மாநில மந்திரி சவுரப் பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக சவுரப் பரத்வாஜ் கூறுகையில் "அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சன்பிரீத் சிங் கடந்த வருடம் ஏற்கனவே சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர். அவர் தானாகவே சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த வருடம் ஜாமின் பெற்றார். தற்போது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சன்பிரீத் வெளியில் இருந்து கொண்டு (freelancer) பல கட்சிகளுக்கு வேலைப்பார்த்துள்ளார். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு, அதையும் தாண்டி பா.ஜனதாவுக்காகவும் வேலைப் பார்த்துள்ளார். இதை நான் இங்கே சொல்லவிலை. சிபிஐ ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

    இது ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரை களங்கப்படுத்தும் முயற்சியாகும். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கட்சிக்கு எதிராக உருவாக்கும் குற்றச்சாட்டை நம்ப மக்கள் தயாராக இல்லை. பா.ஜனதா அரவிந்த் கெஜ்ரிவால் பெயரை இழிவுப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது" என்றார்.

    • டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி கைது செய்யப்பட்டார்
    • கெஜ்ரிவால் கடந்த 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். மேல் முறையீடு மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தரப்பில் முறையிடப்பட்டது

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் இன்று (ஏப்ரல் 15) வரை நீடிக்கப்பட்டுள்ளது.

    திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை கோர்ட்டு கடந்த 9-ந்தேதி தள்ளுபடி செய்தது.

    மேலும் கைது நடவடிக்கையில் சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்றும், உரிய காரணங்களின் அடிப்படையில் தான் விசாரணை நீதிமன்றம் அமலாக்கத் துறை காவலுக்கு உத்தரவிட்டதாகவும் டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்தது.

    கைது செய்யப்பட்டதை உறுதி செய்த டெல்லி ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். மேல் முறையீடு மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தரப்பில் முறையிடப்பட்டது.

    இந்த நிலையில் கெஜ்ரிவாலின் மனுவை இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி, தற்போது இந்த கைது காரணமாக கேஜ்ரிவாலால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை. ஆகவே விரைவாக இவ்வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். குறிப்பாக வரும் 19-ம் தேதி இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு இவ்வழக்கை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

    இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 23ம் தேதி வரை நீட்டித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
    • முறைகேடு நடந்ததாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிரான பண மோசடி வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்ததுடன், அந்த நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை வைத்திருந்தனர்.

    2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

    இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி இருந்தது.

    இதன் தொடர்ச்சியாக நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.751.9 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்படுவதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை தெரிவித்தது.

    இந்நிலையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்திற்கான தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது.

    இதை விசாரித்த தீர்ப்பாயம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சொத்துக்கள் மற்றும் பங்குகளை சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை முடக்கிய நடவடிக்கை செல்லும் என உத்தரவிட்டது.

    எனவே டெல்லி, மும்பை, லக்னோவில் உள்ள அந்த பத்திரிகைக்கு சொந்தமான ரூ.752 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்த எவ்வித தடையும் இல்லை என தீர்ப்பாய உத்தரவின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது சட்ட விரோதம் அல்ல.
    • முதல்வர் என்பதால் தனிச்சலுகை அளிக்க முடியாது.

    மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. ஒரு வாரம் அமலாக்கத்துறை காவலில் இருந்த பிறகு தற்போது திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கதுறை காவலுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். மேலும், ஜாமின் கேட்டும் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணையின் போது இரு தரப்பினரும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். அதன்பின் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி இன்று அரவிந்த் கெஜ்ரிவால் மனு மீது இன்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:-

    டெல்லி மதுபான கொள்கை உருவாக்கத்தில் மனுதாரர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றியுள்ளார். கெஜ்ரிவால் பங்கு இருப்பது அமலாக்கத்துறை ஆதாரங்களில் இருந்து தெரிய வருகிறது. அப்ரூவரின் வாக்கு மூலத்தை சந்தேகிப்பது நீதிபதி, நீதிமன்றத்தின் மீது பழி சுமத்துவதாகிவிடும்.

    யார் யாருக்கு தேர்தல் பத்திரத்தை வழங்கியுள்ளனர் என்பது குறித்து ஆராய வேண்டிய அவசியம் இந்த நீதிமன்றத்துக்கு இல்லை. காணொலியில் விசாரித்திருக்கலாம் என்ற வாதம் நிராகரிக்கப்படுகிறது. எப்படி விசாரிப்பது என்பதை குற்றம்சாட்டப்பட்ட நபர் முடிவு செய்ய முடியாது.

    முதல்வர் என்பதால் தனிச்சலுகை அளிக்க முடியாது. மக்களவை தேர்தல் குறித்து கெஜ்ரிவாலுக்கு தெரியும். தேர்தலை முன்னிட்டு அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாக கொள்ள முடியாது. நீதிபதிகள் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள். அரசியலுக்கு அல்ல.

    அரசியல் காரணங்களை பரிசீலிக்க முடியாது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலானது அல்ல.

    அரசியலமைப்பு சாசன அறம் குறித்தே நீதிமன்றத்தின் கவலை, அரசியல் அறம் குறித்து அல்ல. அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது சட்ட விரோதம் அல்ல என்பதால் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிரான மனுவம் தள்ளுபடி செய்யப்படுகிறது.

    இவ்வாறு டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மதுபான ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
    • பாஜகவின் உத்தரவின்படி எதிர்க்கட்சிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே அமலாக்கத்துறை பணமோசடி வழக்குகளை பதிவு செய்கிறது

    சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மதுபான ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால் அம்மாநிலத்தில் அவ்வாறு எந்த ஊழலும் நடைபெறவில்லை என நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

    இது தொடர்பாக சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "சத்தீஸ்கரில் எவ்வித மதுபான ஊழலும் நடக்கவில்லை என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது. இதே கருத்தைதான் காங்கிரசும் முன்வைத்தது. இல்லாத ஒரு ஊழலை இருப்பதாக தெரிவித்து, யார் கொடுத்த அழுத்தத்தால் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது?

    அமலாக்கத்துறையை பாஜக அரசு தவறாக பயன் படுத்தியிருக்கிறது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பே உறுதிப்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்து பாஜக பொய்களை மட்டுமே பரப்புகிறது என்பது தெளிவாகியுள்ளது பாஜகவின் உத்தரவின்படி எதிர்க்கட்சிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே அமலாக்கத்துறை பணமோசடி வழக்குகளை பதிவு செய்கிறது' என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் இருந்த சீல் சமீபத்தில் அகற்றப்பட்டது.
    • ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    டெல்லியில் கடந்த மாதம் 15-ந்தேதி மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில், ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பயன்படுத்த தயாரிக்கப்படும் வேதிப்பொருள் கைப்பற்றப்பட்டது. மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதற்கு மூளையாக செயல்பட்டது தமிழகத்தை சேர்ந்தஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. அயலக அணி துணை அமைப்பாளராகவும் இருந்தார். இந்நிலையில், தி.மு.க.வில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கடந்த மாதம் 9-ம் தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் இருந்த சீல் சமீபத்தில் அகற்றப்பட்டது.

    இந்நிலையில், போதைப் பொருள் வழக்கில் மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

    இதேபோல், சென்னை தி.நகரில் உள்ள இயக்குனர் அமீர் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    • பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்தி வருகிறது
    • நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகள் செயல்படுகிறது

    சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமானவரித்துறை ஆகிய 4 மத்திய அமைப்புகளின் இயக்குநர்களை மாற்ற வேண்டும் எனக்கோரி மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.பிக்கள் உள்ளடக்கிய 10 பேர் கொண்ட குழு தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்திற்கு வெளியே தர்ணா நடத்தினர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

    திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரெக் ஓ பிரையன் தலைமையில் டோலா சென், சாகரிகா கோஷ், சாகேத் கோகலே, சாந்தனு சென் ஆகிய எம்.பி.க்கள் குழு போராட்டத்தில் ஈடுபட்டது.

    பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்தி வருகிறது என்ற தங்களது புகாரை தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் அளித்துள்ளது.

    நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகள் செயல்படுகிறது. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என்று போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் குற்றம் சாட்டினர்.  

    • ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்
    • சோரனுக்கு சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்

    ஜார்கண்ட் முதல்-மந்திரியாக இருந்த ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் நடந்த நிதி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    இதில் ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். முன்னதாக அவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    கைது செய்யப்பட்டு உள்ள ஹேமந்த் சோரன் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த வழக்கில் ஹேமந்த் சோரன் மற்றும் 4 பேர் மீது ராஞ்சி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை கோர்ட்டு நேற்று தொடங்கியது.

    இதற்கிடையே சோரனுக்கு சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். ராஞ்சி பராகெய்ன் பகுதியில் உள்ள இந்த நிலம் ரூ.31.07 கோடி மதிப்பிலானது ஆகும்.

    கடந்த 2010-11-ம் ஆண்டு முதலே இந்த சொத்தை சொந்தமாக வைத்திருக்கும் சோரன், அதை மோசடியாக பெற்றுக்கொண்டதாக அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது.

    மேலும் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில், இந்த சொத்தை பறிமுதல் செய்ய அனுமதியும் கோரப்பட்டு உள்ளது.

    ஹேமந்த் சோரன் முறைகேடாக பெற்றதாக கூறப்படும் 8,86 ஏக்கர் சொத்தின் காப்பாளராக 14 முதல் 15 ஆண்டுகள் வரை இருந்ததாக அமலாக்கத்துறை விசாரணையின்போது சந்தோஷ் முண்டா என்பவர் தெரிவித்திருக்கிறார்.

    அந்த நிலத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற சோரன் கூறியதை பொய் என நிரூபிக்க சந்தோஷ் முண்டாவின் வாக்குமூலத்தை அமலாக்கத்துறை பயன்படுத்தி உள்ளது. மேலும், அந்த நிலத்திற்கு ராஜ்குமார் பஹான் என்ற நபர் உரிமை கோரியதையும் அமலாக்கத்துறை நிராகரித்தது.

    அந்த நிலத்தை ஒதுக்கீடாக பெற்றவர்கள், சில நபர்களுக்கு விற்றதாகவும், அவர்களை சோரன் வெளியேற்றிவிட்டு 2010-11ல் நிலத்தின் கட்டுப்பாட்டை பெற்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது.

    ஹேமந்த் சோரனும் அவரது மனைவி கல்பனாவும், இரண்டு முதல் மூன்று முறை அந்த நிலத்திற்குச் சென்றதாகவும், அந்த இடத்தில் சுற்றுச் சுவர் கட்டுமான பணியின்போது ஹேமந்த் சோரன் கூடவே இருந்து வேலை செய்ததாகவும் அமலாக்கத்துறை விசாரணையின்போது சந்தோஷ் முண்டா தெரிவித்துள்ளார்.

    சோரனின் உத்தரவின் பேரில் சொத்துக் காப்பாளர் பொறுப்பு சந்தோஷ் முண்டாவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை கூறுகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹிலாரியாஸ் கச்சாப், அங்கு மின்சார மீட்டர் பொருத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, இந்த நிலத்தில் சந்தோஷ் முண்டாவும் அவரது குடும்பத்தினரும் வசித்து வந்தனர் என்பதும், குற்றம்சாட்டப்பட்ட ராஜ்குமார் பஹான் வசம் இல்லை என்பதும் நிரூபணமாகியிருப்பதாக அமலாக்கத்துறை கூறியிருக்கிறது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை தனது குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் முக்கிய ஆதாரமாக, பிரிட்ஜ் மற்றும் ஸ்மார்ட் டி.வி.யின் பில்களை காட்டியிருக்கிறது. இந்த ரசீதுகளை ராஞ்சியைச் சேர்ந்த இரண்டு டீலர்களிடமிருந்து பெற்று குற்றப்பத்திரிகையில் இணைத்துள்ளது.

    இந்த 2 ரசீதுகளும் சந்தோஷ் முண்டாவின் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    குற்றப்பத்திரிகையில் ஆதாரமாக சேர்க்கப்பட்டுள்ள பிரிட்ஜ், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முண்டாவின் மகன் பெயரிலும், ஸ்மார்ட் டிவி 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் முண்டாவின் மகள் பெயரிலும் வாங்கப்பட்டுள்ளது. அந்த பில்லில், வழக்கில் உள்ள நிலத்தின் முகவரி உள்ளது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    அரசுத் தரப்பு புகாரை சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

    • ஹேமந்த் சோரன் மற்றும் 4 பேர் மீது ராஞ்சி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர்.
    • சோரனுக்கு சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

    ராஞ்சி:

    ஜார்கண்ட் முதல்-மந்திரியாக இருந்த ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் நடந்த நிதி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    இதில் ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். முன்னதாக அவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    கைது செய்யப்பட்டு உள்ள ஹேமந்த் சோரன் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த வழக்கில் ஹேமந்த் சோரன் மற்றும் 4 பேர் மீது ராஞ்சி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை கோர்ட்டு நேற்று தொடங்கியது.

    இதற்கிடையே சோரனுக்கு சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

    ராஞ்சி பராகெய்ன் பகுதியில் உள்ள இந்த நிலம் ரூ.31.07 கோடி மதிப்பிலானது ஆகும்.

    கடந்த 2010-11-ம் ஆண்டு முதலே இந்த சொத்தை சொந்தமாக வைத்திருக்கும் சோரன், அதை மோசடியாக பெற்றுக்கொண்டதாக அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது.

    மேலும் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில், இந்த சொத்தை பறிமுதல் செய்ய அனுமதியும் கோரப்பட்டு உள்ளது.

    அதேநேரம் இந்த சொத்துக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சோரன் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன.
    • ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது.

    பாஜகவின் 'வாஷிங் மெஷின்' பாணி ஆதாரப்பூர்வமாக தோலுரிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க.வின் 'வாஷிங் மெஷின்' பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது @IndianExpress நாளேடு!

    பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன.

    10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?

    "பேச நா இரண்டுடையாய் போற்றி" எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது!

    மோடியின் குடும்பம் என்பது 'E.D – I.T. – C.B.I.'தான்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களவை எம்.பி.யாக இருந்தவர் மஹுவா மொய்த்ரா
    • கடந்த டிசம்பர் மாதம் மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிக்கப்பட்டது

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களவை எம்.பி.யாக இருந்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகளை கேட்க தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து பணம் மற்றும் பரிசு பொருட்கள் பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் தூபே புகார் அளித்தார்.

    இதன் அடிப்படையில் பாராளுமன்ற மக்களவை நன்னடத்தை குழு விசாரணை நடத்தி பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

    மேலும், இந்த புகார் தொடர்பாக சிபிஐ-யும் வழக்குப்பதிவு செய்து அவரது இல்லத்தில் சோதனை நடத்தியது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகுமாறு மஹுவா மொய்த்ராவுக்கு சிபிஐ சார்பில் சம்மனும் அனுப்பப்பட்டது.

    ஆனால், மஹுவா மொய்த்ரா நான் தவறாக ஏதும் செய்யவில்லை என தொடர்ந்து கூறி, அந்த சம்மனை நிராகரித்தார்.

    இந்நிலையில், மஹுவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

    இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில், கிருஷ்ணா நகர் தொகுதியில் மஹுவா மொய்த்ரா மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இச்சூழலில் தேர்தல் வெற்றியே, தனது எம்பி-பதவியை பறித்த பாஜகவின் சதி மற்றும் சிபிஐ சோதனை, சம்மன்களுக்கு தகுந்த பதிலடியாக இருக்கும் என மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.

    • சம்மனை எதிர்த்து தமிழக அரசு மற்றும் கலெக்டர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    • வழக்கு விசாரணையை மே மாதம் 6-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு மணல் அள்ளப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதில் கிடைத்த வருமானத்தில் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடந்ததாக கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

    மேலும் கடந்த செப்டம்பர் மாதம் சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அதற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளிலும் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள், ரொக்கப்பணம் உள்ளிட்டவைகள் சிக்கியது.

    இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி வேலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தமிழக அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

    இந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசு மற்றும் கலெக்டர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை விதித்தது. இருப்பினும் விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என உத்தரவிட்டது.

    சம்மனுக்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மற்றும் கலெக்டர்கள் சார்பிலும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

    இது தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை எதுவும் விதிக்க முடியாது. இந்த வழக்கு முக்கியமானது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதால் குறிப்பிட்ட தேதியில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் கண்டிப்பாக அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வேண்டும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    இதற்கு தமிழக அரசு சார்பில் தற்போது மாவட்ட கலெக்டர்கள் தேர்தல் நடவடிக்கை தொடர்பான பணிகளில் ஈடுபட்டு இருப்பதால் அவர்கள் ஆஜராகும் பட்சத்தில் தேர்தல் பணி பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு வருகிற ஏப்ரல் மாதம் 25-ந்தேதி அமலாக்கத்துறை முன்பு 5 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை மே மாதம் 6-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுபடி வருகிற 25-ந்தேதி மணல் கொள்ளை வழக்கு சம்பந்தமாக கலெக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×