search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "no confidence motion"

    • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரு அவைகளிலும் மணிப்பூர் சம்பவம் எதிரொலித்தது.
    • மணிப்பூர் சம்பவம் பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் சம்பவம் பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரு அவை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதன்படி, மாநிலங்களவை எம்.பி.க்களான கேசவ ராவ், சுரேஷ் ரெட்டி, ஜோகினிபள்ளி சந்தோஷ் குமார், படுகுலா லிங்கையா யாதவ், ரஞ்சித் ரஞ்சன், மனோஜ் ஜா, சையது நசீர் உசைன், திருச்சி சிவா, இம்ரான் பிரதாப்காதி ஆகியோர் 267-வது விதியின் கீழ் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    மணிப்பூர் விவகாரம் பற்றி இரு அவைகளிலும் பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வேண்டும். அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.

    இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளது என மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய அவர், நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் கட்சி அலுவலகத்தில் தயாராக உள்ளது. காலை 10 மணிக்கு முன்னதாக மக்களவைச் செயலர் அலுவலகத்துக்கு வந்து சேரும் என தெரிவித்தார்.

    இலங்கை பாராளுமன்றம் இன்று கூடியவுடன் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதால், அவர் வெளிநடப்பு செய்தார். #SriLankaParliament #RajapaksaWalkout
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அத்துடன் பாராளுமன்றத்தையும் முடக்கிய அவர், பின்னர் பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலை தொடர்ந்து நவம்பர் 14-ம்தேதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்தார்.  

    இதற்கிடையே, பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை. எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந் தேதி பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    இதனை எதிர்த்து அந்நாட்டின் பெரும்பான்மை பலமிக்க மூன்று பிரதான எதிர்க்கட்சிகள் இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று கூறி அதிபரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி இலங்கை பாராளுமன்றம் இன்று காலை கூடியது. அப்போது ரணில் கட்சி எம்பிக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்திருந்தனர். அவை நடவடிக்கை தொடங்கியதும், அதிபரால் நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த ராஜபக்சே வெளிநடப்பு செய்தார்.

    அதேசமயம் ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. #SriLankaParliament #RajapaksaWalkout
    பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி என்னை கட்டிபிடித்தது குழந்தைதனமான செயல் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். #RahulHugsModi #NoConfidenceMotion

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி பேச்சு முடிந்ததும் தங்களை கட்டி பிடித்தது பற்றி என்ன சொல்கிறீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதில் அளித்துள்ள பிரதமர், பாராளுமன்றத்தில் ராகுல்காந்தியின் செயல் பாட்டை நீங்கள் உற்று நோக்கினால் அவர் செய்தது அனைத்துமே குழந்தைதனமான செயல் என்பது உங்களுக்கே தெரியும்.

    அப்படியும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் அவர் என்ன கட்டிபிடித்து இருக்கைக்கு சென்று கண் சிமிட்டியதை நீங்கள் பாருங்கள். அதன்பிறகு முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.


    அசாம் தேசிய குடியுரிமை பட்டியல் தொடர்பாக மம்தாபானர்ஜி கடுமையாக விமர்சிக்கிறார். உள்நாட்டு கலவரம் ஏற்படும், ரத்த ஆறு ஓடும் என்று அவர் கூறுகிறார். அவருடைய பேச்சு நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இருக்கிறது.

    அவர் இந்திய அரசின் அமைப்புகளை நம்பவில்லை என்பது தான் இது காட்டுகிறது. எந்த இந்திய குடிமகனும் இந்த பட்டியல் காரணமாக வெளியேற வேண்டிய சூழ்நிலை ஒருபோதும் ஏற்படாது. அது நீண்டகால திட்டமாகும். எனவே யாருக்கும் பாதிப்பு வராது.

    சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல் அடிப்படையில் தான் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை சிலர் அரசியல் ஆக்க பார்க்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜெயலலிதா இருந்திருந்தால், நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பின் போது, பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக அ.தி.மு.க. வாக்களித்து இருக்கும் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
    கொல்கத்தா:

    மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 126 ஓட்டுகளும், எதிராக 325 ஓட்டுகளும் கிடைத்தன. அ.தி.மு.க. எம்.பி.க்கள் தீர்மானத்துக்கு எதிராக, அதாவது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    இந்த நிலையில், கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இதுபற்றி குறிப்பிட்டார்.

    ஜெயலலிதா இருந்திருந்தால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக (தீர்மானத்துக்கு ஆதரவாக) ஓட்டுப்போட்டு இருப்பார்கள் என்று அப்போது அவர் கூறினார். அத்துடன் தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை சந்திக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    மம்தா பானர்ஜி தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:-


    பாரதிய ஜனதா மக்களின் செல்வாக்கை இழந்து வருகிறது. மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் பல மாநிலங்களில் அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்து உள்ளது. முன்பு பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம் அதில் இருந்து விலகிவிட்டது. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட விவகாரத்தில் சிவசேனாவும் பாரதிய ஜனதாவை கைவிட்டு விட்டது.

    எனவே அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வி அடையும். நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், மத்திய அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள் கிடைத்துள்ள போதிலும், அடுத்த தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு நூற்றுக்கும் குறைவான இடங்களே கிடைக்கும்.

    ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டாட்சி முன்னணி என்ற புதிய அணியை தொடங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. கொல்கத்தாவில் அடுத்த ஆண்டு ஜனவரி 19-ந்தேதி நடைபெற இருக்கும் பிரமாண்ட பேரணிக்கு அந்த கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்படுவார்கள். மத்தியில் பாரதீய ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்கான பணிகளை இந்த மாதமே தொடங்க இருக்கிறோம். இது அடுத்த மாதத்தில் இருந்து தீவிரம் அடையும்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார். #MamtaBanarjee #ADMK #Jayalalithaa #BJP
    இந்திய பாராளுமன்ற வரலாற்றில் இதுவரை 27 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடந்து வாக்கெடுப்பும் நடத்தப்பட்டுள்ளது. #Parliament #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    மத்தியில் ஆட்சி செய்யும் அரசு மீது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கையில்லாத எண்ணம் ஏற்பட்டால், பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சட்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற இரு அவைகளில் மக்களவையில் மட்டுமே இத்தகைய தீர்மானத்தை கொண்டு வர முடியும்.

    பாராளுமன்றத்தில் 50 எம்.பி.க்களின் ஆதரவுடன் தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர இயலும். அந்த தீர்மானம் மீது பாராளுமன்ற சட்ட விதி 198-வது பிரிவின் கீழ் விவாதம் நடந்து ஓட்டெடுப்பு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும்.

    எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்பதும், ஏற்காததும் சபாநாயகரின் இறுதி முடிவுக்கு உட்பட்டதாகும். அதுபோல நம்பிக்கையில்லா தீர்மானம் மீது எப்போது, எப்படி ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்ற அனைத்தையும் சபாநாயகரே முடிவு செய்வார். ஒவ்வொரு கட்சி தலைவர்களும் விவாதத்தில் பேச நேரம் ஒதுக்கி கொடுப்பதும் சபாநாயகர்தான்.

    அதன்படி இந்திய பாராளு மன்றவரலாற்றில் இதுவரை 27 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடந்து வாக்கெடுப்பும் நடத்தப்பட்டுள்ளது. நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி, மெரார்ஜி தேசாய், ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய், மோடி ஆகிய 8 பிரதமர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளனர்.

    பாராளுமன்றத்தில் பிரதமர் நேரு 1963-ம் ஆண்டு முதல் முதலாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர் கொண்டார். அதுதான் முதல் நம்பிக்கையில்லா தீர்மானமாகும். ஜே.பி.கிருபாளினி கொண்டு வந்த அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.


    அதிகபட்ச நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்தவர் இந்திராகாந்தி ஆவார். அவர் மொத்தம் 15 தடவை நம்பிக்கையில்லா தீர்மான சவால்களை சந்தித்தார். அந்த 15 தடவையும் இந்திராகாந்தி வெற்றி பெற்றார்.

    அவர் அரசு மீது 1966-ம் ஆண்டு முதல் 1975-ம்ஆண்டு வரை 9 ஆண்டுகளில் 12 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 1981-ம் ஆண்டு முதல் 1982-ம் ஆண்டுக்குள் 3 தடவை நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டார்.

    லால்பகதூர் சாஸ்திரி, நரசிம்மராவ் இருவரும் தலா 3 தடவை நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்தனர். அந்த 3 தடவையும் அவர்கள் வெற்றி பெற்றனர்.

    1993-ம் ஆண்டு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து நரசிம்மராவ் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    அந்த தீர்மானம் மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மிக, மிக குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் நரசிம்மராவ் வெற்றி பெற்றார். அதாவது நரசிம்மராவுக்கு ஆதரவாக 265 வாக்குகளும் எதிராக 251 வாக்குகளும் கிடைத்தது. இதனால் 14 வாக்குகள் வித்தியாசத்தில் நரசிம்மராவ் வெற்றி பெற்றார்.

    வாஜ்பாய், ராஜீவ்காந்தி இருவரும் தலா ஒரு தடவை நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்தனர். அதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. 1999-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் பெரும் பான்மையை நிரூபிக்க நடந்த ஓட்டெடுப்பில் வாஜ்பாய் தோல்வியை தழுவினார்.

    1967 மற்றும் 1992-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் பிரதமர்களை எதிர்த்து வாஜ்பாய் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வாஜ்பாய் 2003-ம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள நேரிட்டது.

    நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஓட்டெடுப்பில் தோல்வியை தழுவிய ஒரே பிரதமர் மெரார்ஜி தேசாய் ஆவார். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டன. இதனால் அவர் ஓட்டெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

    பாராளுமன்றத்தில் அதிக தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தவர் என்ற பெருமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் ஜோதிர்மாய் பாசுக்கு உண்டு. அவர் பாராளுமன்றத்தில் 4 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். 4 தடவையும் இந்திராவுக்கு எதிராக அவர் தீர்மானம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    பிரதமர்களில் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும், விவாதத்தையும், ஓட்டெடுப்பையும் சந்திக்காத ஒரே பிரதமர் என்ற தனி சிறப்பு மன்மோகன்சிங்குக்கு உண்டு. 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த அவரை எதிர்த்து ஒரு தடவை கூட பா.ஜ.க.வினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Parliament #NoConfidenceMotion
    வருமான வரி சோதனையிலிருந்து தங்களை காத்துக்கொள்ள கைமாறாக அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
    சென்னை:

    பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியுற்றது பற்றி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வு, 15-வது நிதி ஆணையம், ஜி.எஸ்.டி., இந்தித் திணிப்பு மற்றும் மதவாத அரசியல் ஆகியவற்றைத் தாண்டி மோடி அரசுக்கு அளிக்கப்படும் ஆதரவு என்பது பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. இடையில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் வகையில் இருவருக்கும் இடையேயான ரகசிய உறவு நிரூபிக்கப்பட்டு உள்ளது.


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கான நோக்கம் இதன் மூலம் நிறைவேறிவிட்டது.

    அந்தச் சோதனையிலிருந்து தங்களை காத்துக்கொள்ள கைமாறாக அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ளது என்று இதனைக் கொள்ளலாம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #MKStalin #ITRaid
    பாராளுமன்றத்தில் நேற்று கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம், மத்திய அரசுக்கு எதிராக கடந்த 15 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட முதல் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஆகும்.
    புதுடெல்லி:

    * இந்திய பாராளுமன்ற வரலாற்றில், மத்திய அரசுக்கு எதிராக இதுவரை 27 முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    * இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது பல்வேறு காலகட்டங்களில் அரசுக்கு எதிராக 15 முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் 4 தீர்மானங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் ஜோதிர்மாய் பாசு கொண்டு வந்தார்.

    * லால் பகதூர் சாஸ்திரி, நரசிம்மராவ் ஆகியோர் பிரதமராக இருந்த போது தலா 3 முறையும், மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது 2 முறையும், ராஜீவ் காந்தி, வாஜ்பாய் ஆகியோர் பிரதமராக இருந்த போது தலா ஒரு முறையும் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    * ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது அவரது அரசு மீது 1963-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜே.பி.கிருபளானி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். இதுதான் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட முதல் நம்பிக்கை இல்லா தீர்மானம்.

    * மோடி அரசு மீது நேற்று கொண்டு வரப்பட்டது 27-வது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஆகும்.

    * இதற்கு முன் கடைசியாக 2003-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொண்டு வந்தார்.

    * 1979-ம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது அவரது அரசு மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து கொண்டிருந்த போதே பிரதமர் பதவியை மொரார்ஜி தேசாய் ராஜினாமா செய்தார்.

    மேற்கண்ட தகவல்களை நாடாளுமன்ற செயலகம் தெரிவித்து உள்ளது. #NoConfidenceMotion #BJP #IndiaTrustsModi
    பிரதமர் நரேந்திர மோடி ஒரு சுயநலவாதி என ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். #NoConfidenceMotion #ChandrababuNaidu
    ஐதராபாத் :

    மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் அவையில் இருந்த 451 உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதில், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக 325 பேரும், தீர்மானத்துக்கு ஆதரவாக 126 பேரும் வாக்களித்தனர். 

    இதனால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. வாக்கெடுப்பிற்கு பிறகு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

    முழு ஆந்திரப் பிரதேசமும் இன்று நீதியை எதிர்பார்த்து காத்திருந்தது, ஆனால், எங்களுக்கு மீண்டும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. மத்திய அரசிடம் பெரும்பான்மை இருந்தாலும், அவர்கள் நீதியை நிலை நாட்டவில்லை. பிரதமர் மோடியின் இன்றைய பேச்சு மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது.

    பிரதமர் எங்களை பார்த்து சுயநலவாதிகள் என்கிறார். ஆனால், உண்மையில் அவர் தான் சுயநலவாதி. 

    ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி கடந்த நான்கு ஆண்டுகளில் 29 முறை நான் டெல்லிக்கு சென்றுள்ளேன். ஆனால், ஆந்திராவிற்கு நீதி வழங்குவதற்கு பதிலாக அவர்கள், என் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள். இந்த தொடர்ச்சியான மோதலின் ஒருபகுதியாகவே நாங்கள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தோம்.

    ஒரு நாட்டின் பிரதமர் பதவியில் இருப்பவர் பொறுப்பற்ற முறையில் பேசுவது வேதனையளிக்கிறது. எங்கள் வசம் போதிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசு அலட்சிய போக்குடன் நடந்து கொள்கிறது.

    ஆந்திராவிற்கு மத்திய அரசு செய்துள்ள துரோகங்களை பற்றி வருகிற 21-ம் தேதி டெல்லியில் இருந்தவாறு நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளேன். மத்திய அரசுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் போராட வேண்டும். அதோடு நிற்காமல் பா.ஜ.க.வை ஆதரிக்கும் கட்சிகளுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #NoConfidenceMotion #ChandrababuNaidu
    மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை வீழ்த்தி பா.ஜ.க அரசு வெற்றி பெற்றுள்ளது. #NoConfidenceMotion #PMModi #IndiaTrustsModi
    புதுடெல்லி :

    மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது. 

    சிவசேனா, பிஜு ஜனதா தளம் கட்சிகள் விவாதத்தை புறக்கணித்த நிலையில், காங்கிரஸ் கட்சி மத்திய அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததால் அவையில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 

    விவாதத்தின் இறுதியாக பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதிலளித்தும், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தும் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஆவேசத்துடன் பேசினார். 

    இதைத்தொடர்ந்து மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு 11 மணியளவில் தொடங்கியது. 

    சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அவையில் குரல் வாக்கெடுப்பு நடத்தினார். அதில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.

    முதலில் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பை தொடர்ந்து அடுத்ததாக  மின்னனு முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி அவையில் இருந்த 451 உறுப்பினர்கள் தீர்மானத்தின் மீது வாக்களித்தனர். அதில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக 325 பேரும், தீர்மானத்துக்கு ஆதரவாக 126 பேரும் வாக்களித்தனர். 

    இதனால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. வாக்கெடுப்பிற்கு பிறகு  சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை திங்கள் வரை ஒத்திவைத்தார். 

    இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது உறுப்பினர்கள் யாரும் நடுநிலை வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #NoConfidenceMotion #PMModi #IndiaTrustsModi
    மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக எம்.பி ஜெயவர்தன், தமிழகத்திற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    ஆந்திர மாநிலத்துக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு முறையாக நிறைவேற்றவில்லை என தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. விவாதம் முடிந்தவுடன் வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    மத்திய அரசின் மீதான இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்கபோவதில்லை எனவும், மத்திய அரசுடன் சுமூகபோக்கையே கடைபிடிக்கப்போவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய அ.தி.மு.க எம்.பி ஜெயவர்தன், தமிழகத்தின் குறைகளை எடுத்துரைத்தார். அதன்படி, தமிழகத்துக்கு  2015-ம் ஆண்டு ஏற்பட்ட பேரிடர் பாதிப்பு, வர்தா புயல் பாதிப்புகளுக்கு போதிய அளவிலான நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைக்கவில்லை எனவும் தமிழகத்துக்கு தேவையான நிதி குறைவாகவே அளிக்கப்படுவதாகவும் தனது உரையில் தெரிவித்தார்.



    மேலும், நீட் தேர்வு மூலம் தமிழகத்தில் உள்ள கிராமப்புற மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

    மேலும், சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவது மக்களின் விருப்பத்துக்கு எதிரானது என குறிப்பிட்ட அ.தி.மு.க எம்.பி ஜெயவர்தன், மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பையும் பதிவு செய்தார். #NoConfidenceMotion
    பிரதமர் நாற்காலியில் யார் அமர வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேசினார் #NoConfidenceMotion #PMModi
    புதுடெல்லி:

    மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடந்தது. சிவசேனா, பிஜு ஜனதா தளம் கட்சிகள் விவாதத்தை புறக்கணித்து விட்டன.

    இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்தது. எனினும், மசோதா மீதான விவாதம் நடந்தது. மத்திய அரசு மற்றும் பிரதமர் மீது பல்வேறு விவகாரங்களை முன்வைத்து ராகுல் காந்தி பேசினார்.

    அதிமுக, சமாஜ்வாதி, திரினாமுல், டிஆர்எஸ் ஆகிய கட்சிகளும் மத்திய அரசு மீது கலவையான விமர்சனத்தை முன்வைத்து பேசின. இதனை அடுத்து பேசிய ராஜ்நாத் சிங், “நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களின் தீர்ப்புக்கு எதிராக உள்ளது” என கூறினார். 

    இதனை அடுத்து, தீர்மானத்தின் மீது ஒவ்வொரு கட்சிகளும் பேசி வந்ததால் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்துவது தாமதமாகியது. இரவு 9.30 மணியளவில் பிரதமர் தனது உரையை தொடங்கினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-

    இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்ப்பு அரசியல் செய்பவர்களின் முகங்கள் வெளிப்பட்டு விட்டது. எதிர்க்கட்சிகளே பெரும்பான்மை மிக்க இந்த அரசின் மீது நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரியுங்கள்.

    அதிகாரப் பசியின் காரணமாக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர். இது நம்பிக்கையில்லா தீர்மானம் இல்லை, எதிர்க்கட்சிகளின் ஆணவத்தின் வெளிப்பாடு.

    பிரதமர் நாற்காலிக்கு என்ன அவசரம்? ஜனநாயகத்தில் எந்த அவசரமும் இல்லை. பிரதமர் நாற்காலியில் இருந்து நான் எழ வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். இந்த நாற்காலிக்கு யார் தகுதியானவர்கள் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். நாங்கள் மெஜாரிட்டி கொண்டிருப்பதால் இந்த பக்கம் இருக்கிறோம். மக்களை தவறாக வழி நடத்தாதீர்கள்.

    இவ்வாறு மோடி பேசி வருகிறார். மோடியின் பேச்சுக்கு எதிராக தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
    ரபேல் விமான ஒப்பந்தத்தில் ரகசிய காப்பு அம்சம் இல்லை என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. #NoConfidenceMotion #RafaleDeal
    புதுடெல்லி:

    மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேச கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, “ரபேல் விமான ஒப்பந்தம் குறித்தான தகவல்களை வெளியிட இருநாடுகளுக்கு இடையில் ரகசிய காப்பு ஒப்பந்தம் இருப்பதாக மோடி அரசு கூறுகிறது. பிரான்ஸ் அதிபர் மாக்ரானுடன் நான் உரையாடிய போது இரு நாடுகளுக்கு இடையில் எந்த ரகசிய காப்பு ஒப்பந்தமும் இல்லை என்றார். மோடியின் நெருக்கடியினால் நிர்மலா சீதாராமன் பொய் கூறியுள்ளார்" என்றார்.

    ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பிரான்ஸ் மறுப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் அறிக்கையை கவனித்தோம். இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் 2008-ஆம் ஆண்டு ரகசிய காப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி பங்குதாரர் கூறும் உரிய தகவலை இரு நாடுகளும் சட்டப்பூர்வமாக ரகசியம் காக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    பிரான்ஸ் அறிக்கையை அடுத்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “அவர்கள் (பிரான்ஸ்) விரும்பினால் அதை மறுக்கட்டும். பிரான்ஸ் அதிபர் (இம்மானுவேல் மாக்ரான்) என் முன்னால் தான் அதை கூறினார். அந்த சமயத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் மத்திய மந்திரி ஆனந்த் சர்மா ஆகியோரும் உடனிருந்தனர்” என கூறினார்.
    ×