search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mamta banarjee"

    ஜெயலலிதா இருந்திருந்தால், நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பின் போது, பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக அ.தி.மு.க. வாக்களித்து இருக்கும் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
    கொல்கத்தா:

    மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 126 ஓட்டுகளும், எதிராக 325 ஓட்டுகளும் கிடைத்தன. அ.தி.மு.க. எம்.பி.க்கள் தீர்மானத்துக்கு எதிராக, அதாவது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    இந்த நிலையில், கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இதுபற்றி குறிப்பிட்டார்.

    ஜெயலலிதா இருந்திருந்தால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக (தீர்மானத்துக்கு ஆதரவாக) ஓட்டுப்போட்டு இருப்பார்கள் என்று அப்போது அவர் கூறினார். அத்துடன் தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை சந்திக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    மம்தா பானர்ஜி தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:-


    பாரதிய ஜனதா மக்களின் செல்வாக்கை இழந்து வருகிறது. மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் பல மாநிலங்களில் அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்து உள்ளது. முன்பு பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம் அதில் இருந்து விலகிவிட்டது. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட விவகாரத்தில் சிவசேனாவும் பாரதிய ஜனதாவை கைவிட்டு விட்டது.

    எனவே அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வி அடையும். நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், மத்திய அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள் கிடைத்துள்ள போதிலும், அடுத்த தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு நூற்றுக்கும் குறைவான இடங்களே கிடைக்கும்.

    ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டாட்சி முன்னணி என்ற புதிய அணியை தொடங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. கொல்கத்தாவில் அடுத்த ஆண்டு ஜனவரி 19-ந்தேதி நடைபெற இருக்கும் பிரமாண்ட பேரணிக்கு அந்த கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்படுவார்கள். மத்தியில் பாரதீய ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்கான பணிகளை இந்த மாதமே தொடங்க இருக்கிறோம். இது அடுத்த மாதத்தில் இருந்து தீவிரம் அடையும்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார். #MamtaBanarjee #ADMK #Jayalalithaa #BJP
    பாராளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியை மேற்கு வங்க முதல்-மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தாபானர்ஜி தொடங்கியுள்ளார். #ParliamentElection #Mamtabanarjee
    கொல்கத்தா:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

    அதற்கு இன்னும் 9 மாதங்களே இருப்பதால் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி மீண்டும் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தனித்து நின்று பா.ஜ.க.வை வீழ்த்த முடியாது என்பதால் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் திட்டமிட்டுள்ளார். ஆனால் பெரும்பாலான மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் இன்னமும் இணைக்கமான சூழ்நிலையை உருவாக்கவில்லை.

    இந்த நிலையில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியை மேற்கு வங்க முதல்-மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தாபானர்ஜியும் தொடங்கியுள்ளார். அவரது முயற்சிக்கு பலன் கிடைக்க தொடங்கி இருக்கிறது. இதனால் பா.ஜ.க.வுக்கு எதிராக மம்தாபானர்ஜி காய்களை நகர்த்துவது தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம், பீகார் உள்பட சில பெரிய மாநிலங்களின் முடிவுகள்தான் முக்கிய பங்கு வகிக்கும். இதை கருத்தில் கொண்டு பெரிய மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வரும் திட்டத்தை மம்தாபானர்ஜி கையில் எடுத்துள்ளார்.

    அதன்படி முதல் கட்டமாக அவர் 80 தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேசத்தில் எலியும் பூனையுமாக இருந்த சமாஜ்வாதி கட்சியையும், பகுஜன் சமாஜ் கட்சியையும் கூட்டணி அமைக்க வைத்தார். மம்தா பானர்ஜி மேற்கொண்ட தொடர் முயற்சி காரணமாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் உத்தரபிரதேசத்தில் நடந்த பாராளுமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர்.

    அவர்களது கூட்டணி காரணமாக உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. தொடர் தோல்வியை தழுவியது. இது பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    இதையடுத்து அகிலேஷ் யாதவும், மாயாவதியும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து பா.ஜ.க.வை எதிர்க்க முடிவு செய்துள்ளனர். இப்போதே அவர்களுக்கிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. அதில் சுமூக முடிவை எட்ட செய்யும் நடவடிக்கைகளில் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.

    உத்தரபிரதேசத்தில் மாயாவதியையும், அகிலேஷ் யாதவையும் ஒன்று சேர்த்ததில் வெற்றி கண்ட மம்தா பானர்ஜி, அடுத்தக் கட்டமாக மற்ற மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்ட திட்டமிட்டுள்ளார். இந்த மாத இறுதியில் அவர் சீனாவுக்கு செல்ல உள்ளார். அங்கிருந்து திரும்பி வந்த பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணியை மீண்டும் வலிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளார்.

    கர்நாடகாவில் முதல்- மந்திரி குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, ஆந்திராவில் முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆகிய மாநில கட்சிகளையும் ஒருமித்த கருத்துடைய கூட்டணிக்குள் கொண்டு வரவேண்டும் என்பதே மம்தா பானர்ஜியின் திட்டமாகும். எனவே ஜூலை முதல் வாரத்தில் இதற்கான பயணத்தை மம்தா தொடங்க உள்ளார்.

    முதலில் சந்திரபாபு நாயுடு, சந்திரசேகராவ், குமாரசாமி ஆகியோரை சந்திக்கும் மம்தா பானர்ஜி பிறகு சென்னை வந்து மு.க.ஸ்டாலினை சந்திக்க முடிவு செய்துள்ளார். ஸ்டாலினை சந்திக்க வரும் போது, சந்திரபாபு நாயுடு, சந்திர சேகரராவ், குமாரசாமி ஆகியோருடன் மம்தா பானர்ஜி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன் பிறகு நாடு தழுவிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, மு.க.ஸ்டாலின், சந்திரசேகர ராவ், குமாரசாமி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது.

    அந்த கூட்டத்தில் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி பற்றிய அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது. அந்த மெகா கூட்டணிக்கான பெயரையும் வெளியிட மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். இந்த கூட்டணி 2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. #ParliamentElection #Mamtabanarjee
    ×