search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்றம்"

    • பாராளுமன்றத் தேர்தலிலும் பரேலேகா களமிறங்கியுள்ளார்.
    • நாகர் கர்னூல் பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஷா என்கிற பரேலேகா. பி.காம் பட்டதாரியான இவர் வேலையில்லா விரக்தியில் எருமை மாடு மேய்க்கும் தொழிலில் இறங்கினார்.

    ஒருநாள் தான் மாடு மேய்க்கும்போது, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பேசி வெளியிட்டிருந்தார். அதில், "நான் பரேலக்கா. எவ்வளவுதான் படிச்சி, டிகிரி வாங்கினாலும் நமக்கு இந்த தெலுங்கானா வேலை தராது.

    அதனாலதான் பிகாம் படிச்சிட்டு, என் அம்மா தந்த காசில், 4 எருமை மாடு வாங்கிட்டு, இப்படி மேய்ச்சிட்டு இருக்கேன். இங்கு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது" என்று பேசியிருந்தார்.

    இந்த வீடியோ, வைரலானது. இளைஞர்களின் மத்தியில் புதுவித தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் பிரபலமானார்.

    தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் சேனல்களில் பல வீடியோக்களை வெளியிட்டார். இதன் மூலம் தெலுங்கானா மாநிலத்தில் அவரை எருமை மாடு மேய்க்கும் பெண் என செல்லமாக அழைத்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கோலாப்பூர் தொகுதியில் பரேலக்கா சுயேட்சையாக போட்டியிட்டார்.

    அவருக்கு, தெலுங்கானா பல்கலைக்கழக மாணவர்கள் பிரசாரம் செய்தனர்.

    இளவரசி பரேலக்கா என்று ஒரு பட்டப்பெயரை வைத்து, செல்லுமிடமெல்லாம் பாடல்களை பாடி, பொதுமக்களை கவர்ந்து வாக்குகளை கேட்டனர்.

    அந்த தேர்தலில் அவர் 5,754 வாக்குகள் பெற்று 4-வது இடத்தை பிடித்தார். இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தலிலும் பரேலக்கா களமிறங்கியுள்ளார். அவர் நாகர் கர்னூல் பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    இதனால் அந்த தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் நான் வாக்குகள் பெற்றேன். பொதுமக்கள் எனக்கு நேர்மையாக வாக்களித்தார்கள் பாராளுமன்றத் தேர்தலிலும் நான் வெற்றி பெறுவேன் என அவர் கூறினார்.

    • வழக்கமாக தேர்தலுக்கு முன்பு மதுபான கடைகள் இரவு 11 மணிவரை செயல்பட்டன.
    • தேர்தல் முடிந்துள்ள நிலையிலும் தற்போது வரை மதுபான கடைகள் இரவு 10 மணியோடு மூடப்பட்டு வருகின்றன.

    புதுச்சேரி:

    புதுவையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மதுக்கடைகள் இரவு 10 மணிக்கே மூடதேர்தல் துறை உத்தரவிட்டது. மேலும் 10 மணிக்கு மேல் மது கடைகள் திறந்து இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று புதுவை கலால் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இதனால் மதுகடை உரிமையாளர்கள் இரவு 9.30 மணிக்கே மதுகடைகளை மூடிவிடுகின்றனர். தற்போது வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்ந்துள்ளது.

    வழக்கமாக தேர்தலுக்கு முன்பு மதுபான கடைகள் இரவு 11 மணிவரை செயல்பட்டன. சுற்றுலா உரிமம் பெற்ற மதுபார்கள் இரவு 12 மணி வரை இயங்கின.

    தேர்தல் முடிந்துள்ள நிலையிலும் தற்போது வரை மதுபான கடைகள் இரவு 10 மணியோடு மூடப்பட்டு வருகின்றன. இதனால் வியாபாரம் பாதித்து அரசுக்கு கிடைக்கும் வருமானமும் குறைகிறது.

    இதைத் தொடர்ந்து மதுபான விற்பனை நேரத்தை முன்பு போல் இரவு 11 மணி வரை மேற்கொள்ள அனுமதிக்கக்கோரி கலால்துறை தேர்தல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

    • 8 வாக்குச்சாவடிகளிலும் சுமார் 8 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
    • தலைமை தேர்தல் ஆணையர் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    சென்னை:

    புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளை தி.மு.க.வை சேர்ந்த சிலர் தேர்தலுக்கு முந்தைய நாளே தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தேர்தல் நாளன்று வாக்களிக்க வந்த வாக்காளர்களை மிரட்டி ஓட்டு போடவிடாமல் செய்து விட்டனர்.

    இந்த 8 வாக்குச்சாவடிகளிலும் சுமார் 8 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அன்றைய தினம் தேசிய ஜனநாயகக் கூட்டணியை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களை கூட வாக்குச் சாவடிக்குள் செல்ல தி.மு.க.வினர் அனுமதிக்கவில்லை.

    இந்த விவரங்களை சென்னையில் உள்ள தலைமை தேர்தல் ஆணையரை நேரடியாக சந்தித்து புகார் மனுவாக அளித்ததுடன் மேற்கண்ட வாக்குச் சாவடிகளிலும் உரிய பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பா.ஜ.க கூட்டணிக்கு ஆந்திர மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
    • பா.ஜ.க. கூட்டணி வேட்பாளருக்கு நடிகர் சிரஞ்சீவி ஆதரவு அளித்திருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தெலுங்கு சினிமா மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கினார்.

    தேர்தலில் தோல்வியை சந்தித்த அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்து மத்திய மந்திரியாக இருந்தார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி சினிமாவில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில் அனகா பள்ளி பாராளுமன்ற பா.ஜ.க வேட்பாளர் ரமேஷ் மற்றும் பெண்டுர்த்தி சட்டமன்ற ஜனசேனா கட்சி வேட்பாளர் ரமேஷ் பாபு ஆகியோர் நடிகர் சிரஞ்சீவியை விஜயவாடாவில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து ஆதரவு கேட்டனர்.

    நீண்ட நேர இடைவெளிக்குப் பிறகு நான் அரசியல் பேசுகிறேன். இதற்கு காரணம் ஆந்திராவில் எனது சகோதரர் பவண் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்து இருப்பது வரவேற்கத்தக்கது.


    எனது நண்பர் ரமேஷ் மற்றும் எனது ஆசியுடன் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய ரமேஷ்பாபு ஆகியோர் அனகா பள்ளி பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

    பா.ஜ.க கூட்டணிக்கு ஆந்திர மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இதன் மாநிலம் முழுவதும் வளர்ச்சி அடையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பா.ஜ.க. கூட்டணி வேட்பாளருக்கு நடிகர் சிரஞ்சீவி ஆதரவு அளித்திருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு பதிவாக குறைந்தது எப்படி என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
    • தேர்தல் ஆணையம் 3-வது முறையாக இறுதி வாக்குப்பதிவு சதவீத விவரங்களை வெளியிட்டது.

    சென்னை:

    தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

    இந்த தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் அன்றைய தினம் இரவு வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் 72.09 சதவீதம் வாக்கு பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

    இதில் கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 75.67 சதவீதமும் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீதமும் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அதற்கு மறுநாள் வாக்கு சதவீதத்தை வெளியிட்ட தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 69.94 சதவீதம் பதிவானதாக அறிவித்தது. இது மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியது.

    வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு பதிவாக குறைந்தது எப்படி என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் 3-வது முறையாக இறுதி வாக்குப்பதிவு சதவீத விவரங்களை நேற்று வெளியிட்டது.

    அதில் தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையம் மாறி மாறி வாக்குப் பதிவு சதவீதத்தை தெரிவித்து வந்ததால் ஏன் இந்த குளறுபடி என்று மக்கள் கேள்வி கேட்க தொடங்கி விட்டனர்.


    இதுகுறித்து விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    செல்போன், செயலி வருவதற்கு முன்பு வாக்குச் சாவடி வாரியாக 2 மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவாகும் வாக்கு விவரம் மண்டல அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகிறது.

    இந்த வாக்குச்சாவடி அலுவலர்களும் மண்டல அளவில் உள்ள அதிகாரிகளும் சரியான புள்ளி விவரங்களை மேலிடத்துக்கு தெரிவிக்காமல் குத்து மதிப்பாக வாக்கு சதவீதத்தை பதிவு செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதன் காரணமாகவே இந்த குளறுபடி ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

    இதனால் தான் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடைசியாக அனுப்பிய செய்தி குறிப்பில், அனைத்து தொகுதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்குப்பதிவு விவரம் பெற முடியாத நிலையில், மாதிரி விவரம் தோராயமாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டதாக கூறி இருந்தார்.


    இதுபற்றி முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    வாக்குப்பதிவு சதவீத மாறுபாடு என்பது வழக்கமாக நடக்க கூடியதுதான். 2019-ம் ஆண்டு தேர்தலில் பெரிய அளவில் நாடு முழுவதும் இதே போல் வாக்கு சதவீத வித்தியாசம் ஏற்பட்டது.

    தமிழ்நாட்டில் அதே போல் இப்போதும் குளறு படி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அதீத ஆர்வம் தான். ஒவ்வொரு மணிக்கும் எத்தனை ஓட்டு போட்டுள்ளார்கள் என்று கேட்பதால் வரும் பிரச்சனை. ஏனென்றால் ஒவ்வொரு பூத்திலும் உள்ள அலுவலர்கள் அங்கு உள்ள பணியை டென்ஷனுக்கு மத்தியில் பார்க்கும் போது மேலிடத்துக்கு தகவல் சொல்லும்போது பதற்றத்தில் தவறுதலாக புள்ளி விவரங்கள் சொல்வது உண்டு. எனவே இந்த முறையை முதலில் ஒழிக்க வேண்டும்.

    அதற்கு பதிலாக மதியம் 12 மணிக்கும், மாலை 5 மணிக்கும் ஓட்டுப்பதிவு விவரங்களை சேகரித்தாலே போதுமானது. தேவையில்லாத டென்ஷன் குறையும்.


    வாக்காளர் பட்டியலில் இருந்து நிறைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக வரும் குற்றச்சாட்டுகள் கவலை அளிக்கிறது. இதை தேர்தல் ஆணையம் சரி செய்ய வேண்டும்.

    அதற்கு ஒவ்வொரு வாக்காளரின் ஆதார் கார்டையும் வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும். ஆனால் இதை செய்ய முற்பட்ட போது தேர்தல் ஆணையத்துக்கு ஒரு நிர்பந்தம் ஏற்பட்டது. அதனால் இதை கட்டாய மாக்காமல் விட்டு விட்டனர். இதனாலேயே பாதி பிரச்சனை நடக்கிறது.

    வாக்காளர் பட்டியலில் ஒருவர் பெயர் நீக்கப்பட்டால் அந்த விவரங்களை அரசியல் கட்சிகளுக்கு கொடுக்க வேண்டும்.

    ஒரு தொகுதியில் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் என்றெல்லாம் செய்தி வருகிறது. அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகிறது என்றால் அது அவர்களின் தவறு என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் வரைவு வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் கொடுக்கப்படுகிறது. அதுவும் 6 மாதத்துக்கு முன்பே கொடுக்கிறார்கள்.

    அதை அரசியல் கட்சிகள் சரிபார்க்காமல் இருந்து விட்டு இப்போது குற்றம் சுமத்துவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நகரங்களில் உள்ள படித்தவர்கள் ஓட்டு சாவடிக்கு வந்து ஜனநாயக கடமையை ஆற்றுவதில்லை.
    • ஜனநாயக திருவிழாவில் அனைவரும் கூடி பங்கேற்றால் தான் ஓட்டு பதிவு அதிகரிக்கும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் 78.90 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இது, கடந்த தேர்தலை காட்டிலும் 2.35 சதவீதம் குறைவாகும்.

    மொத்தமுள்ள 10,23,699 களில் 8,07,724 பேர் மட்டுமே ஓட்டளித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துள்ள 2,19,422 வாக்காளர்கள் ஓட்டளிக்கவில்லை.

    வாக்கு பதிவு குறைந்தது குறித்து புதுச்சேரி தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-

    ஓட்டு பதிவு குறைவிற்கு வெயிலை ஒரு காரணமாக சொன்னாலும், மேலும் பல காரணங்கள் உள்ளன. சட்டசபை தேர்தல் என்றாலும், பாராளுமன்ற தேர்தல் என்றாலும் படிப்பறிவு இல்லாத மக்கள் திரண்டு வந்து ஓட்டளிக்கின்றனர். ஆனால் நகரங்களில் உள்ள படித்தவர்கள் ஓட்டு சாவடிக்கு வந்து ஜனநாயக கடமையை ஆற்றுவதில்லை.

    மாநிலத்தின் கல்வியறிவு 85.8 சதவீதம் உள்ளது. அப்படி இருந்தாலும் நகர பகுதியில் வசிப்பவர்கள் ஓட்டுச்சாவடியில் வரிசையில் நின்று ஓட்டளிக்க தயக்கம் காட்டுகின்றனர். இது ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு பதிவில் சரிவை ஏற்படுத்தி வருகிறது.

    மேலும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பல்வேறு நாடுகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக பிரான்ஸ், சிங்கப்பூர், அரபு நாடுகளில் பலரும் வேலை செய்து வருகின்றனர்.

    இவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றாலும் எந்த ஒரு தேர்தலிலும் புதுச்சேரிக்கு வந்து ஓட்டளிப்பதில்லை. இப்போது இவர்கள் கோடை விடுமுறைக்காக தங்களது குடும்பத்தினரையும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து சென்று விட்டனர். இதனால் அவர்களது குடும்பத்தினரும் ஓட்டளிக்கவில்லை. இதன் காரணமாக ஓட்டு பதிவு சரிந்து விட்டது. அதுபோல, 40 ஆயிரம் மாணவ-மாணவிகள் உயர் கல்வி பயில பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர். ஓட்டு போட ஒருநாள் மட்டுமே விடுமுறை என்பதாலும் இவர்களில் பலர் ஓட்டளிக்க வில்லை.

    தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் ஐ.டி., உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் ஓட்டுப்பதிவுக்கு வர நினைத்தாலும், அவர்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை கிடைப்பதில்லை. டெல்லியில் உள்ள ஒருவர் ஓட்டளித்துவிட்டு மறுநாளே எப்படி டெல்லி செல்ல முடியும்? இதுபோல ஒவ்வொருவருக்கும் ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், அதை ஏற்க முடியாது. ஜனநாயக திருவிழாவில் அனைவரும் கூடி பங்கேற்றால் தான் ஓட்டு பதிவு அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகருக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
    • பெண் சக்தியை போற்றும் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதாவில் இணைந்ததாகவும் குறிப்பிட்டு பெண்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறார்.

    சென்னை:

    முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி தமிழகத்தில் தேர்தல் முடிந்ததால் கேரளாவில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.

    திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகருக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    தலைநகரான திருவனந்தபுரத்தில் தமிழர்கள், மலையாளிகள், வேறு மாநிலத்தவர்கள் பெருமளவில் வசிக்கிறார்கள்.

    எனவே விஜயதரணி தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் பேசி வாக்கு சேகரிக்கிறார். ஏற்கனவே விஜயதரணி எம்.எல்.ஏ.வாக இருந்த விளவங்கோடு தொகுதியை அடுத்து திருவனந்தபுரம் இருப்பதால் தமிழ், மலையாளம் கலந்து பேசும் மக்கள் பெருமளவு அவர்கள் மத்தியில் இரு மொழிகளையும் கலந்து பேசுகிறார்.

    3 முறை தமிழ்நாட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்ததாகவும் கட்சியில் பெண்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை என்றும் எனவே பெண் சக்தியை போற்றும் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதாவில் இணைந்ததாகவும் குறிப்பிட்டு பெண்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறார்.

    • மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
    • ஓட்டு போடனுமா என்கின்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர்.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு, பஸ் கட்டணம், ரெயில் கட்டணம் மற்றும் அனைத்து போக்குவரத்து கட்டணங்களும் அதிகமாக இருப்பதனால் செலவு செய்து ஓட்டு போடனுமா என்கின்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர். தேர்தல் வரும் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் தான் வருகிறது. எனவே வெயிலின் தாக்கம் அதிகம் என்கிற காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

    தேர்தல் ஆணையம் நூறு சதவீதம் ஓட்டு செலுத்த வேண்டும் என்று விளம்பரம் செய்தாலும், மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதில் முக்கியமாக சென்னை போன்ற மாநகரங்களில் வசதியானவர்கள், படித்தவர்கள், அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் வாக்களிப்பதை பெருமளவில் விரும்புவதில்லை என்பது வேதனையளிக்கிறது.


    நாம் யாருக்கு ஓட்டுப் போட்டால் என்ன? என்ன மாற்றம் வரப்போகிறது? என்கிற மனநிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்களா என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.

    ஏற்கனவே வெற்றி பெற்றவர்களும் தொகுதி பக்கம் அதிகம் செல்வதில்லை, தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில்லை, அதுமட்டு மல்லாமல் இன்றைக்கு நிலவுகின்ற வேலையின்மை, வறுமை, அன்றாட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கூட ஆளில்லை. யாருக்கு ஓட்டுப் போட்டால் என்ன என்ற மக்களின் வேதனையான மன நிலையை தான் இது நிரூபிக்கிறது. இதெல்லாம் மாறவேண்டும் என்றால் மத்திய, மாநில ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் பிரச்சனைகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். ஆனால் ஆளும் ஆட்சியாளர்களோ ஓட்டுக்கு காசு கொடுத்தும், ஒட்டு மொத்த மீடியாவையும் பயன்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்கின்ற போக்கில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

    எனவே மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றணும், வாக்களித்த மக்களை நேரடியாக சந்திக்கணும் என்கிற பாடத்தை இந்த தேர்தல் மூலம் கற்றுள்ளனர். எனவே தேர்தல் ஆணையமும், காவல்துறையும், நீதித்துறையும், ஆட்சியாளர்களும் வாக்களிப்பதன் அவசியத்தையும், நம்பிக்கையையும் மக்களுக்கு இனிவரும் காலங்களில் உறுதியாக ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

    • வாக்குப்பதிவின்போது முதியவர்கள் அதிகமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்
    • தேர்தல் அலுவலர்களின் உதவியுடன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

    மதுரை:

    தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளுக்கு நேற்று பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. மதுரையில் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்றது. மதுரையை பொருத்தவரையில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது முதியவர்கள் அதிகமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

    இந்த நிலையில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர் லீலா (வயது 99). இவரது 2 மகள்கள் வெளிநாட்டில் உள்ளனர். இவரது மற்றொரு மகள் வீடு தவிட்டுசந்தை பகுதியில் உள்ளது. இவர் அப்பகுதியில் மகளுடன் வசித்து வருகிறார்.

    இவருக்கு மதுரைவடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே.கே.நகர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தது. இதற்கான வாக்குச்சாவடி கே.கே.நகர் மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. தபால் மூலம் வாக்களிக்கும் முதியவர்களுக்கான உரிமைக்கு விண்ணப்பிக்க காலம் கடந்ததாக கூறப்படுகிறது. எனவே நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க விரும்பினார். 99 வயதான இவர் நடக்க முடியாத முதுமையான நிலையில் காணப்பட்டதால் வாக்களிக்க உதவுமாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கோரிக்கை விடுத்தார்.

    இவரது கோரிக்கையை ஏற்று மூதாட்டி லீலா ஆம்புலன்சில் சென்று வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு தனது உதவியாளருக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதன் பேரில் ஆம்புலன்சு ஏற்பாடு செய்யப்பட்டு தவிட்டுசந்தையில் உள்ள அவரது மகள் இல்லத்தில் இருந்து மூதாட்டியை வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிக்கு ஆம்புலன்சு மூலம் தன்னார்வலர்கள் அழைத்து சென்றனர். அங்கு அவர் தேர்தல் அலுவலர்களின் உதவியுடன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். 99 வயது மூதாட்டி லீலா தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு அமைச்சர் உதவிய சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • வாக்காளர்கள் ஒருவர் கூட காலை 10 மணி நிலவரப்படி வாக்களிக்க வரவில்லை.
    • கருக்கனஅள்ளி கிராமத்தில் ஒரு சதவீதம் வாக்குகூட பதிவாகவில்லை.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி வேப்பனஅள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட அக்ரஹார ஊராட்சியில் உள்ள கடவரஅள்ளி கிராமத்தில் நேற்று காலை வாக்கு பதிவுக்கான பணிகள் நடைபெற்று தயார் நிலையில் இருந்தன.

    ஆனால், கடவரஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் ஒருவர் கூட காலை 10 மணி நிலவரப்படி வாக்களிக்க வரவில்லை.

    இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறும்போது, இந்த பகுதியில் 450 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் இந்த பகுதியில் வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு அளித்தும், அவர்கள் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட தேர்தல் நடத்தும் உதவி அலுவலர், போலீஸ் டி.எஸ்.பி., மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கடவரஅள்ளி கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தை மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் தங்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பிறகு அப்பகுதி பொதுமக்கள் சமாதானம் அடைந்து 5.20 மணி முதல் வாக்கு பதிவு செய்ய தொடங்கினர். 6 மணிக்கு பிறகு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் இரவு 9 மணி வரை வாக்குபதிவு நடைபெற்றது.

    கடவரஅள்ளி பகுதியில் மொத்தம் 455 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 377 பேர் மட்டும் வாக்களித்தனர். அந்த பகுதியில் மொத்தம் 76 சதவீதம் வாக்கு பதிவாகி இருந்தது.

    இதேபோன்று தேன்கனிக்கோட்டை அருகே காரண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கச்சுவாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் வாக்காளர் ஒருவர் கூட காலை 7 மணி முதல் 10 மணி வரை வாக்களிக்க வரவில்லை.

    கச்சுவாடி பகுதியில் சாலை வசதி கோரி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பதாக தெரிவித்தனர். உடனே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சமரசம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மதியம் 1 மணிக்கும் மேல் வாக்களிக்க சென்றனர். 6 மணிக்கு மேல் வாக்களிக்க வந்தவர்களுக்கு அதிகாரிகள் டோக்கன் விநியோகம் செய்தனர். அதன்பிறகு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டவர்கள் இரவு 9 மணி வரை வாக்களித்தனர். இதில் 60 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    இதேபோல் வேப்பனஅள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மற்றொரு கிராமமான கருக்கனஅள்ளி கிராமத்திலும் தேர்தலை புறக்கணித்து வாக்காளர் யாரும் வாக்களிக்கவில்லை.

    மேலும், அந்த பகுதியில் 1050 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 4 வழி சாலை பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் சாலையை கடக்கும் விதமாக மேம்பாலம் அமைக்கவில்லை. இதனால் பொது மக்கள் 4 வழிசாலை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.

    அப்பகுதி பொது மக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியும் அவர்கள் யாரும் சமாதானம் ஆகவில்லை. இதன் காரணமாக கருக்கனஅள்ளி கிராமத்தில் ஒரு சதவீதம் வாக்குகூட பதிவாகவில்லை.

    • பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது.
    • முதல் கட்ட வாக்குப்பதிவு, எதிர்க்கட்சிகளின் தோல்வியை காட்டுகிறது.

    மும்பை:

    பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குச்சாவடி அளவில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு மற்றும் கிடைத்த தகவல்களின்படி, முதல் கட்ட தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளது என்பது உறுதியாகி உள்ளது.

    முதல் கட்ட வாக்குப்பதிவு, எதிர்க்கட்சிகளின் தோல்வியை காட்டுகிறது. காங்கிரஸ் ஏற்கனவே தனது தோல்வியை ஒப்பு கொண்டு விட்டது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதுதான் உண்மை.

    தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி சரிந்து விழும். அந்த கூட்டணியே இருக்காது. அக்கூட்டணி கட்சிகள் தங்களுக்குள்ளாகவே மோதிக் கொள்கிறார்கள். ராகுல் காந்திக்கும், கேரளா முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கும் மோதல் ஏற்பட்டு இருக்கிறது. 25 சதவீத தொகுதிகளில் இந்திய கூட்டணி கட்சிகள் ஒருவருக்கொருவர் எதிராக போட்டியிடுகிறார்கள்.

    எதிர்க்கட்சி கூட்டணி என்பது தங்கள் ஊழல் செயல்களை பாதுகாக்க ஒன்றிணைந்த சுயநலவாதிகள் குழு.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால் சிலர் மேல்-சபை தேர்தல் மூலம் பாராளுமன்றத்தில் நுழைய பார்க்கிறார்கள்.


    தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகள் பயந்து ஓடுகிறார்கள். சில தலைவர்கள் தேர்தலில் போட்டியிட தைரியம் இல்லாததால் பாராளுமன்ற தேர்தலில் இருந்து வெளியேறி மேல்சபை தேர்தலுக்கு சென்றனர்.

    இந்தியா கூட்டணியின் தலைவர் யார்? என்பதை அவர்களால் மக்களுக்கு சொல்ல முடியாது. காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) அமேதி தொகுதியில் இருந்து ஓடினார். தற்போது வயநாடு தொகுதியில் இருந்தும் ஓடிவிடுவார்.

    வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்திக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. அவரும், அவரது குழுவினரும் 26-ந்தேதி வயநாட்டு தொகுதியில் நடக்கும் வாக்குப்பதிவுக்காக காத்திருக்கிறார்கள். அமேதியில் இருந்து தப்பி ஓடியது போல அவர்கள் வயநாட்டை விட்டு ஓடுவார்கள்.

    அமேதியில் தோல்வியடைந்த பிறகு ராகுல் காந்தி வயநாட்டையும் இழக்க நேரிடும். எனவே அவர் ஏப்ரல் 26-ந்தேதிக்கு பிறகு பாதுகாப்பான இடத்தை தேட வேண்டும்.

    காங்கிரஸ் செய்த தவறுகளை சரி செய்வதற்காகவே எங்களின் அதிக நேரம் செலவழிக்கப்பட்டது. அடுத்த 25 ஆண்டுகள் உலகில் இந்தியாவின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் ஆண்டாக இருக்கும். மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு பல ஆண்டுகளாக காங்கிரஸ் தடைகளை ஏற்படுத்தியது. அடுத்த 5 ஆண்டுகளில் மகாராஷ்டிராவை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    குடியுரிமை திருத்த சட்டம் இல்லாவிட்டால் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த சீக்கியர்களின் கதி என்னவாகும் என்று நினைத்து பாருங்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • சாந்தி திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
    • குழந்தைகளுக்கு அரசு உதவி வழங்கி வேலை வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த குஞ்சார்வலசை பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 10 மற்றும் 11 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மீன்பிடி தொழிலுக்காக வெளிநாட்டிற்கு சென்ற சங்கர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து தனது மகள்களுடன் குஞ்சார்வலசையில் சாந்தி தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்காக வேதாளை அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்தல் பணிகள் உதவிக்காக ஊராட்சி மன்றம் சார்பில் சாந்தி தன்னார்வலராக நியமிக்கப்பட்டு நேற்று காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொடர்ந்து வேதாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்கு பதிவு மையம் ஒன்றில் பணி செய்து வந்தார்.

    இந்நிலையில் மாலை 6 மணிக்கு தேர்தல் முடிவடைய இருந்த நிலையில் தனது வாக்கை பதிவு செய்வதற்காக அதே பள்ளியில் உள்ள மற்றொரு வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு அறைக்கு வெளியே வந்தபோது சாந்தி திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    இதனையடுத்து வாக்குச்சாவடி மையத்தில் இருந்த மருத்துவர்கள் சாந்தியை பரிசோதனை செய்து பார்த்தபோது சாந்தி உயிரிழந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து உடலை கைப்பற்றிய மண்டபம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    கணவரை இழந்து தனியாக தனது குழந்தைகளுடன் வாழ்ந்து உயிரிழந்ததால் குழந்தைகளின் எதிர்காலம் கேள்வி குறியாகி உள்ளது. எனவே குழந்தைகளுக்கு அரசு உதவி வழங்கி வேலை வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×