search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத்தில் இதுவரை நடந்த 27 ஓட்டெடுப்புகள்
    X

    பாராளுமன்றத்தில் இதுவரை நடந்த 27 ஓட்டெடுப்புகள்

    இந்திய பாராளுமன்ற வரலாற்றில் இதுவரை 27 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடந்து வாக்கெடுப்பும் நடத்தப்பட்டுள்ளது. #Parliament #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    மத்தியில் ஆட்சி செய்யும் அரசு மீது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கையில்லாத எண்ணம் ஏற்பட்டால், பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சட்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற இரு அவைகளில் மக்களவையில் மட்டுமே இத்தகைய தீர்மானத்தை கொண்டு வர முடியும்.

    பாராளுமன்றத்தில் 50 எம்.பி.க்களின் ஆதரவுடன் தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர இயலும். அந்த தீர்மானம் மீது பாராளுமன்ற சட்ட விதி 198-வது பிரிவின் கீழ் விவாதம் நடந்து ஓட்டெடுப்பு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும்.

    எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்பதும், ஏற்காததும் சபாநாயகரின் இறுதி முடிவுக்கு உட்பட்டதாகும். அதுபோல நம்பிக்கையில்லா தீர்மானம் மீது எப்போது, எப்படி ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்ற அனைத்தையும் சபாநாயகரே முடிவு செய்வார். ஒவ்வொரு கட்சி தலைவர்களும் விவாதத்தில் பேச நேரம் ஒதுக்கி கொடுப்பதும் சபாநாயகர்தான்.

    அதன்படி இந்திய பாராளு மன்றவரலாற்றில் இதுவரை 27 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடந்து வாக்கெடுப்பும் நடத்தப்பட்டுள்ளது. நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி, மெரார்ஜி தேசாய், ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய், மோடி ஆகிய 8 பிரதமர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளனர்.

    பாராளுமன்றத்தில் பிரதமர் நேரு 1963-ம் ஆண்டு முதல் முதலாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர் கொண்டார். அதுதான் முதல் நம்பிக்கையில்லா தீர்மானமாகும். ஜே.பி.கிருபாளினி கொண்டு வந்த அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.


    அதிகபட்ச நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்தவர் இந்திராகாந்தி ஆவார். அவர் மொத்தம் 15 தடவை நம்பிக்கையில்லா தீர்மான சவால்களை சந்தித்தார். அந்த 15 தடவையும் இந்திராகாந்தி வெற்றி பெற்றார்.

    அவர் அரசு மீது 1966-ம் ஆண்டு முதல் 1975-ம்ஆண்டு வரை 9 ஆண்டுகளில் 12 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 1981-ம் ஆண்டு முதல் 1982-ம் ஆண்டுக்குள் 3 தடவை நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டார்.

    லால்பகதூர் சாஸ்திரி, நரசிம்மராவ் இருவரும் தலா 3 தடவை நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்தனர். அந்த 3 தடவையும் அவர்கள் வெற்றி பெற்றனர்.

    1993-ம் ஆண்டு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து நரசிம்மராவ் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    அந்த தீர்மானம் மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மிக, மிக குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் நரசிம்மராவ் வெற்றி பெற்றார். அதாவது நரசிம்மராவுக்கு ஆதரவாக 265 வாக்குகளும் எதிராக 251 வாக்குகளும் கிடைத்தது. இதனால் 14 வாக்குகள் வித்தியாசத்தில் நரசிம்மராவ் வெற்றி பெற்றார்.

    வாஜ்பாய், ராஜீவ்காந்தி இருவரும் தலா ஒரு தடவை நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்தனர். அதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. 1999-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் பெரும் பான்மையை நிரூபிக்க நடந்த ஓட்டெடுப்பில் வாஜ்பாய் தோல்வியை தழுவினார்.

    1967 மற்றும் 1992-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் பிரதமர்களை எதிர்த்து வாஜ்பாய் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வாஜ்பாய் 2003-ம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள நேரிட்டது.

    நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஓட்டெடுப்பில் தோல்வியை தழுவிய ஒரே பிரதமர் மெரார்ஜி தேசாய் ஆவார். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டன. இதனால் அவர் ஓட்டெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

    பாராளுமன்றத்தில் அதிக தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தவர் என்ற பெருமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் ஜோதிர்மாய் பாசுக்கு உண்டு. அவர் பாராளுமன்றத்தில் 4 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். 4 தடவையும் இந்திராவுக்கு எதிராக அவர் தீர்மானம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    பிரதமர்களில் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும், விவாதத்தையும், ஓட்டெடுப்பையும் சந்திக்காத ஒரே பிரதமர் என்ற தனி சிறப்பு மன்மோகன்சிங்குக்கு உண்டு. 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த அவரை எதிர்த்து ஒரு தடவை கூட பா.ஜ.க.வினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Parliament #NoConfidenceMotion
    Next Story
    ×