search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lawyer"

    வக்கீல் மீது தாக்குதல் நடத்தியது குறித்த வழக்கில் மற்றொரு வக்கீலுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தம்பிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன்(வயது 27) வக்கீல். இவர் 20-5-2004 அன்று விபத்தில் படுகாயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தோப்புக்கொல்லையை சேர்ந்தவர்களை பார்த்து விட்டு வெளியே வந்தார்.

    அப்போது அவரை கடலூர் வக்கீல் சந்திரசேகரன் வழிமறித்து திட்டி மிரட்டியதாகவும், இதை தடுக்க முயன்ற தோப்புக்கொல்லையை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் கையில் பேனா கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வக்கீல் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வக்கீல் சந்திரசேகரன் மீது வழக்குபதிவு செய்து, அவர் மீது கடலூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட வக்கீல் சந்திரசேகரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி அன்வர் சதாத் தீர்ப்பளித்தார். #tamilnews
    நண்பரின் மனைவியிடம் நெருங்கி பழகி அதனை ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு வக்கீல் மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு பகுதி வடக்கு கோட்டையை சேர்ந்தவர் சேகர்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதி வெள்ளூரை சேர்ந்தவர் தேவி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். தேவி பி.எஸ்.சி பே‌ஷன் டெக்னாலஜி படித்தவர்.

    இருவரது காதல் திருமணத்துக்கு சேகரின் நண்பரும், வக்கீலுமான அன்பரசன் என்பவர் உதவியுள்ளார். அன்பரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இன்னும் திருமணமாகவில்லை.

    இந்நிலையில் திருமணம் ஆன சில மாதங்களிலேயே சேகர் வேலை தேடி லண்டன் சென்று விட்டாராம்.

    இந்த நிலையில் கணவர் வெளிநாடு சென்றதால் தேவி வெள்ளூரில் உள்ள தனது வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். வக்கீல் அன்பரசன் அவ்வப்போது தேவியிடம் போனில் பேசி வந்ததால் இருவரும் நெருக்கமாகினர்.

    பின்னர் தேவியை சென்னைக்கு வரவழைத்த அன்பரசன் அங்கு ஒரு அழகு நிலையத்தில் வேலை வாங்கி தந்ததோடு அவரை பல்வேறு இடங்களுக்கும் அழைத்து சென்றுள்ளார். இதில் இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இதையடுத்து சென்னையிலேயே தேவிக்கு தனியாக அழகு நிலையம் அமைத்து கொடுத்த அன்பரசன் தனது கட்டுப்பாட்டில் தேவியை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் புதுச்சேரி, திருப்பதி போன்ற இடங்களுக்கு தேவியை அழைத்து சென்று நெருக்கமாக இருந்தபோது தேவிக்கு தெரியாமல் அதனை செல்போனில் படம் எடுத்து வைத்துக்கொண்டாராம். ஒரு கட்டத்தில் தனக்கு பணம் தேவை என்று கூறி தேவியிடம் அடிக்கடி பணம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் தன்னிடம் நெருக்கமாக இருந்ததை அன்பரசன் படம் எடுத்து வைத்துள்ளதை அறிந்த தேவி பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தேவி தனது சொந்த ஊரான வெள்ளூருக்கு வந்து தனது குடும்பத்தாரிடம் கூறி அழுதுள்ளார். பின்னர் அன்பரசன் கடந்த மாதம் 12-ந்தேதி வெள்ளூருக்கு வந்து நான் உனக்கு செலவு செய்த பணம் ரூ.2½ லட்சத்தை திருப்பி கொடு. இல்லை என்றால் இந்த ஆபாச படம் மற்றும் வீடியோவை உனது கணவருக்கும், இணைய தளத்திலும் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

    அப்போது அங்கிருந்த தேவியின் உறவினர்கள் அன்பரசனிடம் இருந்த 2 செல்போன்களையும் பறித்து அதில் இருந்த சிம் கார்டுகளை எடுத்துக் கொண்டனராம். இதையடுத்து பாப்பாநாடு போலீசில் அன்பரசன் புகார் கொடுத்தார். இதேபோல் தேவியும் பாப்பாநாடு போலீசில் தன்னை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் கொடுத்தார்.

    ஆனால் புகாரின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் இதுபற்றி அவர் தஞ்சை டி.ஐ.ஜி, எஸ்.பி., ஆகியோரிடம் புகார் கொடுத்தார். இதனால் போலீசார் தேவியின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அன்பரசனிடம் நெருக்கமாக இருந்ததை தேவிக்கு தெரியாமல் ஆபாச வீடியோ எடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அதனை செல்போனில் மட்டுமல்லாது தனது லேப்-டாப்பிலும் பதிவு செய்து வைத்திருப்பது தெரியவந்தது.

    இந்நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தன்னை தேடி வருவதை தெரிந்து கொண்ட அன்பரசன் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை தொடர்ந்து தேடி வருகின்றனர். #tamilnews
    வக்கீல் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வைகோ மீது வழக்குப்பதிவு செய்ய தூத்துக்குடி கோர்ட்டு உத்தரவிட்டது. #Vaiko #ThoothukudiCourt
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு தொடர்பாக கடந்த 6-ந் தேதி ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ ஆஜராக வந்தார். அப்போது அங்கு இருந்த சில வக்கீல்கள் வைகோவை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் வக்கீல்களுக்கும், ம.தி.மு.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    இந்த நிலையில் வக்கீல் ஜெகதீஷ்ராம் என்பவர் தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் தூத்துக்குடி பூபாலராயர்புரம் 1-வது தெருவில் குடியிருந்து வருகிறேன். தூத்துக்குடி கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறேன். நான் ரஜினிகாந்த் மீது பற்று கொண்டவர் என்பதால், கடந்த 30-5-18 அன்று தூத்துக்குடிக்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்துடன் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றேன். இதனை பலரும் பார்த்து உள்ளனர். அதே போன்று ம.தி.மு.க.வை சேர்ந்தவர்களும் பார்த்து உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி அன்று மதியம் 2.30 மணிக்கு நான் நீதிமன்ற பணிகளை முடித்து விட்டு வக்கீல்கள் ஓய்வுக்காக அமரும் இடத்தில் அமர்ந்து இருந்தேன். அப்போது 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு வழக்கு விசாரணைக்காக ஆஜராகிவிட்டு வெளியே வந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, உத்தரவின் பேரில் அவருடன் வந்தவர்கள் என்னை இரும்பு கம்பிகள் மற்றும் அங்கு கிடந்த நாற்காலிகளால் தாக்கினர். அங்கு இருந்த சக வக்கீல்கள் என்னை, அவர்களிடம் இருந்து மீட்டனர். மேலும் அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது சம்பந்தமாக தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் எனது மனு மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதிரிகள் மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேற்படி எதிரிகள் என்னை ஆபாசமாக திட்டி, அடித்து, கொலைமிரட்டல் விடுத்து, கொலை செய்ய முயற்சித்து, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 147, 148, 294(பி), 323, 324, 307, 506(2)-ன் கீழ் தண்டிக்கத்தக்க குற்றம் புரிந்து உள்ளனர். ஆகையால் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளார்.

    மனுவை விசாரித்த முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு அண்ணாமலை, மனு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த தென்பாகம் போலீசாருக்கு உத்தரவிட்டார். #Vaiko #ThoothukudiCourt
    லோக் ஆயுக்தா சட்டம் ஊழலை ஒழிக்காது என்றும், அது கண்துடைப்பு நாடகம் என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி, வக்கீல் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். #TNAssembly #Lokayukta
    சென்னை:

    தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை அமைச்சர் நேற்று தாக்கல் செய்தார். இந்த சட்டம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கூறியதாவது:-

    லோக் ஆயுக்தா சட்டம் சட்டசபையில் விவாதமே இல்லாமல் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஒரு தலைவர், 4 உறுப்பினர்கள் இருப்பார்கள். 2 உறுப்பினர்கள் நீதித்துறையை சார்ந்தவர்கள், 2 உறுப்பினர்கள் நீதித்துறையை சாராதவர்கள். தலைவராக இருப்பவர் ஐகோர்ட்டு நீதிபதியாக அல்லது ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    அதாவது 25 ஆண்டுகள் ஊழலுக்கு எதிராக செயலாற்றியவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. யார் செயலாற்றியவர்கள்? என்ற கேள்வி எழுகிறது. ஆளும் கட்சியை சேர்ந்தவர்களை இந்த தலைவர் பதவிக்கு நியமிக்கலாம்.

    தேர்வு செய்யும் குழுவில் 3-ல் 2 பங்கு என்ற பெரும்பான்மை அடிப்படையில் தலைவர், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதாவது முதல்-அமைச்சர், சபாநாயகர் ஆகியோரின் விருப்பத்தின் பேரில் இந்த தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்குழுவில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அல்லது பணியில் இருக்கும் நீதிபதி இடம் பெறவில்லை.

    மேலும், ஒப்பந்த பணி தொடர்பாக ஊழல் புகார் கொடுக்க முடியாது என்று சட்டம் கூறுகிறது. ஊழலே ஒப்பந்த பணியில் தானே நடக்கிறது. அது தொடர்பாக புகார் கொடுக்கவில்லை என்றால், எது சம்பந்தமாக புகார் கொடுக்க வேண்டும்?

    பொய் புகார் என்று தெரிய வந்தால், சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் என்று சட்டம் கூறுகிறது. எனவே, இந்த சட்டம் ஊழலை ஒழிக்காது. லஞ்ச ஒழிப்புத்துறை போல கூடுதலாக ஒரு துறையாக இந்த லோக் ஆயுக்தா செயல்படும் என்று தான் கூறவேண்டும்.

    மேலும், எல்லா மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைப்பை அமைக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அந்த வழக்கு நாளை (இன்று) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அப்போது எங்கள் மாநிலத்திலும், லோக் ஆயுக்தா அமைத்து விட்டோம் என்று கூறுவதாக, இப்படி ஒரு அவசர நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    இந்த சட்டம் குறித்து பெண் வக்கீல் ஆர்.சுதா கூறியதாவது:-

    நாட்டில் ஊழல் என்ற பேயை முற்றிலுமாக அழிக்கவேண்டும் என்பதற்காக மாநில அளவில் லோக் ஆயுக்தா சட்டத்தை மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு கொண்டு வந்தது. ஊழல் ஒழிந்தால் தான், மக்களுக்கு நல்ல தரமான இலவச கல்வி, குடிநீர், சாலை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எல்லாம் தங்கு தடையின்றி கிடைக்கும். இந்த நல்ல எண்ணத்தின் அடிப்படையில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

    ஆனால், தமிழக அரசு கொண்டு வந்துள்ள லோக் ஆயுக்தா சட்டத்தை பார்க்கும்போது, அந்த சட்டத்தின் அடிப்படை நோக்கத்துக்கு எதிர்மாறாக உள்ளது. பொய் புகார் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம், ஓர் ஆண்டு சிறை என்று கூறியுள்ளது.

    அப்படி என்றால் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் புகார் சொன்னால், அவர்கள் ஜெயிலுக்கு போக வேண்டியது வரும். பெரும் தொகையான ரூ.1 லட்சத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று பொதுமக்களை மிரட்டும் விதமாக உள்ளது.

    இந்த லோக் ஆயுக்தா சட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கவில்லை. அவர்களே உருவாக்கிக்கொண்டனர். மொத்தத்தில் இந்த லோக் ஆயுக்தா சட்டம் பொதுமக்களையும், சுப்ரீம் கோர்ட்டையும் ஏமாற்றுவதற்காக அரசு செய்யும் கண்துடைப்பு நாடகம் ஆகும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #TNAssembly #Lokayukta
    அமெரிக்காவில் போதைப்பொருள் தடுப்பு அமலாக்க அமைப்பின் பொறுப்பு நிர்வாகியாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் துணை உதவியாளராகவும் இருந்து வந்தவர் உத்தம் தில்லான் நியமிக்கப்பட்டு உள்ளார். #DonaldTrump #UttamDhillon
    வாஷிங்டன்:

    வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் துணை வக்கீலாகவும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் துணை உதவியாளராகவும் இருந்து வந்தவர் உத்தம் தில்லான். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

    இவர், போதைப்பொருள் தடுப்பு அமலாக்க அமைப்பின் பொறுப்பு நிர்வாகியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இந்தப் பதவியில் இருந்து வந்த ராபர்ட் பேட்டர்சன் என்பவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, உத்தம் தில்லான் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்று உள்ளார்.



    இந்தப் பதவி, அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தில் முக்கிய பதவி ஆகும்.

    உத்தம் தில்லான் நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ், இதுபற்றி கூறுகையில், “அமெரிக்காவில் போதைப்பொருளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் ஒவ்வொரு 9 நிமிடத்திலும் ஒருவர் உயிரிழக்கின்றனர். எனவே நமது வரலாற்றில் போதைப் பொருள் உபயோகத்தால் அதிகபட்ச உயிரிழப்புகளை சந்தித்து வருகிறோம் என்பதில் சந்தேகம் இல்லை” என குறிப்பிட்டார்.

    உத்தம் தில்லான், வெள்ளை மாளிகையில் மட்டுமல்லாது, நீதித்துறை, உள்நாட்டு பாதுகாப்புத்துறை, நாடாளுமன்றம் உள்ளிட்டவற்றில் பணியாற்றிய நீண்ட அனுபவம் மிக்கவர்.  #DonaldTrump #UttamDhillon #tamilnews
    சிங்கப்பூர் நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி வழக்கறிஞரான டேடர் சிங் கில் அந்நாட்டின் உச்சநீதிமன்ற நீதித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். #JudicialCommissioner #Singapore #DedarSinghGill
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் டேடர் சிங் கில். இவர் கடந்த 30 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணி புரிந்து வருகிறார். 59 வயதான டேடர் சிங் கில்லை, சிங்கப்பூர் நாட்டின் உச்சநீதிமன்றத்தில் நீதித்துறை ஆணையராக அந்நாட்டின் அதிபர் ஹலிமா யாகோப் நியமித்துள்ளார்.

    2 ஆண்டுகள் நீதித்துறை ஆணையராக பொறுப்பு வகிக்க உள்ள டேடர் சிங், ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவர், ஆசிய காப்புரிமை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் என்பதும், காப்புரிமை ஆணையத்தின் துணை தலைவராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. #JudicialCommissioner #Singapore #DedarSinghGill
    தூத்துக்குடி கலவர வழக்கு தொடர்பாக வக்கீல் வாஞ்சிநாதன் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் பாளை. சிறையில் அடைத்தனர். #LawyerVanchinathan #Arrested #Thoothukudi
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

    இந்த கலவரம் தொடர்பாக போலீசார் 243 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி தூத்துக்குடி சிப்காட் போலீசார் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைப்பாளர் மதுரையை சேர்ந்த வக்கீல் வாஞ்சிநாதன் (37), தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் அரிராகவன் உள்ளிட்ட 100 பேர் மீது எந்தவித முன் அனுமதியும் இன்றி 144 தடை உத்தரவை மீறி, போலீஸ் தடுப்புகளை சேதப்படுத்துதல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், வாகனங்களை எரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



    இந்த வழக்கு தொடர்பாக வக்கீல் வாஞ்சிநாதன் உள்ளிட்டவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சென்னை விமான நிலையம் முன்பு நின்று கொண்டு இருந்த வக்கீல் வாஞ்சிநாதனை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர் விமான நிலையம் முன்பு நின்றபோது பிடிபட்டார். பின்னர் அவரை தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர்.

    விசாரணைக்கு பிறகு அவர் தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தர விட்டார். அதன்பேரில் அவர் பாளையங் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

    கடந்த சில நாட்களாக போலீசார் கைது நடவடிக்கையை நிறுத்தி வைத்து இருந்தனர். தற்போது மீண்டும் கைது நடவடிக்கையை தொடங்கி இருப்பதால் தூத்துக்குடியில் பரபரப்பும், பதற்றமான நிலையும் உருவாகி உள்ளது. 
    கோவை அருகே ரூ.2½ கோடி கேட்டு தொழில் அதிபரை கடத்தியது தொடர்பாக வக்கீல் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.
    கோவை:

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜாக்கோ பிடல் (வயது 45). தொழில்அதிபர்.

    இவர் கன்னியாகுமரி, கோவை உள்பட பல மாவட்டங்களில் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் முதல் கோவை பாப்ப நாயக்கன்பாளையயத்தில் அலுவலகம் அமைத்து தொழில் செய்து வருகிறார்.

    நேற்று மதியம் அலுவலகத்துக்கு 10 பேர் கொண்ட கும்பல் கார்களில் வந்தனர். உருட்டு கட்டையால் அலுவலகத்தை சூறையாடிய கும்பல் அலுவலக ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டினர். இதனால் பெண் ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.

    பின்னர் கும்பல் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அங்கு ஜாக்கோ பிடல், அவரது நண்பர் மனோகரன் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய கும்பல் ஜாக்கோ பிடல்டிடம் ரூ.2½ கோடி பணம் கேட்டு கத்தி முனையில் மிரட்டினர்.

    அவர் பணம் இல்லை என கூறவும் ஆவேசமடைந்த கும்பல் ஜான் கோ பிடலையும், மனோகரனையும் 2 கார்களில் ஏற்றினர். அப்போது அங்கிருந்த அலுவலக ஊழியர்களிடம் ரூ.2½ கோடி கொடுத்தால் இருவரையும் விட்டு விடுவோம், இல்லையென்றால் இருவரையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு அவர்களை கடத்தி சென்றனர்.

    கும்பல் போகும் போது அலுவலகத்தில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கப்பணம், 30 பவுன் நகைகள், 2 எல்.இ.டி. டி.வி.க் கள், 4 கம்ப்யூட்டர்கள், 2 பிரிண்டர்கள், காமிராக்கள், செல்போன்கள் மற்றும் ஆவணங்களை எடுத்துக் கொண்டனர். அதிர்ச்சியடைந்த அலுவலக ஊழியர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர்.

    சம்பவஇடத்துக்கு சென்ற போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்த னர். அதன்மூலம் ஜான் கோ பிடல், மனோகரன் ஆகியோரை கடத்தி சென்ற கார்களின் எண்களை கைப்பற்றி மாவட்டம் முழுவதும் போலீசாரை உஷார்படுத்தினர்.

    சிறிது நேரத்தில் மனோகரனை பீளமேடு பகுதியில் கடத்தி கும்பல் இறக்கி விட்டு சென்று விட்டனர். ஜாக்கோ பிடல்டை சேலத்தை நோக்கி கடத்தி சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து சேலம், நாமக்கல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக காரில் சென்ற ஒரு கும்பலை நேற்று இரவு போலீசார் மடக்கினர். விசாரணையில் ஜாக்கோ பிடலை கடத்தியவர்கள் என்பது தெரிய வந்தது. காரில் இருந்த ஜாக்கோ பிடலை மீட்ட போலீசார் அவரை கடத்திய 3 பேரை கைது செய்தனர்.

    விசாரணையில் தர்மபுரி மாவட்டம் கம்பையநல்லூரை சேர்ந்த கார்த்திக் (வயது 36), ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தை சேர்ந்த வக்கீல் போஸ் முருகன்(37), சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த செந்தில்(25) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    இவர்களுக்கும் ஜாக்கோ பிடல்டுக்கும் பணப் பிரச்சினை இருந்ததாகவும், ஜாக்கோ பிடல் பல மாதங்களாக பணம் கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததால் ஆத்திரமடைந்து அவரை கடத்தியதாக கூறினர்.

    இந்த சம்பவத்தில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டியை சேர்ந்த கரிகாலன் (40), அரூரை சேர்ந்த கோகுல் மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணை வலுவானதாக இல்லை என்று நீதிபதிகள், மூத்த வக்கீல் கருத்து கூறியுள்ளனர். #BanSterlite
    சென்னை:

    ‘ஸ்டெர்லைட்’ நிறுவனத்துக்கு எதிராக தூத்துக்குடியில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். அவர்களது 100-வது நாள் போராட்டம், கடந்த மே 22-ந்தேதி நடந்தது. அன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், 13 பேர் பலியாகினர்.

    இதைத்தொடர்ந்து இந்த நிறுவனத்தை இழுத்து மூட மே 28-ந்தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனால் அந்த நிறுவனத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இத்துடன் பிரச்சினை முடிந்ததா?, இனி இந்த நிறுவனம் செயல்படாதா? அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால், அந்த நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்து விடுமா?, அரசாணை ரத்தாகி விடுமா? அந்த நிறுவனம் மீண்டும் செயல்பட தொடங்குமா? என்பது உள்பட பல கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இதுகுறித்து சட்டவல்லுநர்களிடம் கேட்டால், தமிழக அரசின் நடவடிக்கை வெறும் கண் துடைப்பு நாடகம். அந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று கருத்து கூறுகின்றனர்.

    இதுகுறித்து, சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் ஏ.சிராஜூதீனிடம் கேட்டபோது, ‘இப்படி ஒரு அரசாணையை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கு முன்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். அவ்வாறு வழங்கப்படும் அனுமதியின்போது விதிக்கப்படும் விதிமுறைகளை மீறினால், அந்த அனுமதியை ரத்து செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அதிகாரம் உள்ளது. அந்த விதிமீறலை சரி செய்துவிட்டு, மீண்டும் அனுமதி கேட்க அந்த நிறுவனத்துக்கு உரிமை உள்ளது. அப்படி இருக்கும்போது அந்த ஆலையை நிரந்தரமாக மூட அரசுக்கு அதிகாரமே கிடையாது’ என்றார்.

    மேலும் அவர், ‘வேதாந்தா நிறுவனம் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டது. வெளிநாட்டு முதலீட்டினால், ஸ்டெர்லைட் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, இந்தியாவுக்கு இடையே முதலீடுகளை பாதுகாப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தங்கள் இருக்கிறது. ஒருவேளை இந்த ஒப்பந்தத்தை மீறி இந்த நிறுவனம் மூடப்பட்டால், அதற்கான இழப்பீடு அனைத்தையும் மாநில அரசான தமிழக அரசுதான் வழங்க வேண்டும்’ என்றார்.

    ஆனால், இந்த அரசாணையே பலவீனமானது என்கிறார் சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி டி.அரி பரந்தாமன். அவர் கூறியதாவது:-

    நான் வக்கீலாகவும் இருந்தவன், நீதிபதியாகவும் இருந்தவன். ஒரு அரசாணையை அரசு எப்படி பிறப்பிக்கும் என்று எனக்கு மட்டுமல்ல, அரசு உயர்அதிகாரிகள் அனைவருக்கும் தெரியும். மக்கள் எழுச்சியினால், ஒரு தொழிற்சாலையை மூடும்போது, எதற்காக மூடப்படுகிறது? அதற்கான காரணம் என்ன? அந்த தொழிற்சாலை செய்த விதிமீறல் என்ன? அதனால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் என்ன பாதிப்பு? இதற்கு முன்பு நடந்த விபத்துகள் எத்தனை? அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் என்று விரிவான விளக்கத்தை குறைந்தது 5 பக்கங்களில் கூறி, இந்த காரணங்களால், இந்த தொழிற்சாலை மூடப்படுகிறது என்று அரசாணையை வெளியிட்டு இருக்கவேண்டும்.

    ஆனால், 2 பக்கம் கூட அரசாணை இல்லை. அதுவும் இரண்டே இரண்டு பத்தியில், இரண்டு காரணங்கள் கூறி, தொழிற்சாலையை மூடுகிறோம் என்று தமிழக அரசு கூறுகிறது. இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், உடனடியாக அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டு விடும். மீண்டும் தொழிற்சாலை செயல்பட தொடங்கிவிடும்.

    அதை மக்கள் எதிர்த்தால், நாங்கள் என்ன செய்வது? நீதிமன்றம், எங்கள் அரசாணையை ரத்து செய்துவிட்டது. நீதித்துறையின் வேலையே இதுதானே? என்று மக்களின் எல்லா கோபத்தையும், நீதிமன்றத்துக்கு எதிராக திருப்பி விடுவார்கள்.

    அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் போது, தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஏன் அரசாணையை ரத்து செய்தோம்? அரசாணை சட்டப்படி பலவீனமாக இருந்தது. சரியான காரணங்களை சட்டப்படி கூறாததால், ரத்து செய்தோம் என்று பொதுமக்களிடம் போய் விளக்கம் அளிக்க முடியுமா? பொதுக்கூட்டம் போட முடியுமா? அந்த நீதிபதிகளினால் வாய்திறக்கவே முடியாது.

    அரசாணையில் என்ன காரணம் கூறப்பட்டுள்ளது. அது சரியா, தவறா என்பதை மட்டும்தான் நீதிபதிகள் ஆய்வு செய்வார்கள். அந்த காரணத்தை தெளிவாக அரசாங்கம் தான் கூறவேண்டும். அதை செய்யாமல், நீதித்துறையின் மீது பழியை போட தயாராகி விட்டார்கள்.

    உண்மையில் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு எண்ணம் இருந்தால், அமைச்சரவையை கூட்டி, கொள்கை முடிவு எடுக்கலாம். அல்லது தற்போது சட்டசபை நடக்கிறது. சட்டசபையில் சிறப்பு தீர்மானம் இயற்றலாம். ஆனால், அதை எல்லாம் செய்யவில்லை. அந்த அளவுக்கு ‘கார்ப்பரேட்’ நிறுவனங்களுக்கு சக்தி இருக்கிறது.

    ரஜினிகாந்த் என்ன பேசுகிறார் பார்த்தீர்களா? ‘காலா’ படத்தில் வரும் பாடல் வரிகள் என்ன என்று தெரியுமா? நிலம், நீர் உரிமைக்காக போராடுவோம். எங்கள் வறுமைகள் ஒழிய போராடுவோம். எங்கள் தலைமுறை காக்க போராடுவோம். எங்கள் கண்கள் தூங்கும் வரை போராடுவோம். எங்கள் இறுதி மூச்சு வரை போராடுவோம். அதிரடிப்படையாக இருக்கிறோம் வெறியாய். போராளிகள் நாங்கள் எல்லாம் போராடுவோம் என்ற பாடலை நன்றாக இசை அமைத்து யாரோ பாடி கொடுக்க, அந்த பாட்டுக்கு ரஜினிகாந்த் நடித்துள்ளார். அது திரையில் வரும் வேஷம் போட்ட ரஜினியின் முகம். நேற்று (அதாவது நேற்று முன்தினம்) அவர் பேட்டியில் கூறியது உண்மையான ரஜினியின் முகம். தூத்துக்குடி பொதுமக்கள் என்ன சமூக விரோதியா?

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் பல பேர் மக்களுக்கு எதிராக உள்ளனர். 2010-ம் ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனத்தை இழுத்து மூடவேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் தர்மாராவ், என்.பால்வசந்தகுமார் விரிவாக தீர்ப்பு அளித்தனர். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும்போது, அப்போது மத்திய அரசும், மாநில அரசும் அந்த நிறுவனத்துக்கு எதிராக தீவிரமாக செயல்படாததால், மீண்டும் அந்த தொழிற்சாலை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அப்போது தி.மு.க.தான் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது.

    எனவே, வலுவில்லாத அரசாணையை தமிழக அரசு பிறப்பித்து, பழியை நீதித்துறையின் மீது போட தயாராகி விட்டது.

    இவ்வாறு நீதிபதி டி.அரி பரந்தாமன் கூறினார்.

    இந்த அரசாணை குறித்து பெயர் சொல்ல விரும்பாத ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடி அரசு பிறப்பித்த அரசாணையில் என்ன கூறப்பட்டுள்ளது? ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்படும் அனுமதியை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பிக்கவில்லை. அதன்பின்னர் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    சுற்றுச்சூழல், வனம், வன விலங்குகளை பாதுகாக்க மாநில அரசுக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு 48ஏ வின்படியும், தண்ணீர் சட்டம் பிரிவு 18(1)(பி)யின்படியும், பெரும்பான்மையான பொதுமக்களின் விருப்பத்தின் அடிப்படையிலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையிலும், இந்த நிறுவனத்தை மூட உத்தரவிடுகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. இதுதான் ஒரு தொழிற்சாலையை மூட அரசு கூறும் காரணமா?

    ஸ்டெர்லைட் நிறுவனத்தை இழுத்து மூடவேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தர்மாராவ், என்.பால்வசந்தகுமார் விசாரித்தார்கள்.

    ஒரு நிகழ்ச்சிக்காக தூத்துக்குடி சென்றிருந்த நீதிபதி என்.பால்வசந்தகுமார், ஸ்டெர்லைட் தொழிற்சாலை உள்ள பகுதிக்கு சென்றார். ஆய்வு செய்தார். அங்குள்ள தண்ணீர், நிலம் மாசு அடைந்திருப்பதை உறுதி செய்தார். அங்கிருந்த போது தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய ரசாயன நாற்றத்தை உணர்ந்தார். அதன்பின்னர், நீதிபதிகள் இருவரும் விரிவான தீர்ப்பை கூறி, அந்த தொழிற்சாலையை இழுத்து மூட உத்தரவிட்டார்கள்.

    அந்த உத்தரவில், ஸ்டெர்லைட் நிறுவனம் எந்தெந்த விதிகளை மீறியுள்ளது? எதற்காக இந்த தொழிற்சாலையை இழுத்து மூட உத்தரவிடுகிறோம்? என்று பல பக்கங்களுக்கு பல காரணங்களை கூறி, தீர்ப்பு அளித்துள்ளனர். அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ள காரணங்களை கூறி, இப்போது கூட தமிழக அரசு விரும்பினால், புதிதாக கூடுதல் அரசாணை ஒன்றை பிறப்பிக்க முடியும். அதாவது, ஸ்டெர்லைட் நிறுவனம், அரசாணையை எதிர்த்து வழக்கு தொடர்வதற்கு முன்பாக, கூடுதல் அரசாணையை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BanSterlite
    சித்தூர் அருகே பெண் வக்கீல் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருமலை:

    சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவரது மனைவி நாகஜோதி. 2 பேரும் வக்கீலாக பணியாற்றி வந்தனர். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    நாகஜோதி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    நாகஜோதி நேற்று மாலை மதனப்பள்ளி கோர்ட்டிலிருந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கை வழி மறித்த சிலர் நாகஜோதியை கத்தியால் குத்தினர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மதன பள்ளி போலீசார் நாகஜோதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகஜோதியை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெண் வக்கீல் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சித்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.#tamilnews
    சேலத்தில் அரசு பஸ் டிரைவரை வக்கீல் தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

    சேலம்:

    சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 47). இவர் நாமக்கல் கோட்டில் வக்கீலாக உள்ளார். தினமும் நாமக்கல்லுக்கு பஸ்சில் சென்று வருவார். இன்று காலையில் கோர்ட்டுக்கு செல்வதற்காக அயோத் தியாப்பட்டிணத்தில் இருந்து ஜங்சன் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சை கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன் ஓட்டிச் சென்றார்.

    பஸ் சீலநாயக்கன் பட்டி அருகே சென்ற போது வக்கீல் அன்பரசன் டிரைவரிடம் ஏன் பஸ்சை மெதுவாக ஓட்டி செல்கிறீர்கள் என்று வாக்குவாத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வக்கீல், டிரைவர் ராஜேந்திரனை அடித்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் பஸ்சை நடு ரோட்டில் நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வக்கீல் அன்பரசனை கைது செய்தனர். சேலத்தில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

    ×