search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதிபதி டி.அரிபரந்தாமன் - மூத்த வக்கீல் ஏ.சிராஜூதீன்
    X
    நீதிபதி டி.அரிபரந்தாமன் - மூத்த வக்கீல் ஏ.சிராஜூதீன்

    ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த அரசாணை வலுவாக இல்லை - நீதிபதிகள், வக்கீல் கருத்து

    ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணை வலுவானதாக இல்லை என்று நீதிபதிகள், மூத்த வக்கீல் கருத்து கூறியுள்ளனர். #BanSterlite
    சென்னை:

    ‘ஸ்டெர்லைட்’ நிறுவனத்துக்கு எதிராக தூத்துக்குடியில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். அவர்களது 100-வது நாள் போராட்டம், கடந்த மே 22-ந்தேதி நடந்தது. அன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், 13 பேர் பலியாகினர்.

    இதைத்தொடர்ந்து இந்த நிறுவனத்தை இழுத்து மூட மே 28-ந்தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனால் அந்த நிறுவனத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இத்துடன் பிரச்சினை முடிந்ததா?, இனி இந்த நிறுவனம் செயல்படாதா? அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால், அந்த நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்து விடுமா?, அரசாணை ரத்தாகி விடுமா? அந்த நிறுவனம் மீண்டும் செயல்பட தொடங்குமா? என்பது உள்பட பல கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இதுகுறித்து சட்டவல்லுநர்களிடம் கேட்டால், தமிழக அரசின் நடவடிக்கை வெறும் கண் துடைப்பு நாடகம். அந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று கருத்து கூறுகின்றனர்.

    இதுகுறித்து, சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் ஏ.சிராஜூதீனிடம் கேட்டபோது, ‘இப்படி ஒரு அரசாணையை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கு முன்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். அவ்வாறு வழங்கப்படும் அனுமதியின்போது விதிக்கப்படும் விதிமுறைகளை மீறினால், அந்த அனுமதியை ரத்து செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அதிகாரம் உள்ளது. அந்த விதிமீறலை சரி செய்துவிட்டு, மீண்டும் அனுமதி கேட்க அந்த நிறுவனத்துக்கு உரிமை உள்ளது. அப்படி இருக்கும்போது அந்த ஆலையை நிரந்தரமாக மூட அரசுக்கு அதிகாரமே கிடையாது’ என்றார்.

    மேலும் அவர், ‘வேதாந்தா நிறுவனம் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டது. வெளிநாட்டு முதலீட்டினால், ஸ்டெர்லைட் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, இந்தியாவுக்கு இடையே முதலீடுகளை பாதுகாப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தங்கள் இருக்கிறது. ஒருவேளை இந்த ஒப்பந்தத்தை மீறி இந்த நிறுவனம் மூடப்பட்டால், அதற்கான இழப்பீடு அனைத்தையும் மாநில அரசான தமிழக அரசுதான் வழங்க வேண்டும்’ என்றார்.

    ஆனால், இந்த அரசாணையே பலவீனமானது என்கிறார் சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி டி.அரி பரந்தாமன். அவர் கூறியதாவது:-

    நான் வக்கீலாகவும் இருந்தவன், நீதிபதியாகவும் இருந்தவன். ஒரு அரசாணையை அரசு எப்படி பிறப்பிக்கும் என்று எனக்கு மட்டுமல்ல, அரசு உயர்அதிகாரிகள் அனைவருக்கும் தெரியும். மக்கள் எழுச்சியினால், ஒரு தொழிற்சாலையை மூடும்போது, எதற்காக மூடப்படுகிறது? அதற்கான காரணம் என்ன? அந்த தொழிற்சாலை செய்த விதிமீறல் என்ன? அதனால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் என்ன பாதிப்பு? இதற்கு முன்பு நடந்த விபத்துகள் எத்தனை? அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் என்று விரிவான விளக்கத்தை குறைந்தது 5 பக்கங்களில் கூறி, இந்த காரணங்களால், இந்த தொழிற்சாலை மூடப்படுகிறது என்று அரசாணையை வெளியிட்டு இருக்கவேண்டும்.

    ஆனால், 2 பக்கம் கூட அரசாணை இல்லை. அதுவும் இரண்டே இரண்டு பத்தியில், இரண்டு காரணங்கள் கூறி, தொழிற்சாலையை மூடுகிறோம் என்று தமிழக அரசு கூறுகிறது. இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், உடனடியாக அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டு விடும். மீண்டும் தொழிற்சாலை செயல்பட தொடங்கிவிடும்.

    அதை மக்கள் எதிர்த்தால், நாங்கள் என்ன செய்வது? நீதிமன்றம், எங்கள் அரசாணையை ரத்து செய்துவிட்டது. நீதித்துறையின் வேலையே இதுதானே? என்று மக்களின் எல்லா கோபத்தையும், நீதிமன்றத்துக்கு எதிராக திருப்பி விடுவார்கள்.

    அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் போது, தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஏன் அரசாணையை ரத்து செய்தோம்? அரசாணை சட்டப்படி பலவீனமாக இருந்தது. சரியான காரணங்களை சட்டப்படி கூறாததால், ரத்து செய்தோம் என்று பொதுமக்களிடம் போய் விளக்கம் அளிக்க முடியுமா? பொதுக்கூட்டம் போட முடியுமா? அந்த நீதிபதிகளினால் வாய்திறக்கவே முடியாது.

    அரசாணையில் என்ன காரணம் கூறப்பட்டுள்ளது. அது சரியா, தவறா என்பதை மட்டும்தான் நீதிபதிகள் ஆய்வு செய்வார்கள். அந்த காரணத்தை தெளிவாக அரசாங்கம் தான் கூறவேண்டும். அதை செய்யாமல், நீதித்துறையின் மீது பழியை போட தயாராகி விட்டார்கள்.

    உண்மையில் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு எண்ணம் இருந்தால், அமைச்சரவையை கூட்டி, கொள்கை முடிவு எடுக்கலாம். அல்லது தற்போது சட்டசபை நடக்கிறது. சட்டசபையில் சிறப்பு தீர்மானம் இயற்றலாம். ஆனால், அதை எல்லாம் செய்யவில்லை. அந்த அளவுக்கு ‘கார்ப்பரேட்’ நிறுவனங்களுக்கு சக்தி இருக்கிறது.

    ரஜினிகாந்த் என்ன பேசுகிறார் பார்த்தீர்களா? ‘காலா’ படத்தில் வரும் பாடல் வரிகள் என்ன என்று தெரியுமா? நிலம், நீர் உரிமைக்காக போராடுவோம். எங்கள் வறுமைகள் ஒழிய போராடுவோம். எங்கள் தலைமுறை காக்க போராடுவோம். எங்கள் கண்கள் தூங்கும் வரை போராடுவோம். எங்கள் இறுதி மூச்சு வரை போராடுவோம். அதிரடிப்படையாக இருக்கிறோம் வெறியாய். போராளிகள் நாங்கள் எல்லாம் போராடுவோம் என்ற பாடலை நன்றாக இசை அமைத்து யாரோ பாடி கொடுக்க, அந்த பாட்டுக்கு ரஜினிகாந்த் நடித்துள்ளார். அது திரையில் வரும் வேஷம் போட்ட ரஜினியின் முகம். நேற்று (அதாவது நேற்று முன்தினம்) அவர் பேட்டியில் கூறியது உண்மையான ரஜினியின் முகம். தூத்துக்குடி பொதுமக்கள் என்ன சமூக விரோதியா?

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் பல பேர் மக்களுக்கு எதிராக உள்ளனர். 2010-ம் ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனத்தை இழுத்து மூடவேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் தர்மாராவ், என்.பால்வசந்தகுமார் விரிவாக தீர்ப்பு அளித்தனர். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும்போது, அப்போது மத்திய அரசும், மாநில அரசும் அந்த நிறுவனத்துக்கு எதிராக தீவிரமாக செயல்படாததால், மீண்டும் அந்த தொழிற்சாலை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அப்போது தி.மு.க.தான் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது.

    எனவே, வலுவில்லாத அரசாணையை தமிழக அரசு பிறப்பித்து, பழியை நீதித்துறையின் மீது போட தயாராகி விட்டது.

    இவ்வாறு நீதிபதி டி.அரி பரந்தாமன் கூறினார்.

    இந்த அரசாணை குறித்து பெயர் சொல்ல விரும்பாத ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடி அரசு பிறப்பித்த அரசாணையில் என்ன கூறப்பட்டுள்ளது? ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்படும் அனுமதியை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பிக்கவில்லை. அதன்பின்னர் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    சுற்றுச்சூழல், வனம், வன விலங்குகளை பாதுகாக்க மாநில அரசுக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு 48ஏ வின்படியும், தண்ணீர் சட்டம் பிரிவு 18(1)(பி)யின்படியும், பெரும்பான்மையான பொதுமக்களின் விருப்பத்தின் அடிப்படையிலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையிலும், இந்த நிறுவனத்தை மூட உத்தரவிடுகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. இதுதான் ஒரு தொழிற்சாலையை மூட அரசு கூறும் காரணமா?

    ஸ்டெர்லைட் நிறுவனத்தை இழுத்து மூடவேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தர்மாராவ், என்.பால்வசந்தகுமார் விசாரித்தார்கள்.

    ஒரு நிகழ்ச்சிக்காக தூத்துக்குடி சென்றிருந்த நீதிபதி என்.பால்வசந்தகுமார், ஸ்டெர்லைட் தொழிற்சாலை உள்ள பகுதிக்கு சென்றார். ஆய்வு செய்தார். அங்குள்ள தண்ணீர், நிலம் மாசு அடைந்திருப்பதை உறுதி செய்தார். அங்கிருந்த போது தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய ரசாயன நாற்றத்தை உணர்ந்தார். அதன்பின்னர், நீதிபதிகள் இருவரும் விரிவான தீர்ப்பை கூறி, அந்த தொழிற்சாலையை இழுத்து மூட உத்தரவிட்டார்கள்.

    அந்த உத்தரவில், ஸ்டெர்லைட் நிறுவனம் எந்தெந்த விதிகளை மீறியுள்ளது? எதற்காக இந்த தொழிற்சாலையை இழுத்து மூட உத்தரவிடுகிறோம்? என்று பல பக்கங்களுக்கு பல காரணங்களை கூறி, தீர்ப்பு அளித்துள்ளனர். அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ள காரணங்களை கூறி, இப்போது கூட தமிழக அரசு விரும்பினால், புதிதாக கூடுதல் அரசாணை ஒன்றை பிறப்பிக்க முடியும். அதாவது, ஸ்டெர்லைட் நிறுவனம், அரசாணையை எதிர்த்து வழக்கு தொடர்வதற்கு முன்பாக, கூடுதல் அரசாணையை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BanSterlite
    Next Story
    ×