search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "eswaran"

    உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தினால் இன்றைக்கு டெங்கு போன்று காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியாத ஒரு சூழ்நிலை நிலவுவதாக ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். #DengueFever
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி கொ.ம.தே.க. ஆலோசனை கூட்டம் அந்தியூரில் நடந்தது.

    இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தகுந்த நேரத்தில் தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குவதுதான் பொது மக்களுடைய உரிமைகளை பாதுகாப்பதாகும். தமிழகத்தில் எந்த தேர்தலாக இருந்தாலும் அது சுயநலத்தோடு தள்ளிப்போடப்படுகிறது என்ற ஐயம் இன்றைக்கு மக்களிடையே இருக்கிறது.

    ஆண்டுக்கணக்கில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது, திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்கள் மழையை காரணம் காட்டி ஒத்தி வைத்திருப்பது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற தொகுதிகளில் ஓராண்டு ஆகப்போகிறது ஆனால் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை, மக்கள் பிரதிநிதிகள் இல்லாமலேயே அந்த தொகுதி மக்கள் அரசால் ஏமாற்றப்படுகிறார்கள் .

    உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தினால் இன்றைக்கு டெங்கு போன்று காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியாத ஒரு சூழ்நிலை நிலவுகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் இடமில்லாத அளவுக்கு இன்றைக்கு நோயாளிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

    உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால் இது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும். அந்த வகையிலே நாம் ஏமாற்றப்படுகிறோம்.

    உள்ளாட்சி தேர்தலை எந்த தாமதமும் இல்லாமல் உடனடியாக தமிழக அரசு நடத்த வேண்டும், 20 சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தலை தாமதப்படுத்தாமல் உடனடியாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.

    சிவகாசியில் அனைத்து பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கிறது. தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். அரசு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தாலும் ஒரு நிரந்தரமான தீர்வு கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறது. அடுத்த வருடம் என்ன நடக்கும், சிவகாசி தொழிற்சாலைகள் பட்டாசுகளை உற்பத்தி செய்வதா? வேண்டாமா? என்று எந்தவிதமான தெளிவும் இல்லாமல் இன்றைக்கு தொழிற்சாலையை மூடுகின்ற நிலைக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள்.

    தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் போடப்பட்ட வழக்குகள் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு இந்தியா முழுவதும் இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வழக்கு போடப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் பட்டாசு வெடித்ததற்காக 2,400 பேர் மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது

    பவானி ஆற்றில் கலக்கின்றன சாயக்கழிவு தொடர்ந்து கலந்து கொண்டே இருக்கிறது.

    இவ்வாறு ஈஸ்வரன் கூறினார். #DengueFever
    சினிமாவில் பேசுகின்ற வசனங்களை பார்த்து ஒரு பெரிய கட்சி பயப்படுவது வேடிக்கையாக உள்ளது என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #Eswaran #Sarkar
    ஈரோடு:

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:-

    சினிமாவில் பேசுகின்ற வசனங்களை பார்த்து ஒரு பெரிய கட்சி பயப்படுவது வேடிக்கையாக உள்ளது. இவர்கள் இப்படி பேசி பேசியே அந்த படங்களை விளம்பரப்படுத்துகின்றனர்.

    இதற்கு முன்னரும் விஜய் நடித்த மெர்சல் படம் பற்றி விமர்சனம் செய்து அந்த படம் பிரபலமானது.

    தமிழகம் முழுவதும் தீபாவளி அன்று தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

    ஏனென்றால் பட்டாசு வெடித்தவர்கள் சாதாரண மக்கள்தான். நேர கட்டுப்பாட்டால் ஏற்கனவே பட்டாசு வியாபாரிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

    கோமாரி நோயால் ஆடு மாடுகள் தாக்கப்படுவது அதிகமாக உள்ளது. கோமாரி நோயால் தாக்கப்பட்டு இறந்த கால்நடைகளுக்கு முறையாக இழப்பீடு தொகை வழங்கப்படுவதில்லை.

    உலக முதலீட்டாளர் மாநாடு ஜனவரியில் நடைபெற முயற்சி நடந்து வருகிறது. அதேசமயம் தற்போது செயல்பட்டு வரும் பல தொழில்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் அரசு தனி குழு அமைக்க வேண்டும்.

    மாசு ஏற்படுகிறது என்று சொல்லிதான் தீபாவளிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆனால் வாகன மாசு, தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்படும் மாசு ஆகியவற்றை பற்றி கண்டு கொள்வதில்லை.


    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு கொங்கு மண்டல சாயக் கழிவுகளை அகற்றும் வகையில் ரூ. 700 கோடி மதிப்பில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் குழாய் அமைத்து நடுக்கடலில் விடப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.

    ஆனால் இன்றுடன் 7ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த வாக்குறுதி என்ன ஆனது? உடனடியாக இந்த திட்டத்தை அரசு செயல்படுத்த முன்வர வேண்டும்.

    இவர் அவர் கூறினார். #Eswaran #Sarkar
    ரஜினியும், கமல்ஹாசனும் சினிமாப் புகழை வைத்து தேர்தலில் ஜெயிக்க முடியாது என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #Rajinikanth #KamalHaasan #Eswaran
    ஈரோடு:

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    இந்த ஆண்டு தீபாவளிக்கு அபாயகரமான பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று தமிழக அரசு கூறியுள்ளது. அந்த மாதிரியான பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று கூறியதற்கு பதிலாக அந்த மாதிரி பட்டாசுகளை தயாரிக்க அரசு தடை விதிக்க வேண்டும்.

    பட்டாசு வெடிக்க நீதிமன்றத் தீர்ப்புப்படி தமிழக அரசு நேரம் ஒதுக்கியுள்ளது. இது எப்படி நடைமுறைக்கு சாத்தியம் ஆகும்? தீபாவளி பண்டிகை என்றாலே அது குழந்தைகளுக்கான பண்டிகைதான். காலங்காலமாக தீபாவளி பண்டிகை முழுவதும் குழந்தைகள் தங்கள் விரும்பிய பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றனர்.


    இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி காலையில் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

    இதை எப்படி குழந்தைகளுக்கு சொல்லி புரியவைக்க முடியும்.? பட்டாசு மாசு என்று கூறுபவர்கள் வாகனங்களால் ஏற்படும் மாசு, சாயக் கழிவுகளால் ஏற்படும் மாசுகளும் பற்றி ஏன் பேசுவதில்லை?

    மேலும் குறிப்பிட்ட நேரம் போக பட்டாசு வெடிக்கும் ஒவ்வொரு வீட்டையும் போலீசார் சென்று ஆய்வு நடத்த முடியுமா? பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை வெளியுலகத்துக்கு சொல்லுவது வரவேற்கத்தக்கது. ஆனால் அதேசமயம் தங்கள் சுய விருப்பதற்காக ஒருவர் மீது பொய்யாக புகார் தெரிவிக்க கூடாது.

    ரஜினியும், கமல்ஹாசனும் சினிமாப் புகழை வைத்து தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காது, ஜெயிக்க முடியாது, அவர்கள் நிச்சயமாக தேர்தல் சமயத்தில் கூட்டணி வைப்பார்கள். அவர்கள் கூட்டணி வைத்தால் ஏமாந்துதான் போவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #KamalHaasan #Eswaran
    சத்தியமங்கலம் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உண்மை காரணத்தை கண்டறிய வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-

    டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயின்று வந்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, அவரது அறையில் இறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்து ஐஏஎஸ் ஆக வேண்டுமென்ற கனவுடன் டெல்லிக்கு சென்ற மாணவி ஸ்ரீமதி. தன்னம்பிக்கையுள்ள, படிப்பில் ஆர்வமுள்ள, சாதிக்க துடிக்கும் மாணவர்கள் தான் தொலை தூரமென்றாலும் மற்ற மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் கல்வி கற்க விரும்பி செல்கிறார்கள்.

    ஆனால் அப்படி மற்ற மாநிலங்களுக்கு பயில செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. டெல்லியில் பயிலும் தமிழக மாணவர்கள் இறப்பதும் தொடர்கதையாகிவிட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவகல்லூரியில் மருத்துவ மேற்படிப்பை பயின்று வந்த திருப்பூரை சேர்ந்த சரவணன் என்ற மாணவன் 2016-ம் ஆண்டு ஜூலை மாதமும், டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பை படித்து வந்த திருப்பூரை சேர்ந்த சரத்பிரபு என்ற மாணவன் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதமும் மர்மமான முறையில் இறந்து சடலமாக மீட்கப்பட்டதை நாம் அறிவோம்.

    டெல்லியில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பும், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல்தான் நிலவி வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு பயில செல்லும் தமிழக மாணவர்கள் இறப்பதற்கான காரணங்களை கண்டறிந்து களையாமல் இத்தகைய உயரிழப்புகளை தடுக்க முடியாது.

    தமிழக அரசு எப்போதும் போல ஸ்ரீமதி இறப்பையும் கடந்து செல்லாமல் உரிய விசாரணையை நடத்தி இறப்பிற்கான காரணத்தை வெளிக்கொணர வேண்டும். மற்ற மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை மத்திய அரசும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #Student #commitsuicide
    முதலமைச்சரின் சாதியை குறிப்பிட்டு பேசியது வன்முறையை தூண்டக்கூடியது என்று கருணாஸ் மீது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். #Eswaran #Karunas
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கருணாஸ் எம்.எல்.ஏ. பேசிய பேச்சு மக்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

    ஒரு எம்.எல்.ஏ. சாதி பெயரை குறிப்பிட்டு பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. நீங்கள் (கருணாஸ்) பிறந்த சாதியை உயர்வாக பேசிக் கொள்ளுங்கள். அதை பற்றி யாரும் கவலைப்படவில்லை. உங்களை உயர்த்தி கொள்வதற்காக அடுத்த சமுதாயத்தை கொச்சைப்படுத்தி பேசுவது தவறான பாதைக்கு வழி காட்டுவதாகும்.

    தமிழக அரசை பற்றி எந்த குற்றத்தை வேண்டுமானாலும் சுமத்தலாம். விமர்சனம் செய்யலாம். அந்த உரிமை ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு உள்ளது. முதலமைச்சருடைய சாதியை குறிப்பிட்டு பேசுவது வன்முறையை தூண்டக்கூடியது.

    அ.தி.மு.க.வினுடைய வாக்கு வங்கியால் நீங்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆனீர்களா? அல்லது உங்கள் மக்கள் செல்வாக்கால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததா?. எம்.ஜி. ஆர். காலத்திலிருந்தே கொங்கு மண்டலத்தினுடைய ஆதரவால்தான் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து கொண்டிருந்ததென்பது எந்தவொரு பாமரனுக்கும் தெரியும்.

    2016-ம் ஆண்டிலே ஆட்சிக்கு வந்தது கூட கொங்கு மண்டலம் கொடுத்த வெற்றிதான் என்பதை நினைவூட்டுகிறேன். அப்படி இருக்கையில் இன்னொரு சாதி போட்ட பிச்சையில் கொங்கு மண்டலத்துக்காரர் முதலமைச்சராகி இருக்கிறார் என்று சொல்வது நியாயமா?

    தனிப்பட்ட விளம்பரம் தேடி கொள்வதற்காக இப்படி பேசுவதை எல்லாம் தவிர்க்க வேண்டும். ஒரு மக்கள் பிரதிநிதியாக இருப்பதற்கு முதல் தகுதி மற்றவர்கள் மனம் புண்படாமல் பேசுவதுதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    2016-ம் ஆண்டு கடைசி நேரத்தில் உங்களை அழைத்து ஒரு சட்டமன்ற உறுப்பினராக்கினார்கள் என்பதற்காக நன்றி விசுவாசத்தை காட்டுங்கள், யாருக்கும் கவலையில்லை. ஆனால் அடுத்தவர்களை கேவலப்படுத்தி பேசாதீர்கள்.

    பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசுவதை அனுமதிக்கக்கூ டாது. எல்லோருக்கும் பேச தெரியும். ஆனால் பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் அநாகரிகமாக நடந்து கொள்ளக்கூடாது.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். #KonguNaduMakkalDesiaKatchi #Eswaran #Karunas
    பவானி ஆற்று உபரி நீரால் குளம் மற்றும் குட்டைகளை நிரப்ப வேண்டும் என்று கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

    பவானி:

    கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பவானி ஆற்று வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டார்.

    அதன் பிறகு ஈஸ்வரன் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 5 நாட்களாக வாழை, மஞ்சள், கரும்பு ஆகியவை தண்ணீரில் மூழ்கி அழுகி போய் விட்டது.

    பவானி ஆற்றில் இருந்து வரும் உபரி நீரை கிளை வாய்க்கால் மூலமாக ஈரோடு, திருப்பூர் மாவட்ட உட் பகுதியில் உள்ள குளம்- குட்டைகளை நிரப்ப வேண்டும். இதற்கான திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்.

    இந்த திட்டத்தை நிறைவேற்றினால் உபரி நீர் பாதிப்பு குறையும். கடலில் வீணாக சென்று கலக்காமல் நிலத்தடி நீரம் அதிகமாகி தண்ணீர் பஞ்சம் குறைய வாய்ப்பு ஏற்படும்.

    இப்படிப்பட்ட திட்டங்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் கொடுக்கும் வாக்குறுதிகளாகவே உள்ளது.

    இன்னொரு முறை உபரி நீர் வெளியேறாமல் பயன்படுகிற உபயோகப்படுத்துகிற நோக்கிலேயே திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது.

    ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் துரைராஜா, மேற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, இளைஞர் அணி செயலாளர் சூர்யமூர்த்தி, மேற்கு மாவட்ட தலைவர் மலைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட நீதிபதிகளை இனி நியமிக்க வேண்டும் என்று ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். #Eswaran #18MLAsCase
    ஈரோடு:

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நேற்று இரண்டு நீதிபதிகள் மறுபட்ட தீர்ப்புகளை வழங்கி உள்ளனர். இந்த தீர்ப்பு பொது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுவாக இது போன்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் போது இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிப்பதற்கு பதில் 3 பேர் கொண்ட நீதிபதிகள் பெஞ்ச் விசாரிப்பதே சரியானதாக இருக்கும்.

    ஏன் என்றால் நேற்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புப்படி இந்த வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட உள்ளது. இதனால் தேவையில்லாத கால விரயம், பண விரயம் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக வரும் காலங்களில் இது போன்ற வழக்குகளுக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.


    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எல்.எல்.ஏ.க்களும் தாங்கள் தொடர்ந்த வழக்குகளை திரும்ப பெற்று தேர்தலை சந்திக்க வேண்டும். இதன் மூலம் மக்கள் ஆதரவு யார் பக்கம் இருக்கிறது? என்பது தெரிந்து விடும்.

    நடிகர் ரஜினி புதிய கட்சி தொடங்க போவதாக அறிவித்து உள்ளார். ஆனால் திடீரென காலா படத்தில் நடித்து முடித்தார். இப்போது மற்றொரு புது படத்தில் நடிக்க சென்று விட்டார். இன்னும் 2 மாதம் கழித்து தான் வருவார்.

    அதே போன்று நடிகர் கமல்ஹாசன் புதிய கட்சி தொடங்கினார். அவ்வப்போது அறிக்கை, டுவிட்டர் மூலம் கருத்துகளை கூறி வந்தார். தற்போது பிக்பாஸ்-2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்று விட்டார். இவ்வாறு சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளனர். மக்களை இவர்கள் ஏமாற்றி வருகிறார்கள். எனவே தமிழ்நாட்டு மக்கள் நடிகர்கள் ரஜினியையும், கமல்ஹாசனையையும் ஏற்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Eswaran #18MLAsCase

    கமல்ஹாசனும், ரஜினி காந்த்தும் சுயநலவாதிகள் என்றும் இவர்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்றும் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #Rajinikanth #KamalHaasan #Eswaran
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டாமென்றும், இரு மாநில முதலமைச்சர்களும் பேசி தீர்வுக்காண வேண்டுமென்றும் நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தினால் மட்டுமே கர்நாடகாவில் காலா படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் திரையிட முடியும் என்று கன்னட திரைப்பட வர்த்தக சபை நிபந்தனை விதித்திருக்கிறது.

    கமல்ஹாசனும் தன்னோட விஸ்வரூபம் 2 படம் கர்நாடகாவில் திரையிட எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே சந்திப்பை நிகழ்த்தியிருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. கமல்ஹாசன் காவிரிக்காக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்தேன் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிகாந்துக்கு விதித்திருக்கும் நிபந்தனையை தான் கமல்ஹாசன் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்த பிறகு அளித்த பேட்டியில் காவிரி பிரச்சனையில் இரு மாநில முதலமைச்சர்களும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுக்காண வேண்டும் என்று கூறியிருக்கிறார்.


    காவிரிக்காக என்று சொல்லிவிட்டு கமல்ஹாசன் தன்னோட விஸ்வரூபம் 2 படத்திற்காக தான் சென்றிருக்கிறார் என்று நாங்கள் சந்தேகித்தது உறுதியாகி இருக்கிறது. தமிழகம் போராடி பெற்ற உரிமைக்கு எதிராகவும், மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் காவிரி மேலாண்மை ஆணையம் பற்றி கருத்துக்கூறி கர்நாடகாவிலேயே அவர்களின் நிபந்தனையை கமல்ஹாசன் நிறைவேற்றி விட்டு வந்திருப்பது தமிழகத்திற்கு இழைத்திருக்கும் மாபெரும் துரோகம்.

    அதேபோல ரஜினிகாந்தும் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஆதரவளித்தது காலா படத்திற்கு மேலும் கர்நாடகாவில் எந்த விதமான பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதற்காகவா?. சுயநலவாதிகள் அல்லவா இவர்கள். இவர்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடக்கூடாது.

    தங்கள் சுயலாபத்திற்காக அரசியலை பயன்படுத்துகிறார்கள் என்பதை தமிழக மக்கள் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Rajinikanth #KamalHaasan #Eswaran
    கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்து காவிரி பிரச்சனையை பற்றி பேசினோம் என்று தெரிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் பல ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மத்திய அரசு மேலாண்மை ஆணையம் அமைத்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்து காவிரி பிரச்சனையை பற்றி பேசினோம் என்று தெரிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது.

    இந்த சந்திப்புக்கு பிறகு காவிரி பிரச்சனையை இரு மாநிலங்களும் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்க்கலாம் என்று கமல்ஹாசன் கருத்து கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கமல்ஹாசனின் இந்த கருத்து மத்திய அரசு அமைத்திருக்கும் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லாதததை போலவும், மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கே எல்லா அதிகாரமும் இருப்பதை போலவும் தோற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

    கமல்ஹாசன் உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்ட பிறகு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியதும், மத்திய அரசு ஆணையம் அமைத்த பிறகு கர்நாடக முதலமைச்சரை சந்தித்ததும் தேவையற்றது.

    காவிரிக்கான சந்திப்பு என்று சொல்லி விட்டு விரைவில் வெளிவரவிருக்கும் விஸ்வரூபம்-2 படம் கர்நாடகாவில் திரையிடுவதில் எந்தவொரு பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக கர்நாடக முதலமைச்சரை கமல்ஹாசன் சந்தித்து பேசியிருப்பாரோ? என்ற சந்தேகம் தான் எழுகிறது.

    காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக கருத்து கூறியதாக சொல்லி ரஜினிகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் காலா படத்தை கர்நாடகாவில் திரையிட தடை விதித்ததை போல, விஸ்வரூபம் 2 படத்திற்கும் தடை போட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் முன்னேற்பாடாக இச்சந்திப்பை கமல்ஹாசன் நிகழ்த்தியிருக்கிறார்.

    காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் வீர வசனங்களை எல்லாம் பேசிய நடிகர் சத்யராஜ், தான் நடித்த பாகுபலி 2 படம் கர்நாடகாவில் திரையிட சிக்கல் ஏற்பட்ட போது மன்னிப்பு கேட்டதையும் பார்த்திருக்கிறோம். அதே போல கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விஸ்வரூபம் படத்திற்கு அப்போது பல பிரச்சனைகள் எழுந்து திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

    தற்போது காலா படத்திற்கு உருவாகியிருக்கும் சிக்கல் விஸ்வரூபம் 2 படத்திற்கும் வராமல் இருப்பதற்காக காவிரி பிரச்சனையில் நான் தமிழகத்திற்கு ஆதரவானவன் இல்லை என்பதை கர்நாடகாவிற்கு உணர்த்தவே கமல்ஹாசன் சென்றது அவரது பேட்டியின் மூலம் தெளிவாகிறது.

    எனவே கமல்ஹாசன் தன்னுடைய நலனுக்காக சந்திப்பை நிகழ்த்திவிட்டு காவிரிக்காக சென்றேன் என்று கூறுவதை எல்லாம் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #Tamilnews
    கொங்கு நாட்டில் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகள் மாசுபடுவதை அரசு தடை செய்யாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று ஈஸ்வரன் கூறினார்.
    மேட்டுப்பாளையம்:

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் மேட்டுப்பாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது-

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பேராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசு அழைத்து பேசாதது தவறு. மிகப்பெரிய அளவில் போராட்டம் நடக்க போகிறது என்று தெரிந்தும் அதனை உளவுத்துறை குறைத்து மதிப்பிட்டதும் தவறு.

    ஸ்டெர்லைட் ஆலை போல் 100 மடங்கு கொங்கு நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொங்கு நாட்டில் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகள் மாசுபடுவதை அரசு தடை செய்யாவிட்டால் ஸ்டெர்லைட் போராட்டத்தை போல் 100 மடங்கு போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    தற்போது சந்தேகத்தின்பேரில் குழந்தை கடத்துபவர்கள் என்று நடுரோட்டில் மக்கள் நடத்தும் தாக்குதலைப்போல, ஊழல்வாதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட ரொம்ப நாள் ஆகாது என்று ஈஸ்வரன் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில நாட்களாக தமிழகத்தில் குழந்தையை கடத்துபவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் அப்பாவி நபர்களையும், முதியோர்களையும் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் மக்கள் ஒன்று சேர்ந்து தாக்கும் நிலை உருவானதற்கு காவல் துறையின் மெத்தனமான செயல்பாடுகளும், நடவடிக்கைகளுமே காரணம்.

    இந்த தாக்குதலில் குற்றமே செய்யாத அப்பாவி நபர்கள் உயிரிழந்திருப்பதும், காயமடைந்திருப்பதும் மிகுந்த வேதனையளிக்கிறது. காவல்நிலையங்களில் அரசியல்வாதிகளுக்கும், பணம் படைத்தவர்களுக்கும் கிடைக்கும் மரியாதை ஏழை மக்களுக்கு கிடைப்பதில்லை.

    காவல்நிலையங்களுக்கு வரும் ஏழை மக்களிடத்தில் காவல்துறை அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதம் காவல்துறை மீது வெறுப்பை உண்டாக்குகிறது. குற்றம் செய்தவர்களை பிடித்து காவல்துறையிடம் பொது மக்கள் ஒப்படைத்தாலும் ஒருசில காவல்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து தண்டனைகளை பெற்றுத் தராமல் குற்றவாளிகளை வெளிவிடுவதால்ஏற்பட்ட விளைவுதான் தற்போது பொதுமக்களின் கொடூர தாக்குதலாக மாறியிருக்கிறது.

    144 தடை உத்தரவு, சட்டத்தை கடுமையாக்குதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவைகளால் மக்களுக்கு காவல் துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தி விட முடியாது. காவல்துறை அதிகாரிகளின் நேர்மையான தொடர்ச்சியான செயல்பாடுகளின் மூலம் தான் காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்க முடியும். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் அவர்கள் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

    லஞ்சமும், ஊழலும் வாழ்க்கை முறையாகமாறி வருவது நல்லதல்ல. பணம் படைத்தவர்கள் லஞ்சம் கொடுத்து எந்தவொரு துறையிலும் எதை வேண்டுமானாலும் சாதிக்கும் நிலை இருக்கிறது. லஞ்சமும், ஊழலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. தற்போது சந்தேகத்தின்பேரில் குழந்தை கடத்துபவர்கள் என்று நடுரோட்டில் மக்கள் நடத்தும் தாக்குதலைப்போல, ஊழல்வாதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட ரொம்ப நாள் ஆகாது.

    இந்த தாக்குதல்சம்பவம் மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கின்ற பெரும் புரட்சியின் முன்னோட்டத்தை வெளிக்காட்டுகிறது. கூட்டுறவு சங்க தேர்தலில் ஆளுங்கட்சியினரின் வேட்புமனுவை மட்டும் பெற்றுக்கொண்டு மற்றவர்கள் மனுவை பெற மறுப்பதும், நிராகரிப்பதும் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சக்கட்டம்.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். #Tamilnews
    ×