search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MLAs disqualification case"

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படலாம் என்பதால் அதிமுக கொறடா இன்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். #MLAsDisqualificationCase #SupremeCourt #CaveatPetition
    புதுடெல்லி:

    தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 18 பேரின் தகுதிநீக்கத்தை உறுதி செய்தது.



    இதனால் 18 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். மேல்முறையீடு குறித்து 18 பேரிடமும் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். ஓரிரு நாளில் மேல்முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், அதிமுக கொறடா ராஜேந்திரன் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,  தகுதிநீக்கம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து 18 பேர் மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என கேவியட் மனுவில் கூறியுள்ளார். #MLAsDisqualificationCase #SupremeCourt #CaveatPetition
    சபாநாயகரிடம் இருந்து எனக்கு எந்த விளக்கம் கேட்கும் நோட்டீசும் வரவில்லை என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார். #Karunas #TTVDhinakaran

    மதுரை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கப்பட்டது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் மதுரையில் 2 தினங்களாக தினகரன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் மதுரையில் தனியார் ஓட்டலில் தங்கி இருந்த தினகரனை முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. நேற்றிரவு சந்தித்து பேசினார்.

    அப்போது தினகரனுக்கான ஆதரவு நிலைப்பாடு, இதற்காக அ.தி.மு.க. நடவடிக்கை எடுத்தால் அதை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தது.

     


    பின்னர் கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேவர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்தான் ஜெயலலிதா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அவரது அங்கீகாரம் போதும்.

    கள்ளர், மறவர், அகமுடையார் சமூகத்தை ஒன்றாக இணைக்கவே முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை தொடங்கினேன். இதற்கான வாய்ப்பாக சட்டசபையில் நுழைந்தேன். அது நிறைவேறுமா? என்ற சந்தேகம் எழுகிறது.

    ஜெயலலிதா இறப்புக்கு பிறகு அ.தி.மு.க. அணி, அணியாகத்தான் உள்ளது. அந்த கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரிய வில்லை.

    சபாநாயகர் ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு வருகிறார். அவரிடம் இருந்து இதுவரை எனக்கு எந்த விளக்க நோட்டீசும் வரவில்லை. அப்படி நோட்டீசு வந்தால் அதை நான் சந்திக்க தயார்.

    எனக்கு எதிராக செயல்படுவதற்காக பல்வேறு அமைப்பினருக்கும் அ.தி.மு.க.வில் உள்ள பல அமைச்சர்கள் பணம் கொடுத்து தூண்டி விடுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #Karunas #TTVDhinakaran

    துரோகத்தின் பக்கம் எனது ஆதரவாளர்கள் செல்ல மாட்டார்கள் என்று தினகரன் கூறி உள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase

    மதுரை:

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இது குறித்து அவர்களுடன் ஆலோசிப்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் மதுரை வந்தார்.

    நீண்ட நேர ஆலோசனைக்கு பின்னர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடைபெற்ற மருது பாண்டியர்கள் குருபூஜையில் கலந்து கொண்ட தினகரன் மதுரை திரும்பினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஐகோர்ட்டு தீர்ப்பின் மூலமாக இந்த ஆட்சி கவிழும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். 18 எம்.எல்.ஏக்களின் நலனும், கட்சியின் நலனும், தமிழக மக்களின் விருப்பமும் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே.

    எனவே 18 பேரும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளனர். தொகுதி மக்களை நேரில் சந்தித்து 18 பேரும் கருத்து கேட்டு வருகின்றனர். 18 பேரும் தவறு செய்யவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தலை எதிர் கொள்ளவும் தயாராக இருக்கிறோம் என்று கூறுகிறார்கள்.


    தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பமாக உள்ளது. தமிழக மக்களின் எண்ணம் எங்களுக்கு தெரியும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வாய்ப்பளிப்பதற்கு தமிழக மக்கள் தயாராக உள்ளனர்.

    அதற்கு உதாரணமாக ஆர்.கே.நகரில் சுயேட்சையாக நின்று எதிர்கட்சியை டெபாசிட் இழக்க வைத்து வெற்றி பெற்றுள்ளோம்.

    அம்மாவின் தொண்டர்கள் 90 சதவீதம் பேர் எங்களிடம் உள்ளனர். இந்த நிலையில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு திரும்ப வேண்டும் என்று முதல்வரும், துணை முதல்வரும் அழைப்பு விடுத்துள்ளனர். இது ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்டது போல் உள்ளது.

    நாங்கள் துரோகத்தின் பக்கம் செல்ல மாட்டோம் என ஆதரவு எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர். 24 தொகுதிகளில் தேர்தல் வந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    ஒரு தொகுதியில் கூட ஆளும் கட்சி டெபாசிட் பெறாது. என்னை துணைப் பொதுச்செயலாளர் தேர்வு செய்தார். என்னை அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கியதற்கான ஒரு ஆதாரம் கூட இல்லை. அ.தி.மு.க.வில் கூடு மட்டுமே உள்ளது.தொண்டர்கள் என்ற உயிரோட்டம் எங்களிடம் மட்டுமே உள்ளது. துரோகம் வீழ்ந்து தர்மம் வெல்லப்போகிறது.

    குக்கர் சின்னம் தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆர்.கே.நகரில் ரூ.200 கோடி செலவு செய்தும் தோல்வி அடைந்தவர்கள் எடப்பாடி அணியினர். நிதானமாக யோசித்து பேசுபவன் நான்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase

    இனி யாராலும் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது என அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார். #MLAsDisqualificationCase #TTVDhinakaran #madhusudanan
    ராயபுரம்:

    எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தர்மம் வென்றது. நீதி வென்றது. மீண்டும் எம்.ஜி.ஆர். வென்றார். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சி அ.தி.மு.க. ஜெயலலிதாவால் காக்கப்பட்ட கட்சி. இனி யாராலும் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது. சசிகலாவும், தினகரனும் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அவர்கள் ஆட்சியை கவிழ்க்க நினைப்பது அபத்தமானது.

    இவ்வாறு அவர் கூறினார். #MLAsDisqualificationCase #TTVDhinakaran #madhusudanan
    தமிழக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டுள்ளார். #MLAsDisqualificationCase
    சென்னை:

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கை விசாரித்த 3வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் இன்று தீர்ப்பு அளித்தார். காலை 10.25 மணிக்கு நீதிபதி கோர்ட்டுக்கு வந்தார். சரியாக 10.30 மணிக்கு தீர்ப்பின் முக்கிய பகுதியை வாசிக்கத் தொடங்கினார்.

    அப்போது 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமனிடம், ‘நான் தலைமை நீதிபதி தீர்ப்பு சரியா? நீதிபதி எம்.சுந்தர் தீர்ப்பு சரியா? என்ற வி‌ஷயத்துக்குள் செல்ல விரும்பவில்லை. நான் சுதந்திரமான முடிவுக்கு வந்து, இந்த தீர்ப்பை பிறப்பித்துள்ளேன்’ என்று கூறினார்.

    பின்னர் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். தீர்ப்பு விவரம் வருமாறு:-

    ‘18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவில் எந்த ஒரு உள்நோக்கமோ, தவறோ இல்லை என்ற முடிவுக்கு வருகிறேன்.

    மேலும், 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பிக்கும் போது என்ன ஆதாரமும், ஆவணங்களும், சூழ்நிலைகளும் நிலவியதோ, அதன் படி தான் சபாநாயகர் முடிவு எடுக்க முடியும். அதன்படி அவர் முடிவு எடுத்துள்ளார். அதில் தவறு இல்லை. அதை தொடர்ந்து பின்னர் நடைபெறும் நிகழ்வுகளை எல்லாம் அவர் பரிசீலிக்கத் தேவையில்லை.

    மேலும், முதல்அமைச்சருக்கு எதிராக 18 எம்.எல்.ஏ.க்கள் புகார் கடிதம் கொடுத்த போது, அதை பெற்றுக்கொண்ட தமிழக கவர்னர், இந்த விவகாரத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.


    இதை தலைமை நீதிபதி அமர்வு முன்பு 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் கூறவில்லை. மேலும், சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு வழக்குகளில் பிறப்பித்த தீர்ப்புகளின் அடிப்படையில், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் சபாநாயகர் பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்கிறேன்.

    ஏற்கனவே, 18 சட்டசபை தொகுதிகளையும் காலியாக அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கு இந்த ஐகோர்ட்டு தடை விதித்து இருந்தது. அதேபோல, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு தடை விதித்து இருந்தது. இந்த தடைகளை எல்லாம் நீக்கி உத்தரவிடுகிறேன்.

    இவ்வாறு நீதிபதி சத்திய நாராயணன் தீர்ப்பளித்தார்.

    தடைகள் எல்லாம் நீக்கப்பட்டு விட்டதால், இந்திய தேர்தல் ஆணையம் 18 சட்டசபை தொகுதிகளை காலியாக அறிவித்து, அங்கு இடைத்தேர்தல் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. #MLAsDisqualificationCase
    18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியதை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். #MLAsDisqualificationCase #18MLAsCaseVerdict
    சென்னை:

    டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என உயர்நீதிமன்ற மன்றம் உறுதி செய்துள்ளது. சபாநாயகரின் முடிவு தவறு இல்லை என்று கூறிய நீதிபதி சத்தியநாராயணன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.

    மேலும், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவோ, 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தவோ தடை இல்லை என்றும் கூறியுள்ளார்.

    ஏற்கனவே திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தற்போது 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் உறுதி செய்யப்பட்டிருப்பதால் மொத்தம் 20 தொகுதிகள் காலியாகின்றன. 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.



    இந்த தீர்ப்பினையடுத்து, தமிழக சட்டசபையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 234ல் இருந்து 214 ஆக குறைந்துள்ளது. இதில் பெரும்பான்மை பெறுவதற்கு 107 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். அதிமுகவுக்கு சபாநாயகரையும் சேர்த்து 110 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால், ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லை.

    இன்றைய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடுகின்றனர். #MLAsDisqualificationCase #18MLAsCaseVerdict
    எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சரியான பாடத்தை புகட்டியிருப்பதாக அமைச்சர் சிவி சண்முகம் கூறினார். #MLAsDisqualificationCase #CVShanmugam
    சென்னை:

    தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்றும், தகுதிநீக்கம் தொடர்பாக சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இல்லை என்றும் நீதிபதி அறிவித்தார். மேலும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.

    இந்த தீர்ப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சரியான பாடத்தை புகட்டியுள்ளது என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.

    தீர்ப்பை நீதிபதி வாசித்து முடித்ததும் முதல்வர் தரப்பினர் இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். அமைச்சர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.



    இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும், ஜனநாயக நெறிகளுக்கு எதிரானது என்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேர் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டால், அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்றும் கூறினார். #MLAsDisqualificationCase #CVShanmugam
    தகுதிநீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் தங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்தார். #MLAsDisqualificationCase #TTVDhinakaran
    சென்னை:

    தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி வந்த 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. முதலில் இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியதால், இவ்வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் இவ்வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.



    அப்போது 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்றும், தகுதிநீக்கம் தொடர்பாக சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இல்லை என்றும் நீதிபதி அறிவித்தார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தார். இந்த தீர்ப்பு டிடிவி தினகரன் தரப்பினருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அத்துடன், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தரப்பில் விரைவில் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு உள்ளது.

    இதுபற்றி டிடிவி தினகரன் கூறுகையில், “இந்த தீர்ப்பினால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. இது ஒரு அனுபவம், சூழ்நிலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆதரவாளர்கள் மற்றும் 18 எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்” என்றார். #MLAsDisqualificationCase  #TTVDhinakaran
    தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், முதல் அமைச்சருடன் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆலோசனை நடத்தினார். #MLAsDisqualificationCase #EdappadiPalaniswami #CVShanmugam
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்,  மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு சென்றது.

    மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி விசாரணையை தொடங்கி ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி நிறைவு செய்து தீர்ப்பை ஒத்திவைத்தார்.



    தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், முதல் அமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முதல் அமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.

    இதேபோல் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.

    இதற்கிடையே சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. #MLAsDisqualificationCase #EdappadiPalaniswami #CVShanmugam

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #TNGovernor #BanwarilalPurohit #MLAsDisqualificationCase
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 18 பேர்களை சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்திருந்தார்.

    இதை எதிர்த்து 18 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வெளியாக கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியலில் மீண்டும் பரபரப்பான சூழல் உருவாகி உள்ளது.

    இந்த நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் திருச்சியில் இன்று நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    அதன்பிறகு நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


    தமிழக அரசியல் நிலவரம் குறித்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து கவர்னர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லியில் 2 நாட்கள் இருக்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்ட நிபுணர்களிடனும் விவாதிப்பார் என தெரிகிறது.

    இதனால் தமிழக அரசியல் நிலவரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. #TNGovernor #BanwarilalPurohit  #MLAsDisqualificationCase
    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க கோரி தினகரன் கட்சி பிரமுகர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சென்னை:

    ராஜா அண்ணாமலைபுரம் ஆர்.கே.மடம் சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது.

    இன்று காலை இந்த செல்போன் கோபுரத்தில் வாலிபர் ஒருவர் ஏறினார். அவருடைய கையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடி இருந்தது.

    இதை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்து கூடி விட்டனர். கீழே இறங்கும்படி அவர்கள் குரல் கொடுத்தனர். ஆனால் அதை கண்டு கொள்ளாத அவர் செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்றார். கொடியை அசைத்து கோ‌ஷமிட்டார்.

    தகவல் அறிந்ததும் அபிராமபுரம் போலீசார் அங்கு வந்தனர். கீழே இறங்கும்படி வாலிபருக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர், “எனது கோரிக்கை நிறைவேற்றினால்தான் கீழே இறங்குவேன்” என்றார்.

    கோரிக்கை என்ன என்று கேட்டபோது “18 எம்.எல். எ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பை விரைவில் வெளியிட வேண்டும். அதுபற்றி உறுதி அளித்தால்தான் கீழே இறங்குவேன். இல்லை என்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன்” என்றார்.

    போலீசாரும், அங்கு கூடியிருந்தவர்களும் கோபுரம் உச்சியில் இருந்த வாலிபரை சமாதானப்படுத்தினார்கள். என்றாலும் கீழே இறங்க மறுத்துவிட்டார். 45 நிமிட போராட்டத்துக்கு பிறகு ஓரளவு சமாதானம் அடைந்த அவர் செலபோன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினார்.

    போலீசார் நடத்திய விசாரணையில், கோபுரத்தில் ஏறிய வாலிபர் பெயர் ராஜேஷ். ராயபுரத்தை சேர்ந்தவர். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகரான இவர், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளர் என்பது தெரியவந்தது.

    இதுபற்றி கூறிய அவர், “18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு தாமதமாகிக் கொண்டே போகிறது. அதனால்தான் அ.தி.மு.க. அரசு நீடிக்கிறது. தீர்ப்பு வந்து விட்டால் தமிழக அரசியலில் திருப்பம் வரும். எனவேதான் இந்த கோரிக்கையை வற்புறுத்தும் வகையில் கோபுரத்தில் ஏறினேன்” என்றார்.

    இதற்கு யாராவது தூண்டுதலாக இருந்தார்களா? என்பது குறித்து வாலிபர் ராஜேசிடம் விசாரணை நடந்து வருகிறது.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராடிய சம்பவம் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும் 17-ம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் இந்த தீர்ப்பு தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பலாம் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது. #18MLAs #MLAsDisqualification
    சென்னை:

    கடந்த ஆண்டு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் அன்றைய கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

    இதையடுத்து கவர்னரை சந்தித்த 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் அ.தி.முக. கொறடா ராஜேந்திரன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அவர்களில் ஜக்கையன் எம்.எல்.ஏ. சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தார்.

    அவரைத்தவிர கவர்னரை சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகர் தனபால் இந்த நடவடிக்கையை எடுத்தார்.

    இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள்.

    இதையடுத்து 3-வது நீதிபதி சத்தியநாராயணன் இந்த வழக்கை விசாரித்தார். விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வருகிற 17-ந்தேதி தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலில் புயலை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டால், தற்போது சட்டசபைக்கு தன்னந்தனியாக வந்துபோகும் டி.டி.வி. தினகரனின் கை ஓங்கும். இந்த 18 பேர் தவிர வேறு சில எம்.எல்.ஏ.க்களும் தினகரனுக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பு உள்ளது என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    தற்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக 110 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். முழு மெஜாரிட்டிக்கு 118 எம்.எல்.ஏ.க்கள் தேவை. எனவே, தினகரனுக்கு ஆதரவு அதிகரித்தால் அ.தி.மு.க. ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும்.


    இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தினகரன் முதல்- அமைச்சர் பதவியை குறி வைக்கலாம். தன்னை முதல்-அமைச்சராக ஆக்கினால் ஆட்சியை காப்பாற்றுவேன் என்று நிபந்தனை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

    ஆட்சியை காப்பாற்ற விரும்பினால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இதற்கு பணிந்து போக நேரிடலாம். இல்லையென்றால் ஆட்சி கலையும். அதன் பிறகு தேர்தலை சந்தித்து ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும். தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியாது. எனவே தேர்தலை சந்திக்க இன்றைய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விரும்ப மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கினால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தேர்தலை சந்திக்க வேண்டியது வரும். ஏற்கனவே திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகள் காலியாக உள்ளன. எனவே 20 எம்.எல்.ஏ. தொகுதிகளுக்கு தேர்தல் வரும்.

    இதில் அ.தி.மு.க. வெற்றி பெறுமா? தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் வெற்றி பெறுவார்களா? என்பதில் எதையும் நிச்சயமாக சொல்ல முடியாது. தி.மு.க.வும் களம் இறங்கும் போது மும்முனை போட்டி ஏற்படும். எனவே ஆளும் கட்சி நிலை என்ன ஆகும் என்பதை கணிக்க முடியாது. எனவே இடைத்தேர்தல் முடிவும் பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம்.

    தி.மு.க.வுக்கு தற்போது சட்டசபையில் 88 எம்.எல். ஏ.க்கள் உள்ளனர். குறுக்கு வழியில் தி.மு.க. ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    எனவே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து தி.மு.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. அந்த கட்சி பொதுத் தேர்தலை சந்திப்பதையே விரும்புகிறது.

    இன்றைய சூழ்நிலையில் 18 எம்.எல்.எ.க்கள் வழக்கில் அவர்களை நீக்கியது சரி என்று தீர்ப்பு வந்தாலும், நீக்கியது தவறு என்று தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் அது தமிழக அரசியலில் மிகப்பெரிய புயலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

    எனவே 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்படி அமையும் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரு எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள் ளது. புயல் கடுமையாக வீசுமா? எளிதில் கரை யேறுமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.  #18MLAs #MLAsDisqualification
    ×