search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரோகத்தின் பக்கம் எனது ஆதரவாளர்கள் செல்லமாட்டார்கள் - தினகரன்
    X

    துரோகத்தின் பக்கம் எனது ஆதரவாளர்கள் செல்லமாட்டார்கள் - தினகரன்

    துரோகத்தின் பக்கம் எனது ஆதரவாளர்கள் செல்ல மாட்டார்கள் என்று தினகரன் கூறி உள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase

    மதுரை:

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இது குறித்து அவர்களுடன் ஆலோசிப்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் மதுரை வந்தார்.

    நீண்ட நேர ஆலோசனைக்கு பின்னர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடைபெற்ற மருது பாண்டியர்கள் குருபூஜையில் கலந்து கொண்ட தினகரன் மதுரை திரும்பினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஐகோர்ட்டு தீர்ப்பின் மூலமாக இந்த ஆட்சி கவிழும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். 18 எம்.எல்.ஏக்களின் நலனும், கட்சியின் நலனும், தமிழக மக்களின் விருப்பமும் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே.

    எனவே 18 பேரும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளனர். தொகுதி மக்களை நேரில் சந்தித்து 18 பேரும் கருத்து கேட்டு வருகின்றனர். 18 பேரும் தவறு செய்யவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தலை எதிர் கொள்ளவும் தயாராக இருக்கிறோம் என்று கூறுகிறார்கள்.


    தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பமாக உள்ளது. தமிழக மக்களின் எண்ணம் எங்களுக்கு தெரியும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வாய்ப்பளிப்பதற்கு தமிழக மக்கள் தயாராக உள்ளனர்.

    அதற்கு உதாரணமாக ஆர்.கே.நகரில் சுயேட்சையாக நின்று எதிர்கட்சியை டெபாசிட் இழக்க வைத்து வெற்றி பெற்றுள்ளோம்.

    அம்மாவின் தொண்டர்கள் 90 சதவீதம் பேர் எங்களிடம் உள்ளனர். இந்த நிலையில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு திரும்ப வேண்டும் என்று முதல்வரும், துணை முதல்வரும் அழைப்பு விடுத்துள்ளனர். இது ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்டது போல் உள்ளது.

    நாங்கள் துரோகத்தின் பக்கம் செல்ல மாட்டோம் என ஆதரவு எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர். 24 தொகுதிகளில் தேர்தல் வந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    ஒரு தொகுதியில் கூட ஆளும் கட்சி டெபாசிட் பெறாது. என்னை துணைப் பொதுச்செயலாளர் தேர்வு செய்தார். என்னை அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கியதற்கான ஒரு ஆதாரம் கூட இல்லை. அ.தி.மு.க.வில் கூடு மட்டுமே உள்ளது.தொண்டர்கள் என்ற உயிரோட்டம் எங்களிடம் மட்டுமே உள்ளது. துரோகம் வீழ்ந்து தர்மம் வெல்லப்போகிறது.

    குக்கர் சின்னம் தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆர்.கே.நகரில் ரூ.200 கோடி செலவு செய்தும் தோல்வி அடைந்தவர்கள் எடப்பாடி அணியினர். நிதானமாக யோசித்து பேசுபவன் நான்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase

    Next Story
    ×