search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்ப வரும் 18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு 17-ந்தேதி வெளியாக வாய்ப்பு
    X

    தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்ப வரும் 18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு 17-ந்தேதி வெளியாக வாய்ப்பு

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும் 17-ம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் இந்த தீர்ப்பு தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பலாம் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது. #18MLAs #MLAsDisqualification
    சென்னை:

    கடந்த ஆண்டு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் அன்றைய கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

    இதையடுத்து கவர்னரை சந்தித்த 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் அ.தி.முக. கொறடா ராஜேந்திரன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அவர்களில் ஜக்கையன் எம்.எல்.ஏ. சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தார்.

    அவரைத்தவிர கவர்னரை சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகர் தனபால் இந்த நடவடிக்கையை எடுத்தார்.

    இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள்.

    இதையடுத்து 3-வது நீதிபதி சத்தியநாராயணன் இந்த வழக்கை விசாரித்தார். விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வருகிற 17-ந்தேதி தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலில் புயலை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டால், தற்போது சட்டசபைக்கு தன்னந்தனியாக வந்துபோகும் டி.டி.வி. தினகரனின் கை ஓங்கும். இந்த 18 பேர் தவிர வேறு சில எம்.எல்.ஏ.க்களும் தினகரனுக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பு உள்ளது என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    தற்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக 110 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். முழு மெஜாரிட்டிக்கு 118 எம்.எல்.ஏ.க்கள் தேவை. எனவே, தினகரனுக்கு ஆதரவு அதிகரித்தால் அ.தி.மு.க. ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும்.


    இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தினகரன் முதல்- அமைச்சர் பதவியை குறி வைக்கலாம். தன்னை முதல்-அமைச்சராக ஆக்கினால் ஆட்சியை காப்பாற்றுவேன் என்று நிபந்தனை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

    ஆட்சியை காப்பாற்ற விரும்பினால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இதற்கு பணிந்து போக நேரிடலாம். இல்லையென்றால் ஆட்சி கலையும். அதன் பிறகு தேர்தலை சந்தித்து ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும். தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியாது. எனவே தேர்தலை சந்திக்க இன்றைய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விரும்ப மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கினால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தேர்தலை சந்திக்க வேண்டியது வரும். ஏற்கனவே திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகள் காலியாக உள்ளன. எனவே 20 எம்.எல்.ஏ. தொகுதிகளுக்கு தேர்தல் வரும்.

    இதில் அ.தி.மு.க. வெற்றி பெறுமா? தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் வெற்றி பெறுவார்களா? என்பதில் எதையும் நிச்சயமாக சொல்ல முடியாது. தி.மு.க.வும் களம் இறங்கும் போது மும்முனை போட்டி ஏற்படும். எனவே ஆளும் கட்சி நிலை என்ன ஆகும் என்பதை கணிக்க முடியாது. எனவே இடைத்தேர்தல் முடிவும் பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம்.

    தி.மு.க.வுக்கு தற்போது சட்டசபையில் 88 எம்.எல். ஏ.க்கள் உள்ளனர். குறுக்கு வழியில் தி.மு.க. ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    எனவே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து தி.மு.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. அந்த கட்சி பொதுத் தேர்தலை சந்திப்பதையே விரும்புகிறது.

    இன்றைய சூழ்நிலையில் 18 எம்.எல்.எ.க்கள் வழக்கில் அவர்களை நீக்கியது சரி என்று தீர்ப்பு வந்தாலும், நீக்கியது தவறு என்று தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் அது தமிழக அரசியலில் மிகப்பெரிய புயலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

    எனவே 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்படி அமையும் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரு எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள் ளது. புயல் கடுமையாக வீசுமா? எளிதில் கரை யேறுமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.  #18MLAs #MLAsDisqualification
    Next Story
    ×