search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "peoples attack"

    தற்போது சந்தேகத்தின்பேரில் குழந்தை கடத்துபவர்கள் என்று நடுரோட்டில் மக்கள் நடத்தும் தாக்குதலைப்போல, ஊழல்வாதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட ரொம்ப நாள் ஆகாது என்று ஈஸ்வரன் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில நாட்களாக தமிழகத்தில் குழந்தையை கடத்துபவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் அப்பாவி நபர்களையும், முதியோர்களையும் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் மக்கள் ஒன்று சேர்ந்து தாக்கும் நிலை உருவானதற்கு காவல் துறையின் மெத்தனமான செயல்பாடுகளும், நடவடிக்கைகளுமே காரணம்.

    இந்த தாக்குதலில் குற்றமே செய்யாத அப்பாவி நபர்கள் உயிரிழந்திருப்பதும், காயமடைந்திருப்பதும் மிகுந்த வேதனையளிக்கிறது. காவல்நிலையங்களில் அரசியல்வாதிகளுக்கும், பணம் படைத்தவர்களுக்கும் கிடைக்கும் மரியாதை ஏழை மக்களுக்கு கிடைப்பதில்லை.

    காவல்நிலையங்களுக்கு வரும் ஏழை மக்களிடத்தில் காவல்துறை அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதம் காவல்துறை மீது வெறுப்பை உண்டாக்குகிறது. குற்றம் செய்தவர்களை பிடித்து காவல்துறையிடம் பொது மக்கள் ஒப்படைத்தாலும் ஒருசில காவல்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து தண்டனைகளை பெற்றுத் தராமல் குற்றவாளிகளை வெளிவிடுவதால்ஏற்பட்ட விளைவுதான் தற்போது பொதுமக்களின் கொடூர தாக்குதலாக மாறியிருக்கிறது.

    144 தடை உத்தரவு, சட்டத்தை கடுமையாக்குதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவைகளால் மக்களுக்கு காவல் துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தி விட முடியாது. காவல்துறை அதிகாரிகளின் நேர்மையான தொடர்ச்சியான செயல்பாடுகளின் மூலம் தான் காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்க முடியும். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் அவர்கள் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

    லஞ்சமும், ஊழலும் வாழ்க்கை முறையாகமாறி வருவது நல்லதல்ல. பணம் படைத்தவர்கள் லஞ்சம் கொடுத்து எந்தவொரு துறையிலும் எதை வேண்டுமானாலும் சாதிக்கும் நிலை இருக்கிறது. லஞ்சமும், ஊழலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. தற்போது சந்தேகத்தின்பேரில் குழந்தை கடத்துபவர்கள் என்று நடுரோட்டில் மக்கள் நடத்தும் தாக்குதலைப்போல, ஊழல்வாதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட ரொம்ப நாள் ஆகாது.

    இந்த தாக்குதல்சம்பவம் மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கின்ற பெரும் புரட்சியின் முன்னோட்டத்தை வெளிக்காட்டுகிறது. கூட்டுறவு சங்க தேர்தலில் ஆளுங்கட்சியினரின் வேட்புமனுவை மட்டும் பெற்றுக்கொண்டு மற்றவர்கள் மனுவை பெற மறுப்பதும், நிராகரிப்பதும் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சக்கட்டம்.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். #Tamilnews
    ×