search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dams"

    • திருக்குறுங்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது.
    • பிசான சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் கொடுமுடியாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 52.50 அடி ஆகும்.

    அணை நீர்மட்டம் உயர்வு

    திருக்குறுங்குடி பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது. இதுபோல கொடுமுடியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு, அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி அணையில் 49 அடிக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணை திறப்பு

    இதையடுத்து அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன்படி சபாநாயகர் அப்பாவு கொடுமுடியாறு அணையில் இருந்து இன்று தண்ணீரை திறந்து வைத்தார். படலையார் கால்வாய், நம்பியாற்று கால்வாய், வள்ளியூரான் கால்வாய்களில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கலந்து கொண்டவர்கள்

    இதன் மூலம் நாங்குநேரி, ராதாபுரம் தாலுகாவின் உள்ள 44 குளங்களும், 5781 ஏக்கர் விளைநிலங்களும் பயன் பெறும். மழை பெய்து தண்ணீர் வரத்து அதிகரித்தால் அதனை பொறுத்து, கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் சேரன் மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி, கண்காணிப்பு பொறியாளர் பத்மா, செயற்பொறியாளர் சிவகுமார், பாளை யூனியன் சேர்மன் தங்கபாண்டியன் மற்றும் பொதுப்பணித்துறையினர், அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாய சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பிசான சாகுபடி செய்வதற்கு இன்று முதல் வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதி வரை 140 நாட்களுக்கு வினாடிக்கு 60 கனஅடி அளவு தண்ணீர் திறக்கப்படும்.
    • தென்காசி மாவட்டம் மற்றும் வட்டத்தில் 4943.51 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் மேலக்கடையம் கிராமத்தில் உள்ள ராமநதி அணையில் இருந்து பிசான சாகுபடி செய்வதற்கு இன்று முதல் வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதி வரை 140 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 60 கனஅடி அளவுக்கு 823.92 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும்.

    இதன் மூலம் தென்காசி மாவட்டம் மற்றும் வட்டத்தில் 4943.51 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் கடையம் அருகே சிவசைலம் கிராமத்தில் உள்ள கடனா அணையில் இருந்து பாசனம் பெறும் நிலங்களுக்கு பிசான சாகுபடிக்கு கடனா நீர்த்தேக்கத்தில் இருந்து 140 நாட்களுக்கு வினாடிக்கு 125 கனஅடிக்கு மிகாமல், பாசன பருவகாலத்தின் மொத்த தேவையான தண்ணீர் அளவான 1653.87 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் இன்று முதல் திறக்கப்பட்டது.

    இதன் மூலம் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அம்பாசமுத்திரம், தென்காசி மற்றும் சேரன்மகாதேவி வட்டங்களில் 9923.22 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அணைகளில் இருந்து தண்ணீரை சபாநாயகர் அப்பாவு இன்று திறந்து வைத்தார்.
    • 19 ஆயிரத்து 604.29 மில்லியன் கன அடி தண்ணீர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும்.

    நெல்லை:

    பிசான சாகுபடியை முன்னிட்டு பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன்படி பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீரை சபாநாயகர் அப்பாவு இன்று திறந்து வைத்தார். இதில் கலெக்டர் விஷ்ணு, அப்துல்வகாப் எம்.எல்.ஏ., சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், கண்காணிப்பு பொறியாளர் பத்மா, செயற் பொறியாளர் மாரியப்பன், பாளை ஒன்றிய சேர்மன் தங்க பாண்டியன், உதவி செயற் பொறியாளர் தங்கராஜ், மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட், கனகராஜ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதன் மூலம் நெல்லை மாவட்ட தாமிரபரணி ஆற்றுபரப்பில் உள்ள நேரடி மற்றும் முறைமுக பாசனப் பரப்புகளுக்கு இன்று முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை 148 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.

    பிசான சாகுபடி, நாற்று பாவுதல் மற்றும் நடவுதல் போன்ற பணிகள், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு 19 ஆயிரத்து 604.29 மில்லியன் கன அடி தண்ணீர் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து திறந்து விடப்படும்.

    இதன்மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட த்தில் வடக்கு கோடை மேலழகி யான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளை யங்கால்வாய், நெல்லை கால்வாய் மற்றும் மருதூர் மேலக்கால் கால்வாய், மருதூர் கீழக்கால் கால்வாய், தெற்கு பிரதானக்கால்வாய், வடக்கு பிரதானக்கால்வாய் ஆகியவற்றின் கீழுள்ள 86 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, நெல்லை, பாளை , தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவை குண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் ஏரல் ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள் பயன்பெறும்.

    பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 86 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    வெள்ள நீர் கால்வாய் பரிசோதனைக்கு மழை காலத்தில் கடலில் உபரியாக கலக்கும் தண்ணீர் பயன் படுத்தப்படும். ஒருபோதும் விவசாயிகளுக்கு எதிராக தண்ணீர் திறந்து சோதனை நடத்த மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தடுப்பணையை சுத்தப்படுத்தவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.
    • மடத்துக்குளம் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்கள் மற்றும் அதன் அருகில் குப்பைகள் மற்றும் கழிவுகளை பலர் கொட்டுகின்றனர்.

    மடத்துக்குளம்:

    திருப்பூர் போடிப்பட்டி ,மடத்துக்குளம் பகுதியில் தடுப்பணைகளில் தேங்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சமுக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    ஒரு பகுதியின் விவசாய மேம்பாட்டுக்கு மழை வளம் மட்டுமல்லாமல் நிலத்தடி நீர் ஆதாரமும் முக்கிய பங்கு வகிக்கிறது.பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் உருவாக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு, ஓடை உள்ளிட்ட நீர் வழித்தடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டு மழைநீர் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் மேம்படுவதுடன் காற்றின் ஈரப்பதம் அதிகரித்து பயிர்களின் வளர்ச்சிக்கு கைகொடுக்கிறது.

    அதுமட்டுமல்லாமல் விலங்குகள், பறவைகளின் குடிநீர் ஆதாரமாக விளங்கி பல்லுயிர் பெருக்கத்துக்கும் துணை புரிகிறது.இவ்வாறு பலவகைகளில் வாழ்வியலுக்கு உறுதுணையாக விளங்கும் தடுப்பணைகள் ஒருசிலரின் அலட்சியத்தால் பாழாகி வருகிறது. மடத்துக்குளம் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்கள் மற்றும் அதன் அருகில் குப்பைகள் மற்றும் கழிவுகளை பலர் கொட்டுகின்றனர்.இந்த கழிவுகள் மழைநீரில் அடித்து வரப்பட்டு தடுப்பணைகளில் சென்று தேங்குகிறது. இதனால் தண்ணீர் மாசு படுவதுடன் பல்வேறு நோய்த்தொற்றுகள் உருவாவதற்கும் காரணமாகி விடுகிறது. அந்தவகையில் மடத்துக்குளத்தையடுத்த சோழமாதேவி பகுதியில் உள்ள தடுப்பணையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், துணிகள், குப்பைகள் உள்ளிட்ட கழிவுகள் தேங்கியுள்ளது.மேலும் தண்ணீர் பாசம் பிடித்து துர்நாற்றம் வீசுகிறது.இதனால் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு வேலை செய்ய வரும் தொழிலாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் இந்த தண்ணீரால் பலவிதமான நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே தடுப்பணையை சுத்தப்படுத்தவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.

    • பி.ஏ.பி. தொகுப்பு அணைகள் சுரங்க கால்வாய்கள் மற்றும் திறந்த வெளிக்கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
    • 12 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்ட மின்உற்பத்தி 21 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது.

    பொள்ளாச்சி

    பி.ஏ.பி திட்டத்தில் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய அணைகள் கட்டப்பட்டுள்ளது.

    இந்த பி.ஏ.பி. தொகுப்பு அணைகள் சுரங்க கால்வாய்கள் மற்றும் திறந்த வெளிக்கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

    9 அணைகள் திட்டத்தில் இருந்தாலும் ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைகளில் இருந்து மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆழியாறு அணையிலிருந்து 50 ஆயிரம் ஏக்கரும், திருமூர்த்தி அணையிலிருந்து 3.77 லட்சம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன.

    பி.ஏ.பி திட்டத்தில் அதிக கொள்ளவு கொண்டது பரம்பிக்குளம் அணை. இந்த அணை நிரம்பிவிட்டால் ஓராண்டுக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருக்காது.

    திருமூர்த்தி அணைக்கும், ஆழியாறு அணைக்கும் பரம்பிக்குளம் அணையிலிருந்து தூணக்கடவு அணை வழியாக தண்ணீர் வழங்கப்படும்.

    திருமூர்த்தி அணையிலிருந்து 3.77 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுவதால் அந்த அணைக்கு தேவையான தண்ணீர் பரம்பிக்குளம் அணையிலிருந்து வழங்கப்படுகிறது. இதற்கு 39.3 கி.மீ நீளம் உடைய காண்டூர் கால்வாய் பயன்படுகிறது. காண்டூர் கால்வாயில் அதிக பட்சமாக 1000 கன அடிவரை தண்ணீர் கொண்டு செல்லமுடியும்.

    கடந்த மே மாத இறுதியில் இருந்து காண்டூர்கால்வாயில் புணரமைப்பு பணிகள் நடைபெற்றுவந்ததால் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லமுடியவில்லை.

    இந்நிலையில், கடந்த புதன்கிழமை காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பரம்பிக்குளம் அணையிலிருந்து வழங்கப்படும் தண்ணீர் தூணக்கடவு அணை வழியாக சர்க்கார்பதி மின்உற்பத்தி நிலையத்தை அடைகிறது.

    சர்க்கார்பதி மின் உற்பத்திநிலையத்தில் மின் உற்பத்திக்கு பிறகு காண்டூர்கால்வாயில் செல்லும் தண்ணீர் திருமூர்த்தி அணையை அடைகிறது. கடந்த புதன்கிழமை திறக்கப்பட்ட தண்ணீர் வெள்ளிக்கிழமை 850 கன அடியாக உயர்த்தப்பட்டதால் 12 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்ட மின்உற்பத்தி 21 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது. 

    • பெரும்பாலான அணைகள் கட்டப்பட்டு 60 ஆண்டை கடந்து விட்டன.
    • மின்சாரம் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பயன்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரியில், குந்தா, பைக்காரா மின் வட்டத்தின் கீழ், 13 அணைகள் உள்ளன. பெரும்பாலான அணைகள் கட்டப்பட்டு 60 ஆண்டை கடந்து விட்டன.

    நீலகிரி அணைகளில் இருந்து, 833.65 மெகாவாட் நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

    குந்தா, கெத்தை, பில்லூர் அவலாஞ்சி அணைகளில் தண்ணீரை தேக்கி வைத்து, ராட்சத குழாய்களில் கொண்டு சென்று மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த மின்சாரம் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பயன்படுகிறது. சகதி நிறைந்த அணைகள் துார்வாரப் பட்டு, பல ஆண்டுகள் ஆனதால், தண்ணீர் தேக்கி வைப் பதில் சிக்கல் ஏற்பட் டுள்ளது.

    இதனால், பருவ மழையின் போது, ஏராளமான நீர் வீணாக வெளி யேறுகிறது. சேறும், சகதியுமான அணைகளை உடனடியாக துார்வார வேண்டி இருப்பதால், மின்வாரிய தலைமை அலுவலகம் இதற்கான அறிக்கையை கேட்டுள்ளது. இதுகுறித்து குந்தா மேற்பார்வை செயற்பொறியாளர் செந்தில் ராஜன் கூறுகையில், குந்தா, பைக்காரா நீர் மின்திட்டத்தின் கீழ், அதிகளவில் சகதி நிரம்பிய அணைகளை துார்வார மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து வாரியத்துக்கு விரைவில் அனுப்பப்படும்,'' என்றார்.

    • தாளவாடி அடுத்த திம்பம், தலமலை வனப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக திம்பம் மலைப்பாதையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
    • பலத்த மழையால் மலைப்பாதையில் உள்ள அருவிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம், தலமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதே நேரம் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்தநிலையில் திம்பம், தலமலை மற்றும் சுற்று வட்டார வனப் பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. திடீரென மதியம் 3 மணி அளவில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து சாரல் மழை பெய்தது.

    பின்னர் நேரம் செல்ல செல்ல பலத்த மழை கொட்டியது. மேலும் திம்பம், காளி திம்பம், தலமலை, பெஜலட்டி, மாவநத்தம் ஆகிய பகுதியில் தொடர்ந்து இரவு 7 மணி வரை சுமார் 3 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    பலத்த மழையின் காரணமாக திம்பம் மலைப்பாதையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.

    இதனால் திம்பம் வனப்பகுதிகளில் புதிய அருவிகள் தோன்றியது. அருவிகளில் இருந்து தண்ணீர் கொட்டி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் வெளியேறி குய்யனூர் தடுப்பணைக்கு சென்றது. இதனால் தடுப்பணை நிரம்பி வழிந்து சென்றது. தொடர்ந்து அருகே உள்ள ஓடை, குளம், குட்டைகளுக்கும் தண்ணீர் சென்று நிரம்பி வருகிறது.

    அதேப்போல பலத்த மழையால் மலைப்பாதையில் உள்ள அருவிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் உள்பட 8 அணைகள் வறண்டன. கடனாநதி, ராமநதி பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருப்பதால் அணையின் உள்பகுதியில் சுமார் 25 அடி உயரம் வரை மணலாக உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் 11 அணைகள் உள்ளன. இதில் அதிக கொள்ளளவு கொண்ட மிகப் பெரிய அணையாக மணிமுத்தாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 118 அடி, மொத்த கொள்ளளவு 5511 மில்லியன் கன அடி ஆகும்.



    அதற்கு அடுத்ததாக பாபநாசம் அணை மிகப் பெரிய அணையாக உள்ளது. இதன் மொத்த அடி 143, கொள்ளளவு 5500 மில்லியன் கன அடி ஆகும். இது போக சேர்வலாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவி நயினார், வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு என மொத்தம் 11 அணைகள் உள்ளன.

    இந்த 11 அணைகளில் பிரதான அணைகளான மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு ஆகிய 3 அணைகளில் எப்போதும் தண்ணீர் இருப்பு இருக்கும். இந்த அணைகளில் தண்ணீர் இல்லாவிடில், குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு விடும். தற்போது பாபநாசம் அணையில் சகதியும், தண்ணீரும் சேர்ந்து நீர்மட்டம் 9 அடி மட்டுமே உள்ளது.

    குடிநீருக்காக குறைந்தது வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் தற்போது பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 25 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியே செல்கிறது.

    இதனால் குடிநீருக்காக மணிமுத்தாறு அணை திறக்கப்பட்டுள்ளது. மணி முத்தாறு அணையில் தற்போது 64.31 அடியாக நீர்மட்டம் உள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 275 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 24 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இந்த தண்ணீர் பச்சையாறு வழியாக தாமிரபரணி ஆற்றுக்கு வந்து சேர்கிறது. இதனால் இப்போது பச்சையாறு பகுதியில் உள்ள ஆகாய தாமரைகள் தாமிரபரணி ஆறு வரை பரவி உள்ளது. இதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணையிலும் தற்போது 47.41 அடியாக நீர்மட்டம் உள்ளது.

    பாபநாசம் அணையும் சகதி தண்ணீர் மட்டும் உள்ளதால் அந்த அணையில் மற்ற பகுதிகள் வறண்டு விட்டது. அணையின் அடிப்பகுதியில் உள்ள மரங்களின் வேர் பகுதி மட்டும் காய்ந்து வெளியே தெரிகிறது.

    இதுபோல கடனாநதி, ராமநதியில் தண்ணீர் சுத்தமாக இல்லை. இங்கு பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருப்பதால் அணையின் உள்பகுதியில் மணல் நிரம்பி சுமார் 25 அடி உயரம் வரை மணலாக உள்ளது. இந்த அணைகளின் ஒரு ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் போல் லேசாக தண்ணீர் கசிந்து செல்கிறது.

    இதனால் இந்த அணைகளில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. கருப்பா நதியிலும் பல ஆண்டுகளாக தூர்வாராமல் 23 அடி வரை மணல் நிரம்பி உள்ளது. அதன் மேல் 1½ அடி உயரத்துக்கு சிறிதளவு தண்ணீர் உள்ளது. மற்றபடி அணை முழுவதும் வறண்டு காணப்படுகிறது.

    இதுபோல குண்டாறு, அடவிநயினார், வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளிலும் சிறி தளவு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. நீரோட்டம் இல்லாததால் இந்த அணைகளும் வறண்டு விட்டது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 அணைகளும் வறண்டு மழைக்காக காத்திருக்கிறது.

    எப்போதும் ஆர்ப்பரித்து தண்ணீர் விழும் அகத்தியர் அருவியில் தற்போது மிக குறைவாகவே தண்ணீர் விழுகிறது. குற்றால அருவிகளில் எந்த அருவியிலும் தண்ணீர் விழவில்லை. குற்றாலம் மெயினருவி முற்றிலுமாக வறண்டு காணப்படுகிறது. இதனால் தற்போது மணிமுத்தாறு அணை நீர்மட்டத்தை வைத்து குடிநீர் தேவை மட்டும் சமாளிக்கப்படுகிறது.

    வழக்கமாக ஜூன் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்ய வேண்டும். சில ஆண்டுகளில் முன்னதாக மே கடைசி வாரமே தென்மேற்கு பருவ மழை பெய்து விடும். எனவே தென் மாவட்ட மக்கள் தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். தென்மேற்கு பருவ மழை பெய்தால் தான் வறண்டு உள்ள 9 ஆணைகளுக்கும் தண்ணீர் வரும். இல்லாவிடில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.
    உடுமலை வனச்சரகத்தில் தடுப்பணைகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    தளி:

    உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியையே அதிகமாக நம்பி உள்ளது. 

    வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு வனப்பகுதியில் உள்ள ஓடைகளை தடுத்து தடுப்பணைகள் வனத்துறையினர் சார்பில் கட்டப்பட்டுள்ளது. அத்துடன் வனவிலங்குகளின் வழித்தடங்களை மையமாக கொண்டு ஆழ்குழாய் அமைத்து ஆங்காங்கே தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளது. அவற்றில் கோடைகாலங்களில் வனத்துறையினர் லாரிகள் மூலமாக தண்ணீர் நிரப்பி வருகின்றனர். இதனால் வனவிலங்குகள் தடுப்பணைகளில் தேங்கியுள்ள தண்ணீரை குடித்துவிட்டு வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்று விடுகின்றன. இதன் காரணமாக சமீபகாலமாக வனவிலங்குகள் சமவெளிப் பகுதிக்கு வருவது பெருமளவிற்கு தடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் வருகின்ற கோடை காலத்தில் வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு ஓடைகளை தடுத்து தடுப்பணைகள் கட்டுவதற்கு வனத்துறையினர் திட்டமிட்டனர். அதைத் தொடர்ந்து கோம்பை மேற்கு பீட் மற்றும் ஏழுமலையான் கோவில் பிரிவு அருகே தலா ஒரு தடுப்பணை கட்டுவதற்கு ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பின்னர் கடந்த சில நாட்களாக தடுப்பணைகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பணைகள் கட்டப்படுவதால் வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை நிறைவு செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
    தென் மாவட்டங்களில் நேற்றும், இன்றும் எந்தவித மழை பொழிவும் இல்லாததால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்தது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கு கூடுதல் நீர் வந்தது. இதைத்தொடர்ந்து பாபநாசம் அணை நீர்மட்டம் 124 அடியை தாண்டியது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டி 104 அடியானது.

    இந்த நிலையில் தென் மாவட்டங்களில் நேற்றும், இன்றும் எந்தவித மழை பொழிவும் இல்லை. இதன் காரணமாக அணைகளுக்கு குறைந்த அளவு நீர் வருகிறது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 827 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 804 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை பாபநாசம் அணை நீர்மட்டம் 124.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 134.74 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 315 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 35 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 104.25 அடியாக உள்ளது.

    கடனாநதி-78.80, ராமநதி- 69.25, கருப்பாநதி-67.03, குண்டாறு-35.87, வடக்கு பச்சையாறு-31.50, நம்பியாறு-18.66, கொடுமுடியாறு-35, அடவிநயினார்-93.25 அடிகளாகவும் நீர்மட்டம் உள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழ்நிலை உள்ளதால் 5-ந்தேதிக்கு பிறகு மீண்டும் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பல இடங்களில் கனமழை பெய்ததையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #ManimutharDam
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை மிகவும் குறைந்த அளவே பெய்து வருகிறது. நவம்பர் மாதம் சராசரி மழை அளவான 208.20 மில்லி மீட்டரை விட குறைவாக 186.11 மில்லி மீட்டர் மழையே பெய்துள்ளது.

    இந்த மாதம் சராசரி மழை அளவான 111.60 மில்லி மீட்டர் பெய்தால் தான் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் போதுமானதாக இருக்கும். இந்த நிலையில் டிசம்பர் 1-ந்தேதியே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பல இடங்களில் கனமழை பெய்தது. மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1841.55 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 804.75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்றைவிட ஒரு அடி உயர்ந்து இன்று 124.15 அடியாக உள்ளது. சேர்வ லாறு அணை நீர்மட்டமும் நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று 134.18 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 1059 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 35 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. இதனால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று 103.60 அடியாக உள்ளது.

    இதுபோல கடனாநதி -78.20, ராமநதி-69.25, கருப்பாநதி-67.86, குண்டாறு-36.10, வடக்கு பச்சையாறு-31.50, நம்பியாறு -19.61, கொடுமுடியாறு-37, அடவிநயினார்-94.75 அடிகளாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக ராமநதி அணை பகுதியில் 54 மில்லி மீட்டர் மழையும், பாபநாசம் மலை பகுதியில் 39 மில்லி மீட்டர் மழையும், அம்பையில் 38.2 மில்லி மீட்டர் மழையும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 32.8 மில்லி மீட்டர் மழையும், சேர்வலாறு அணை பகுதியில் 30 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக வைப்பாறில் 13 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ராமநதி-54, பாபநாசம்-39, அம்பை-38.2, கன்னடியன் கால்வாய்-32.8, சேர்வ லாறு-30, ஆய்க்குடி-12.8, தென்காசி-8.4, கருப்பாநதி-7, குண்டாறு-7, களக்காடு-5.6, மணிமுத்தாறு-5.2, கடனாநதி-5, சேரன் மகாதேவி-2

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வைப்பாறு-13, கடம்பூர்-3, எட்டயபுரம்-3, கயத்தாறு-1. #ManimutharDam

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. #Rain #Dams
    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக காலையில் வெயிலும், மாலையில் மழையுமாக காலநிலை மாறி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் அடித்தது. மதியம் கருமேகங்கள் சூழ்ந்து மாலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக அம்பை, பாபநாசம், மணிமுத்தாறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பை பகுதியில் 37.60 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஓடைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. ஏற்கனவே பெய்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் நேற்றைய மழை காரணமாகவும் கூடுதல் தண்ணீர் வந்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    பிரதான பாசன அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் 121.95 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,835 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 130.18 அடியாக இருந்தது.

    இங்கு பெய்த மழையினால் இந்த அணை மேலும் 3 அடி உயர்ந்து 133.27 அடியாக அதிகரித்துள்ளது. நேற்று 100 அடியை தாண்டிய மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று 101.05 அடியாக உள்ளது.

    பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய 3 அணைகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில் அணைகள் நிரம்பி வருவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதே போல் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளான கடனா, ராமநதி, கருப்பாநதி, வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடனா அணை நீர்மட்டம் 76.80 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 69.25 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 63.23 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 31.25 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 42 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 98.50 அடியாகவும் உள்ளன.

    நம்பியாறு, குண்டாறு அணைகள் ஏற்கனவே நிரம்பியுள்ளன. குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. எனினும் சீசன் முடிந்து விட்டதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது.

    ஐயப்ப பக்தர்கள், குறைவான சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். தொடர் மழையினால் மாவட்டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்து 500 குளங்களுக்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இதில் பல குளங்கள் நிரம்பியுள்ளன.

    அணை பகுதி மற்றும் தாலுகா பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    அம்பை-37.60, பாபநாசம் -24, ராமநதி-20, மணிமுத்தாறு-19.20, சேர்வலாறு-15, கொடுமுடியாறு-15, அடவிநயினார் அணை-11, குண்டாறு-9, சேரன்மகாதேவி-8, செங்கோட்டை-7, நெல்லை-5, கருப்பாநதி-4, ஆய்க்குடி-2.60, நாங்குநேரி-2. #Rain #Dams

    ×