என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை"

    • தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டது.
    • விருதுநகரில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    ராமநாதபுரம்:

    தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தில் நேற்று சாரல் மழை பெய்தது. இன்று அதிகாலை 3 மணிமுதல் பலத்த மழை வெளுத்து வாங்கியது. இதனால் முக்கிய வீதிகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள், அன்றாட பணிகளுக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.

    ராமநாதபுரம் நகரம், பட்டிணம் காத்தான், பேராவூர் உட்பட சுற்று வட்டார கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனை தேசிய நெடுஞ்சாலை, பழைய பேருந்து நிலையம், கீழக்கரை மேம்பால பகுதி, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குளம் போல் மழை நீர் தேங்கியது.

    இதே போன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாலை முதலே விட்டுவிட்டு லேசான முதல் கனமழை பெய்து வருகிறது.

    ராமேசுவரத்தில் நேற்று முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அவதி அடைந்தனர். பஸ் நிலையம், முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். வழக்கத்தை விட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டது.

    மாவட்டத்தின் அதிகபட்ச மழையாக தங்கச்சிமடத்தில் 33 மி.மீ மழையும், பாம்பனில் 29 மில்லி மீட்டரும், ராமேசுவரத்தில் 27 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. ராமநாதபுரத்தில் 22 மில்லி மீட்டர் மழை இன்று காலை 6 மணி வரை பெய்துள்ளது.

    விருதுநகரில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக சாரல் மழை பெய்ததால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மழையில் நனைந்தடி குடைகளை பிடித்தபடி சென்றனர். இன்று காலை முதல் பெய்யும் சாரல் மழையால் நகரில் குளிர்ந்த சீதோஷ்ன நிலை நிலவி உள்ளது.

    அருப்புக்கோட்டை, சிவகாசி, பாலையம்பட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
    • பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 04) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு தெற்கே கரையை கடந்தது.

    இதனால் இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.

    இதனையடுத்து சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கொரோனா ஊரடங்கின்போது நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டது
    • படம் நாளை மறுநாள் வெளியாக இருந்தது

    ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள படம் 'லாக்டவுன்'. கொரோனா ஊரடங்கின்போது நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு என்ஆர் ரகுநந்தன், சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படம் நாளை மறுநாள் வெளியாக இருந்தது.  

    இந்நிலையில் மழை காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. ரசிகர்கள், பார்வையாளர்கள், திரையரங்க ஊழியர்களின் நலனை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அனைவரும் மழைநேரத்தில் பாதுகாப்பாக இருக்கவும் படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விரைவில் படம் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர். 


    • இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.
    • தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், கார்த்திகை தீப விழா நடைபெறும் திருவண்ணாமலையில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது

    மழை பெய்து வரும் நிலையில் திருவண்ணாமலையில் குடையுடன் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.

    • சென்னை கடற்கரையில் நிலைக்கொண்டுள்ளது.
    • செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து தமிழகம்- புதுச்சேரி கடற்கரைகளில் இருந்து 25 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

    இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.

    மேலும் நாளையும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டில் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.

    அத்துடன் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
    • செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

    கனமழை எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 03) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னை கடற்கரையில் நிலைக்கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.

    மேலும் நாளையும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டில் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் இன்று காலை முதல் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
    • முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது.

    டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையில் நிலைக்கொண்டிருக்கும் நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.

    இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 3) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கான விடுமுறை உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

    • ரெட் அலர்ட் ஆரஞ்ச் அலர்ட்டாக குறைக்கப்பட்டது.
    • தொடர்மழையால் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை.

    டிட்வா புயல் காரணாமாக இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் ஆரஞ்சு அலர்ட்டாக குறைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் இன்று பெய்த தொடர்மழையால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளது. 

    டிட்வா புயல் சென்னை கடற்கரை அருகே நிலை கொண்டிருக்கும் நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை தொடர்ந்து வருகிறது. நேற்று கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் இன்றும் தொடர்ந்தது. நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் திருவள்ளூர் மாவட்டம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முதலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை தனது எக்ஸ் பக்கத்திலும் ஆட்சியர் பதிவிட்டுள்ளார். 


    • சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 2 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
    • காரைக்கால் பகுதியிலும் 7 மணி வரை இடி மின்னலூடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 2 மாவட்டங்களில் 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இதை தவிர காரைக்கால் பகுதியிலும் 7 மணி வரை இடி மின்னலூடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் தொடரும் மழை
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவெடுத்தது.

    இந்தப் புயலுக்கு டிட்வா என பெயரிடப்பட்டது. இந்த டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த டிட்வா புயல் அடுத்து இரண்டு நாட்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்குக் கனமழை நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  

    இதனால் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை பாதிப்புகள் குறித்தும், மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் சென்னை ரிப்பன் மாளிகையில் அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

    • மீண்டும் வடகிழக்கு பருவகாற்று முழுவதுமாக தமிழகத்தில் வீசத் தொடங்கியுள்ளது.
    • இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) தொடங்கிய நிலையில், இந்த மாதத்தில் பருவமழை சற்று இடைவெளியைக் கொடுத்தது. தற்போது மீண்டும் வடகிழக்கு பருவகாற்று முழுவதுமாக தமிழகத்தில் வீசத் தொடங்கியுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக தென் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நேற்று இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

    இதன் காரணமாக இன்று முதல் வருகிற 19-ந்தேதி (புதன்கிழமை) வரை தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, இன்று கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களிலும் மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் 10 மணி மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    • சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் தனுஷ்கோடியில் வழக்கத்தை விட அலைகள் ஆக்ரோஷமாக காணப்பட்டது.
    • 3-வது நாளாக இன்றும் வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் முதல் விட்டு விட்டு மழை பெய்தது. ராமநாதபுரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

    இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மண்டபத்தில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வழக்கத்தை விட கடல் காற்று அதிகமாக வீசி வருகிறது.

    சூறாவளி காற்றால் ராமேசுவரம், பாம்பன் துறைமுகங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகள் ஒன்றொடொன்று மோதி பலத்த சேதமடைந்தன. இதனால் மீனவர்கள் கவலையடைந்தனர். கடல் நீரோட்டம் மாறுபாடு காரணமாக அக்னீ தீர்த்த கடலில் கடற்புற்கள் கரை ஒதுங்கியது. இதனால் பக்தர்கள் புனித நீராடுவதில் சிரமம் ஏற்பட்டது.

    சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் தனுஷ்கோடியில் வழக்கத்தை விட அலைகள் ஆக்ரோஷமாக காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    3-வது நாளாக இன்றும் வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இன்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரை ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

    ×