search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிசான சாகுபடிக்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு - 86 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

    • அணைகளில் இருந்து தண்ணீரை சபாநாயகர் அப்பாவு இன்று திறந்து வைத்தார்.
    • 19 ஆயிரத்து 604.29 மில்லியன் கன அடி தண்ணீர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும்.

    நெல்லை:

    பிசான சாகுபடியை முன்னிட்டு பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன்படி பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீரை சபாநாயகர் அப்பாவு இன்று திறந்து வைத்தார். இதில் கலெக்டர் விஷ்ணு, அப்துல்வகாப் எம்.எல்.ஏ., சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், கண்காணிப்பு பொறியாளர் பத்மா, செயற் பொறியாளர் மாரியப்பன், பாளை ஒன்றிய சேர்மன் தங்க பாண்டியன், உதவி செயற் பொறியாளர் தங்கராஜ், மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட், கனகராஜ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதன் மூலம் நெல்லை மாவட்ட தாமிரபரணி ஆற்றுபரப்பில் உள்ள நேரடி மற்றும் முறைமுக பாசனப் பரப்புகளுக்கு இன்று முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை 148 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.

    பிசான சாகுபடி, நாற்று பாவுதல் மற்றும் நடவுதல் போன்ற பணிகள், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு 19 ஆயிரத்து 604.29 மில்லியன் கன அடி தண்ணீர் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து திறந்து விடப்படும்.

    இதன்மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட த்தில் வடக்கு கோடை மேலழகி யான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளை யங்கால்வாய், நெல்லை கால்வாய் மற்றும் மருதூர் மேலக்கால் கால்வாய், மருதூர் கீழக்கால் கால்வாய், தெற்கு பிரதானக்கால்வாய், வடக்கு பிரதானக்கால்வாய் ஆகியவற்றின் கீழுள்ள 86 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, நெல்லை, பாளை , தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவை குண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் ஏரல் ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள் பயன்பெறும்.

    பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 86 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    வெள்ள நீர் கால்வாய் பரிசோதனைக்கு மழை காலத்தில் கடலில் உபரியாக கலக்கும் தண்ணீர் பயன் படுத்தப்படும். ஒருபோதும் விவசாயிகளுக்கு எதிராக தண்ணீர் திறந்து சோதனை நடத்த மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×