search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை - அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை - அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பல இடங்களில் கனமழை பெய்ததையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #ManimutharDam
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை மிகவும் குறைந்த அளவே பெய்து வருகிறது. நவம்பர் மாதம் சராசரி மழை அளவான 208.20 மில்லி மீட்டரை விட குறைவாக 186.11 மில்லி மீட்டர் மழையே பெய்துள்ளது.

    இந்த மாதம் சராசரி மழை அளவான 111.60 மில்லி மீட்டர் பெய்தால் தான் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் போதுமானதாக இருக்கும். இந்த நிலையில் டிசம்பர் 1-ந்தேதியே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பல இடங்களில் கனமழை பெய்தது. மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1841.55 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 804.75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்றைவிட ஒரு அடி உயர்ந்து இன்று 124.15 அடியாக உள்ளது. சேர்வ லாறு அணை நீர்மட்டமும் நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று 134.18 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 1059 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 35 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. இதனால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று 103.60 அடியாக உள்ளது.

    இதுபோல கடனாநதி -78.20, ராமநதி-69.25, கருப்பாநதி-67.86, குண்டாறு-36.10, வடக்கு பச்சையாறு-31.50, நம்பியாறு -19.61, கொடுமுடியாறு-37, அடவிநயினார்-94.75 அடிகளாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக ராமநதி அணை பகுதியில் 54 மில்லி மீட்டர் மழையும், பாபநாசம் மலை பகுதியில் 39 மில்லி மீட்டர் மழையும், அம்பையில் 38.2 மில்லி மீட்டர் மழையும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 32.8 மில்லி மீட்டர் மழையும், சேர்வலாறு அணை பகுதியில் 30 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக வைப்பாறில் 13 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ராமநதி-54, பாபநாசம்-39, அம்பை-38.2, கன்னடியன் கால்வாய்-32.8, சேர்வ லாறு-30, ஆய்க்குடி-12.8, தென்காசி-8.4, கருப்பாநதி-7, குண்டாறு-7, களக்காடு-5.6, மணிமுத்தாறு-5.2, கடனாநதி-5, சேரன் மகாதேவி-2

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வைப்பாறு-13, கடம்பூர்-3, எட்டயபுரம்-3, கயத்தாறு-1. #ManimutharDam

    Next Story
    ×