search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amitshah"

    • அரசியலுக்காக காவல்துறையை தவறாக பயன்படுத்துவதுதான் நாட்டின் பிரச்சனை
    • எங்கெல்லாம் பா.ஜனதா ஆட்சி செய்கிறதோ, அங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் தாக்கப்படும்

    இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகிய மூன்றையும் முழுவதுமாக மாற்றும் நோக்கில் 3 மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.

    இந்த மசோதாக்கள் குறித்து மாநிலங்களவை எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் கூறியதாவது:-

    அரசியலுக்காக காவல்துறையை தவறாக பயன்படுத்துவதுதான் நாட்டின் பிரச்சனை. எங்கெல்லாம் பா.ஜனதா ஆட்சி செய்கிறதோ, அங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் தாக்கப்படும். அதிகாரத்தில் உள்ள அரசியல் பிரமுகர்களின் வழிகாட்டுதல்படி காவல்துறை பெருமளவில் செயல்படுகிறது.

    இந்த சூழலில் 60 முதல் 90 நாட்கள் போலீஸ் மற்றும் அமலாக்கத்துறை காவலில் வைக்கிறீர்கள் என்றால், அது பேரழிவுக்கானதாகும்.

    தேசத்துரோக சட்டம் மாற்றப்பட்ட விதம், தேசிய பாதுகாப்பு தொடர்பான விதிகளை நடைமுறைப்படுத்துவது, தேசிய பாதுகாப்பிற்காக எந்த சூழ்நிலையில் ஒரு நபர் மீது வழக்கு தொடரலாம் என்பதை வரையறுக்காமல் காவல்துறைக்கு அதிக அதிகாரம் கொடுத்து, மறுபுறம் மக்களை மௌனமாக்குவதை ஏற்க முடியாது'' என்றார்.

    முன்னதாக,

    1898-ம் ஆண்டு, குற்றவியல் நடைமுறை சட்டமும் (சிஆர்.பி.சி.), 1872-ம் ஆண்டு இந்திய சாட்சியங்கள் சட்டமும் கொண்டுவரப்பட்டன. பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு இந்த சட்டங்களில்தான் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. மேற்கண்ட 3 சட்டங்களை மறுசீரமைத்து, புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டுவர 3 மசோதாக்களை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

    இந்திய தண்டனை சட்டத்துக்கு பதிலாக பாரதீய நியாய சன்ஹிதா மசோதா-2023, குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு பதிலாக பாரதீய நாகரிக் சுரக்சா சன்ஹிதா மசோதா-2023, இந்திய சாட்சியங்கள் சட்டத்துக்கு பதிலாக பாரதீய சாக்யா மசோதா-2023 ஆகிய மசோதாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    அந்த 3 மசோதாக்களையும் நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தாக்கல் செய்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நமது குற்றவியல் நீதிமுறை, ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட குற்றவியல் சட்டங்களால் இயங்கி வருகிறது. ஆங்கிலேயர்கள், அவர்களது வசதிக்கேற்ப அச்சட்டங்களை உருவாக்கி உள்ளனர். அவர்களது ஆட்சியை பாதுகாக்கவும், வலுப்படுத்தவும் அவற்றை உருவாக்கி உள்ளனர்.

    அந்த சட்டங்களின் நோக்கம், தண்டிப்பதாகத்தான் உள்ளது. நீதி வழங்குவதாக இல்லை. தங்கள் ஆட்சியை எதிர்ப்பவர்களை தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கி உள்ளனர்.

    இந்த குறைகளை போக்கி, தற்கால தேவைகளை கருத்தில்கொண்டு, 3 புதிய குற்றவியல் மசோதாக்களை தாக்கல் செய்துள்ளோம். ஆங்கிலேயர் ஆட்சிக்கால சட்டங்களில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், 302-வது இடத்தில் இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்த சட்டங்களில் முதல் அத்தியாயத்திலேயே இடம்பெற்றுள்ளது.

    புதிய மசோதாக்களில், தேச துரோக குற்றம் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, பிரிவினை செயல்கள், ஆயுத புரட்சி, நாசவேலைகள், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்து விளைவித்தல் ஆகிய புதிய குற்றச்செயல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    கும்பலாக சேர்ந்து கொலை செய்தல், சிறுமிகளை கற்பழித்தல் போன்ற குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்படும். கூட்டு கற்பழிப்புக்கு 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அவர்கள் சந்திக்கும் சமூக பிரச்சினைகள் போன்றவற்றுக்கு பாரதீய நியாய சன்ஹிதா மசோதாவில் தீர்வு காணப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாகவோ, வேலை, பதவி உயர்வு பெற்று தருவதாகவோ ஆசைவார்த்தை காட்டி பெண்களுடன் உறவு வைத்துக்கொள்வது குற்றமாக கருதப்படும். இப்படி கருதப்படுவது இதுவே முதல்முறை.

    சிறிய குற்றங்களுக்கு முதல் முறையாக சமூக சேவை செய்வது, தண்டனைகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது.

    பொய் வழக்கு என்ற குற்றச்சாட்டை தவிர்க்க, தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் நடவடிக்கைகளின்போது வீடியோ எடுப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வீடியோ எடுப்பது விசாரணையின் முக்கிய அங்கமாக இருக்கும்.

    இந்த மசோதாக்கள் மூலம் நமது குற்றவியல் நீதிமுறையில் புரட்சிகர மாற்றம் ஏற்படும் என்று இச்சபையில் உறுதி அளிக்கிறேன். இந்திய குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் உணர்வு, இவற்றில் இருக்கும்.

    மசோதாக்களின் நோக்கம், நீதி அளிப்பதுதான். தண்டனை அளிப்பது அல்ல. குற்றங்களில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே தண்டனை அளிக்கப்படும். விரைவாக நீதி வழங்கவும், தற்கால தேவைகள் மற்றும் மக்களின் உணர்வுகளை கருத்தில்கொண்டும் இம்மசோதாக்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர், 3 மசோதாக்களையும் உள்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவை அமித்ஷா கேட்டுக்கொண்டார்.

    பாரதீய நியாய சன்ஹிதா மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லாமல், வஞ்சக எண்ணத்துடன், திருமண ஆசை காட்டி பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டால், அது கற்பழிப்பாக கருதப்படாத போதிலும், அத்தகைய நபர்களுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

    வஞ்சக எண்ணம் என்பது வேலை வாங்கித்தருவதாகவோ, பதவி உயர்வு பெற்றுத்தருவதாகவோ ஆசைவார்த்தை காட்டுதல், உண்மையான அடையாளத்தை மறைத்து திருமணம் செய்து கொள்ளுதல் ஆகியவற்றையும் குறிக்கும்.

    ஆபாச படங்களை வெளியிடுவது என்பது ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவான குற்றமாக கருதப்படும். அதற்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

    கொலை குற்றத்துக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ விதிக்கப்படும். கற்பழிப்பு குற்றத்துக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறையோ அல்லது ஆயுள் தண்டனையோ விதிக்கப்படும். கூட்டு கற்பழிப்புக்கு 20 ஆண்டுகள் சிறை அல்லது இயற்கையாக மரணம் அடையும் வரையோ தண்டனை விதிக்கப்படும்.

    ஒரு பெண், கற்பழிப்புக்கு பிறகு இறந்தாலோ அல்லது நிரந்தர பாதிப்பு அடைந்தாலோ, குற்றவாளிக்கு 20 ஆண்டுகளுக்கு குறையாமல் கடும் தண்டனை விதிக்கப்படும். அது, ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படும். அதாவது, அவர் இயற்கையாக மரணம் அடையும் வரை சிறையில் இருக்க வேண்டி இருக்கும்.

    12 வயதுக்கு குறைவான சிறுமி கற்பழிக்கப்படும்போது, குற்றவாளிக்கு 20 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். அது, அவர் இயற்கையாக மரணம் அடையும் வரை நீட்டிக்கப்படலாம்.

    கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகளுக்கு குறையாத தண்டனை விதிக்கப்படும். அது, ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம். அபராதமும் விதிக்கப்படும்.

    போலீஸ் அதிகாரியோ, அரசு ஊழியரோ அல்லது ஆயுதப்படைகளில் பணியாற்றுபவரோ கற்பழிப்பில் ஈடுபட்டால், அவருக்கு 10 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். அது, ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று விவாதம் தொடங்கியது
    • இன்று ராகுல் காந்தி, அமித்ஷா பேசுகிறார்கள்

    மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பேச்சை தொடங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ராகுல் காந்தி நேற்று பேசவில்லை. காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் பேச்சை தொடங்கினார். தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு போன்றோரும் பேசினர்.

    இந்த நிலையில் இன்று ராகுல் காந்தி மக்களவையில் பேசுவார் என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பேசுகிறார் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று வாக்கெடுப்பிற்கு வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.

    • மணிப்பூர் கலவரம் தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் சி.பி.ஐ. இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    • விசாரணை அனைத்தும் யாருக்கும் சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

    புதுடெல்லி:

    மணிப்பூரில் கடந்த மே மாதம் மைதேயி இனத்தவருக்கும் குகி இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள். சுமார் 40 ஆயிரம் பேர் உடமைகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் இன்று வரை நீடித்து வருகிறது. இந்த நிலையில் மே மாதம் 4-ந்தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலகமாக அழைத்து செல்லப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி நாட்டையே உலுக்கியது.

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த முடியாத நிலை நிலவுகிறது. இதற்கிடையே 2 பெண்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு தாமாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருகிறது.

    நேற்று நடந்த விசாரணையின்போது, மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும் இது தொடர்பான வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மணிப்பூரில் மே 4-ந்தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்படும் காட்சியை வீடியோவாக பதிவு செய்த நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மைதேயி இனத்தை சேர்ந்தவர் ஆவார். அவர் வீடியோவாக பதிவு செய்த காட்சிகள் அடங்கிய செல்போன் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது செல்போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அந்த விசாரணைகளில் என்னென்ன நடந்தது என்பது தெரிய தொடங்கி இருக்கிறது.

    குகி இனப் பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட காட்சியை பதிவு செய்தவர்கள் அதை ரகசியமாக வைத்திருந்துள்ளனர். பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 2 நாட்கள் முன்பு அந்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டுள்ளது.

    இதன் பின்னணியில் மிகப்பெரிய சதித் திட்டம் இருப்பது முதல் கட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டு அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே அந்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

    பாராளுமன்றம் நடக்கும் நேரத்தில் பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டிருக்கிறது.

    மணிப்பூர் கலவரம் தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் சி.பி.ஐ. இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வழக்கு ஒப்படைக்கப்பட இருக்கிறது. இந்த 7 வழக்குகள் விசாரணை பாரபட்சமின்றி நடத்தப்படும். விசாரணை முடிவில் நிச்சயம் உண்மை தெரியும்.

    விசாரணை அனைத்தும் யாருக்கும் சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. எனவேதான் மணிப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.

    சி.பி.ஐ. விசாரிப்பது போல மணிப்பூர் கலவரத்தின் 3 வழக்குகள் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் கலவரம் தொடர்பான காட்சிகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு இருப்பதால் பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்குகிறார்கள்.

    மேலும் மணிப்பூர் மாநில அரசு செயல் இழந்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் மே 4-ந்தேதி 2 பழங்குடியின பெண்கள் ஆடைகள் இன்றி அழைத்து செல்லப்பட்டபோது அங்கு ராணுவமோ, உள்ளூர் போலீசாரோ இல்லை.

    சம்பவம் குறித்து தெரிய வந்த பிறகே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    மணிப்பூரில் மைதேயி இனத்தவருக்கும், குகி இனத்தவருக்கும் இடையே சமரசம் செய்து கொள்வதற்கு இதுவரை 12 தடவைக்கு மேல் பேச்சுவார்த்தை நடந்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். இரு இனத்தவர்களின் வாழ்விடங்களுக்கு இடையே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சமரச முயற்சிகள் செய்யப்பட்டு உள்ளன. அவர் ஒவ்வொரு நாளும் மணிப்பூர் சட்டம் ஒழுங்கை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    மணிப்பூரில் நாங்கள் முழுமையாக அமைதி ஏற்படுத்தி வருகிறோம். 16 மாவட்டங்களில் தலா ஒரு படை வீதம் 16 படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கலவரத்தை அவர்கள் முழுமையாக கட்டுப்படுத்தி உள்ளனர்.

    மணிப்பூரில் 72 சதவீதம் அரசு ஊழியர்கள் இடையூறு இல்லாமல் பணியாற்றி வருகிறார்கள். 82 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு திரும்பி உள்ளனர். சமீபத்தில் கூட மத்திய, மாநில சிவில் சர்வீஸ் தேர்வுகள் திட்டமிட்டபடி அமைதியாக நடந்தன.

    90 சதவீதம் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. விரைவில் மணிப்பூர் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    மணிப்பூரில் வன்முறை ஏற்படுவதற்கு அம்மாநில ஐகோர்ட்டில் வழங்கப்பட்ட மைதேயி இனத்தவருக்கு பழங்குடியின அந்தஸ்து கொடுக்கலாம் என்ற தீர்ப்புதான் காரணமாகி விட்டது. இது தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யும். மேலும் மணிப்பூரில் நாங்கள் ஆயுத சட்டத்தை திரும்ப பெறவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    மியான்மரில் இருந்து மணிப்பூருக்கு வருபவர்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறார்கள். வருகிற டிசம்பர் மாதம் இது தொடர்பான பட்டியல் வெளியிடப்படும். பட்டியலில் இல்லாதவர்கள் இந்திய குடியுரிமை அடையாள அட்டை பெற இயலாது.

    மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் பா.ஜனதா ஆட்சியில் மட்டும் நடப்பது போல காங்கிரசார் பிரசாரம் செய்கிறார்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது 1993, 1995, 1997, 1998 ஆண்டுகளில் 4 தடவை மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அப்போது கலவரங்கள் தொடர்பாக மத்திய ராஜாங்க மந்திரி ராஜேஷ் பைலட் விளக்கம் அளித்தார்.

    மணிப்பூர் எம்.பி. ஒருவர் பிரதமர் இதில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது, அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் சபையை விட்டே வெளிநடப்பு செய்தார். ஆனால் நாங்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை.

    பாராளுமன்றத்தில் முழுமையாக விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அதை கேட்பதற்கு முன் வருவது இல்லை.

    காங்கிரஸ் ஆட்சியில் மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டபோது 14 நாட்கள் கழித்துதான் துணை நிலை ராணுவத்தை அனுப்பி வைத்தார்கள். ஆனால் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மணிப்பூர் குழுக்களை இரும்பு கரம் கொண்டு அடக்கி இருக்கிறோம். இதன் மூலம் வன்முறை மற்ற மாவட்டங்களுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் பரவுவதை தடுத்து நிறுத்தி இருக்கிறோம்.

    காங்கிரஸ் ஆட்சியின் போது மணிப்பூரில் கலவரம் ஏற்பட்ட போது 149 நாட்கள் தொடர்ந்து அந்த மாநிலத்துக்குள் யாரும் செல்ல முடியவில்லை. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 240 ரூபாய்க்கும், கியாஸ் சிலிண்டர் ரூ.1900-த்துக்கும் விற்பனை ஆனது.

    ஆனால் நாங்கள் அத்தியாவசிய பணிகள் அனைத்தையும் சீராக வைத்திருக்கிறோம். மணிப்பூருக்கு இப்போதும் யாரும் சென்று வரலாம் என்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

    ராகுல்காந்தி சென்ற போது ஹெலிகாப்டரில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட சில இடங்களில் வாகனத்தில் செல்வது சரியாக இருக்காது என்று சொல்லப்பட்டதால் அவர் தடுக்கப்பட்டார். அது அவருக்கே தெரியும்.

    தற்போது மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. விரைவில் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

    இவ்வாறு மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

    • நடைபயண தொடக்க விழா இன்று மாலை ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெறுகிறது.
    • அண்ணாமலையின் நடைபயணத்தின் பங்கேற்பதற்காக சுமார் ஒன்றரை லட்சம் பேர் முன் பதிவு செய்திருந்தனர்.

    ராமேசுவரம்:

    தமிழகம் முழுவதும் 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று நடைபயணம் தொடங்குகிறார். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்திய அரசின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

    நகர பகுதிகளில் நடந்து 1,700 கி.மீ. தூரமும், மற்ற பகுதிகளில் சிறப்பு பேருந்து மூலம் 900 கி.மீ. தூரமும் அண்ணாமலை யாத்திரை செல்கிறார்.

    5 கட்டங்களாக 168 நாட்களில் 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையிலும், ஜனவரி 20-ந்தேதிக்குள் யாத்திரையை முடிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 10 மாநகர பகுதிகளில் பொதுக்கூட்டங்களும் நடத்தப்படுகிறது. இதில் மத்திய மந்திரிகள் பங்கேற்கிறார்கள்.

    நடைபயண தொடக்க விழா இன்று மாலை ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெறுகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை பாராளுமன்ற கட்டிடம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நடைபயணத்தை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக மத்திய மந்திரி அமித்ஷா டெல்லியில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு விமானப்படைக்கு சொந்தமான தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 4 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்னர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மதுரையில் இருந்து புறப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துக்கு 4.50 மணிக்கு சென்று இறங்குகிறார்.

    அங்கு ஒரு ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அமித்ஷா, அங்கிருந்து புறப்பட்டு, நடைபயண தொடக்க விழா மேடைக்கு மாலை 5.45 மணிக்கு வருகிறார். இரவு 7 மணி வரை நடைபெறும் நடைபயண தொடக்க விழா கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் ஓ.பன்னீர் செல்வம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தேவநாதன் யாதவ், ஜான் பாண்டியன், பூஜை ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்கிறார்கள்.

    ஏற்கனவே அண்ணாமலையின் நடைபயணத்தின் பங்கேற்பதற்காக சுமார் ஒன்றரை லட்சம் பேர் முன் பதிவு செய்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு நேற்று முதலே ராமேசுவரம் வரத்தொடங்கினர். இதனால் ராமேசுவரம் முழுவதும் பா.ஜ.க. தொண்டர்கள் தலையாகவே காட்சி அளித்தது.

    இதற்கிடையே பொதுக்கூட்டம் முடிந்ததும் மத்திய மந்திரி அமித்ஷா, ராமேசுவரத்தில் உள்ள ஓட்டலில் இரவு உணவு சாப்பிடுகிறார். 8.30 மணிக்கு பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தும் அமித்ஷா, நாளை (29-ந்தேதி) அதிகாலை 5.45 மணிக்கு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். காலை 11 மணிக்கு ராமேசுவரத்தில் நடைபெறும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவுகள் இறப்பதில்லை என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்கிறார்.

    அரிச்சல்முனை கடற்பகுதிக்கு சென்று பார்வையிடும் மத்திய மந்திரி அமித்ஷா, பகல் 12 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து பேசுகிறார். இதையடுத்து 12.45 மணிக்கு குந்துகால் விவேகானந்தர் நினைவு இல்லம் சென்று விட்டு, மதியம் 1.20 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை செல்லும் அவர், அங்கிருந்து விமானத்தில் டெல்லி புறப்படுகிறார்.

    அமித்ஷா வருகையை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் மண்டபம் பகுதியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவுக்கு வரவேற்பு பேனர்கள், தோரணங்கள், கொடிகள் கட்டப்பட்டுள்ளன. மாவட்ட காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, எஸ்.பி. தங்கதுரை தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    கீழக்கரை முதல் தொண்டி வரை 100 கி.மீ. கடலோர பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் தமிழக கடலோர பாதுகாப்பு குழும கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் மேற்பார்வையில் கூடுதல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் தலைமையில் அதிநவீன ஆயுதங்களுடன் 3 அதிவேக ரோந்து படகுகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மொத்தத்தில் மத்திய மந்திரி அமித்ஷா இரண்டு நாள் பயணமாக ராமேசுவரம் வருகையையொட்டி அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • நடைபயண தொடக்க விழாவுக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
    • ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து பாம்பன் பாலம் வரை சாலையின் இருபுறமும் பா.ஜ.க. கொடிகள், பேனர்கள் கட்டப்பட்டுள்ளன.

    ராமேசுவரம்:

    2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக தயாராகி வருகின்றன. 3-வது முறையாக தொடர்ந்து பா.ஜ.க. ஆட்சியை மத்தியில் கொண்டுவர பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் பணிகளை தொடங்கியுள்ளனர்.

    அந்த வகையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தவும், பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறவும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் நடைபயண திட்டத்தை அறிவித்துள்ளார்.

    அதன்படி இந்த நடைபயணம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மாலை தொடங்குகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு, அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக அமித்ஷா 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு நாளை மாலை 4.50 மணிக்கு மதுரை வருகிறார். பின்னர் ஹெலிகாப்டரில் பிற்பகல் 5 மணிக்கு மண்டபம் ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் ராமேசுவரம் செல்லும் அவர் அங்குள்ள தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.

    மாலை 5.45 மணிக்கு விழா நடைபெறும் திடலுக்கு வரும் அமித்ஷா, அண்ணாமலையின் நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். முன்னதாக அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    நடைபயண தொடக்க விழாவுக்கு பின்னர் ராமேசுவரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறார். மறுநாள் (29-ந்தேதி) காலை 6 மணிக்கு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

    அதன்பிறகு காலை 11 மணிக்கு மற்றொரு தனியார் ஓட்டலில் நடைபெறும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார். அதன்பிறகு அப்துல் கலாமின் இல்லத்திற்கு செல்லும் அமித்ஷா, அப்துல்கலாமின் அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார். தொடர்ந்து கலாமின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து பேச உள்ளார். அதன்பிறகு பகல் 12.40 மணிக்கு குந்துகாலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்கிறார்.

    அங்கிருந்து மண்டபம் வரும் அவர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் மதியம் 2.15 மணியளவில் டெல்லி செல்கிறார்.

    அண்ணாமலை நடைபயணம் தொடக்கம், அமித்ஷா வருகையால் ராமேசுவரத்தில் டி.ஐ.ஜி. துரை தலைமையில், 5 எஸ்.பி.க்கள், 30 டி.எஸ்.பி.க்கள், 60 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் கடற்கரை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நடைபயண தொடக்க விழாவுக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த தொடக்க நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாகவும், இதற்காக அவர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து பாம்பன் பாலம் வரை சாலையின் இருபுறமும் பா.ஜ.க. கொடிகள், பேனர்கள் கட்டப்பட்டுள்ளன. விழா மேடையானது பாராளுமன்ற கட்டிடத்தை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைபயண பிரசாரத்தின் போது வழிநெடுக பிரதமர் மோடி தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்திருக்கும் சாதனைகளை 10 லட்சம் புத்தகங்களாக அச்சிட்டு மக்களுக்கு விநியோகிக்கவும், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மக்களுக்கு எழுதியுள்ள கடிதங்களை ஒரு கோடி குடும்பங்களுக்கு விநியோகிக்கவும் பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.

    அதேபோல் முக்கிய இடங்களில் இருந்து புனித மண் சேகரிக்கப்பட்டு அதை வைத்து தமிழ் தாய்க்கு முழு உருவ சிலை செய்யவும் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

    நாளை நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை, ராமேசுவரம் நகருக்குள் சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். இதற்காக புகார் பெட்டி ஒன்றும் எடுத்து செல்லப்படுகிறது. முதல் நாள் பயணத்தை ராமேசுவரத்தில் முடிக்கும் அவர் இரவு ராமேசுவரத்திலேயே தங்குகிறார்.

    நாளை மறுநாள் (29-ந்தேதி) காலை ராமேசுவரத்தில் இருந்து நடைபயணம் புறப்படும் அண்ணாமலை தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார். தொடர்ந்து ராமநாதபுரம் செல்லும் அவர் பொதுமக்களை சந்தித்துவிட்டு இரவு ராமநாதபுரத்தில் தங்குகிறார்.

    இதைதொடர்ந்து ஜூலை 30-ந்தேதி முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை, சிவகங்கையில் நடைபயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் 1-ந்தேதி மானாமதுரையிலும், 2-ந்தேதி ஆலங்குடியிலும் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை ஆகஸ்ட் 5-ந்தேதி மதுரைக்கு செல்கிறார். 9-ந்தேதி திருச்சி செல்லும் அவர், 13-ந்தேதி தூத்துக்குடியிலும், 14-ந் தேதி திருச்செந்தூரிலும், 15-ந்தேதி கன்னியாகுமரியிலும் நடைபயணம் சென்று மக்களை சந்திக்கிறார்.

    ஆகஸ்ட் 20-ந்தேதி நெல்லையிலும், 31-ந்தேதி தென்காசியிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். செப்டம்பர் மாதம் 1-ந்தேதி சங்கரன்கோவிலில் நடைபயணம் மேற்கொள்ளும் அவர் 9-ந்தேதி பழனிக்கும், 13-ந்தேதி கோவைக்கும் செல்கிறார். ஈரோட்டில் செப்டம்பர் 21-ந்தேதியும், கரூரில் அக்டோபர் 9-ந் தேதியும், திருச்சியில் 11-ந் தேதியும் நடைபயணம் மேற்கொள்ளும் அவர் அக்டோபர் இறுதியில் சீர்காழிக்கு நடைபயணம் செல்கிறார்.

    நவம்பர் 1-ந்தேதி மயிலாடுதுறை செல்லும் அண்ணாமலை நவம்பர் 27-ந்தேதி சேலம் செல்கிறார். டிசம்பர் 8-ந்தேதி தர்மபுரி செல்லும் அவர் டிசம்பர் 31-ந்தேதி அன்று திருத்தணி மற்றும் அரக்கோணத்துக்கு செல்கிறார்.

    அடுத்த ஆண்டு ஜனவரி 2-ந்தேதி திருவள்ளூரில் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விட்டு ஜனவரி 4-ந்தேதி மதுரவாயல், அம்பத்தூரில் நடைபயணம் செல்கிறார்.

    சென்னையில் ஜனவரி 7, 8, 9 மற்றும் 11 ஆகிய 4 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். நாளை தொடங்கும் அண்ணாமலையின் நடைபயணம் ஜனவரி 11-ந்தேதி சென்னையில் முடியும் வகையில் பயண திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அண்ணாமலை 5 மாதங்களுக்கும் மேலாக 100 நாட்களை கடந்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    • ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள தனியார் திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • யாத்திரையின் போது மக்கள் புகார் பெட்டி ஒன்றும் எடுத்துச் செல்லப்படுகிறது.

    ராமேசுவரம்:

    தமிழக அரசு மீதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் கட்சிக்கு ஆதரவு திரட்டவும், பலம் சேர்க்கவும் 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் தமிழக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாதயாத்திரை நடைபயணம் செல்வதற்கு திட்டமிட்டு உள்ளார்.

    இந்த நடைபயணம் நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நாளை மறுநாள் (28-ந்தேதி, வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் தொடங்க உள்ளது. இந்த நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷா வருகை தர உள்ளார்.

    ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள தனியார் திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பரந்த நிலப்பரப்பில் பாராளுமன்ற வடிவில் மேடை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இதில் கட்சி முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அமருவதற்காக தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமித்ஷா, அண்ணாமலை, பா.ஜ.க. தலைவர்களை வரவேற்று விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    அண்ணாமலையின் இந்த பாதயாத்திரை நடைபயணத்தில் பங்கேற்க இதுவரை சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். 234 தொகுதிகளிலும் 100 நாட்கள் நடைபயணம் செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. மொத்தம் ஐந்து கட்டங்களாக இந்த யாத்திரை நடைபெறுகிறது.

    ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கி நடைபெறும் முதற்கட்ட யாத்திரை ஆகஸ்ட் 22-ந்தேதி நிறைவடைகிறது.

    அதன் பிறகு சிறு சிறு இடைவெளிகளுடன் அடுத்தடுத்த கட்டங்களாக யாத்திரை நடைபெறுகிறது. ஜனவரி மாதம் சென்னையில் யாத்திரை நிறைவடைகிறது. இந்த நிறைவு நாளில் பிரதமர் பங்கேற்க இருக்கிறார். மேலும் இதில் பங்கேற்க வருமாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த நடைபயண பிரசாரத்தின் போது வழிநெடுக பிரதமர் மோடி தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்திருக்கும் சாதனைகளை 10 லட்சம் புத்தகங்களாக அச்சிட்டு மக்களுக்கு விநியோகிக்கவும், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மக்களுக்கு எழுதியுள்ள கடிதங்களை ஒரு கோடி குடும்பங்களுக்கு விநியோகிக்கவும் திட்டமிட்டு உள்ளனர். நடைபயணத்தின் போது 11 இடங்களில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.

    இந்த யாத்திரையின் போது மக்கள் புகார் பெட்டி ஒன்றும் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த பெட்டியில் மக்கள் தங்கள் புகார்களையும் எழுதி போடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முக்கிய இடங்களில் இருந்து புனித மண் சேகரிக்கப்பட்டு அதை வைத்து தமிழ் தாய்க்கு முழு உருவ சிலை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    அண்ணாமலை நடைபயணம் தொடக்கம், அமித்ஷா வருகையால் ராமேசுவரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒன்று சேர்ப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறி வந்த சசிகலா தன்னால் முடியாததால் வேறு வழியை கையில் எடுத்துள்ளார்.
    • டெல்லி சென்று பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேச சசிகலா திட்டமிட்டுள்ளார்.

    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட குழப்பங்களும், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு செல்ல நேர்ந்ததாலும் அ.தி.மு.க. சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவியது.

    எடப்பாடி பழனிசாமி தலைமையின்கீழ் அ.தி.மு.க. வந்தது. ஜெயிலில் இருந்து விடுதலையான பிறகும் அ.தி.மு.க.வில் இணைந்து தலைமைப் பதவிக்கு வந்து விட வேண்டும் என்ற சசிகலாவின் எண்ணம் ஈடேறவில்லை.

    இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் தொடங்கிய அ.ம.மு.க.வில் சசிகலாவுக்கு தலைவர் பதவியை கொடுக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் சசிகலா அதை ஏற்கவில்லை. அ.ம.மு.க.வுக்கு சென்று விட்டால் அதன்பிறகு அ.தி.மு.க.வுக்குள் செல்ல முடியாது என்பதாலேயே சசிகலா டி.டி.வி.தினகரனின் வேண்டுகோளை ஏற்கவில்லை.

    இந்த நிலையில் இப்போது அ.ம.மு.க. தலைவர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்க டி.டி.வி. தினகரன் தயாராகிவிட்டார்.

    தினகரனும், ஓ.பன்னீர் செல்வமும் இணைந்தால் முக்குலத்தோர் வாக்குகளை பிரிப்பார்கள். அதை ஈடுகட்ட தன்னை அ.தி.மு.க. வுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பார் என்று சசிகலா எதிர்பார்த்தார். அதற்காகவே வைத்திலிங்கம் வீட்டு திருமணத்துக்கு செல்வதை கூட தவிர்த்தார் என்கிறார்கள். ஆனால் எடப்பாடி தரப்பில் இருந்து அதற்கான சமிக்ஞை எதுவும் கிடைக்காதது சசிகலாவை அதிருப்தி அடைய செய்துள்ளது.

    சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகிய 3 பேரையும் சேர்ப்பதில்லை என்ற முடிவில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.

    எனவே இதுவரை பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒன்று சேர்ப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறி வந்த சசிகலா தன்னால் முடியாததால் வேறு வழியை கையில் எடுத்துள்ளார்.

    அதாவது டெல்லி சென்று பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

    அ.தி.மு.க.வில் நிலவும் இந்த சிக்கல்களுக்கு அமித்ஷா மூலம் தீர்வு காண அவர் முடிவு செய்து உள்ளார்.

    ஏற்கனவே பா.ஜனதா கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும். அதுதான் கூட்டணிக்கு பலம் என்பதில் தீவிரமாக இருக்கிறார் அமித்ஷா. இந்த சூழ்நிலையில் சசிகலாவின் வேண்டுகோளை ஏற்று இணைப்புக்கான முயற்சியில் அவர் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது.

    • உள்துறை மந்திரி அமித்ஷா கூறியபடி கவர்னர் ஆர்.என்.ரவி அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியிடம் கருத்து கேட்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.
    • அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி தற்போது விடுமுறையில் கேரளா சென்றுள்ளதால் வருகிற திங்கட்கிழமைதான் டெல்லி வருவார் என்று தெரிவித்து விட்டனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி 81 பேருக்கு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.62 கோடி வாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்ற போது ஊழல் சட்டத்தின் கீழ் ஆரம்ப கட்டத்தில் இருந்து முழுமையாக விசாரிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.

    அப்போது நெஞ்சு வலி காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இப்போது சிகிச்சை பெறும் நிலையில் அவரது போலீஸ் காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவருக்கு புழல் ஜெயில் கைதி எண்ணும் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் செந்தில் பாலாஜியிடம் இருந்த இலாகாக்கள் அமைச்சர்கள் முத்துசாமி, தங்கம் தென்னரசு ஆகியோருக்கு பிரித்து கொடுக்கப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார்.

    அவ்வாறு இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதால் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அதனால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

    அப்போது செந்தில் பாலாஜியை நீக்குவதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 5 பக்க கடிதமும் அனுப்பி இருந்தார்.

    அதில் அரசியல் சாசனத்தின் 154, 163, 164 ஆகிய பிரிவுகள் எனக்கு அளித்துள்ள அதிகாரத்தின் படி செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிடுவதாக குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து சட்ட ரீதியாக சந்திக்க போவதாகவும் தெரிவித்தார். கவர்னரின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பு சட்ட நிபுணர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சரை தன்னிச்சையாக நீக்க கவர்னருக்கு அதிகாரம் கிடையாது என்று சுட்டிக்காட்டினார்கள்.

    இந்த விசயம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு தெரியவந்தது. அவர் தலைமை வழக்கறிஞர் கருத்தை கேட்டு முடிவெடுங்கள் என்று கவர்னருக்கு உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை அன்றிரவே நிறுத்தி வைப்பதாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டார். அதில் தலைமை வழக்கறிஞரின் கருத்தை கேட்கும் வரை உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பி இருந்தார்.

    இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று 6 பக்க கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்தார்.

    அதில் எனது அமைச்சர்களை நீக்க கவர்னருக்கு அதிகாரம் கிடையாது என்றும் முதலமைச்சரின் ஆலோசனைப்படி தான் நீங்கள் செயல்பட முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

    அரசியல் சாசனம் 164(1) பிரிவின்படி ஒரு அமைச்சரை நியமிக்கவோ, அல்லது நீக்கவோ முதலமைச்சரின் ஆலோசனைப் படிதான் கவர்னர் செயல்பட முடியும்.

    அரசியல் சாசனம் 164(2)-ன்படி முதலமைச்சரும், அமைச்சரவையும், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைக்கு பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள்.

    எனவே செந்தில் பாலாஜியையோ, எனது அமைச்சர்களையோ டிஸ்மிஸ் செய்ய உத்தரவிடுவதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

    எனவே நீங்கள் எனது ஆலோசனை இல்லாமல் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்தது சட்டப்படி செல்லாது என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கிடையே செந்தில் பாலாஜி விவகாரத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கூறியபடி கவர்னர் ஆர்.என்.ரவி அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியிடம் கருத்து கேட்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.

    ஆனால் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி தற்போது விடுமுறையில் கேரளா சென்றுள்ளதால் வருகிற திங்கட்கிழமைதான் டெல்லி வருவார் என்று தெரிவித்து விட்டனர்.

    இதனால் தான் எடுத்த நடவடிக்கை குறித்தும் அதற்கு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ள சட்ட பிரிவைகளை சுட்டிக் காட்டியும் அட்டர்னி ஜெனரலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி விரிவான கடிதம் தயாரித்து அனுப்பி வைத்துள்ளார்.

    இந்த கடிதத்தின் மீது வருகிற திங்கட்கிழமை அட்டர்னி ஜெனரல் கருத்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன் பிறகு கவர்னர் ஆர்.என்.ரவி செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிரந்தரமாக வாபஸ் பெறுவாரா? இல்லையா? என்பது தெரியவரும்.

    • ‘என் மண்-என் மக்கள்’ என்ற கோஷத்துடன் பாத யாத்திரையை தமிழகம் முழுவதும் கிராமம் கிராமமாக நடத்த முடிவு செய்துள்ளார்.
    • ராமேசுவரத்தில் இருந்து பாத யாத்திரையை தொடங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்ல முடிவு செய்துள்ளார்.

    ஆரம்பத்தில் கடந்த ஏப்ரல் 14-ந்தேதி தொடங்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் அந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

    இதற்கிடையில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க கூட்டங்கள் இந்த மாதம் 30-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டதால் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி பாதயாத்திரையை தொடங்க திட்டமிடப்பட்டது.

    'என் மண்-என் மக்கள்' என்ற கோஷத்துடன் இந்த பாத யாத்திரையை தமிழகம் முழுவதும் கிராமம் கிராமமாக நடத்த முடிவு செய்துள்ளார்.

    ராமேசுவரத்தில் இருந்து பாத யாத்திரையை தொடங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக வழித்தடங்களை இறுதி செய்ய தனி குழுவும் போடப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் அவர் பாத யாத்திரை செல்லும் வழித்தடத்தை முடிவு செய்கிறார்கள்.

    அண்ணாமலையின் பாத யாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். அவர் அடுத்த மாதம் 28-ந்தேதிதான் கலந்து கொள்வதாக நேரம் ஒதுக்கி உள்ளார்.

    எனவே அண்ணாமலையின் பாத யாத்திரை மீணடும் 19 நாட்கள் தள்ளிப் போகிறது. ராமேசுவரத்தில் தொடங்கும் இந்த பாத யாத்திரை ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய தென்மாவட்டங்களில் முதல் கட்டமாக நடைபெறுகிறது.

    பாத யாத்திரையின் போது அண்ணாமலை செல்லும் இடங்கள், பேசும் இடங்கள், இரவில் தங்கும் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    • மணிப்பூரில் நடைபெறும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர அங்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    • அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு மணிப்பூர் மாநில கட்சிகளுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.

    குக்கி இன மக்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் போல மைத்தேயி இன மக்களையும் பழங்குடி இன பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது தொடர்பான பிரச்சனையில் ஏற்பட்ட மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த சம்பவங்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர்.

    இதையடுத்து மணிப்பூரில் நடைபெறும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர அங்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்பின்பும் அங்கும் வன்முறை ஓயவில்லை.

    இதையடுத்து வருகிற 24-ந் தேதி அங்கு அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பேச்சுவார்த்தை மூலம் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தவும், பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

    எனவே அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு மணிப்பூர் மாநில கட்சிகளுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும் என்றும் அமித்ஷா தகவல்களை கேட்டு அறிந்தார்.
    • மோடி எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேரணிகளில் பங்கேற்க வேண்டும் என்பது பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டது.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்த பா.ஜனதா அடுத்து 5 மாநில சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. அந்த 5 மாநிலங்களில் தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மூன்றும் பா.ஜ.கவுக்கு மிக மிக முக்கியமான மாநிலங்களாகும்.

    கர்நாடகா போல இந்த மாநிலங்களையும் பறிகொடுத்துவிடக்கூடாது என்பதில் பா.ஜனதா தீவிரம் காட்ட தொடங்கி உள்ளது. இதற்காகவே ஆட்சியிலும், கட்சியிலும் அதிரடி மாற்றங்களுக்கு மோடியும், அமித்ஷாவும் திட்டமிட்டு வருகிறார்கள்.

    இதில் இறுதி முடிவு எடுப்பதற்காக அமித்ஷா நேற்று டெல்லியில் ஓசையின்றி அதிரடி அலசலில் ஈடுபட்டார். அவருடன் ஜே.பி.நட்டா, சந்தோஷ் உள்பட சில தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த சில தலைவர்களும் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

    அப்போது பிரதமர் மோடி அமெரிக்கா, எகிப்து சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு வந்ததும், மத்திய மந்திரி சபையில் சிறு மாற்றம் செய்வது பற்றி விவாதிக்கப்பட்டது. மத்திய மந்திரிகளில் சிலரை 5 மாநில தேர்தலுக்கு பொறுப்பாளராக அனுப்ப ஆலோசிக்கப்பட்டது.

    இது தவிர பாராளுமன்ற தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும் என்றும் அமித்ஷா தகவல்களை கேட்டு அறிந்தார். மோடி எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேரணிகளில் பங்கேற்க வேண்டும் என்பது பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டது.

    ஆனால் இந்த தகவல்கள் பா.ஜ.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்குக் கூட முழுமையாக தெரியவில்லை. அந்தளவுக்கு அமித்ஷா ரகசியமாக காய்களை நகர்த்த தொடங்கி உள்ளார்.

    • புதுவைக்கு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய பா.ஜனதா அரசு அளித்தது ரூ.250 கோடி நிதி மட்டும்தான்.
    • பா.ஜனதா பொய்யை மூலதனமாக வைத்து மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையை சேர்ந்த ரவுடிகள் தமிழக பகுதிகளில் சென்று கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி கண்மூடி உள்ளார்.

    என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சொத்து குவிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். கோவில் சொத்துக்களை எம்.எல்.ஏ.க்கள் வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா 40 சதவீதம் ஊழலில் கமிஷன் பெற்றனர். புதுவையில் பா.ஜனதா கூட்டணி 20 சதவீத கமிஷன் பெறுகின்றனர். இது வரும்காலத்தில் 40 சதவீதமாக உயரும்.

    கர்நாடக மாநிலத்தில் மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் மற்றும் புதுவை விவசாயிகள் பாதிக்கப்படுவர். இதை புதுவை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும்.

    மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடிதான் நிதி அளிக்கப்பட்டது என்றும், தற்போது ரூ.2½ லட்சம் கோடி பா.ஜனதா ஆட்சியில் வழங்கியுள்ளதாக மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது.

    தமிழகத்திலிருந்து பெறப்படும் நிதியை திருப்பித்தந்துவிட்டு மந்திரி அமித்ஷா மார்தட்டியுள்ளார். குஜராத்துக்கு கடந்த 9 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்ற நிதி வழங்குவதாக கூறி வருகின்றனர்.

    தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என முதுகெலும்பு உள்ள முதல்-அமைச்சர் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார். ஆனால் புதுவை முதல்-அமைச்சர் தனது நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள கைகட்டி சேவகம் செய்கிறார்.

    புதுவைக்கு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய பா.ஜனதா அரசு அளித்தது ரூ.250 கோடி நிதி மட்டும்தான். பா.ஜனதா பொய்யை மூலதனமாக வைத்து மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். புதுவை மக்கள் இதை ஏற்க மாட்டார்கள். தமிழகத்திலும், புதுவையிலும் பா.ஜனதாவுக்கு முடிவு கட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×