search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜ"

    • நடைபயண தொடக்க விழா இன்று மாலை ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெறுகிறது.
    • அண்ணாமலையின் நடைபயணத்தின் பங்கேற்பதற்காக சுமார் ஒன்றரை லட்சம் பேர் முன் பதிவு செய்திருந்தனர்.

    ராமேசுவரம்:

    தமிழகம் முழுவதும் 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று நடைபயணம் தொடங்குகிறார். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்திய அரசின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

    நகர பகுதிகளில் நடந்து 1,700 கி.மீ. தூரமும், மற்ற பகுதிகளில் சிறப்பு பேருந்து மூலம் 900 கி.மீ. தூரமும் அண்ணாமலை யாத்திரை செல்கிறார்.

    5 கட்டங்களாக 168 நாட்களில் 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையிலும், ஜனவரி 20-ந்தேதிக்குள் யாத்திரையை முடிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 10 மாநகர பகுதிகளில் பொதுக்கூட்டங்களும் நடத்தப்படுகிறது. இதில் மத்திய மந்திரிகள் பங்கேற்கிறார்கள்.

    நடைபயண தொடக்க விழா இன்று மாலை ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெறுகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை பாராளுமன்ற கட்டிடம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நடைபயணத்தை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக மத்திய மந்திரி அமித்ஷா டெல்லியில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு விமானப்படைக்கு சொந்தமான தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 4 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்னர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மதுரையில் இருந்து புறப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துக்கு 4.50 மணிக்கு சென்று இறங்குகிறார்.

    அங்கு ஒரு ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அமித்ஷா, அங்கிருந்து புறப்பட்டு, நடைபயண தொடக்க விழா மேடைக்கு மாலை 5.45 மணிக்கு வருகிறார். இரவு 7 மணி வரை நடைபெறும் நடைபயண தொடக்க விழா கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் ஓ.பன்னீர் செல்வம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தேவநாதன் யாதவ், ஜான் பாண்டியன், பூஜை ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்கிறார்கள்.

    ஏற்கனவே அண்ணாமலையின் நடைபயணத்தின் பங்கேற்பதற்காக சுமார் ஒன்றரை லட்சம் பேர் முன் பதிவு செய்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு நேற்று முதலே ராமேசுவரம் வரத்தொடங்கினர். இதனால் ராமேசுவரம் முழுவதும் பா.ஜ.க. தொண்டர்கள் தலையாகவே காட்சி அளித்தது.

    இதற்கிடையே பொதுக்கூட்டம் முடிந்ததும் மத்திய மந்திரி அமித்ஷா, ராமேசுவரத்தில் உள்ள ஓட்டலில் இரவு உணவு சாப்பிடுகிறார். 8.30 மணிக்கு பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தும் அமித்ஷா, நாளை (29-ந்தேதி) அதிகாலை 5.45 மணிக்கு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். காலை 11 மணிக்கு ராமேசுவரத்தில் நடைபெறும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவுகள் இறப்பதில்லை என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்கிறார்.

    அரிச்சல்முனை கடற்பகுதிக்கு சென்று பார்வையிடும் மத்திய மந்திரி அமித்ஷா, பகல் 12 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து பேசுகிறார். இதையடுத்து 12.45 மணிக்கு குந்துகால் விவேகானந்தர் நினைவு இல்லம் சென்று விட்டு, மதியம் 1.20 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை செல்லும் அவர், அங்கிருந்து விமானத்தில் டெல்லி புறப்படுகிறார்.

    அமித்ஷா வருகையை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் மண்டபம் பகுதியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவுக்கு வரவேற்பு பேனர்கள், தோரணங்கள், கொடிகள் கட்டப்பட்டுள்ளன. மாவட்ட காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, எஸ்.பி. தங்கதுரை தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    கீழக்கரை முதல் தொண்டி வரை 100 கி.மீ. கடலோர பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் தமிழக கடலோர பாதுகாப்பு குழும கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் மேற்பார்வையில் கூடுதல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் தலைமையில் அதிநவீன ஆயுதங்களுடன் 3 அதிவேக ரோந்து படகுகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மொத்தத்தில் மத்திய மந்திரி அமித்ஷா இரண்டு நாள் பயணமாக ராமேசுவரம் வருகையையொட்டி அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×