என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமேசுவரத்தில் நாளை மறுநாள் முதல் அண்ணாமலை நடைபயணம்- மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார்
    X

    அண்ணாமலை நடைபயண தொடக்க விழாவையொட்டி ராமேசுவரத்தில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

    ராமேசுவரத்தில் நாளை மறுநாள் முதல் அண்ணாமலை நடைபயணம்- மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார்

    • ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள தனியார் திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • யாத்திரையின் போது மக்கள் புகார் பெட்டி ஒன்றும் எடுத்துச் செல்லப்படுகிறது.

    ராமேசுவரம்:

    தமிழக அரசு மீதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் கட்சிக்கு ஆதரவு திரட்டவும், பலம் சேர்க்கவும் 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் தமிழக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாதயாத்திரை நடைபயணம் செல்வதற்கு திட்டமிட்டு உள்ளார்.

    இந்த நடைபயணம் நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நாளை மறுநாள் (28-ந்தேதி, வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் தொடங்க உள்ளது. இந்த நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷா வருகை தர உள்ளார்.

    ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள தனியார் திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பரந்த நிலப்பரப்பில் பாராளுமன்ற வடிவில் மேடை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இதில் கட்சி முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அமருவதற்காக தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமித்ஷா, அண்ணாமலை, பா.ஜ.க. தலைவர்களை வரவேற்று விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    அண்ணாமலையின் இந்த பாதயாத்திரை நடைபயணத்தில் பங்கேற்க இதுவரை சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். 234 தொகுதிகளிலும் 100 நாட்கள் நடைபயணம் செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. மொத்தம் ஐந்து கட்டங்களாக இந்த யாத்திரை நடைபெறுகிறது.

    ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கி நடைபெறும் முதற்கட்ட யாத்திரை ஆகஸ்ட் 22-ந்தேதி நிறைவடைகிறது.

    அதன் பிறகு சிறு சிறு இடைவெளிகளுடன் அடுத்தடுத்த கட்டங்களாக யாத்திரை நடைபெறுகிறது. ஜனவரி மாதம் சென்னையில் யாத்திரை நிறைவடைகிறது. இந்த நிறைவு நாளில் பிரதமர் பங்கேற்க இருக்கிறார். மேலும் இதில் பங்கேற்க வருமாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த நடைபயண பிரசாரத்தின் போது வழிநெடுக பிரதமர் மோடி தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்திருக்கும் சாதனைகளை 10 லட்சம் புத்தகங்களாக அச்சிட்டு மக்களுக்கு விநியோகிக்கவும், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மக்களுக்கு எழுதியுள்ள கடிதங்களை ஒரு கோடி குடும்பங்களுக்கு விநியோகிக்கவும் திட்டமிட்டு உள்ளனர். நடைபயணத்தின் போது 11 இடங்களில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.

    இந்த யாத்திரையின் போது மக்கள் புகார் பெட்டி ஒன்றும் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த பெட்டியில் மக்கள் தங்கள் புகார்களையும் எழுதி போடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முக்கிய இடங்களில் இருந்து புனித மண் சேகரிக்கப்பட்டு அதை வைத்து தமிழ் தாய்க்கு முழு உருவ சிலை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    அண்ணாமலை நடைபயணம் தொடக்கம், அமித்ஷா வருகையால் ராமேசுவரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×