search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alert"

    • 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
    • ராமேசுவரம், பாம்பன் பகுதியில் சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது.

    ராமேசுவரம்:

    மீன்களை இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் 61 நாட்கள் வரை தமிழக கடற்பகுதியில் விசைப்படகில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை கடந்த 15-ந் தேதி நிறைவடைந்தது.

    இதையடுத்து பாம்பன் மீனவர்கள் அன்று நள்ளிரவு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஆனால் புயல் சின்னம் காரணமாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் இன்று காலையே மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அனுமதி அளித்திருந்தது.

    ஆனால் அதனை மீறி ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று மதியம் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

    இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரி கூறியதாவது:-

    ராமேசுவரம், பாம்பன் பகுதியில் சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது. ராமேசுவரம் மீனவர்கள் அதனை மீறி முன்கூட்டியே கடலுக்கு சென்றுள்ளனர். இது விதிகளை மீறிய செயலாகும்.

    இவ்வாறு செல்லும் மீனவர்களுக்கு கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்குவது ஒரு மாத காலம் நிறுத்தப்படும். மேலும் மானிய டீசலும் ரத்து செய்யப்படும். ராமேசுவரம் மீனவர்களின் விதிமீறல் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என அறிவித்தார்.
    • அறிவிப்பு தடையை மீறி 247 விசைப்படகுகளில் தூத்துக்குடி மீனவர்கள் மீன் பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

    தூத்துக்குடி:

    இந்தியாவில் கடல்வளம், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    இது மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் இந்த நாட்களில் விசைப்படகு மற்றும் இழுவை படகுகள் மூலம் ஆழ் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. நாட்டுப் படகு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே சென்று மீன் பிடிப்பதால் அவர்களுக்கு இந்த தடை பொருந்தாது. இதனால் அவர்கள் வழக்கம்போல் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவார்கள்.

    கடந்த 60 நாட்களாக அமலில் இருந்த மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினம் நள்ளிரவோடு நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் தூத்துக்குடியில் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஆயத்தமாகினர்.

    இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஜூன் 14 முதல் (நேற்று முன்தினம்) 18-ந் தேதி வரை மன்னார் வளைகுடா குமரி கடல் மற்றும் தென் தமிழக கடற்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் சுழல் காற்றானது 45 முதல் 55 கி.மீ வேகத்துடன் வீசக்கூடிய காற்று 65 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ் அறிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டது. 61 நாட்களாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடாமல் மிகவும் சோர்ந்து காணப்பட்ட மீனவர்கள் நேற்று மிகுந்த எதிர்பார்ப்புடன் மீண்டும் மீன்பிடிக்க புறப்பட இருந்த நிலையில் இந்த அறிவிப்பால் மேலும் சோர்வடைந்து காணப்பட்டனர். இந்த காலங்களில் நாட்டுப்படகு என்ற பெயரில் விசைபடகுகளில் சிலர் மீன்பிடிக்க சென்றதாக மீனவர்கள் புகார் கூறினர்.

    இந்நிலையில் ராமநாத புரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தூத்துக்குடி மீனவர்களுக்கு கிடைத்ததை தொடர்ந்து இன்று அதிகாலை வானிலை மாற்றம் எச்சரிக்கை அறிவிப்பு தடையை மீறி 247 விசைப்படகுகளில் தூத்துக்குடி மீனவர்கள் மீன் பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

    • காரில் சென்ற நபர் சிறுத்தை குட்டிகளுடன் சுற்றியதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
    • சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை குட்டிகளுடன் இருப்பதை உறுதி செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கம்பம் அருகே யானை, சிறுத்தை, மான் காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

    நகுல வரம்-மொய்தீன்புரம் இடையே வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு 3 குட்டிகளுடன் சிறுத்தை ஒன்று சுற்றி வந்தது.

    அந்த வழியாக காரில் சென்ற நபர் சிறுத்தை குட்டிகளுடன் சுற்றியதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    பின்னர் வீடியோவை வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை குட்டிகளுடன் இருப்பதை உறுதி செய்தனர்.

    இது குறித்து வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்கள் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லக்கூடாது.

    கிராம மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் வெளியில் சுற்றி திரியக்கூடாது.

    கூடிய விரைவில் கிராமப் பகுதியை ஒட்டி சுற்றி திரியும் சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்து கோவில்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
    • மீறி செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள இந்து கோவில்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதனை அனுமதிக்க கூடாது என்று ஒரு தரப்பினர் கூறிவந்தனர்.

    இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டின் கீழ் உள்ள கோவில்களில் இனி ஆர்.எஸ்.எஸ். கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    • பார்சம்பேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி 2 யானைகளும் ஜோடியாக ஒய்யார நடைபோட்டு சென்றன.
    • பொதுமக்கள் யாரும் யானைகள் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஜோலார்பேட்டை:

    கிருஷ்ணகிரி வனபகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானைகள் ஒருவரை மிதித்து கொன்றது. அந்த யானைகள் ஆந்திர வனப்பகுதிக்கு சென்றன.

    ஆந்திராவில் இந்த யானைகள் மேலும் 5 பேரை மிதித்து கொன்றன.

    ஜோடியாக வந்த காட்டுயானைகள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஜோலார்பேட்டை கிராம பகுதிகளில் அட்டகாசம் செய்து வருகிறது.

    யானைகள் நேற்று தண்ணீர் பந்தல் கிராமத்தை ஒட்டி செல்லும் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்தன. அந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை நிறுத்தினர்.

    பைக்கில் வந்த வாலிபர் வாகனத்தை திடீரென நிறுத்த முடியவில்லை. அவர் யானைகளை மிக அருகில் சென்றார்.

    அவரை யானைகள் தாக்க முயன்றன. அவர் யானைகளிடமிருந்து நூலிலையில் தப்பி சென்றார்.

    நெடுஞ்சாலையைக் கடந்த காட்டு யானைகள் ஆத்தூர் கிராமத்திற்கு சென்றன. அங்குள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கி நின்றன.

    கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த யானைகளை விரட்ட கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டத்திலிருந்து வனத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பட்டாசுகளை வெடித்து யானைகளை அங்கிருந்து வனப் பகுதிகளுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆவேசமாக யானைகள் ஓடியது. பூசாரி ஊர் கிராமத்தை ஒட்டிய நிலத்தில் மாசிலாமணி என்பவரது பசுமாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. யானைகள் பசுமாடு மீது மோதியது. நிலைகுலைந்து விழுந்த பசுமாட்டினை யானைகள் காலால் மிதித்தன.

    இதில் உடல் நசுங்கி பசுமாடு சம்பவ இடத்திலேயே பசு இறந்தது. அங்கிருந்த காட்டு யானைகள் சோமநாயக்கன் பட்டி வழியாக திரியாலம் ஏரிக்குள் சென்றது.

    நேற்று இரவு ஜோலார்பேட்டை அருகே உள்ள பார்சம்பேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி 2 யானைகளும் ஜோடியாக ஒய்யார நடைபோட்டு சென்றன.

    சின்ன கம்மியம்பட்டு கிராமத்திற்குள் சென்றன. அங்கிருந்த வாலிபர்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காட்டு யானைகளை கூச்சலிட்டு விரட்டினர்.

    அப்போது யானைகள் அவர்களை நோக்கி திரும்பி வந்து விரட்டியது. அந்த நேரத்தில் லோகேஷ் (வயது 28) என்ற வாலிபர் தவறி கீழே விழுந்தார்.

    அவரை காட்டு யானை தனது துதிக்கையால் தூக்கி வீசி விட்டு திரும்பி சென்றன.

    இதில் படுகாயம் அடைந்த லோகேஷை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து காட்டு யானைகள் இன்று அதிகாலை ஏலகிரி மலை அடிவாரத்திற்கு சென்றன.

    இதனை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    யானைகள் ஏலகிரி மலையில் ஏற வாய்ப்பு இல்லை. மலை ஓரமாக சென்று கொண்டிருக்கிறது. பொதுமக்கள் யாரும் யானைகள் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • ரவுடி பட்டியலில் உள்ளவர்களை கண்காணிக்கவும், அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கவும் ஒவ்வொரு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    • குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் குற்றச்ெசயல்கள் நடைபெறாமல் இருக்க வேண்டி போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளவர்களை கண்காணிக்கவும், அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கவும் ஒவ்வொரு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி டி.எஸ்.பி., உதவி கமிஷனர்கள் மேற்பார்வை யில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், ரவுடிகளிடம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது, திருந்தி வாழுங்கள் என அறிவுரை கூறியும், குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து வருகின்றனர். அதுபோல், கொடுங்குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள், கூலிப்படையினரின் நடவடிக்கைகள் குறித்து, உளவுப்பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

    • விவசாயிகள் யாரும் விளைநிலங்களுக்கு இரவு நேரங்களில் தனியாக செல்வதையோ, அங்கு படுத்து உறங்குவதையோ முற்றிலும் தவிர்க்குமாறு வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    • வனவிங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், திருப்பி காட்டிற்குள் அனுப்புவதற்காகவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பக வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    களக்காடு புலிகள் காப்பக மலையடிவார பகுதிகளில் தற்போது பனம் பழம், வாழைப்பழம், சப்போட்டா மற்றும் கொல்லம் பழம் (முந்திரி) ஆகிய பழங்கள் விளையும் பருவம் என்பதால் வனவிலங்குகளான கரடி, குரங்கு போன்றவைகள் காட்டைவிட்டு வெளியேறி விளைநிலங்களுக்குள் புகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    இதனால் விவசாயிகள் யாரும் விளைநிலங்களுக்கு இரவு நேரங்களில் தனியாக செல்வதையோ, அங்கு படுத்து உறங்குவதையோ முற்றிலும் தவிர்க்குமாறு வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    வனவிங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், திருப்பி காட்டிற்குள் அனுப்புவதற்காகவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் விளைநிலங்களில் வன விலங்குகளை பார்த்தால் உடனடியாக 7598401438 (களக்காடு வனவர் செல்வ சிவா). 9171513119 (திருக்குறுங்குடி வனவர் ஜெபிந்தர் சிங் ஜாக்சன்) ஆகிய செல்போன் நம்பர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மழைக்காலங்களில் அதிகாரிகள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார். #pollachijayaraman #rainflood

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் மழை வெள்ள எச்சரிக்கை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்தார். சி.மகேந்திரன் எம்.பி., வால்பாறை தொகுதி கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ., சப்-கலெக்டர் காயத்திரி, பொள்ளாச்சி நகர்மன்ற முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார், கோஆப்டெக்ஸ் தலைவர் கே.வி.மனோகரன், ஒன்றியச்செயலாளர்கள், சக்திவேல், கார்த்திக் அப்புச்சாமி, தம்பு, சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால் பாறை கீழ் பகுதிகளை சேர்ந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வரு வாய்த்துறையினர், மின்வாரியம், குடிநீர்வடிகால்வாரிய அதிகாரிகள், ஊராட்சி செயலாளர்கள் உட்பட பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், பங்கேற்ற அதிகாரிகள் தங்கள் பகுதிகளில் ஏற்பட்ட மழை பாதிப்பு குறித்தும், அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்தனர். மேலும், மழை பாதிப்புக்கு தேவையான உதவிகள் குறித்தும் கூறினர்.

    அனைத்து அதிகாரிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்த பிறகு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது-

    தென்மேற்கு பருவமழை கேரளத்தை ஒட்டிய தமிழக பகுதிகளான வால்பாறை, ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், காரமடை சுற்றுப்பகுதிகளில்தான் அதிகம் பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளின் கட்டிடங்களின் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். சில பள்ளிகள் மழைக்கு ஒழுகுவதாகவும், ஜன்னல் களுக்கு கதவுகள் இன்றி இருப்பதால் மாணவர்கள் அவதிப்படுவதாகவும் புகார் உள்ளது.

    இதை அதிகாரிகள் உடனடியாக சரிசெய்ய வேண்டும். பள்ளிகளில் உள்ள சத்துணவுகூடங்கள், சமையல் அறைகள் போன்றவையும் கண்காணிக்கப் பட வேண்டும். சில இடங்களில் சமையல் அறைகள் சிதலமடைந்து சமைக்க தகுதியற்று இருப்பதாக தெரிகிறது. அங்கன்வாடி மையங்கள், ரேசன்கடைகள் போன்றவை முக்கியமாக கண்காணிக்கப்பட வேண்டும்.

    இந்த கட்டிடங்கள் சேதமடைந்திருந்தால், உடனடியாக அருகில் உள்ள வேறு அரசு கட்டிடங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். இதை ஒரே நாளில் செய்து முடிக்க வேண்டும். மழைக்காலம் என்பதால் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும், கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும், ஆழியாற்றில் யாரையும் குளிக்க அனுமதிக்கூடாது, மாசாணியம்மன் கோவில் பின்புறம் உள்ள உப்பாற்றில் குளிக்க தடை விதிக்க வேண்டும், நெச வாளர்கள் மழைக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு உதவு வேண்டும்.

    மழையில் இடிந்த வீடுகளுக்கு உடனடியாக ரூ.5000 நிவாரணத்தொகை வழங்க வேண்டும், வீடுகள் இடிந்து சேதமானதில் ரேசன்கார்டு, ஆதார்கார்டு போன்றவை சேதமடைந்திருந்தால் அடையாள அட்டைகளை விரைந்து வழங்க வேண்டும். அதிகாரிகள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வீராசாமி, வக்கீல் தனசேகர், ஜேம்ஸ்ராஜா, மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். #pollachijayaraman #rainflood

    கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் பெண்களில் 35 வயதில் இருந்து 40 வயது வரையிலானவர்களுக்கு கார் டிரைவர் வலை விரித்துள்ளதால் உஷாராக இருக்க போலீஸ் உயர் அதிகாரி அறிவுறுத்துள்ளார்.
    சென்னை:

    சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையோரமாக செல்லும் பெண்களில் 35 வயதில் இருந்து 40 வயது வரையிலானவர்களுக்கு சுரேஷ் வலை விரித்துள்ளான் சிக்கிய பெண்கள் பற்றிய தகவல்கள் கண்ணீரை வரவழைப்பதாக உள்ளன.

    காரில் ஆள் இல்லாத நேரத்தில் காரை ஓரமாக அவர்கள் அருகில் நிறுத்தும் சுரேஷ் எங்கம்மா செல்கிறீர்கள் என்றே முதலில் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் அவர்களிடம் எனது முதலாளி சுமங்கலி பூஜை நடத்துகிறார். அதற்காக பெண்களுக்கு பட்டுப் புடவையும் ரூ.10 ஆயிரம் பணமும் தருகிறார். அருகில் தான் அவரது வீடு உள்ளது என்று கூறி ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி காரில் ஏறும் பெண்களைத் தான் தனது காம இச்சைக்கு பலி கொடுத்துள்ளார். 

    நகையை மட்டும் பறிகொடுத் திருந்தால் உடனே பெண்கள் புகார் அளித்திருப்பார்கள் என்றும், கற்பையும் சேர்த்து பறி கொடுத்ததால் யாரும் புகார் அளிக்க தயங்குவதாகவும் தெரிகிறது. இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, இது போன்று சுரேசிடம் ஏமாறியது பொன்று வேறு யாரிடமும் பெண்கள் ஏமாற வேண்டாம். இலவசமாக எதையாவது வாங்கி தருகிறேன் என்று யாராவது கூறினால் உஷாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். #tamilnews
    மேட்டூர் அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுவதால் நாகை மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார். #FloodAlert #Nagapattinam
    நாகை:

    கர்நாடகாவில் பெய்து வரும் அதிகப்படியான கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணையின் பாதுகாப்பு மற்றும் விவசாயத்துக்கான நீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இன்று இரவு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து சுமார் 30 ஆயிரம் கனஅடி நீர் இன்று இரவு 8 மணியளவில் திறக்கப்பட உள்ளது. அதேசமயம், மேட்டூர் அணையின் 16 கண் மதகு பாலத்தில் வழியாக சுமார் 8 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது.

    இதனால், நாகை மாவட்டத்தில், காவிரி, கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும், ஆற்றில் இறங்கி யாரும் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் எனவும் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதேபோல், பவானிசாகர் அணையின் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன் கால்வாய்களில் நீர் திறக்கப்பட உள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    முன்னதாக, கரூர், திருவாரூர், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #FloodAlert #Nagapattinam
    சாகர் புயல் காரணமாக இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மராட்டியம் மற்றும் லட்சத்தீவுகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. #Sagar
    திருவனந்தபுரம்:

    அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது தற்போது புயலாக மாறி உள்ளது. இதற்கு வானிலை மையம் சாகர் என பெயரிட்டுள்ளது.

    இப்புயல் ஏடன் வளைகுடாவில் ஏமனுக்கு கிழக்கு-வடகிழக்கில் 390 கி.மீ. தொலைவிலும், ஸ்கோட்ரா தீவுகளில் இருந்து 560 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்புள்ளது.


    இதன் காரணமாக ஏடன் வளைகுடா மற்றும் அதையொட்டி உள்ள மேற்கு மத்திய பகுதிகள் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளது. 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும், புயலின் தாக்கம் அதிகரிக்கும்போது காற்றின் வேகம் 90 கி.மீட்டருக்கு அதிகமாகவும் வீச வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    சாகர் புயல் காரணமாக இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மராட்டியம் மற்றும் லட்சத்தீவுகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. #Sagar
    ×