search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுத்தை"

    • தோட்டத்தில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.
    • மக்கள் சென்று பார்த்த போது சிறுத்தை கூண்டில் சிக்கியிருப்பது தெரிய வந்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் சிறுத்தைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாயத் தோட்டத்தில் புகுந்து ஆடு, மாடுகளை கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.

    கடந்த 1 மாதம் முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று தாளவாடி அடுத்த மல்குத்திபுரம் தொட்டியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவரின் 6 ஆடுகள், 2 கன்று குட்டிகள், 20 வான்கோழி, 5 காவல் நாய் வேட்டையாடி கொன்றது.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கால்நடைகளையும் அந்த சிறுத்தை கொன்று வந்தது. அதேபோல் கடந்த 3 நாட்கள் முன்பு அதே பகுதியில் உள்ள பாக்கியலட்சுமி என்பவரின் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

    தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பாக்கியலட்சுமி தோட்டத்தில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.கூண்டின் ஒரு புறம் காவல் நாயை கட்டி வைத்தனர். நள்ளிரவில் அந்த பகுதிக்கு வந்த சிறுத்தை கூண்டில் இருந்த நாயை வேட்டையாட கூண்டுக்குள் சென்ற போது கூண்டுக்குள் சிக்கியது.

    இந்த நிலையில் இன்று காலை கூண்டில் இருந்து பயங்கரமாக சத்தம் வந்ததால் அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது சிறுத்தை கூண்டில் சிக்கியிருப்பது தெரிய வந்தது. இந்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் சிறிது நேரத்தில் பாக்கியலட்சுமி தோட்டத்திற்கு அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர்.

    பின்னர் இது குறித்து தாளவாடி வனத்துறை யினருக்கு தகவல் தெரிவி க்கப்பட்டது. வனத்துறையினர் வந்து பார்த்த போது கூண்டில் சிக்கியது ஆண் சிறுத்தை என தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினர் கூண்டுடன் சிக்கிய ஆண் சிறுத்தையை லாரியில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    கிட்டத்தட்ட ஒரு மாதமாக அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    • சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைப்பதற்கு வேறு இடம் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
    • சிறுத்தை பிடிப்படாததால் சித்தர்காடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு செம்பங்குளம் பகுதியில் கடந்த 2-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்தனர். சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

    சிறுத்தையின் நடமாட்டத்தால் கடந்த 3,4,5 தேதிகளில் ஆரோக்கிய நாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது, கடந்த 5-ந்தேதி 10-ம் வகுப்பு பொது தேர்வை பலத்த பாதுகாப்புடன் மாணவ, மாணவிகள் எழுதினர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சித்தர் காடு பகுதியில் ஒரு ஆடும், நேற்று மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் ஒரு ஆடும் கடிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்து கிடந்தது. இது சிறுத்தை தான் அடித்து கொன்றததா? என கண்டறிய ஆடுகளின் உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவில் தான் சிறுத்தை ஆடுகளை அடித்து கொன்றதான என தெரிய வரும்.


    இந்நிலையில் சிறுத்தையை பிடிக்க 30- க்கும் மேற்பட்ட வனத்துறை குழுக்கள் அமைத்து, ஆனைமலை புலிகள் காப்பத்தில் இருந்து வந்த வன காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து சித்தர்காடு, ஆரோக்கியநாதபுரம், அசிக்காடு, மறையூர் சுற்று வட்டார பகுதியில் முழுவதையும் கண்காணித்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    16 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தெர்மல் ட்ரோன் கேமரா மூலம் தொடர்ந்து இன்று 5-வது நாளாக தேடுதல்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள 9 கூண்டுகளை இன்று காலை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் எதிலும் சிறுத்தை சிக்கவில்லை. இந்த கூண்டுகளில் உயிருடன் ஆடுகள் வைக்கப்பட்டுள்ளது.

    அதன் சத்தம் கேட்டு சிறுத்தை வரும் என வனத்துறையினர் எதிர்பார்த்த நிலையில் சிறுத்தை சிக்காதது வனத்துறையினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. தொடர்ந்து இன்றும் வனத்துறையினர் தேடுதல் வேட்டையை தீவிரபடுத்தியுள்ளனர்.

    மயிலாடுதுறை சித்தர்காடு ரெயில் தண்டவாளம் பாலத்தில் இன்று வனத்துறையினர் கழிவுகளை சேகரித்தனர். அது சிறுத்தையின் கழிவாக? என சோதனை செய்து வருகின்றனர்.

    முன்னதாக சென்னையில் இருந்து வந்த கூடுதல் முதன்மை தலைமை வனக்காளர் நாகநாதன் சிறுத்தை தேடும் பணியை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைப்பதற்கு வேறு இடம் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

    எனினும் 5 நாட்களாகியும் சிறுத்தை பிடிப்படாததால் ஆராக்கியநாதபுரம், சித்தர்காடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    • நாய் கடித்து அந்த ஆடு இறந்திருக்கலாம் எனவும் தகவல்.
    • வன ஊழியர்கள் இருவரும் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மயிலாடுதுறையில் போக்கு காட்டி வரும் சிறுத்தையின் புகைப்படம் வெளியாகி உள்ளது.

    5வது நாளாக சிறுத்டதையை தேடும் பணியில் வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

    முதல் நாள் கண்காணிப்பு கேமராவில் சிக்கிய சிறுத்தையின் புகைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

    கடந்த இரண்டு நாட்களாக வனத்துறையின் கேமராவில் சிறுத்தை சிக்காமல் இருந்து வந்தது. 

    மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் கொல்லப்பட்ட ஆட்டை சிறுத்தை கொல்லவில்லை. நாய் கடித்து அந்த ஆடு இறந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து நிபுணத்துவம் வாய்ந்த வன ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். வன ஊழியர்கள் இருவரும் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுத்தையை பிடிக்க முயன்றபோது கையில் இருந்து தடி நழுவி கீழே விழுந்தது.
    • தடியை எடுக்க முயற்சித்தபோது சிறுத்தை ஆக்ரோசத்துடன் தாக்கியது.

    மத்திய காஷ்மீர் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று திடீரென காட்டுப் பகுதியில் இருந்து ஊருக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்தது. இந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினரை கிராம மக்கள் அழைத்தனர்.

    வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்ததும், அவர்களுடன் கிராம மக்களும் இணைந்து சிறுத்தையை உயிருடன் பிடிக்க முடிவு செய்தனர்.

    கம்பு தடியுடன் சிறுத்தையை விரட்டினர். சிறுத்தை ஒவ்வொரு வீடாக தாண்டி தப்பிக்க முயற்சித்தது. இறுதியாக ஒரு தெருவில் சிக்கிக்கொண்டது. அப்போது வன அதிகாரி ஒருவர் கிராம மக்கள் சிலருடன் தடியுடன் சிறுத்தையை பிடிக்க முடிவு செய்தார்.

    சிறுத்தை தப்பிக்கும் முயற்சியில் சீறிக் கொண்டே இருந்தது. அப்போது அதிகாரி கையில் இருந்து தடி கீழே விழுந்தது. சிறுத்தையிடம் இருந்து பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டு தடியை எடுக்க முயன்றார்.

    அப்போது சிறுத்தை அவர் மீது ஆக்ரோசத்துடன் பாய்ந்தது. அதிகாரி சிறுத்தையின் கழுத்தை ஒரு கையில் பிடித்த நிலையில், எதிர்பாராத விதமாக மற்றொரு கை சிறுத்தையின் வாயில் மாட்டிக் கொண்டது. இதனால் சிறுத்தை வாயில் இருந்து கையை எடுக்க முடியாமல் திணறினார்.

    அப்போது அருகில் நின்றிருந்த மற்றொரு அதிகாரி தடியால் சிறுத்தையை தாக்கினார். அந்த நேரத்தில் சிறுத்தையின் வாயில் இருந்து கையை எடுத்துக் கொண்ட அதிகாரி சிறுத்தையை கீழே சாய்த்தார். உடனடியாக ஊர் பொதுமக்கள் சிறுத்தையை பயங்கரமாக தாக்கினர்.

    பின்னர், சிறுத்தையை வனத்துறையினர் அதிகாரிகள் பிடித்துச் சென்றனர். சிறுத்தையுடன் தனி நபராக நின்று சண்டையிட்ட வனத்துறை அதிகாரியை கிராம மக்கள் பாராட்டினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இருக்கும் கிராமத்துக்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது.
    • வனப்பகுதிக்குள் சென்ற சிறுத்தை எந்த நேரமும் மீண்டும் கிராமத்துக்குள் வரலாம் என மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இருக்கும் கிராமத்துக்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது.

    தாளவாடி வனச்சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவதுயும் தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக் குட்பட்ட கும்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இம்ரான் (37).விவசாயி. இவர் தனது விவசாய தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல மாட்டுக்கொட்டையில் ஆடு, மாடுகளை கட்டி வைத்திருந்தார்.

    இந்நிலையில் வெளியே சென்று விட்டு மதியம் திரும்பி வந்து பார்த்த போது மாட்டுக் கொட்டையில் கட்டி வைத்திருந்த 3 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து குதறிய நிலையில் இறந்து கிடந்தது. இது பற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை கால் தடைகளை ஆய்வு செய்தனர்.

    இதில் சிறுத்தை கடித்து ஆடு பலியானது தெரிய வந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். வனப்பகுதிக்குள் சென்ற சிறுத்தை எந்த நேரமும் மீண்டும் கிராமத்துக்குள் வரலாம் என மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பிடிபட்ட 6 சிறுத்தைகளின் நகம் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
    • வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் கூட்டமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் நடந்த செல்லக்கூடிய அலிப்பிரி நடைபாதையில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது.

    கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நெல்லூர் மாவட்டம் போத்தி ரெட்டிபாளையத்தை சேர்ந்த தம்பதியினர் அவர்களது 3 வயது மகள் லக்ஷிதாவுடன் சென்றனர்.

    இரவில் மின்விளக்கு வெளிச்சத்தில் பெற்றோரை பிரிந்து சிறுமி படிக்கட்டுகளில் ஓடிக் கொண்டிருந்தாள். அப்போது சிறுத்தை சிறுமியை தூக்கி சென்று கடித்துக் கொன்றது.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து மலைப்பாதையில் வைக்கப்பட்ட கூண்டில் அடுத்தடுத்து 6 சிறுத்தைகள் சிக்கின. இதில் குழந்தையை கொன்ற சிறுத்தையை மீண்டும் காட்டிற்கு விடக்கூடாது அது மீண்டும் மனிதர்களை தாக்கும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பிடிபட்ட 6 சிறுத்தைகளின் நகம் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.

    முதற்கட்டமாக 4 சிறுத்தைகள் சிறுமியை கொல்லவில்லை என்பது தெரிய வந்தது. அந்த 4 சிறுத்தைகள் மீண்டும் திருப்பதி வனப்பகுதியில் விடப்பட்டன.

    மேலும் 2 சிறுத்தைகளுக்கு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு பெரிய சிறுத்தை சிறுமியைக் கொன்றது தெரியவந்தது .

    இதனை தொடர்ந்து அந்த சிறுத்தை திருப்பதி பூங்காவில் உள்ள கூண்டில் நிரந்தரமாக அடைக்க முடிவு செய்தனர்.

    மேலும் உள்ள ஒரு சிறுத்தையை காட்டில் விட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இது ஒரு புறம் இருக்க நேற்று திருப்பதி மலைபாதையில் கரடி ஒன்று நடமாடியது. இதனைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் கூட்டமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

    • பொன்மனை வன ரேஞ்சர் ராஜேந்திரன் தலைமையிலான வன குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே கணியக்குளம் பஞ்சாயத்துக் குட்பட்ட உழவன் கோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை புலி நடமாட்டம் இருந்து வருகிறது.

    அந்த பகுதியில் சிறுத்தை உலா வந்த காட்சிகள் அங்குள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளில் பதிவாகி இருந்தது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பொன்மனை வன ரேஞ்சர் ராஜேந்திரன் தலைமையிலான வன குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தபோது சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இந்தநிலையில் அந்த பகுதியில் வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமிரா அமைத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், குழந்தைகளை தனியாக வெளியே விடக்கூடாது என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் 2 கன்றுகுட்டிகள் இறந்து கிடந்தது. மேலும் ஆடுகளும் உயிரிழந்திருந்தது.

    எனவே சிறுத்தை தான் அடித்து கொன்று இருக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கருதுகிறார்கள். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சிறுத்தை உலா வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    • அலுவலகத்திற்குள் நுழைந்த சிறுத்தை கேபினில் இருந்த சிறுவனை பார்க்காமல் உள் அறைக்குச் சென்றது.
    • தகவலறிந்து வந்த வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அந்த சிறுத்தையை கூண்டில் ஏற்றிச் சென்றனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் நகரில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    இந்நிலையில், மாலேகான் நகருக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று நம்பூர் சாலையில் உள்ள திருமண மண்டப அலுவலகத்திற்குள் நுழைந்தது. அந்த அலுவலகத்தின் கதவு திறந்து இருந்ததால் வாசல் வழியாக சிறுத்தை உள்ளே நுழைந்த நிலையில், அங்கு அலுவலக கேபினில் மோகித் விஜய் அகிரே (13), என்ற சிறுவன் தனது செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தான்.

    அலுவலகத்திற்குள் நுழைந்த சிறுத்தை, கேபினில் இருந்த சிறுவனை பார்க்காமல் நேராக உள் அறைக்குச் சென்றது. சிறுத்தையை பார்த்தும் சிறிதும் அச்சப்படாத அந்த சிறுவன் அலுவலகத்திற்கு வெளியே சென்று கதவை வெளியில் இருந்து மூடினான். இந்தச் சம்பவம் காலை 7 மணி அளவில் நடந்துள்ளது.

    சிறுத்தை புகுந்தது குறித்து வனத்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை, மயக்க ஊசி செலுத்தி அந்த சிறுத்தையை கூண்டில் ஏற்றிச்சென்ற பிறகே அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    திருமண மண்டபத்தின் அலுவலக அறையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தை அலுவலகத்திற்குள் நுழைவதும், உடனே சிறுவன் அசால்டாக வெளியே சென்று பூட்டு போட்டு பூட்டுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. துணிச்சலாக செயல்பட்ட சிறுவனின் சாதுர்யத்தைப் பாராட்டி பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • திருமண மண்டபத்தில் புகுந்த சிறுத்தையை, புத்திசாலித்தனமாக கதவைப் பூட்டிவிட்டு சிறுவன் தப்பியோடிய சிசிடிவி வீடியோ வைரலாகியுள்ளது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டில் அடைத்தனர்.

    மகாராஷ்டிராவில் உள்ள மாலேகான் நகரில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் புகுந்த சிறுத்தையை, புத்திசாலித்தனமாக மண்டபத்திற்குள் வைத்து பூட்டிவிட்டு சிறுவன் தப்பியோடிய சிசிடிவி வீடியோ வைரலாகியுள்ளது.

    அந்த சிசிடிவி வீடியோவில், 'திருமண மண்டபத்தின் கதவு பக்கத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் மொபைல் போனில் கேம் விளையாடி கொண்டிருக்கிறான். அப்போது கதவின் உள்ளே சிறுத்தை ஒன்று மெதுவாக வருகிறது. அதனை பார்த்த சிறுவன் எந்த பதட்டமும் இல்லாமல் வெளியே சென்று மண்டபத்தின் கதவை பூட்டி விடுவது' பதிவாகியுள்ளது.

    பின்னர், அச்சிறுவன் ஊர் மக்களிடம் இதை பற்றி தகவல் சொல்ல, அவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டில் அடைத்தனர்.

    இன்று காலை 7 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறுவனின் தந்தை அந்த மண்டபத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • கேமரா பொருத்தி கண்காணித்ததில் பல்வேறு முயற்சிகளால் சிறுத்தை நடமாட்டம் உறுதியானது.
    • சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கு மாறும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே நாய்களை கொன்று சாப்பிட்டு சுற்றித்திரியும் சிறுத்தை, ஊருக்குள் புகுந்து ஆட்டை கவ்வியதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அடவிசாமிபுரம் மதனகிரி பகுதியில், முனீஸ்வரசாமி கோவிலையொட்டி, சனத்குமார நதி ஓடுகிறது. மழை காலங்களில் இந்த ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். தற்போது போதிய நீரோட்டமின்றி, வறண்டு புதர்மண்டி கிடக்கிறது.

    இந்நிலையில், கோவில் பின்புறம் சனத்குமார நதியின் கரையில், கடந்த 4 மாதங்களாக சிறுத்தை ஒன்று பாறை இடுக்குகளில் மறைந்து கொண்டு, அப்பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் மற்றும் அருகில் உள்ள தெரு நாய்களை அடிக்கடி கவ்விக் கொண்டு செல்வது வாடிக்கையாக இருந்தது. இதனால், கிராம மக்கள் பீதிக்குள்ளான நிலையில், தேன்கனிகோட்டை வனத்துறையினர், கூண்டு வைத்து, சிறுத்தையை பிடிக்க முயற்சி செய்தனர்.

    ஆனால், சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள பண்ணையில் செயல்படும் தனியார் ஓட்டலில் இருந்து கொட்டப்படும் கழிவுகளை சாப்பிடுவதற்காக வரும் நாய்களை கடித்து தின்றவாறு, அப்பகுதியில் சிறுத்தை முகாமிட்டதை கேமரா பொருத்தி கண்காணித்ததில் பல்வேறு முயற்சிகளால் சிறுத்தை நடமாட்டம் உறுதியானது.

    இதையடுத்து, அப்பகுதியில் சிறுத்தை தப்பியதால், சலிப்படைந்த வனத்துறையினர், கடந்த சில நாட்களாக தேடும் பணியை கைவிட்டிருந்தனர்.

    இந்நிலையில், நேற்று மாலை, அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த அடவிசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தண்டரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் துரைசாமி என்பவரின் ஆட்டை சிறுத்தை கவ்வியுள்ளது. அதனைக் கண்டு அவ்வழியாக சென்ற பெண் கூச்சலிட்டு உள்ளார். இதனால், ஆட்டை விட்டு விட்டு சிறுத்தை தப்பிச் சென்றது.

    இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு துரைசாமி தகவல் தெரிவித்தார். இதன்பேரில், வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். ஆனால், அதற்குள் பாறை இடுக்குகளில் சென்று சிறுத்தை மறைந்து கொண்டது. இன்று 2-வது நாளாக சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுவரை 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை அடித்து தின்றுள்ளதாவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன்பு, நவீன கூண்டு அமைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கு மாறும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • முருகன் கோவில்களுக்குச் செல்லும் பாதைகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுகின்றன.
    • கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளை குட்டி யானை உள்பட 8 காட்டு யானைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடந்து சென்றுள்ளன.

    வடவள்ளி:

    மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கோவிலுக்கு நடந்து, வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டி, தடாகம், பேரூர், மருதமலை, போளூவாம்பட்டி, மதுக்கரை, ஆகிய பகுதிகளில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக மருதமலை, அனுவாவி முருகன் கோவில்களுக்குச் செல்லும் பாதைகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுகின்றன.

    இந்நிலையில், மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடிய வீடியோ காட்சிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியாகின.

    இதேபோல், அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளை குட்டி யானை உள்பட 8 காட்டு யானைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடந்து சென்றுள்ளன.

    தற்போது இந்த இரண்டு வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், மருதமலை முருகன் கோவிலுக்கு நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் நேரக்கட்டுப்பாடு விதித்து காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மருதமலை சரகத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் கோவிலுக்கு செல்லும் தார்சாலை, படிக்கட்டுகள் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், சிறுத்தைகள், யானைகள் போன்ற வனவிலங்குகள் பெரும்பாலான முறை கடந்து செல்கின்றன.

    கோவிலுக்குச் சென்று வரும் பக்தர்கள் மற்றும் வாகனங்களின் சத்தத்தால் பெரும்பாலும் பகல் நேரங்களில் அவை கடந்து செல்வதில்லை.வன விலங்குகளின் நடமாட்டத்தை இரவு, பகலாக கண்காணித்து காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பொது மக்கள் நடந்து செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. வாகனங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சென்று வரலாம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். 

    • மலைப்பகுதியில் இரவு நேரங்களில் சாலையோரம் யானைகள் நடமாட்டம், புலி, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
    • வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவுவதால் உணவு, குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமப் பகுதிக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.

    இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையில் நடுவில் ஒரு சிறுத்தை உலா வந்தது.

    அதை அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்தார். சிறிது நேரம் சாலை நடுவில் உலா வந்த சிறுத்தை பின்னர் தடுப்பு சுவரில் ஏரி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

    இதைப் பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, சமீப காலமாக திம்பம் மலைப்பகுதியில் இரவு நேரங்களில் சாலையோரம் யானைகள் நடமாட்டம், புலி, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவுவதால் உணவு, குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமப் பகுதிக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது.

    இதனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். தேவையின்றி இரவு நேரங்களில் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி கீழே இறங்க வேண்டாம்.

    சிலர் இயற்கை உபாதைகளை கழிக்க வாகனங்களில் இருந்து கீழே இறங்குவார்கள், அவ்வாறு செய்ய வேண்டாம். அதைப்போல் வன விலங்குகளின் நடமாட்டத்தை தங்களது செல்போன்களில் படம் பிடிக்கக் கூடாது. இவற்றை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

    ×