search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Edappadi Palaniswami"

    • கிராமப்புறங்கள் உட்பட கடைமுனை நுகர்வோர் வரை அனைத்து நுகர்வோர்களுக்கும் சீரான மின்னழுத்தத்தில் மின்விநியோகம் வழங்கப்படுகிறது.
    • தமிழ்நாட்டில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் மட்டுமல்லாமல் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மும்முனை மின்சாரம் சீராக வழங்கப்படவில்லை என்றும், இதனால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக அரசின் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

    "தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுகிறது. கடந்த ஆட்சி காலத்தில், தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் 12 மணி நேரமும், பிற பகுதிகளில் 9 மணி நேரமும் மட்டும்தான் மும்முனை மின்சாரம் என்று இருந்த நிலையினை மாற்றி, உழவர்களின் நலனை எப்பொழுதும் முதன்மையாக கருதக்கூடிய இந்த அரசு கடந்த 2021-ல் பதவியேற்றது முதல், நாள் ஒன்றிற்கு 12 முதல் 16 மணி நேரம் வரை தமிழ்நாடு முழுவதும் விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் பயனாக தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது.

    விவசாயிகளுக்கு தேவையான மும்முனை மின்சாரத்தின் நேரத்தினை நீட்டி வழங்கியதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு விவசாய பெருமக்களின் பெருங்கனவாக இருந்து வந்த விவசாய மின் இணைப்பு உடனடியாக வழங்கிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. அதன் பயனாக, கடந்த 2 ஆண்டுகளில், 1,50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு அளப்பரிய சாதனையை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நடப்பாண்டிற்கான, விவசாய மின்இணைப்புகள் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் மின்சார பயன்பாடும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இரவு நேரங்களில் விவசாய மின்சார இணைப்புகளின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் இம்மாவட்டங்களில் ஒரு சில பகுதியில் உள்ள உயரழுத்த மின் கட்டமைப்புகளில் அவ்வப்போது சில இடையூறுகள் ஏற்படுகிறது.


    இத்தகைய இடையூறுகளை முற்றிலுமாக நிவர்த்தி செய்து, டெல்டா மாவட்ட விவசாய மின் இணைப்புகளுக்கு இன்னும் அதிகப்படியான மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கிட தேவையான அனைத்து மேம்பாட்டு பணிகளும், போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாட்டில் நிலவி வந்த குறைந்த மின் அழுத்தம் இடர்களைக் களையும் பொருட்டு, ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டம் ஜூலை 2021-ல் வகுக்கப்பட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 5,705 இடங்களில் உள்ள மின்மாற்றிகளில் மின்சுமை அதிகமாக உள்ளது எனவும் 3,200 இடங்களில் மின்மாற்றிகளில் குறைந்த மின்னழுத்தம் நிலவுவதாகவும் மொத்தம் 8,905 இடங்களில் கண்டறியப்பட்டது.

    8,905 கூடுதல் மின்மாற்றிகள் நிறுவும் ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டப் பணிகள் தமிழக முதல்-அமைச்சரால் ஆகஸ்ட் 2021-ல் துவக்கி வைக்கப்பட்டது. வெவ்வேறு திறனுள்ள விநியோக மின்மாற்றிகள் நிறுவப்பட்டு, மின்பளுக்கள் பகிர்வு செய்யப்பட்டு ரூபாய் 743.86 கோடி மதிப்பீட்டில் மின்கட்டமைப்புகள் இயக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் 652 எம்.வி.ஏ கூடுதல் மின்திறன் மின்கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. அதிக மின்சுமையுள்ள 5,705 மின்மாற்றிகளில் மின்பளுக்கள் பகுப்பு செய்யப்பட்டதன் மூலம் அப்பகுதியிலுள்ள அனைத்து மின்மாற்றிகளிலும் இணைக்கப்பட்டுள்ள மின்பளுக்கள் அவற்றின் அனுமதிக்கப்பட்ட திறன் வரம்புக்குள் கொண்டுவரப்பட்டு அனைவருக்கும் ஒரே சீராக தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    குறைந்த மின்னழுத்தத்தை சரி செய்வதற்கு கூடுதலாக 3,200 புதிய மின்மாற்றிகள் நிறுவியதன் மூலம் தாழ்வழுத்த மின்பாதையின் நீளம் குறைந்து மின்னிழப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. தற்பொழுது, கிராமப்புறங்கள் உட்பட கடைமுனை நுகர்வோர் வரை அனைத்து நுகர்வோர்களுக்கும் சீரான மின்னழுத்தத்தில் மின்விநியோகம் வழங்கப்படுகிறது.

    பொதுவாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு தேவையான மின்சாரத்தினை வழங்குவதற்கென 24 மணி நேரமும் மும்முனையில் இயங்கக்கூடிய பிரத்தியேகமான மின் பாதையின் வாயிலாக தடையில்லா சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, கடந்த மூன்று ஆண்டுகளாக, மின்சாரத்துறையில் மேற்கொண்டு வரும் சீரிய நடவடிக்கைகளின் பயனாக, தமிழ்நாட்டில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் மட்டுமல்லாமல் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும், மின்னகத்தில், பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறுவதற்காக, 3 முறைப்பணிகளில், ஒவ்வொரு முறைப்பணிக்கும் 2 மேற்பார்வையாளர்கள் உட்பட 65 பணியாளர்கள் கொண்டு 24 மணிநேரமும் இயங்கி வருகிறது."

    இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

    • சவுக்கு சங்கர் தெரிவித்த கருத்துக்கள் தவறானதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்
    • நீதிபதி ஒருவரை நேரில் அனுப்பி சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்

    சவுக்கு சங்கர் கைது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "சமூக ஊடக பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் ஒரு சில சர்ச்சைக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டி கைதுசெய்துள்ளது காவல்துறை. அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறானதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

    சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோவை சிறையில் அவரை சந்தித்தப்பின் அளித்த பேட்டியில், "சவுக்கு சங்கரை சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நல்ல நிலையில் சிறைக்கு சென்றார், இந்நிலையில் கோவை சிறையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக" தெரிவித்துள்ளார்

    எனவே மாண்புமிகு நீதிபதி ஒருவரை நேரில் அனுப்பி சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டி மனு அளித்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

    பத்திரிக்கை சுதந்திரம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வாய்ச்சவடால் விடும் விடியா திமுக அரசில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.

    மேலும், பெண்களை இழிவாகப் பேசிய, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட பல திமுகவினர் மீது இந்த விடியா அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். சட்ட நடவடிக்கைகளும் நீதியும் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.

    சட்டத்தை காவல் துறையே கையில் எடுப்பது என்பது ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய தாக்குதல்கள் தவறான முன்னுதாரணமாகிவிடும்.

    எனவே கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக உள்ள காங்கிரஸ்தான் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது.
    • தமிழகத்திற்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தி.மு.க. அரசால் செயல்படுத்த முடியவில்லை.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் போட்டியிட்டாலும் இரு கட்சிகளும் திரைமறைவு நாடகம் நடத்தி வருவதாக தி.மு.க. குற்றம்சாட்டி வருகிறது.

    ஆனாலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பா.ஜனதா எதிர்ப்பு நிலைப்பாட்டை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்.

    தேர்தலுக்கு பிறகும் அ.தி.மு.க. தலைவர்கள் தொடர்ந்து பா.ஜனதாவை தாக்கி பேசி வருகின்றனர்.

    வடமாநில தேர்தல் பிரசாரத்தில் முஸ்லிம்கள் குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து கண்டனம் தெரிவித்திருந்தார்.

    சமீபத்தில் சேலத்தில் நிருபர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பா.ஜனதாவை விமர்சனம் செய்ததுடன் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளையும் கடுமையாக சாடினார்.

    தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக உள்ள காங்கிரஸ்தான் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது. ஆனாலும் தமிழகத்துக்கு தேவையான காவிரி தண்ணீரை திறந்து விட மறுத்து வருகிறது.

    தமிழகத்தின் உரிமைகளை கேட்டுப்பெற உதவாத இந்தியா கூட்டணியில் தி.மு.க. இருந்து என்ன பயன் என்றும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடினார்.

    அது மட்டுமின்றி மத்தியில் தப்பித்தவறி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் தமிழக மக்களுக்கு அதனால் என்ன லாபம்? என்று கேள்வி எழுப்பினார்.

    தமிழகத்திற்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தி.மு.க. அரசால் செயல்படுத்த முடியவில்லை.

    காவிரியில் தமிழகத்தின் பங்கை கர்நாடகா விடுவிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை கூட தி.மு.க. அரசால் செயல்படுத்த முடியவில்லை. தமிழகத்துக்கான உரிமையை கேட்டுப் பெறவும் முடியவில்லை என்று அவர் தொடர்ந்து சாடி வருகிறார்.

    இதே கருத்தை தான் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரும் தொடர்ந்து பேசி வருகிறார். மத்தியில் பா.ஜனதா அல்லது காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டாலும் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை. காவிரி தண்ணீருக்காக போராட வேண்டி உள்ளது.

    எனவே மத்தியில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து தமிழக பிரச்சனைக்காக குரல் எழுப்புவார்கள் என்றார்.

    பா.ஜனதா கட்சியை அ.தி.மு.க. தாக்கி பேசுவதால் காங்கிரசை ஆதரிப்பதாக மக்கள் நினைக்க வேண்டாம். நாங்கள் இரு கட்சிகளுக்கும் எதிரானவர்கள். இரு தேசிய கட்சிகளிடம் இருந்தும் சமமான இடைவெளியை கடைபிடித்து வருவதாகவும் தமிழக நலனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அதை எதிர்த்து அ.தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் கூறி உள்ளார்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் 14 ஆயிரத்து 500 புதிய பஸ்கள் வாங்கப்பட்டன.
    • தி.மு.க. அரசு அரசு மதுபான வருமானத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

    சேலம்:

    ஏற்காடு மலைப்பாதையில் கடந்த 30-ந் தேதி மாலை 60 அடி பள்ளத்தில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

     சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவர்களை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஏற்காடு பஸ் விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு நிவாரண உதவியை உடனடியாக வழங்கவேண்டும்.

    விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்கள் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

    தி.மு.க. அரசு 2021-2022 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 5 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்குவதாக அறிவித்தனர். 2022-23-ல் ஆயிரம் பஸ்கள் வாங்குவதாக அறிவித்தனர். எனக்கு தெரிந்து 400 முதல் 500 பஸ்கள் வரை மட்டுமே புதியதாக வாங்கப்பட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் 14 ஆயிரத்து 500 புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. அரசு பஸ்கள் பழுதடைந்து விட்டது. அரசு பஸ்களில் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கிறார்கள். சில நேரங்களில் மழைகாலங்களில் பஸ்சில் ஒழுகிறது.

    மின்சார பஸ் ஜெர்மன் நாட்டுன் அ.தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. வறட்சியின் காரணமாக பொது மக்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். ஆனால் இந்த அரசு மதுபான வருமானத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

    கோடைகாலத்தில் மின்தேவை அதிகரிக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    அத்திக்கடவு அவினாசி திட்டம் அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் 85 சதவீதம் நிறைவுற்ற நிலையில் இன்னும் அந்த திட்டம் நிறைவு பெற வில்லை. அதேபோல் சேலம் மாவட்டத்திலும் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஏராளமான திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து இருந்தாலே தற்போது கோடை காலத்தில் அந்த நீரை பயன்படுத்தி இருக்கலாம்.

    ரூ. 1000 கோடியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா கட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் பூட்டி கிடக்கிறது. இதை இதுவரை திறக்கவில்லை. ஒற்றை செங்கல் உதயநிதி ஆயிரகணக்கான செங்கலால் கட்டப்பட்ட இந்த பூங்காவை ஏன் திறக்க வில்லை.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் என்பதால் இதை முடக்கி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாய உலகத்தில் ஸ்டாலின் திளைத்து கொண்டிருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன்.
    • சவுக்கு மீடியாவின் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாக கைவிட வேண்டும்.

    சென்னை:

    சவுக்கு சங்கர் கைதுக்கு தமிழக எதிர்க்கட்சித்தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

    தி.மு.க., அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் சவுக்கு மீடியா ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறிவைத்து காவல் துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் அரசின் அராஜகப் போக்கிற்கு எனது கண்டனம்.

    ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை தன் கைகளுள் வைத்துக்கொண்டு, தான் ஏதோ நல்லாட்சி வழங்குவது போல ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் ஸ்டாலின் திளைத்து கொண்டிருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். அதனையும் மீறி சில ஊடகங்கள் இந்த விடியா ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் அம்பலபடுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறையை ஏவி பொய் வழக்குகளால் முடக்க முயற்சிப்பது தி.மு.க.விற்கே உரித்தான அராஜக பாசிச குணம்.

    சவுக்கு மீடியாவின் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாக கைவிட்டு, மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்யுமாறு தி.மு.க., அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கோடை வெயிலை சமாளிக்க, மக்கள் மலைவாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்துச் செல்கின்றனர்.
    • பொது போக்குவரத்து ஓட்டுநர்கள் மலைப் பகுதியில் ஓட்டி பழக்கமானவர்களா என்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பாதையில் ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றபோது, சுமார் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

    தகவலறிந்து சென்ற தீயணைப்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். சம்பவ இடத்திலேயே 4 பேர் இறந்ததாகவும், மருத்துவமனையில் மேலும் 2 பேர் இறந்ததாகவும், 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கோடை வெயிலை சமாளிக்க, மக்கள் மலைவாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்துச் செல்கின்றனர். எனவே, அரசு உடனடியாக உரிய அதிகாரிகளை பணிக்கு அமர்த்தி, அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சோதனை சாவடி அமைத்து, பேருந்து மற்றும் இதர வாகன ஓட்டுநர்களை பரிசோதனை செய்யவும், பொது போக்குவரத்து ஓட்டுநர்கள் மலைப் பகுதியில் ஓட்டி பழக்கமானவர்களா என்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த விபத்தில் பலியான 6 பேர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கிடவும்; பலத்த காயமடைந்தோருக்கு ரூ. 2 லட்சமும், சிறு காயமடைந்தோருக்கு ரூ. 50 ஆயிரமும், அரசின் சார்பில் நிதியுதவி வழங்கிடவும், உயர் மருத்துவ சிகிச்சை அளித்திடவும் அரசை வலியுறுத்துகிறேன்.

    இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும், மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும், எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மாவட்டந்தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும்.
    • சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழக மாணவ, மாணவிகள் எந்த விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவ்விளையாட்டுக்களில், மாணாக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி விளையாட்டுத் திறனை ஊக்கு விக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ கத்தில் மாவட்டந்தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும்.

    இவ்விளையாட்டுப் பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். அதன்படி இந்தாண்டு 29.4.2024 முதல் 13.5.2024 வரை கால்பந்து, வாலிபால், கபாடி, கூடை பந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும், அதற்காக இந்த ஆண்டு கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக் கட்டணமாக சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

    கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து வருபவர்கள். அவர்களிடம் பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்க ஆணையம் கூறுவதற்கு விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    அம்மா அரசில், மாணவர்களின் விளையாட்டுப் பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், கோடை கால பயிற்சி முகாமிற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்காமல், பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்று தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் தங்களது திறமைகளை நிரூபித்து வந்தனர்.

    மாவட்டந்தோறும் விளையாட்டு மைதானங்கள் (ஸ்டேடியம்) அமைக்கப்படும் என்றும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை பிரதம மந்திரியை வைத்து ஆரம்பித்து வைத்தோம் என்றும், உலக செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்திவிட்டோம் என்றும் சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.மு.க. அரசின் பொம்மை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாரிசு அமைச்சரின் கீழ் செயல்படும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, எந்த ஆண்டும் இல்லாத புதுமையாக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களிடம் இருந்து பயிற்சிக் கட்டணமாக 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாரா ஒலிம்பிக் உலகப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றேன் என்று கடையில் வாங்கிய கோப்பையுடன் வந்த நபரை உச்சி முகர்ந்து அவரோடு படம் எடுத்தது மட்டுமின்றி, தன் முதல்-அமைச்சர் தந்தையுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து வெற்று விளம்பரம் தேடிய அதிபுத்தி சாலி மந்திரியிடம் இதை விடப் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது.

    எனவே பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குடி பராமரித்து திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டது.
    • நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அதிகப்படியான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.

    எடப்பாடி:

    முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு தற்போது நிஜாம் புயல் பாதிப்புக்காக குறிப்பிட்ட நிதியை ஒதுக்கியுள்ளது. இது போதுமான நிதியா என கருத்து கூற இயலாது. காரணம் புயல் பாதிப்பு குறித்த புள்ளி விபரங்கள் தமிழக அரசின் கையில் உள்ளது. இதை அவர்கள் தான் கேட்டு பெற வேண்டும். இதே போல் கடந்த காலங்களில் தமிழகத்தில் பேரிடர் ஏற்பட்டபோது மத்திய அரசு உரிய நிவாரண நிதியை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

    அந்த காலக்கட்டங்களில் மத்திய ஆட்சி பொறுப்பில் இருந்த தி.மு.க.வும், இது குறித்து எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. எப்போதுமே தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்கியது இல்லை. தற்போது தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் மேட்டூர் அணை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகள் தூர்வாரபடாத காரணத்தினால் கடந்த காலங்களில் பெய்த மழைநீரின் பெரும் பகுதி வீணாக கடலில் கலந்தது.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குடி பராமரித்து திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க. இந்த திட்டத்தை நிறுத்திவிட்டது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் அரசு மீதமுள்ள 8000 ஏரிகளை தூர்வாரி இருந்தால் கோடையை சமாளித்து இருக்கலாம்.

    தற்போது தமிழக்தில் பல்வேறு இடங்களில் போதை பொருட்களின் புழக்கம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. இதை நான் பல முறை சட்டமன்றத்திலும், பொது வெளிகளிலும் வலியுறுத்தியும் தி.மு.க. அரசு இதை கண்டு கொள்ளாததால் தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட விரும்பதகாத நிகழ்வுகள் தொடர்கதையாகி உள்ளது.

    இதற்கு உதாரணமாக அண்மையில் சென்னையில் உள்ள கணபதி நகர் என்ற பகுதியில் போதை ஆசாமிகள் 3 பேர் வெறியாட்டத்தில் ஈடுபட்டதையும், அதை தடுக்க இயலாத காவல்துறையின் செயல்பாடுகளும் தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தொடர்ந்து தி.மு.க. ஆட்சியின் மெத்தன போக்கால் தமிழகம் பின்நோக்கி செல்கிறது. மேலும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அதிகப்படியான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.

    இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பிரதமர் மோடி, ராகுல் காந்தி மற்றும் தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி விவகாரம் குறித்த கேள்விகளுக்கு தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கருத்து கூற இயலாது என்று பதில் அளித்தார்.

    மேலும் மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் அ.தி.மு.க. ஏதேனும் தேசிய கட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமா என்ற கேள்விக்கு தேர்தல் முடிவு வந்த பிறகே முடிவு எடுக்கப்படும். மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் அ.தி.மு.க.வின் கட்சி நிர்வாகத்தில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு, முடிவு வந்த பின் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

    • 2026-ம்ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகி உள்ளார்.
    • தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இந்த அட்டைகள் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் ஜூன் 4-ந் தேதி வெளியாக உள்ள தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன.

    பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி தனி அணியை உருவாக்கி அ.தி.மு.க. தேர்தலை சந்தித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக தேர்தல் களத்தில் அ.தி.மு.க.வின் தனித்தன்மையை காப்பாற்றவும், தனது தனித்துவத்தை நிலை நாட்டவும் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் இந்த வியூகம் தேர்தலில் அவருக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத் தருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இந்த நிலையில் 2026-ம்ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகி உள்ளார். கட்சியினர் புத்துணர்ச்சியுடன் செயல்படும் வகையில் அ.தி.மு.க.வில் உள்ள 2½ கோடி தொண்டர்களுக்கும் விரைவில் புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்குவதற்கு அவர் முடிவு செய்துள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்டதை தொடர்ந்து தனது புகைப்படம், பெயர், கையெழுத்து ஆகியவற்றுடன் உறுப்பினர் அட்டைகளை தயாரிக்க அவர் அறிவுறுத்தி இருந்தார்.

    இந்த பணிகள் நிறைவு பெற்று அட்டைகள் தயாராக உள்ளன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமும் புதிய உறுப்பினர் அட்டையில் இடம்பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இந்த அட்டைகள் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது.

     

    அ.தி.மு.க. புதிய உறுப்பினர் அட்டைகளை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் வைத்து எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு வழங்கி தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள், தங்களது பகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு புதிய அட்டைகளை வழங்க உள்ளனர்.

    • பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்துவிட்டு பேட்டி அளித்த சசிகலா சிலர் எடுத்துள்ள தவறான முடிவுகளுக்கு இந்த தேர்தல் முடிவு பாடமாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.
    • எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் ஏற்கனவே கொடி பிடித்துள்ள நிலையில் சசிகலா அவர்களோடு சேர்ந்து செயல்படுவாரா? இல்லை தனி அணியை உருவாக்குவாரா? என்கிற கேள்வியும் எழுந்து உள்ளது.

    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலா அதே வேகத்தில் முதலமைச்சர் நாற்காலியிலும் அமர நினைத்தார்.

    ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் வெளியான தீர்ப்பால் அவர் சிறை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார்.

    இதன் பின்னர் அ.தி. மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அவர் கட் சியை வழிநடத்தி வருகிறார்.

    பெங்களூரு சிறையில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் சசிகலா விடுதலையாகி வெளியே வந்தார். பெங்களூரில் இருந்து சென்னை வரை சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை பார்த்ததும் அரசியல் களத்தில் அவர் புலிப் பாய்ச்சல் பாய்வார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். அதற்கேற்ற வகையிலேயே சசிகலாவின் பேச்சுக்களும் அமைந்திருந்தன.

    அ.தி.மு.க.வுக்கு நானே தலைமை தாங்குவேன். ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு செல்வேன் என்றெல்லாம் அவர் கூறியிருந்தார்.

    ஆனால் இவையெல்லாம் வெறும் பேச்சுக்களாகி போனது. சிறையில் இருந்து வெளியில் வந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் சசிகலா இன்னும் அதிரடி காட்டாமலேயே உள்ளார்.

    2021 சட்டமன்றத் தேர்தல், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல்களில் தனது நிலைப்பாடு என்ன? என்பதைகூட வெளிப்படுத்தாமல் மவுனம் காத்துள்ள சசிகலா தற்போது புதிய வியூகத்துடன் களம் இறங்கி உள்ளார். அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு 15 கேள்விகள் அடங்கிய படிவத்தை கடிதம் போல அனுப்பி உள்ள சசிகலா 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார்.

    பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்துவிட்டு பேட்டி அளித்த சசிகலா சிலர் எடுத்துள்ள தவறான முடிவுகளுக்கு இந்த தேர்தல் முடிவு பாடமாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டே சசிகலா இப்படி கூறியிருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வினருக்கு சசிகலா படிவங்களை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எந்த அளவுக்கு கை கொடுக்கப் போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் ஏற்கனவே கொடி பிடித்துள்ள நிலையில் சசிகலா அவர்களோடு சேர்ந்து செயல்படுவாரா? இல்லை தனி அணியை உருவாக்குவாரா? என்கிற கேள்வியும் எழுந்து உள்ளது.

    அதே நேரத்தில் அ.தி.மு.க.வை மீட்கவும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தவும் சசிகலா எடுக்கும் எந்த நடவடிக்கைகளும் அவருக்கு பலன் அளிக்கப்போவதில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

    • திருச்சி நகரப் பேருந்தில் இருக்கையுடன் நடத்துநர் வெளியே விழுந்தது அதிர்ச்சி அளிக்கிறது
    • அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்

    திருச்சி நகரப் பேருந்தில் இருக்கையுடன் நடத்துநர் வெளியே விழுந்தது அதிர்ச்சி அளிக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துனர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தியிருந்தேன்.

    ஆனால் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

    எனவே, இனியாவது இந்த விடியா திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இது போன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல.
    • அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

    இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பாரதப் பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

    இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இது போன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது.

    அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது.

    தேர்தல் பிரசாரத்திற்காக கண்ணியம் தவறிய இது போன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×