search icon
என் மலர்tooltip icon

    மதுரை

    • புண்ணிய நதி என போற்றப்பட்ட வைகை தண்ணீரின்றி வறண்டும் காணப்படுகிறது.
    • பல்வேறு சிறப்புகள் வாய்ந்த வைகை ஆற்றில் தண்ணீர் நிரந்தரமாக ஓட வழிவகை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுவது வழக்கம். திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்நிகழ்ச்சிக்காக வருடம் தோறும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். திருவிழா முடிந்த பின்னர் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்படும்.

    இப்படி சிறப்பு வாய்ந்த வைகை ஆற்றை தூர்வாராமலும், சில சமூக விரோதிகள் ஆற்றில் உள்ள மணலை அள்ளிச் சென்றதாகவும் பல இடங்களில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் வைகையில் நிரந்தரமாக தண்ணீர் ஓடினால் மாவட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. ஆனால் நாளடைவில் தண்ணீர் ஓடாமல் சாக்கடை கழிவுகள், வீடுகளில் இருக்கும் குப்பைகள் தான் வைகையில் மிதக்கிறது. புண்ணிய நதி என போற்றப்பட்ட வைகை தண்ணீரின்றி வறண்டும் காணப்படுகிறது.

    கடந்த சில வருடங்களுக்கு முன் வைகை வறண்ட நிலையில் அழகர் மலையானே தீயணைப்பு துறை உதவியால் தொட்டிக்குள் இறங்கி, ஆற்றில் இறங்கும் வைபவம் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் நடந்த வரலாறும் உண்டு. அதற்கு முன் திறந்து விடப்பட்ட வைகை நீர், வைகையில் மணல் இல்லாததால் மணல் அள்ளிய பள்ளத்தில் நீர் தேங்கி, மதுரைக்கு கூட வைகை நீர் வர முடியாத பரிதாபமான சூழல் நிலையும் இருந்தது. .

    வைகை ஆறு நீர்தாங்கிச் செல்லும் என்ற நிலை மாறி கொசுக்களை உற்பத்தி செய்யுமிடமாகவும், மனிதர்களின் கழிவுகளை கொட்டும் இடமாகவும் மாறி விட்டது. இறைச்சிக் கழிவுகள், சாக்கடை நீர் கலப்பதால் வைகை துர் நாற்றமுடன் நோய் பரப்பும் இடமாக காணப்படுகிறது. வைகை கரையோரம் முள் புதர் செடிகளும், ஆற்றுக்குள் நீரை அதிக அளவு உறிஞ்சும் கருவேல மரங்களும், மணல் அள்ளிய திருட்டு கும்பலிடம் தப்பித்த பகுதிகள் சிறு குன்று போலவும், மணல் அள்ளிய இடங்கள் அபாயகரமான பள்ளப்பகுதி என அறிவிக்கும் நிலையிலும் வைகை உள்ளது. கழிவு நீர் சாக்கடைகள் சங்கமிக்கும் வைகையை அழகர் ஆற்றில் இறங்கும் போது மட்டுமே கவனிக்கும் அரசு அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

    தற்போது ராமநாதபுரம் மாவட்டம் மக்களின் விவசாய மற்றும் குடிநீர் தேவைகளுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று மதுரையை வந்தடைந்தது. நேற்று மதியம் பெய்த கன மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இன்று இரண்டாவது நாளாக வைகையின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் செல்கிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த வைகை ஆற்றில் தண்ணீர் நிரந்தரமாக ஓட வழிவகை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த சில நாட்களாக வெயில் 100 டிகிரிக்கு மேல் வாட்டி வதைத்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் தண்ணீர் வைகையாற்றில் கலந்து வீணாகிறது. தண்ணீரை தேக்கி வைக்க கூடுதல் தடுப்பணைகளை கட்டவும் பாரம்பரிய மிக்க வைகை ஆற்றில் நிரந்தரமாக தண்ணீர் போடவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
    • மதுரையில் மதியம் 2.30 மணி அளவில் இடி மின்னலுடன் மற்றும் பலத்த காற்றுடன் மழை.

    குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது. மலை மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் இன்று காலை வரை 34 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் திடீரென்று சுமார் 2.30 மணி அளவில் இடி மின்னலுடன் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. 

    குறிப்பாக, மதுரையில் உள்ள அண்ணாநகர், கேகே நகர், தெப்பக்குளம், கோரிப்பாளையம், அண்ணா பேருந்து நிலையம், சிம்மக்கல், தெற்கு வாசல், காளவாசல், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம், கிராஸ் ரோடு, செல்லூர், தத்தனேரி, சர்வேயர் காலனி ஐயர் பங்களா என்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.

    மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மதுரை வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் எதிரொலியால், வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • கொள்ளை சம்பவம் தொடர்பாக பெண் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா மற்றும் அவரது உறவினர்களிடம் முதல் கட்டமாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
    • சம்பவம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட கைரேகை தடயங்கள் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரின் வீட்டை உடைத்து 250 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கத்தை அள்ளி சென்ற மர்ம கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த துணிகர சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பாசிங்காபுரம் மீனாட்சிநகரை சேர்ந்தவர் ஷர்மிளா (வயது 46). இவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று முன்தினம் மதுரை பாசிங்காபுரத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்ற ஷர்மிளா நேற்று இரவு வீடு திரும்பி உள்ளார். அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

    பீரோவில் வைக்கப்பட்டிருந்த 250 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் ரொக்கம் மதிப்பு ரூ.1.30 கோடி ஆகும். இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பெண் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா மற்றும் அவரது உறவினர்களிடம் முதல் கட்டமாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட கைரேகை தடயங்கள் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்துக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
    • தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம்.

    மதுரை:

    மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கண்மாய்களில் நீரை தேக்கி வைப்பதற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்துக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக சிவகங்கைக்கும், 3வது கட்டமாக மதுரைக்கும் தண்ணீர் திறக்கப்படும்.

    வைகை அணையில் இருந்து 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சவுக்கு சங்கர் மீது மொத்தம் 6 வழக்குகள் போடப்பட்டு உள்ளன.
    • கோவை மற்றும் தேனியில் போடப்பட்ட வழக்குகளில் அவர் கைதாகி சிறையில் உள்ளார்.

    பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    தேனியில் ஒரு விடுதியில் தங்கி இருந்த போது அவரது காரில் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததாக தேனி போலீசார் தனியாக வழக்கு போட்டிருந்தனர். 2-வதாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அவர் மீது சென்னை, சேலம், திருச்சியிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இதன் மூலம் சவுக்கு சங்கர் மீது மொத்தம் 6 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. இதில் கோவை மற்றும் தேனியில் போடப்பட்ட வழக்குகளில் அவர் கைதாகி சிறையில் உள்ளார். மற்ற 4 வழக்குகளிலும் அடுத்தடுத்து சவுக்கு சங்கரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில், மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கின் விசாரணையில் சவுக்கு சங்கரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நீதிமன்றத்திற்கு வலது கையில் கட்டு போட்டபடி சவுக்கு சங்கர் வந்தார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க நீதிமன்ற வளாகம் முன்பு காத்திருந்த பெண்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பெட்ரோல் இன்றைய கால கட்டத்தில் அத்தியாவசிய தேவையாக உள்ளது.
    • மோட்டார் வாகனங்களின் ஆதிக்கம் காரணமாக சைக்கிள் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது.

    மதுரை:

    மதுரை கோரிப்பாளையம் பகுதியில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் இரவு சிலர் தங்களது இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வந்தனர்.

    அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பெட்ரோல் நிரப்பும் போது அதில் முறைகேடு நடப்பதாகவும், ஒரு லிட்டர் பெட்ரோலில் 100 மில்லி அளவிற்கு பெட்ரோல் போடாமலே பெட்ரோல் போடப்பட்டதாக கணக்கு காட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதனையடுத்து அந்த இளைஞர்கள் சிலர் மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு சென்று அங்கு குற்றச்சாட்டு வைத்தனர். இந்த நிலையில் அங்குள்ள அளவீடு மானி மூலமாக பெட்ரோலை நிரப்ப கூறி, அதன்படி நிரப்பிய போது ஒவ்வொரு லிட்டரிலும் 100 மில்லி அளவு குறைவாக எடுப்பது தெரியவந்தது.

    இதனை அவர்கள் வீடியோவாக பதிவு செய்தபோதே பெட்ரோல் பங்க் ஊழியர் உடனடியாக எந்திரத்தில் மாற்றம் செய்தார். இதனையும் வீடியோ எடுத்த நபர்கள் அவரிடம் வாக்குவாதம் செய்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இந்த பெட்ரோல் பங்க் முறைகேடு குறித்து மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் இளைஞர்கள் சிலர் புகார் அளித்த நிலையில் அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பான வீடியோ நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    திரவ தங்கம் என அழைக்கப்படும் பெட்ரோல் இன்றைய கால கட்டத்தில் அத்தியாவசிய தேவையாக உள்ளது. வாகனங்களின் இயக்கத்துக்கு முக்கிய காரணியாக உள்ள பெட்ரோலை சாமானியர்கள் முதல் முதலாளிகள் வரை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். மோட்டார் வாகனங்களின் ஆதிக்கம் காரணமாக சைக்கிள் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது.

    சாதாரண வியாபாரிகள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் என பலதரப் பினரும் வெளியே செல்ல மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக அவரவர் வசதிக்கேற்ப ரூ.50 முதல் தங்கள் வாகனங்களில் பெட்ரோல் போட்டு வருகின்றனர். ஆனால் அதிலும் தற்போது முறைகேடு புகார் எழுந்துள்ளது. சாமானியர்கள் உழைத்து அதில் ஒரு குறிப்பிட்ட தொகை பெட்ரோலுக்கே செலவழித்து வரும் நிலையில் அதன் அளவையும் குறைத்து விநியோகிக்கப்படுவது பொதுமக்களிடையே மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    நுகர்வோர்களுக்கு சரியான அளவில் சரியான விலையில் பொருட்கள், சேவைகள் கிடைக்க வேண்டும் என பல்வேறு சட்டங்கள் உள்ளன. ஆனால் பெட்ரோல் அளவில் குறைத்து நடக்கும் இந்த நூதன முறைகேட்டை தடுக்க வேண்டும். பெட்ரோல் பங்கில் நுகர்வோர்களுக்கு சரியான பெட்ரோல் அளவை வழங்குவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • மத்திய சிறை சார்பில் நடத்தப்படும் உணவகங்களில் தினமும் ஏராளமானோர் உணவருந்தி செல்கின்றனர்.
    • மருத்துவரான சிம்டா சீனிவாஸ் அவரது மனைவி ஸ்ரீகங்கா ஆகியோர் குடும்பத்தினருடன் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர்.

    மதுரை:

    பல்வேறு குற்றங்கள் புரிந்து நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு சிறைக்கு வரும் கைதிகளின் மறுவாழ்வுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அதில் சிறைவாசிகளின் நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய சிறை கண்காணிப்பில் உள்ள பெட்ரோல் நிலையம், சிறைச்சந்தை ஆகிய இடங்களில் சுழற்சி முறையில் வேலை பார்த்து வருகின்றனர். இதற்காக அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது.

    மத்திய சிறை சார்பில் நடத்தப்படும் உணவகங்களில் தினமும் ஏராளமானோர் உணவருந்தி செல்கின்றனர். இதனால் எப்போதும் பரபரப்பாக சிறைச் சந்தை காணப்படும். இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான சிம்டா சீனிவாஸ் அவரது மனைவி ஸ்ரீகங்கா ஆகியோர் குடும்பத்தினருடன் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர்.

    மதுரையில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட்டு பின் மத்திய சிறையில் செயல்பட்டுவரும் சிறை சந்தையை பார்வையிட்டனர். அதன் பின் அங்கு காலை உணவு அருந்திவிட்டு சென்று விட்டனர். அவர்கள் சென்ற பிறகு அவர்கள் அமர்ந்து சாப்பிட்ட மேஜையின் அருகே ஒரு கைப்பை இருந்தது. அதைக்கண்ட சிறை சந்தையில் பணிபுரியும் தண்டனை சிறைவாசி கார்த்திக் அந்த கைப்பையை எடுத்து சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

    அதில் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் இருந்தன. அதில் அவர்களுடைய ஆதார் தவிர தொடர்பு எண்கள் இல்லாததால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து சிறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே தனது கைப்பையை எங்கு தவறவிட்டோம் என்று தெரியாமல் பல்வேறு இடங்களுக்கு சென்ற சிம்டா சீனிவாஸ் கடைசியாக மதுரை மத்திய சிறை சந்தைக்கு வந்தனர். அவர்களிம் உரிய விசாரணைக்கு பிறகு மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் கைப்பை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அதனை பெற்றுக் கொண்ட சுற்றுலாவாசிகள் மற்றும் சிறை அதிகாரிகள் சிறைவாசி கார்த்திக்கின் நேர்மையை பாராட்டினர். உரியவரிடம் ஒப்படைத்த காட்சி.

    • பணியில் இருந்த ஊழியர்கள் கட்டணம் செலுத்தாமல் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.
    • சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி, போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் மத்திய அரசுக்கு சொந்தமான சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இதன் வழியாக நாள் ஒன்றுக்கு பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் கார் ஒன்று கடந்து செல்ல முயன்றது.

    அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் கட்டணம் செலுத்தாமல் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அப்போது காரில் இருந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு அவசரமாக செல்லவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் காரை விட மறுத்ததால், அதன் டிரைவர் சுங்கச்சாவடி ஊழியர் மீது காரை மோதினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மதுரையிலிருந்து விருதுநகர் நோக்கி செல்லக் கூடிய பதிவு எண் இல்லாத கார்களும், வேறு மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய கார்களும், திருமங்கலம் நகர் பகுதி வாகனங்கள் எனக் கூறி ஏமாற்றி, சுங்க வரி கட்டணம் செலுத்தாமல் செல்வது வாடிக்கையாகி வருவதாக புகார்கள் எழுந்தன.

    மேலும், சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்களது உயிருக்கு பாதுகாப்பின்றி பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற வாகனங்களை சுங்கச்சாவடி ஊழியர்கள், கட்டணம் செலுத்த கேட்டுக் கொள்ளும்போது வாக்குவாதம் மற்றும் கைகலப்பும் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி, போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். கப்பலூர் சுங்கச்சாவடியில் தொடர்ந்து இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதால் ஊழியர்கள் அச்சத்துடன் பணிகளை ஈடுபட்டு வருகின்ற நிலை ஏற்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

    உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்காத போதிலும் பதிவெண் இல்லாத கார்களும் உள்ளூர் வாகனம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஊழியர்களை தாக்குவதும், ஊழியர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை எனவும் சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மக்களுக்கு ஏமாற்றத்தை தான் தி.மு.க. அரசு பரிசாக கொடுத்துள்ளது.
    • 3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் 300 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளனர்.

    மதுரை:

    மதுரையில் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்றைக்கு 3 ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டு தொடக்க விழாவை தி.மு.க. அரசு காண்கிறது. கடுமையான மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் என இந்த மூன்று ஆண்டுகளில் 30 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்

    தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் அதிகமான கடன் சுமை உள்ள மாநிலமாக தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணத்தை உயர்த்த மாட் டோம் என்று கூறினார்கள். ஆனால் கடுமையாக மின் கட்டத்தை உயர்த்தி விட்டனர்.

    நீட் தேர்வு, கல்விக்கடன் ரத்து செய்வோம் என்று கூறினார்கள். அது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. கியாஸ் மானியம் 100 ரூபாய் தருவோம் என்று கூறினார்கள். அதுவும் அப்படியே இருக்கிறது. பெட்ரோல் விலையை கண்துடைப்பாக மட்டும் குறைத்து விட்டு டீசலுக்கான விலையை குறைக்கவில்லை. ஆயிரம் ரூபாய் அனைத்து குடும்பங்களுக்கு வழங்குவோம் என்று கூறினார்கள். தமிழகத்தில் 2 கோடியே 15 லட்சம் குடும்பங்கள் உள்ளது. ஆனால் ஒரு கோடி பேருக்கு கொடுத்துவிட்டு பாரபட்சம் பார்க்கிறார்கள்.

    மக்களுக்கு ஏமாற்றத்தை தான் தி.மு.க. அரசு பரிசாக கொடுத்துள்ளது. இனியும் இந்த 2 ஆண்டுகளில் அரசை மக்கள் நம்ப தயாராக இல்லை. மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சி அமைவதற்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    அம்மா அரசின் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டனர். இன்றைக்கு மக்கள் மனதில் மகிழ்ச்சி உள்ளதாக முதலமைச்சர் கூறுகிறார். மக்கள் மனதில் மகிழ்ச்சி இல்லை, வீழ்ச்சி தான் உள்ளது. அதுதான் உண்மையான கள நிலவரம். தி.மு.க. ஆட்சி எப்போதும் வருகிறதோ அப்போதெல்லாம் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும்.

    நெல்லை காங்கிரஸ் தலைவர் கொலையா? தற்கொலையா? என்ற முடிவு கூட இன்னும் வரவில்லை. இது காவல்துறை மெத்தனமா? அரசியல் குறுக்கீடா? அழுத்தமா? என்று தெளிவாக தெரியவில்லை.

    புகார் கடிதம் கொடுக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் காவல்துறையில் கடிதம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். காவல்துறையை சுதந்திரமாக விட்டால் ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவார்கள். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். ஆனால் இன்றைக்கு காவல்துறை செயல் இழந்து உள்ளது.

    3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் 300 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளனர். தமிழகம் மகிழ்ச்சி இல்லை வீழ்ச்சியில் தான் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆண்டுதோறும் ஏராளமான சிறைவாசிகள் பொதுத்தேர்வுகளை எழுதி வருகின்றனர்.
    • 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதுரை மத்திய சிறையில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    மதுரை:

    மதுரை மத்திய சிறையில் 1400-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை சிறைவாசிகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிறைவாசிகள் தாங்கள் படிக்க விரும்பும் படிப்புகளை தொடர்வதற்காக சிறை நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது.

    குறிப்பாக எட்டாம் வகுப்பு தொடங்கி கல்லூரி படிப்பு வரை கல்வி கற்ப தற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அவ்வப்போது அவர்களுக்கு தேவையான சிறப்பு வகுப்புகள் ஆசிரியர்கள் மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆண்டுதோறும் ஏராளமான சிறைவாசிகள் பொதுத்தேர்வுகளை எழுதி வருகின்றனர்.

    இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை மதுரை மத்திய சிறையில் உள்ள 15 தண்டனை சிறைவாசிகள் எழுதினர். இதில் 15 பேரும் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதுரை மத்திய சிறையில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதில் சிறைவாசி ஆரோக்கிய ஜெயபிரபாகரன் என்பவர் 536 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தையும், சிறைவாசியான அலெக்ஸ் பாண்டியன் என்பவர் 532 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தையும், அருண்குமார் என்பவர் 506 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்.

    இந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பெண்கள் மத்திய சிறையில் யாரும் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மத்திய சிறையில் தேர்வு எழுதிய 15 பேரும் தேர்ச்சி பெற்ற நிலையில் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்ததை முன்னிட்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறைத் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.
    • ஒரு கையெழுத்து போதும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின், ஒரு கோடி கையெழுத்தை பெற்றார். அது சென்ற இடம் ரகசியம், மர்மம் என்ன?

    மதுரை:

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சமயநல்லூரில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகமே கொலைகார நகரமாக மாறிவிட்டது. நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் தன் உயிருக்கு ஆபத்து என்று காவல்துறைக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும்.

    புகாரை விசாரிக்காமல் மெத்தனமாக இருந்து விட்டு தற்போது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல உயிர் பறிபோன பிறகு கொலையாளியை பிடிக்க தனிப்படை என்று அரசு கூறி வருகிறது.

    அது மட்டுமல்ல மணல் கடத்தலை தட்டி கேட்ட வி.ஏ.ஓ. படுகொலை செய்யப்பட்டார். மணல் கடத்தல் தொடர்பாக தான் கூறியதால் எனக்கு பாதுப்பு வேண்டும் என்று ஆடு மேய்க்கும் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்ததால் தற்போது நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. தமிழக மக்களே அச்சத்தில் உறைந்து உள்ளனர். மக்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.

    இந்த அரசு கும்பகர்ண தூக்கத்தில் உள்ளதாக கூறுகிறார்கள். கும்பகர்ணன் கூட ஆறு மாதம் தூங்குவான், ஆறு மாதம் விழித்து விடுவான். ஆனால் இந்த அரசு விழிக்காமல் காவல்துறையே கோமா நிலையில் உள்ளது.

    நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மற்றும் கால்நடைபடிப்பிற்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்காக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் 557 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

    கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்கள் வெளியே செல்கிறார்கள். நீட் தேர்வு எழுத முன் வருகிற மாணவர்கள் இந்த நான்காண்டு காலத்திலே பார்க்கிறபோது ஒரு லட்சம் என்று சொன்னால் பத்தில் ஒரு சதவீதம் தான் உள்ளது.

    ஒரு கையெழுத்து போதும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின், ஒரு கோடி கையெழுத்தை பெற்றார். அது சென்ற இடம் ரகசியம், மர்மம் என்ன? நீட் தேர்வு ரத்து ரகசியத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலின் முன்வருவாரா? அதற்கு முதலமைச்சர் துணை புரிவாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    16CNI050502024: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மதுரை வளையங் குளம் 4 வழிச்சாலையில் அமைந்துள்ள மாநாட்டுத் திடலில் இன்று காைல 9 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பேரமைப்பின் மாநிலத் தலைவவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, பொரு

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மதுரை வளையங்குளம் 4 வழிச்சாலையில் அமைந்துள்ள மாநாட்டுத் திடலில் இன்று காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பேரமைப்பின் மாநிலத் தலைவவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத் துல்லா முன்னிலையில் மதுரை மண்டலத் தலைவர் டி.செல்லமுத்து மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.

    41-வது வணிகர் தினம் விடுதலை முழக்க மாநாடாக நடத்தப்படுவதால் இன்று மாலை 4 மணிக்கு மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று பேருரையாற்ற உள்ளனர். கவிஞர் வைரமுத்து மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

    மாநாட்டில் வேலம்மாள் குழும நிறுவனர் எம்.வி.முத்துராமலிங்கம், நாகாபுட்ஸ் தலைவர் கமலக்கண்ணன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், மகாராஜா, டால்மில் நிறுவனர் சந்திரகுமார், ராஜ்மகால் மதுரை முருகானந்த், மதுரை ஜிகர்தண்டா ஜிந்தா, தார் பிரதர்ஸ், கல்யாணமாலை மீரா நாகராஜன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.

    தமிழக அனைத்து வணிகத் தலைவர்கள், பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், மாநில துணைத் தலைவர்கள், மாநில இணைச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்டப் பொருளாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள், பழைய பொருள் சங்க நிர்வாகிகள், இளம் தொழில் முனைவோர் அமைப்பினர், மகளிர் அமைப்பினர் மற்றும் விழாக்குழு உறுப்பினர்கள், தமிழக அனைத்து கிளைச் சங்க நிர்வாகிகள் என லட்சக்கணக்கானோர் மதுரை மாநாட்டில் குவிந்துள்ளனர்.

    மதுரையில் நடக்கும் வணிகர் விடுதலை முழக்க மாநாடு தமிழக வணிகர்களின் ஏகோபித்த ஒற்றுமையை நிலைநாட்டும் மாநாடாகவும், 40 ஆண்டு வணிக வரலாற்றை முத்திரை பதிக்கும் மாநாடாகவும், அகில இந்திய வணிகர் அமைப்பிற்கு வழிகாட்டும் மாநாடாகவும் நிச்சயம் அமையும் என்று மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறி உள்ளார்.

    வணிகர்களின் உரிமையைவென்றெடுக்க, பேரமைப்பின் கள நிகழ்வின் நினைவுகளை முன் நிறுத்தும் மாநாடாகவும் இந்த மாநாடு அமைந்துள்ளதாக அவர் பெருமைப்பட கூறி உள்ளார். இன்று மாலையில் விக்கிரமராஜா உரையாற்றி முடித்ததும் தீரமானங்கள்நிறைவேற்றப்படுகிறது. மாநில பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா மாநாடு தீர்மானங்களை முன்மொழிய தீர்மானங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுகிறது.

    மாநாட்டில் கலந்து கொண்ட வணிகர்களுக்காக சிற்றுண்டி, இரவு உணவு, குடிநீர் வசதிகள் போன்றவை சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக மாநாட்டு குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாநாட்டில் குவிந்துள்ளனர். வணிகர்களின் வசதி கருதி மாநாட்டில் பங்கேற்கும் வணிகர்களின் கார், வேன், பஸ்கள், இரு சக்கர வாகனங்களை நிறுத்துவத்கு விசாலமான இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டில் பேரமைப்பு தலைமைச் செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், அனைத்து மண்டலத் தலைவர்களும் திரளாக பங்கேற்றுள்ளனர்.

    மேலும் தென்சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் என.டி.மோகன், வடசென்னை வடக்கு மாவட்டத் தலைவர் கொரட்டூர் த.இராமச்சந்திரன், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சாமுவேல், வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவர் என்.ஜெயபால், கிழக்கு மாவட்டத் தலைவர் ஆதிகுருசாமி, மாவட்டச் செயலாளர்கள் தேசிகன், சின்னவன், ஜெ.சங்கர், ஷேக் முகைதீன், சத்தியரீகன், பஷீர்அகமது, புரசைநசீர், ஜார்ஜ் டவுன் அனீஸ்ராஜா, ஓட்டேரி செந்தமிழ்செல்வன், மயிலை பாஸ்கர், பெருநகர டீக்கடை சங்க தலைவர் ஆனந்தன், ஹாஜி கே.முகமது, சி.திருமாறன், காவேரி மீரான், தாமோதரன், அயனாவரம் கே.ஏ.மாரியப்பன், என்.ஆர்.மோகன், அண்ணா நகர் சங்கர், மெடிக்கல் சிவக்குமர், எஸ்.எம்.பி.செல்லத்துரை, கடப்பா ரோடு கே.ஆர்.செல்வம், ஆர்.ஜெயபாண்டியன், கந்தன்சாவடி வில்சன், அடையார் பி.பாஸ்கர், செந்தில்குமார், சி.எம்.சாமி உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

    ×