search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Violence Against Women"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தண்டனைகள் மட்டும் குற்றங்களை முழுவதும் குறைத்துவிட முடியாது.
  • குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும்.

  உலகத்தில் எல்லா சமூகத்திலும், சாதி, மதம் என்கிற வித்தியாசமின்றி ஒட்டு மொத்தமாக ஒடுக்கப்படுகிற ஒரு இனம் உண்டு என்றால் அது பெண்ணினமேஆகும். தாமஸ்ராய்ட்டர்ஸ் ஆய்வின் முடிவின்படி உலகளவில் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்பது வருத்தத்துக்குரியசெய்தி. கருவிலேயே பெண் சிசுவாக இருந்தால் கருச்சிதைவிலிருந்து, பிறந்தவுடன் பெண்குழந்தையாக இருந்தால் கள்ளிப்பால் என்று வன்முறை தொடங்கி விடுகிறது. சாஸ்திர சம்பிரதாயங்கள் என்கிற பெயரில் பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், விதவை, பொட்டுக்கட்டுதல் என்று காலங்காலமாக பெண்கள் வஞ்சிக்கப்பட்டனர்.

  பெரும்பாலும் இத்தகையவன்முறைகள், 90 சதவீதம் நெருங்கிய உறவினர்களாலோ, நண்பர்களாலோ, அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களாலோ, பணியிடத்திலோ, பள்ளிக்கூடங்களிலோ உள்ளவர்களால் நடத்தப்படுகிறது. இதில் வேதனையான விஷயம், பெரும்பாலான குற்றங்கள் வெளியே தெரிவதில்லை. அப்படியே வந்தாலும் செய்தித்தாள்களில் எங்கோ ஒருமூலையில் ஒதுங்கி விடுகிறது.

  இவைகள் எல்லாம் தடுக்கப்பட என்னதான் வழி?

  குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும். இந்திய அரசாங்கம் 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியில் வல்லுறவு கொள்பவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படும் என்று சட்டம் இயற்றியுள்ளது. வரவேற்கப்படவேண்டிய ஒன்றானாலும், குற்றங்கள் விசாரணை செய்து நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறுவதற்கும் பலஆண்டுகள் ஆகி விடுகிறது.

  தண்டனைகள் மட்டும் குற்றங்களை முழுவதும் குறைத்துவிட முடியாது. பெற்றோர்கள் தங்களது ஆண்குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களிடத்தே, பெண்களும் இவ்வுலகத்தில் வாழ்வதற்கு சமஉரிமை உடையவர்கள்; ஆண்களுக்கு அடிமையாக, ஏவல் செய்பவர்களாக உருவாக்கப்பட்டவர்கள் அல்ல என்கிற உண்மையை உரத்துச் சொல்ல வேண்டும். சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை. தைரியம், பலம், அறிவு, இவைகளை எல்லாம் ஆணுக்கு மட்டுமே உரியகுணங்களாக சித்தரிக்கப்படுகிறது, அத்தகைய சூழலில் வளரும் பெண் குழந்தைகள் தங்களுக்கு புத்திசாலித்தனமும் சாமர்த்தியமும் குறைவு, மற்றும் பலவீனமானவர் என்று கருதத் தொடங்கி விடுகின்றனர்.

  உதாரணமாக, ஏதாவது பொருளினைத் கைத்தவறி நழுவவிட்டால், ஆண்குழந்தை அதைபற்றிக் கவலைக்கொள்ளாது. வீட்டிலும் திட்டிவிட்டு விட்டு விடுவார்கள். அதே நேரத்தில் பெண் குழந்தைக்கு திட்டு மட்டுமல்ல, உனக்கு ஏன் இந்த கடினமான வேலை என்று கூறப்படும் போது பெண் குழந்தை தன்னால் கடினமானவற்றை செய்ய முடியாது என்று நம்பத் தொடங்குகிறது. இப்படியாக வளரும் அப்பருவத்திலேயே அதன் மனதில் நீ பலவீனமானவள் என்கிற ஆழமான விதை ஊன்றப்படுகிறது.

  நன்கு பயிற்சிப் பெற்ற தடகள வீராங்கனையுடனோ, குத்துச்சண்டை பயின்ற பெண்ணிடமோ அவ்வாறு பயிற்சிப் பெறாத ஆண்கள் மோதி வெற்றிப் பெறமுடியாது. ஆகவே ஆணோ, பெண்ணோ, நான் யாருக்கும் சளைத்தவரல்ல, என்கிற எண்ணமும், பயிற்சியும் பெற்றால் எதையும் செய்ய முடியும் என்பது தான் உண்மை. ஊடகங்கள் மற்றும் தொலைக் காட்சி தொடர்கள் பெண்களுக்கு எதிரானதாகவும் வன்முறையை தூண்டுபவையாகவும் உள்ளன.

  திரைப்படங்கள் போன்று தணிக்கைக்குழு இல்லையென்றாலும் சுயக்கட்டுப்பாடுகளோடு நம் வீட்டு பெண்களும் குழந்தைகளும் பார்ப்பதாக இருந்தால் எத்தகைய பொறுப்புணர்வோடு நடந்து கொள்வோமோ அந்த வகையில் நடந்து கொள்ள வேண்டும். அதேப்போன்று ஊடகங்கள் பெண்களுக்கு எதிரான கருத்துகளையும் கேலி செய்யும் செய்திகளையும் வெளியிடக்கூடாது.

  பெண்களையும் சகமனிதர்களாக பார்க்காமல் அவர்கள் தங்ககள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய கருவியாக பார்க்கும் மனோபாவமே அடிப்படை முறையான பாலினகல்வி கொடுக்காமையும், இத்தகைய தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கின்றன. மீடூ (நானும்கூட) இயக்கங்கள் தற்போது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வடிக்கால்களாக அமைந்துள்ளன.

  மேலைநாடுகளில் மட்டுமின்றி நமது நாட்டில் கூட, பாதிக்கப்பட்ட பெண்கள் சமூகவலைத்தளங்களில் தங்களுக்கு கொடுமை இழைத்தோரை குறித்த உண்மையை வெளியிடுவதன் மூலமாக, தவறு செய்தவர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. இது போன்று தவறு செய்தவர்களை வெளிப்படுத்தும் போது எதிர்காலத்தில் தவறு செய்ய முயற்சி செய்பவர்களை தடுக்க ஏதுவாகும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்கள் குரல் எங்கும் ஒலிக்க வேண்டும் என்பதை விட அவர்கள் எழுப்பும் பிரச்சினைகள் கேட்கப்பட வேண்டும், தீர்க்கப்பட வேண்டும் என்பதே அடிப்படை கோரிக்கை.
  ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்ற காலம் மாறி இன்று ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியாற்றும் நிலை வந்துவிட்டது. இந்திய ராணுவத்தில் “காம்பட்” எனப்படும் போர்களத்தில் சண்டையிடும் பணிகளில் மகளிர் பணியமர்த்தப்பட்டு சிறப்பாக சேவை செய்கின்றனர். சி.ஆர்.பி. போன்ற துணை ராணுவ பிரிவுகளில் பெண்கள் பட்டாலியன் அணியில் முழுக்க பெண்களே பணி புரிகின்றனர். போர் விமான பிரிவிலும் பெண்கள் பைலட்டுகளாக பயிற்சி பெற்று வீர தீரத்தில் ஆண்களுக்கு நாங்களும் நிகர் என்று நிரூபித்துள்ளனர். காவல் துறையிலும் இதர அரசு பணிகளில் அதிகமாக பெண்கள் பங்குகொள்வது வரவேற்க வேண்டிய மாற்றம். அரசு பணிகளில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்த முதல் மாநிலம் தமிழ்நாடு.

  தேர்தல் பணியில் பெண் அதிகாரிகள் நடத்தும் வாகன சோதனையில் அதிகம் பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன. 2011-ம் ஆண்டு தேர்தலின் போது ஒரு பெண் வருவாய்த்துறை அதிகாரி நடத்திய சோதனையில் ஐந்து கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது மறக்க முடியாது. இப்போதுள்ள இளம் சேலம் மாவட்ட கலெக்டர் துணிச்சலோடும், பொறுப்புணர்ச்சியோடும் செயல்பட்டு மக்களின் பாராட்டை பெற்றுள்ளார். பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்பது உண்மையாகிறது.

  துணிச்சலோடு செயல்படுவதற்கு உறுதுணையாக இருப்பது கல்வி. அதிலும் பெண்களுக்கு கல்வி கொடுப்பது ஒரு குடும்பத்திற்கு விளக்கேற்றியது போல், அதன் பலனால் ஒரு தலைமுறை முன்னுக்கு வரும். குழந்தைகளை தாயுள்ளத்தோடு வழிநடத்தும் பல பெண் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மயிலை ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளியில் ஆசிரியைகள் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரை பள்ளியில் சேர்த்து அவர்களுக்கு ஊக்கம் அளித்து மற்ற குழந்தைகளுக்கு இணையாக திறமையை வளர்த்து அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றுள்ளனர்.

  விழுப்புரம் மாவட்டம் காந்தாடு பஞ்சாயத்து யூனியன் அரசு தொடக்கப்பள்ளியின் ஆங்கில ஆசிரியை அபர்ணா மோஹன் தனது சொந்த பணம் செலவு செய்து பள்ளி கட்டமைப்பை மேம்படுத்தி குழந்தைகளுக்கு ஆங்கிலம் பேசவும், சரியாக உச்சரிக்க பயிற்சியும் அளித்துவருகிறார். மேலும் ரூ.7 லட்சம் கடன் பெற்று காணொலி மூலம் மாணவர்கள் பயில எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்கியுள்ளார். இவரது தன்னலமற்ற சேவை செய்தியாக வந்து பலர் இவரது முயற்சியை பாராட்டி பள்ளிக்கு பொருளுதவி அளித்துள்ளனர். வீரர்களுக்கு விசேஷ பயிற்சி அளித்து அகில இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் முத்திரை பதிக்க உதவி அளித்து வருகிறார். இத்தகைய கனவு ஆசிரியர்கள் உள்ளதால் தான் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

  உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர் குறியீட்டில் 47 சதவீதம் எட்டி தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது. அரசு பணி போட்டி தேர்வுகளில் பெண்கள் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுகிறார்கள். பேனோ சபீன் என்ற பார்வை குறைவான மாற்றுத்திறனாளி தமிழ் பெண் அகில இந்திய அளவில் 2015-ம் ஆண்டு நடந்த ஐ.ஏ.எஸ். போட்டி தேர்வில் வெற்றி பெற்று ஐ.எப்.எஸ். அதிகாரியாக பணிபுரிகிறார். இத்தகைய முன்னேற்றத்திற்கு நடுவே மனதை உறுத்தும் நடப்புகள் வேதனை அளிக்கின்றன. ஒரு வருடத்திற்கு சுமார் ஒரு கோடி பெண் சிசுக்கள் இந்தியாவில் கொல்லப்படுகின்றன.

  பெண் சிசு வதையால் முளைக்கும் பிரச்சினைகள் இவை. பஞ்சாப் மாநிலத்தில் ஒரு உண்மை நிகழ்வு. விவசாய குடும்பத்தை சேர்ந்த கணவன்-மனைவிக்கு அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள். பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பெண்ணுக்கு திருமணம் செய்ய சொத்து முழுவதும் விற்றால் கூட போதாது. அத்தகைய அவல நிலை. அந்த பெண் மூன்றாவது முறை கர்ப்பமுற்றாள். அடுத்தது பெண் குழந்தை என்றால் பிறந்த வீட்டிலிருந்து திரும்ப வேண்டாம் என்று கணவன் கறாராக கூறிவிட்டான். ஆனால் பிறந்தது பெண்குழந்தை.

  அபலை பெண் செய்வதறியாது தவித்தாள். அவளது சகோதரன் கணவனிடம் பேசி மனைவியை ஏற்றுக்கொள் மூன்றாவது குழந்தை இருக்காது என்ற உத்திரவாதம் அளித்தான், அப்படியாவது தங்கைக்கு வாழ்வு கிடைக்கும் என்ற ஆசையோடு! ஆனால் அவளுக்கோ உடன்பாடில்லை. வேண்டா வெறுப்பாக கணவன் வீட்டிற்கு சென்று மூன்றாவது கைக்குழந்தையை வெறும் உடம்போடு பனியில் உறையட்டும் என்று நெஞ்சை கல்லாக்கி வீட்டு வாசல் திறந்த வெளியில் போட்டுவிட்டு படுத்தாள்.

  குழந்தை இறந்திருப்பாள் என்று நெஞ்சம் பதப்பதைக்க மறுநாள் எழுந்து பார்த்தால் குழந்தை உடம்பு பனியில் ஜில்லிட்டிருந்தது, ஆனால் மூச்சு நிற்கவில்லை. பச்சிளம் குழந்தைக்கு உயிரோடு போராடும் சக்தியும் வைராக்கியமும் இருக்கும்போது நான் ஏன் மனம் கலங்க வேண்டும் என்று அந்த தாய் மூன்று பெண் குழந்தைகளையும் போராட்டத்தின் நடுவே ஆளாக்கி வெற்றி கண்டாள். இத்தகைய வெற்றி போராட்டங்கள் வெறு சிலவே.

  சோகங்கள் பல. தமிழ்நாட்டில் தொட்டில் குழந்தை மற்றும் பெண் குழந்தைகள் பராமரிப்பு போன்ற நடவடிக்கைகளால் வட மாநிலங்களில் உள்ள பிரச்சினைகள் இங்கில்லை. பெண்கள் குரல் எங்கும் ஒலிக்க வேண்டும் என்பதை விட அவர்கள் எழுப்பும் பிரச்சினைகள் கேட்கப்பட வேண்டும், தீர்க்கப்பட வேண்டும் என்பதே அடிப்படை கோரிக்கை. பெண்கள் பாதுகாப்பு பல மாநிலங்களில் நகரங்களில் சவாலாக உள்ளது.

  பாலியல் கொடுமைகள் குறையவில்லை. டெல்லி நிர்பயா மானபங்க கொடுமைக்கு பிறகு பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்ய நீதியரசர் வர்மா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு நல்ல பல பரிந்துரைகள் பெண்களுக்கு எதிரான வழக்குகள் துரிதப்படுத்தவும் பாதுகாப்பு பலப்படுத்தவும் அளிக்கப்பட்டன. நடைமுறைபடுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம். சென்னை பாதுகாப்பான நகரம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் முதலிடம் வகிக்கிறது என்பதில் பெருமை கொள்ளலாம்.

  இணையதளத்தில் வரும் ஆபாச படங்கள் கைபேசி புகைப்படங்கள் விரசமான தகவல் பரிமாற்றங்கள் காவல்துறைக்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கு ஒரு சவால். பாலியல் கொடுமைகள் நிகழ்வதற்கு இவை காரணமாகின்றன. இயற்கை அழகு நிறைந்த பொள்ளாச்சியிலா இத்தகைய பாலியல் கொடுமைகள் என்று பதற வைக்கிறது. எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே: அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் பெற்றோர் வளர்ப்பினிலே என்பது உண்மையாகிறது. ஆண் பிள்ளைகளை வளர்ப்பதில் மெத்தன போக்கு இதற்கு காரணம். சுதந்திரம் கட்டுக்கடங்காமல் போகக்கூடாது. அதற்கு ஒரு வரையறை உண்டு. அதை தாண்டவிடக்கூடாது. பெண் விடுதலை பெற்றாயிற்று ஆனால் அவள் சுதந்திரம் பறிபோகாமல் பாதுகாக்க வேண்டியது நம் பொறுப்பு.

  நடராஜ் ஐ.பி.எஸ்.,

  சட்டமன்ற உறுப்பினர், மயிலாப்பூர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் தங்களை மேம்படுத்திக் கொள்வது அவசியமானது. தங்களுக்கு சட்டப்படியுள்ள உரிமைகளையும், பாதுகாப்பையும் உணரும்போதும் அவர்கள் சமூகத்தின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முடியும்.
  21 -ம் நூற்றாண்டிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வது வேதனை. இன்றைய காலக்கட்டத்தில் அவர்களை பாதுகாக்கும் வகையில் பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அறியாமையாலும், அச்சத்தாலும் அவை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

  பெண்களுக்கு அநீதிகளும், கொடுமைகளும், எல்லா தரப்பிலும், எல்லா வயதினருக்கும் பாகுபாடின்றி சரளமாக இழைக்கப்படுகிறது. கருவிலே அழிப்பது, சிசுக்கொலை என தொடங்கி வாழ்நாள் இறுதிவரை கொடுமைகள்தொடர் கதையாக தொடர்கிறது.

  பள்ளிக்கூடம், கல்லூரி, வேலைப்பார்க்குமிடம், வழிப்பாட்டு தலங்கள், பஸ், ரெயில், என எல்லா இடங்களிலும் பெண்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. இதைத்தவிர ஆணவ கொலைகளையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. பெண்கள், மனிதர்களாக, அவர்களுக்கும், அறிவு, ஆற்றல் உள்ளன என்பதை கருத்தில் கொள்ளாது ஆண் சமூகம் அவர்களை இன்பம் துய்க்கும் பொருளாக மட்டுமே பார்ப்பது கொடுமையிலும் கொடுமை. குடும்ப சூழலை எடுத்துக்கொண்டாலும் பெண்கள் சுதந்திர மனப்பான்மையுடன் செயல்பட முடியாத நிலை தானே நிலவுகிறது.

  தாய் தந்தையர் கடும் சொற்களால் கண்டிப்பது, காயம் ஏற்படும்படி அடிப்பது, மன உளைச்சல் ஏற்படும்படி தண்டிப்பது என்று பல விதமான கொடுமைகளை சிறுவயதில் இருந்தே பெண்கள் எதிர்கொள்கிறார்கள். பத்து வயதில், பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது வகுப்பில் முதல் இடம் பெறவில்லை என்று அறையில் பூட்டிவைக்கப்பட்ட மாணவி, விலை உயர்ந்த பேனாவை தொலைத்து விட்டாள் என்பதற்காக வீட்டிற்கு வெளியே பல மணிநேரம் நிற்க வைக்கப்பட்ட சிறுமி என்பன போன்ற நிகழ்வுகளை அன்றாடம் நாம் காண்கிறோம்.

  பெண்கள் என்றால் கண்ணுக்கு அழகாக, லட்சணமாக இருக்கவேண்டும் என்கிற மூடக்கருத்து பல பெண்களின் வாழ்கையை சீரழிக்கிறது. கருப்பாக இருக்கிறாய், குண்டாக இருக்கிறாய் என்று விமர்சித்து அவர்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை உண்டாக்குதல் ஒருபுறம் என்றால்,.மறு புறம் உனக்கு பாடத் தெரியுமா ஆடத் தெரியுமா என்று கேட்டு அவர்களை கடையில் விற்கும் பொருள்கள் போல பார்க்கப்படுகிறது.

  சின்னஞ்சிறு சிறுமியர்களை பலநாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வு கொள்ளும் கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன. வேலை செய்யும் இடங்களில் உடன் பணியாற்றும் ஊழியர்கள், மேலதிகாரிகள் என பாலியல் தொடர்பான சித்திரவதைகள் தொடர்கின்றன. குழுக்களாக ஆண்கள், பெண்கள் கூடியிருக்கும்போது பாலியல் தொடர்பான நகைச்சுவைகள், சீண்டல்களை பெண்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளன. தன் இச்சைக்கு இணங்காத பெண்ணின் மீது அமிலம் வீசி தாக்குதல், ஊர்திகளை கொண்டு ஏற்றி கொல்லுதல், பட்டப்பகலில் அரிவாளால் வெட்டி கொலைசெய்தல் என்ற பாதுகாப்பற்ற நிலையில் பெண்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

  திருமணமாகி கணவர் வீட்டுக்கு செல்லும் பெண்களுக்கு வரதட்சணை கொடுமை, ஓயாத வீட்டு வேலைகள், மனைவியின் விருப்பு வெறுப்புகளை கருத்தில் கொள்ளாது மேற்கொள்ளப்படும் உடலுறவுகள், கட்டாய கருச்சிதைவுகள் என தொடரும் சித்திரவதைகள் நாளுக்கு நாள் அரங்கேறி கொண்டே இருக்கின்றன.. இத்தகைய சூழலில், பெண்களுக்கு சட்டம் அளிக்கும் பாதுகாப்புகள் என்ன என்பதை அறிவோம்.

  பெண்கள் பாதுகாப்பு சட்ட விதிகள் 2005-ன் படி, குடும்பத்தில் ஏற்படும் சச்சரவுகளை தீர்த்துக் கொள்ளும் வகையில் இரண்டு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள், 2018-ல், சுமார் 2,785 சச்சரவுகளை நீதிமன்றம் செல்லாமலேயே தீர்த்து வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு 5 பெண்களில், இரண்டு பெண்கள், கணவர்களால், வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 1983-ல் இந்திய தண்டனை சட்டம் 498-ன் பிரிவின்படி கிரிமினல் குற்றமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் புகார்கள் கொடுக்க எல்லா பெண்களும் முன்வருவதில்லை. நிதி நிலைமை, குழந்தைகளின் எதிர்காலம், சமூகப் பார்வை போன்றவை புகார் அளிக்கத் தடைகளாக உள்ளன.

  வரதட்சணை தொல்லையால் பெண்களை தீக்கிரையாக்கும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடியது. வரதட்சணை தடுப்பு சட்டம் பெருமளவில் இத்தகைய குற்றங்களை குறைத்துவிட்டது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலமாக, பெண்கள் தைரியமாக காவல்நிலையத்துக்கு தாங்களாவே சென்று முறையிட வாய்ப்பு அதிகரித்தது. இருந்தாலும், பல இடங்களில், விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், வன்கொடுமைகள் திரைமறைவில் அரங்கேறி வருகின்றன.

  வரதட்சணை தடுப்பு சட்டம் (1961), பணியிடங்களில் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் (2013), கடத்தல் தடுப்பு சட்டம் (1986), சதி தடுப்பு சட்டம் (1987), பெண்களை அநாகரிகமாக சித்தரித்தல் (தடுப்பு) சட்டம் (1986), குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் (2005), என்று பெண்களுக்காக சட்டங்கள் உள்ளன. இது தவிர, இந்தியக் குற்றவியல் சட்டமும் (திருத்தப்பட்டது 2013) பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உள்ளது. மேலும், இந்து திருமண சட்டத்தின்படி, கணவனால் இழைக்கப்படும் கொடுமையில் இருந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் பெற சட்டத்தில் வழியுள்ளன. பரஸ்பர உடன்பாட்டின்படி விவாகரத்து பெற வழிவகுக்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை கிடைக்க சட்டங்கள் வழிவகுக்கின்றன.

  பாதிக்கப்பட்ட பெண்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கவேண்டும். அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரிப்பார்கள். மீண்டும் அத்தகைய பாதிப்புகள் ஏற்படாதவாறு தக்க ஆலோசனை கூறுவர். ஒருவேளை, இம்முயற்சி கைக்கூடவில்லை யென்றால் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் முழுமையாக விசாரணை செய்து தக்க ஆலோசனைகள் வழங்குவார். இந்த முயற்சியிலும் வெற்றிப்பெற முடியவில்லையெனில் சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

  பெண்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் தங்களை மேம்படுத்திக் கொள்வது அவசியமானது. தங்களுக்கு சட்டப்படியுள்ள உரிமைகளையும், பாதுகாப்பையும் உணரும்போதும் அவர்கள் சமூகத்தின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முடியும். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் அவமானங்களையும், வன்முறைகளையும் முதலில் மற்றவர்களுடன் பேசவேண்டும். அலுவலகமாக இருந்தால் சக பெண் ஊழியர்களிடம் பேச வேண்டும். அவர்கள் அறியும்படி செய்யவேண்டும். தனியாக போராடுவதைவிட குழுவாக இணைந்து எதிர்கொள்ளும்போது பலன்கள் கூடுதலாக கிடைக்கும். மேலும், பெண்கள் தங்கள் ஆண் குழந்தைகளை வளர்க்கும்போது அவர்களை பொறுப்புள்ளவர்களாகவும், பெண்களை மதிக்கக்கூடிய தன்மையுடனும் உருவாக்கவேண்டும்.

  தாட்சாயணி, ஐகோர்ட்டு வக்கீல், சென்னை.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இச்சமூகம் பெண்ணின் உடல் முழுமைக்கும் மானத்தை வைத்துள்ளது. ஒவ்வொரு நொடியும் அவர்கள் தம் மானம் காக்கவேண்டி நிரந்தரமான மன அழுத்தத்துடனே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
  கற்பிழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் அந்த பெண் எழுப்பும் ஓலம் மரணத்தின் ஓலத்தை விட கொடியது. பொள்ளாச்சியில் எழுந்த அந்த ஓலம் என் செவிகளை அடைந்த போதும், ஒளி அலைகளாக என் கண்களை அடைந்தபோதும் என் ரத்தம் கொதித்தது. அப்பெண்களுக்கு ஓடிப்போய் உதவ என்னால் இயலவில்லையே என்ற நிலை எனக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

  முகநூல் எனும் பெரும்பாலோர் படிக்கும் சமூக வலைதளத்தை நாம் எவ்வாறு, எதற்காக, ஏன் உபயோகிக்க வேண்டும் என்று காவல் துறையும் சமூக ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும் உரைத்த வண்ணம் உள்ளனர். ஏன் பெண்களே அவற்றை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்?

  “நெறி தவறினால் மானம் போம்” என்பது அறம். ஆனால் இச்சமூகம் பெண்ணின் உடல் முழுமைக்கும் மானத்தை வைத்துள்ளது. ஒவ்வொரு நொடியும் அவர்கள் தம் மானம் காக்கவேண்டி நிரந்தரமான மன அழுத்தத்துடனே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். பிறந்த நொடி முதல் இடுகாட்டில் அழியும் வரை அவளது மானம் அவளுடைய உடலோடு ஒட்டிக்கொண்டுள்ளது. ஆகவே தான் பெண்ணின் நிர்வாண புகைப்படங்கள் பொதுவெளிக்கு வந்தால் அது குற்றமாகிறது.

  என்னதான் புராணங்களும், அறங்களும் ஆணும், பெண்ணும் சமம் என்று சொல்லியிருந்தாலும் கூட பெண்களின் பாதுகாப்புக்காக சட்டங்கள் பல உருவாகி ஆண்களின் வக்கிரத்தை அடக்கி வைத்துள்ளது. இருப்பினும் காமக்கொடூரர்கள் உலகு முழுவதும் பரந்து கிடக்கின்றனர். அரேபிய நாடுகள் மற்றும் வடகொரியா நாடுகளில் உள்ள நீதி மேலாண்மை இங்கும் இருந்தால் பொள்ளாச்சியின் இக்கயவர்களுடைய சமாதிகள் மீது மரங்கள் முளைத்திருக்கும்.

  குற்றம் நடந்த மூன்று நான்கு நாட்களில் பாதிக்கப்பட்ட பெண்ணே கூட தன்னை சிதைத்தவர்களை சுட்டுக்கொல்ல வாய்ப்பினைப் பெற்றிருப்பர். நமது நாட்டிலோ எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. அதற்குள் பாதிக்கப்பட்ட பெண்களின் துயரங்கள் கூடிக்கொண்டே போகும். எனவே தாமதமாக கிடைக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகவே உணரவேண்டியுள்ளது.

  அறிவியல் அசுர வளர்ச்சியின் விளைவாக உருப்பெற்றுள்ள இச்சமூக வலைதளங்கள் நிறைய நன்மைகள் செய்தாலும் பொள்ளாச்சி வழக்கு போன்ற நிகழ்வுகள் பேரிடர் துயரங்களை ஏற்படுத்துகின்றது. இது போன்ற சைபர் குற்றங்கள் நமக்கு ஏற்படும் போது அதற்கான அடித்தளம் அமைத்துக்கொடுப்பதே நாம் தான் என்பதை நாம் உணரவேண்டும். எப்படிப்பட்ட தகவலை எந்த அளவுக்கு யாருடன் பரிமாறிக்கொள்ளலாம் என்பதை நாமே தான் தீர்மானிக்க வேண்டும்.

  நம்மோடு தொடர்பு கொண்டிருப்பது ஆணா, பெண்ணா, என்று கூட தெரியாத நிலையில் நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் நாம் அளித்து விடுவதால் ஏற்படும் இன்னல்கள் ஏராளம். வழக்கமான குற்றங்களில் யார் எப்போது எங்கே செய்கிறார்கள் என்று கண்டு பிடிக்கலாம். ஆனால் சைபர் குற்றங்களை நமக்கு தெரிந்தவர்களே வேறுமுகமூடியுடன் நமக்கு அருகில் இருப்பதாக சொல்லிக்கொண்டு, வெகு தொலைவில் இருந்து நமக்கே துரோகம் செய்வது தான் வேதனை. பொள்ளாச்சி போன்ற சம்பவங்கள் இந்த நொடியில் கூட வேறெங்காவது நடந்து கொண்டுதான் இருக்கும்.

  பாதிக்கப்பட்ட பெண்கள் சோர்ந்து முடங்கிவிடக்கூடாது. தனக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னொரு பெண்ணுக்கு ஏற்பட அனுமதிக்கக்கூடாது என்ற எண்ணம் மேலோங்க வேண்டும். வலுவாக காலூன்றி போராட வேண்டிய தருணம் இது. தமிழகமே உங்களின் பக்கம் நிற்கிறது. நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என்று ஒரு வரி சொன்னால் சோர்ந்துபோன உங்களின் உறவினரும், நண்பர்களும் உங்களுக்காக உதவ முன் வருவார்கள். பொது மக்களும், சட்டமும் இந்த நிலையில் உங்களுக்கு நிச்சயம் துணை நிற்பர்.

  உங்கள் துயரம் இச்சமூகத்தின் துயரம், மரியாதை, கவுரவம், ஏழ்மை, கற்பு, எதிர்காலம் என்றெல்லாம் உங்கள் முன் நிற்கும் தடைகளை உடைத்தெறிந்து விட்டு புறப்படுங்கள். உங்கள் உதவியின்றி சி.பி.சி.ஐ.டியோ, சி.பி.ஐயோ வெற்றிக்கரமான எந்த விசாரணை வியூகங்களையும் அமைக்க இயலாது. உங்களின் பாதுகாப்பு அரணாக உள்ள சட்டங்களை உபயோகியுங்கள். மீறியவர்களை எதிர்த்துப் போராடுங்கள். நீதி கிடைக்கும் வரை ஓயக்கூடாது. காவல் துறையில் இதுபோன்ற நிகழ்வுகளை கடமையோடும், உணர்வுபூர்வமாகவும் கையாளும் அதிகாரிகள் நிறையவே உள்ளனர்.

  புகார் கொடுத்த பெண்ணின் விவரங்களை பாதுகாப்பு மற்றும் அவரது எதிர்காலம் கருதி பொது வெளியில் வெளியிடக்கூடாது என்பது சட்டமாக உள்ளது. இருப்பினும் இன்று பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் பொது வெளிக்கு வந்து விட்டது. அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டதால் அவ்வாறு நடந்திருக்க வாய்ப்புள்ளது. பகிரங்கமாக வெளியிட்டு இருந்தால் அது காவல் துறையாகவே இருந்தாலும் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்.

  நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக தெரியவருகிறது. ஆனால் இன்று வரை ஒரேயொரு பெண்ணைத் தவிர யாரும் புகார் கொடுக்கவில்லை. புகார் இல்லாத நிலையில் காவல்துறையினர் என்ன செய்ய முடியும்?. வீடியோ ஆதாரங்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் சென்று புகார் பெற்று எதிரிகள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்து தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

  பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் விசாரணைக்கு ஒத்துழைப்பார்கள் என்று தெரியாது. பாதிக்கப்பட்டவரை போலீசார் தொடர்பு கொண்ட மாத்திரத்திலேயே அவர்கள் தம் மன உளைச்சலின் விளிம்புக்கே சென்று தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டிய நிகழ்வுகள் நிறைய உண்டு. தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. குடும்பத்தார்களும் ஒத்துழைப்பு தர மறுத்து விடுவது உண்டு.

  பாதிக்கப்பட்டவர்கள் பெயர் மற்றும் குடும்ப விவரங்கள் வெளியே வராத வண்ணம் விசாரிக்கும் கடமை காவல் துறையினருக்கும், நீதிமன்றத்திற்கும் உண்டு. அதனை உறுதி செய்தால் மட்டுமே இது போன்ற வழக்குகளில் சிறப்பான விசாரணையும், தண்டனையும் எதிர்பார்க்க இயலும். அதே நேரத்தில் பத்திரிகைகளும், ஊடகங்களும் காவல் துறையை விட வேகமாக விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன.

  எத்தனைதான் தவிர்த்தாலும் ஊடகங்கள் பாதிக்கப்பட்டவருடன் அவரது குடும்பத்தினரையும் சேர்த்து நிழற்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்து வெளியிடுகின்றனர். சட்டத்திற்கு பயந்து முகத்தை மட்டும் மறைத்து வெளியிடுகின்றனர். இதனால் அச்சம் கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணோ அவரது குடும்பத்தாரோ நிச்சயம் காவல் துறைக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். ஊடகங்கள் தம் பொறுப்பை உணர வேண்டும். அதே சமயம் அரசின் விசாரணையில் நடக்கும் தவறுகளை புகார்தாரர் பாதிக்கப்படாத வகையில் பொது வெளிக்கு கொண்டுவர பத்திரிக்கைக்கும், ஊடகத்திற்கும் உரிமை உண்டு.

  மு.அசோக்குமார்,
  போலீஸ் சூப்பிரண்டு (ஓய்வு)
  வாய்ஸ் ஆப் வாய்ஸ்லெஸ்
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முகநூலில் ஒரு ஸ்டேட்டஸ் போடும் போதோ, டிக்டாக் செயலியில் ஆடல் பாடலை போடும் போதோ சற்று சிந்திக்க வேண்டும். இதனால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என உணர்ந்து செயல்பட்டால் நல்லது.
  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் தாக்கத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் சிக்கிதான் அப்பெண்கள் சீரழிந்து உள்ளனர். இதனால் பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றை தவிர்த்து விடலாமா என்றால் அதற்கு சரியென சொல்ல மாட்டேன். பரிணாம வளர்ச்சியை, அறிவியல் வளர்ச்சியை தவிர்க்க முடியாது, தடுக்க முடியாது.

  ஆரம்ப காலத்தில் மனிதன் காடுகளில் வசித்தான். பின்னர் வீடு கட்டி குடிபுகுந்தான். இப்போது அடுக்குமாடி குடியிருப்பு ஆகிவிட்டது. அதனால் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த மனிதர்கள் இன்று தனிக்குடித்தனமாக மாறி தீவாகி விட்டார்கள். பக்கத்தில் இருப்பவர்கள் கூட யார் என்று தெரியவில்லை. அடுத்த வீடு இன்னொரு பூமியாகி விட்டது.

  ஆரம்பத்தில் மனிதன் பயணத்திற்கு மாடு, குதிரை வண்டிகளை பயன்படுத்தினான். பின்னர் கார், ரெயில் வந்தது. இப்போது அதிவீன காரில் பறக்கிறான். காலம் தோறும் இப்படி மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அவற்றை பயன்படுத்த தெரிந்து கொள்கிறோம் அல்லவா? அதுபோன்றுதான் இன்றைய காலத்திற்கேற்ப வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும்.

  எந்த ஒரு விசயத்திலும் நன்மையும் இருக்கும். தீமையும் இருக்கும். உடல் நலத்துக்கு டாக்டர்கள் கொடுக்கும் மாத்திரையைக்கூட பக்கவிளைவுகள் உண்டு. பேஸ்புக்கில் இருக்காதா என்ன? எப்படி அணுக வேண்டும் என்ற புரிதல் இருந்தால் போதும் பிரச்சினை ஏற்படாது. இதற்கு கற்றுக்கொடுத்தல்தான் முக்கியம்.
  பள்ளியில் இருந்தே இதனை ஆரம்பிக்க வேண்டும். விளையாட்டுக்கு பயிற்சி இருப்பது போல், பொது அறிவுக்கு பாடம் நடத்துவது போல் வாழ் வியல் பற்றிய மனவளக்கலை பயிற்சியும் அளிக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க் கையில் ஏற்படும் பிரச்சினைகளை சந்திக்க அவர்களுக்கு மனதிடம் உண்டாகும்.

  ஜெர்மனி கார்கள்தான் பேமஸ். அங்குள்ள சாலைகளும் உலத்தரமானவை. போக்குவரத்து குற்றங்களுக்கு அதிகப்படியான அபராதமோ தண்டனையோ விதிக்கும் சட்ட திட்டம் கிடையாது. அப்படி இருந்தும் உலகிலேயே அங்குதான் விபத்துக்கள் குறைவு. காரணம் எப்படி வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு நன்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. அதுபோல் வாழ்க்கை முறை குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கற்பித்து வந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது.

  ஒவ்வொரு குழந்தையும் வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வை பெற்று விட்டால் பிரச்சினை ஏற்படும் சமயங்களில் அவர்கள் உடலில் சுரக்கும் ஹார்மோன்களே சிக்கல்களில் இருந்து காப்பாற்றி கொள்ளும் திறனை அளிக்கும்.

  பொதுவாக மூன்று விசயங்களில் ஈர்ப்பு இருக்கும். ஒன்று ஆண்&பெண் கவர்ச்சி. இரண்டாவது புகழ். புகழுக்கு மயங்காதவர்கள் யாருமே கிடையாது. மூன்றாவது அன்பு. அன்புக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை. இந்த மூன்றும் கவர்ந்து இழுப்பவை. அதனால் இந்த மூன்றும் கிடைக்கும் இடம் நோக்கி அனைவரும் செல்கிறார்கள்.

  இன்றைய இளைஞர்களுக்கு சமூகவலை தளங்கள் மூலம் இந்த மூன்றும் கிடைக்கிறது. அதாவது அவர்கள் போடும் ஸ்டேடஸ், டிக்டாக் செயலில் ஆடல் பாடல் மூலம் பிரபலம் என்ற புகழ் கிடைக்கிறது. அதன் மூலம் ஆண்&பெண்களிடையே நட்பு ஏற்பட்டு கவர்ச்சியால் ஈர்க்கப்படுகிறார்கள். அடுத்து தொடர்ந்து காட்டும் அன்பில் அவர்கள் மயங்கி விழுகிறார்கள். அதன் பின்னரே இது போன்ற வக்கிரமான குற்றச் செயல்கள் நடக்கின்றன.

  சமூக வலைதளங்கள் மூலம் கிடைக்கும் இவையாவும் உண்மையானவை அல்ல. ஒருவருக்கு ஐந்தாயிரம் பேர் எப்படி நண்பனாக, தோழியாக இருக்க முடியும்? அந்த உறவுகளில் போலியானவையும் இருக்கலாம். எல்லாவற்றையும் உண்மை என்று நம்பி விடுவதால் தான் பிரச்சினையே. வீடு வேறு, வெளிஉலகம் வேறு. வீட்டில் சில குறைகள் இருக்கலாம். வெளியே இருக்கும் பூங்கா பார்க்க பசுமையாக அழகாகத்தான் இருக்கும். அது உங்கள் வாழ்விடம் ஆகாது. அதுபோல் நம் வீட்டு உறவுகள் போல் வெளி தொடர்பு உறவுகள் இருக்காது. அதை உண்மை என்று மயங்காதீர்கள். இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை உணர்ந்து கொண்டால் எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ளலாம்.

  சினிமாவில் நடிக்கும் நடிகர் அந்த கதையுடன் எப்படி தொடர்பு இல்லாமல் இருக்கிறாரோ அது போன்றதுதான் இதுவும். ஆனால் பெண்கள் முகநூலில் காட்டும் அன்பை உண்மை என்று நம்பி படுகுழியில் விழுந்து விடுகிறார்கள்.

  எனவே முகநூலில் ஒரு ஸ்டேட்டஸ் போடும் போதோ, டிக்டாக் செயலியில் ஆடல் பாடலை போடும் போதோ சற்று சிந்திக்க வேண்டும். இதனால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என உணர்ந்து செயல்பட்டால் நல்லது.

  பொதுவாக நேர்மறையான விசயங்க ளைவிட எதிர்மறையான விசயங்களே மக்கள் மனதில் அதிக ஈர்ப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். அதாவது 1:16 என்ற விகிதத்தில் உள்ளது. 16 நல்ல விசயங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை ஒரு கெட்ட விசயம் செய்து விடும். அதனால்தான் குழந்தைகள் எதிர்மறையான செயல்களால் எளிதில் ஈர்க்கப்படுகின்றனர். எனவே எப்பொழுதும் நல்லவற்றையே பேச வேண்டும். நல்லவற்றையே செய்ய வேண்டும். சூழலை நல்லவிதமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

  மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தோழமையுடன் நடந்து கொள்ள வேண்டும். கண்டிப்புடன் இருந்தால் அது பெற்றோர்&குழந்தைகளிடையே இடைவெளியை ஏற்படுத்தி விடும். அதில் தான் ஆபத்து உண்டாகிறது. பயத்தின் காரணமாக குழந்தைகள் தங்கள் பிரச்சினையை சொல்ல மாட்டார்கள். இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக தங்களுக்கு ஆறுதலாக இருக்கும் நபர்களைத்தேடி செல்வார்கள். இப்படியாகத்தான் கயவர்கள் காட்டும் போலியான அன்பில் மாட்டிக்கொள்கிறார்கள்.

  சமூகவலை தளங்களில் ஆண்கள் வீசும் வலைகளில் பெண்கள் எப்படி சிக்கி கொள்கிறார்கள் என்றால் மனோவசியம் செய்யப்படுகிறார்கள். முகநூலில் நட்பு கொண்ட ஆண்&பெண் இருவரும் தொடக்கத்தில் மனம் விட்டு பேசுகிறார்கள். அடுத்த கட்டமாக அந்த ஆண் தன் விருப்பங்களை திரும்ப திரும்ப கூறுகிறான். எந்தவொரு கட்டளையும் தொடர்ந்து கொடுக்கும் போது அதை செய்ய மனம் பழக்கப்பட்டு விடுகிறது. பறவைகள், விலங்குகளை பழக்கப்படுத்துகிறோம் அல்லவா, அது போல் தான். அந்த நபர் மீது நம்பிக்கை ஏற்பட்டதும் அவள் தன்னை சுற்றி அமைத்திருந்த வேலியை உடைத்து விடுகிறாள். அதன் பின் அவன் சொல்கிறபடி நடக்க தொடங்குகிறாள். இந்த மனோவசியத்தில் தான் பெண்கள் சிக்கி கொள்கிறார்கள்.

  பொதுவாக பெண் குழந்தைகள் இதுபோன்ற விசயங்களை வெளியே சொல்ல மாட்டார்கள் என்பதால் ஆண்கள் துணிந்து தவறு செய்கிறார்கள். பெண் குழந்தைகளும் பெற்றோரிடம் எதனையும் தெரியப்படுத்தும் நிலையில் இருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தை களிடம் அன்பாக தோழமையாக நடந்து கொண்டால் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் எந்த பிரச்சினைகள் என்றாலும் தயங்காமல் தெரிவிப்பார்கள். பின் விளைவுகள் ஏற்படும் முன்னரே தடுத்து நிறுத்தி விடலாம்.

  மேலும் பெற்றோர்கள் என் குழந்தை அப்படியெல்லாம் தவறு செய்யமாட்டான். அந்த துணிவெல்லாம் அவனுக்கு கிடையாது என்றும், என் குழந்தை எந்த பிரச்சினையென்றாலும் சமாளித்து விடுவான் என்றும் நம்பியிருக்கக் கூடாது. அதுவும் ஆபத்தை விளைவிக்கும். குழந்தைகளிடம் கஷ்டப்பட்டு படிங்க, கஷ்டப்பட்டு வேலை செய்யுங்க. அப்போதுதான் நல்லா இருக்கலாம் என்று சொல்லி வந்தால், தேவையான விஷயங்களை செய்ய கஷ்டம்தான் படணும், மகிழ்ச்சிக்கான தேடல் என்பது நல்ல விசயங்களில் இருக்காது போல என நினைத்து கேளிக்கை விசயங்களில் நாட்டம் கொள்கின்றனர்.

  எனவே அவர்கள் எதனையும் இஷ்டப்பட்டு செய்யும் வகையில் நடந்து கொண்டால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் மனம் கெட்ட விசயங்களில் அலை பாயாது.

  நாம் எந்த விசயத்தை அடிக்கடி நினைக்கிறமோ, விரும்புகிறமோ அது ஆழ்மனதில் பதிந்து விடும். அதனால் குழந்தைகளிடம் எப்போதும் நல்லவற்றையே பேச வேண்டும். அவர்களை சுற்றிலும் நல்ல சூழலை ஏற்படுத்த வேண்டும். இல்லை என்றால் எவ்வளவுதான் உணர்வு மனதளவில் நாம் நல்லவற்றை எண்ணி னாலும் ஆழ்மனதில் கெட்ட விசயங்கள் பதிந்திருந்தால் அதுவே வெளிப்பட்டு செயலாகும்.

  இரண்டு வகையான பார்வை இருக்கிறது. பிரச்சினைகள் இல்லாத சூழலை ஏற்படுத்துவது ஒரு விசயம். பிரச்சினைகள் இருந்தாலும் அதில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது? ஒரு விசயத்தில் பிரச்சினை இருக்கிறதா இல்லையா? பிரச்சினை இருந்தால் அதனை எப்படி கையாள்வது என்பது குறித்து பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கும் அறிவுத்த வேண்டும்.

  இந்த பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு மனநல வாழ்வியல் ஆலோசகராக நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் இந்த பாதிப்பால் அவர்கள் சுருண்டு போய்விடக் கூடாது. இது அவங்களுக்கு ஒரு பெரிய விபத்தாக இருக்கிறது. சாதாரணமாக ஒரு விபத்தை கண்ணால் பார்த்தால் கூட அது மனதுக்குள் ஒரு அதிர்ச்சியை துயரத்தை ஏற்படுத்தும்.

  ஆனால் அவர்களே விபத்தில் சிக்கி இருக்கும் போது எப்படி இருக்கும்? அதுவும் தன் மீது அன்பு காட்டிய நபரே இப்படி நடந்து கொண்டதால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள். பெரிய பாரமாக தான் இருக்கும். இந்த சம்பவம் அவர்கள் மனதில் சித்திரமாக பதிந்திருக்கும். இது பின்னாட்களில் வேறு எது நடந்தாலும் பதட்டத்தை ஏற்படுத்தும். எனவே அதில் இருந்து மீட்டெடுக்க அவர்களுக்கு தகுந்த மனநல சிகிச்சையும் மனநல திட பயிற்சியும் அளிக்க வேண்டும்.

  Email:fajila@hotmil.com
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விவரங்கள் அறியாமல் இணையத் தொடர்புகளுக்குள் செல்வதை விட்டுவிடுங்கள். ஊர், பெயர் தெரியாத எவரிடமும் அந்தரங்கம் பகிராதீர்கள். நம்பிப் போகலாம் என்று, காதல் என்று எண்ணி காமச்சாக்கடைக்குள் விழுந்துவிடாதீர்கள்.
  மனிதன் ஒரு ‘சமூக விலங்கு’ என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் மனிதனுக்குள் மிருகம் புகுந்து, மனிதம் மரணித்துப்போய் வெகு காலமாகிறது. எங்கும் பச்சைப் புல்வெளி போர்த்திட, இயற்கையின் தாலாட்டாக பல்வேறு மொழி திரைப்பட கதாநாயகர்கள் இந்த ஊரின் வயல் வெளிகளிலும், தோப்புகளிலும் கதாநாயகிகளோடு பாடிக் கொண்டிருந்ததையே, பல வருடங்களாகப் பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு, உள்ளூர் ஓநாய் வில்லன்கள் தமது வீடுகளுக்குள்ளேயே வந்து படம் எடுத்ததைப் பார்க்கத் தவறிவிட்டார்கள்.

  மலையும், மலை சூழ்ந்த பூமியும் கண்ணீர் தேசமாகிவிட்டது. இணையவழி குற்றங்கள் என்பதில் எல்லா எல்லைக் கோடுகளையும் தாண்டி, உலக நாடுகள் உறக்கம் தொலைத்து சிண்டைப் பிய்த்துக்கொண்டு தீர்வைத் தேடிக் கொண்டிருக்கின்றன. முகநூல் என்றால் என்ன? டிக்டாக் என்றால் என்ன? இன்ஸ்டாகிராம் என்றால் என்ன? என்ற அடிப்படைப் பொருள் கூட அறியாத பல பெற்றோர்கள், பிள்ளைகளுக்காக பாசத்தின் அடிமைகளாக மாறிப்போய் வாங்கி கொடுத்த ஒற்றைச் சாதனம் தான் இன்று சமூகத்தின் அத்தனை அழுக்குகளும் சங்கமம் ஆகும் இடமாக மாறிவிட்டது.

  இன்று இரவுக்குள் பிறந்தநாள் விழாவின் போது ஸ்மார்ட்போன் தரவில்லையென்றால், ‘செத்துப்போவேன்’ என்று நெருப்பில் எரிந்து போன கொத்தனாரின் பெண் ஒரு புறம், என் பிள்ளையின் பிறந்த நாளுக்கு ஒரு லட்சம் ரூபாய் தொலைபேசி தந்தேன் என்று பெருமை பேசும் பெற்றோர் மறுபுறம். கண்டிப்பு என்றால் என்னவென்றே அறியாமல் வளர்க்கப்படும் ஒரு சமுதாயம் மிக எளிதில் யாரையும் தொடர்புகொள்ள வைக்கும் சமூக ஊடகம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

  நான் இதில் தான் பாடம் படிக்கிறேன். தகவல் தேடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு பெற்றோரை ஏமாற்றும் பிள்ளைகள், 24 மணி நேரமும் இணையத்தொடர்பிலேயே வைத்திருக்கும், வாட்ஸ்-அப்பும், டிக்டாக்கும் எதைக்கொண்டு வந்தது?

  “தலைவாரி பூச்சூடி உன்னை, பாடசாலைக்கு போ என்று சொன்னாள் உன் அன்னை” என்றார் பாரதிதாசன். ஆனால் காலம் காலமாக வளர்த்த பெற்றோரை ஏமாற்றிவிட்டு பத்துநாள் பழகிய ஒருவனின் மயக்க மொழி கேட்டு, பண்ணை வீட்டிற்கும், விடுதிக்கும் சென்றுவிட்டு ‘உன்னை நம்பித் தானே வந்தேன் என்று கதறும் குரல் கேட்கும் போது கண்ணுக்குள் வராத அந்தப்பெற்றோரும், அவர்கள் கண்ணீருமே நமது அக்கறை தற்போதைக்கு. நான் கடந்த 15 வருடங்களாக இது இலவசமாக வந்த சனியன் என்று எல்லா ஊடகங்களின் மூலமாகவும் கதறிக்கொண்டிருந்தாலும், இதன் எண்ணிக்கை கூடியது போலவே, குற்றங்களும் கூடிய வண்ணமே உள்ளது.

  24 மணி நேரமும் பணி மற்றும் பணத்தின் பின்னால், பதவிகளின் பின்னால், மனிதர்கள் போக தனித்துவிடப்படும் ஆண், பெண் பிள்ளைகள் தொழில் நுட்பத்தின் நுணுக்கங்கள் அறியாமல் யாராவது விரிக்கும் வலையில் சிக்கிவிடுகிறார்கள்.

  வாட்ஸ்-அப், முகநூல் போன்றவை சமூகக்கேடுகள் என்று உச்சநீதிமன்றம் உணரவே பத்தாண்டுகள் ஆயிற்று. வெறுப்பு, பகைமை, மதவெறி போன்றவற்றை ஊட்டி வளர்ப்பவை இவைதான் என்று சொன்ன அவர்களுக்கே வாட்ஸ்-அப் நிறுவனம், ஒரு செய்தியுனுடைய மூலம் என்ற தொடக்கப்புள்ளியை எங்களால் தர இயலாது என்று அரசாங்கத்திற்கே அல்வா கொடுக்கும் பன்னாட்டு ஊடக உரிமையாளர்கள், இப்படி சட்டம் தொழில்நுட்பம் எல்லாமே என்னவென அறியாமல் இளைய சமுதாயத்திடம் கருவிகள் கொடுத்த அரசுகள் எதையுமே இதைப்பற்றிக் கற்பிக்கவில்லை என்பது மிகப்பெரும் சோகம்.முகநூலிலும், வாட்ஸ்-அப்களிலும் மார்க் ஜூக்கர் பெர்க் என்ற வணிக மூளை விடுத்த வலைபற்றி அரசுகளுக்கே தெரியவில்லை எனும்போது அப்பாவிகள் எந்த மூளைக்கு?

  இப்போதைக்குள்ள தகவல் தொழில்நுட்ப சட்டப்படி எல்லாவிதமான குற்றங்களும் ஜாமீனில் விடக்கூடியவை, சமாதானம் செய்யக்கூடியவை (ஒரு சில பிரிவுகள் தவிர) இப்படி எளிமையான சட்டத்தின்மூலம் நார் நாராக கிழிக்கப்படும் மனித வாழ்வவைக் காக்கும் முயற்சியில் இன்னும் அரசுகளே போக வேண்டிய தூரம் அதிகம்.

  முகம் அற்ற மனிதர்களோடு உறவு கொள்ள வைக்கும் அறியாமையை தொழில்நுட்பமே அறிமுகம் செய்கிறது. பள்ளி தொடங்கி கல்லூரிகள் வரை கண்டிப்பு காட்டினால் விமர்சனம் செய்யும் சூழல் மாறி எங்கே தொடங்கலாம் என்ற நம்பிக்கை இப்போது தான் அரும்புகிறது.

  நிர்பயா வழக்கு, மும்பையின் பெண் பத்திரிகையாளர் வழக்கு, அயனாவரம் வழக்கு என்று தொடர்ந்து வந்தாலும் அவற்றில் இருந்து எந்தப்பாடத்தையும் நாம் படிக்கவில்லை.இந்தப் பொள்ளாச்சி வழக்கிலும், தொடக்கத்திலேயே விதிமுறைகளை மீறிப் புலனாய்வை திசைத்திருப்பும் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் தேவையற்ற அரசியல் குறுக்கீட்டால் இந்த வழக்கும் தடம் மாறலாம்.

  பிள்ளைகள் பெற்றோர் சொல் கேட்டு நடக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. விவரங்கள் அறியாமல் இணையத் தொடர்புகளுக்குள் செல்வதை விட்டுவிடுங்கள். ஊர், பெயர் தெரியாத எவரிடமும் அந்தரங்கம் பகிராதீர்கள். நம்பிப் போகலாம் என்று, காதல் என்று எண்ணி காமச்சாக்கடைக்குள் விழுந்துவிடாதீர்கள். அறிமுகம் இல்லாத அக்கவுண்டுக்கு லைக், ஷேர் வேண்டாம். தெரியாத தொலைபேசி அழைப்புகளை தொடவே வேண்டாம். (ரூ.2 ஆயிரம் தொலைபேசியில் கூட பதிவு செய்யும் வசதி உண்டு.) புகைப்படம், விலாசம் தரவே வேண்டாம். குறிப்பாக ‘செல்பி’ வேண்டவே வேண்டாம். இவை தவிர எப்போதாவது ஓய்வு கிடைத்தால் பெற்றோருடன் பேசுங்கள்.

  வே.பாலு, வழக்கறிஞர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலகளவில் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்பது வருத்தத்துக்குரியசெய்தி.
  உலகத்தில் எல்லா சமூகத்திலும், சாதி, மதம் என்கிற வித்தியாசமின்றி ஒட்டு மொத்தமாக ஒடுக்கப்படுகிற ஒரு இனம் உண்டு என்றால் அது பெண்ணினமேஆகும். தாமஸ்ராய்ட்டர்ஸ் ஆய்வின் முடிவின்படி உலகளவில் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்பது வருத்தத்துக்குரியசெய்தி.

  கருவிலேயே பெண் சிசுவாக இருந்தால் கருச்சிதைவிலிருந்து, பிறந்தவுடன் பெண்குழந்தையாக இருந்தால் கள்ளிப்பால் என்று வன்முறை தொடங்கி விடுகிறது. சாஸ்திர சம்பிரதாயங்கள் என்கிற பெயரில் பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், விதவை, பொட்டுக்கட்டுதல் என்று காலங்காலமாக பெண்கள் வஞ்சிக்கப்பட்டனர்.

  பெரும்பாலும் இத்தகையவன்முறைகள்,90 சதவீதம் நெருங்கிய உறவினர்களாலோ, நண்பர்களாலோ, அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களாலோ, பணியிடத்திலோ, பள்ளிக்கூடங்களிலோ உள்ளவர்களால் நடத்தப்படுகிறது.

  இதில் வேதனையான விஷயம், பெரும்பாலான குற்றங்கள் வெளியே தெரிவதில்லை. அப்படியே வந்தாலும் செய்தித்தாள்களில் எங்கோ ஒருமூலையில் ஒதுங்கி விடுகிறது. உதாரணத்திற்கு சமீபத்தில் சேலம் ஆத்தூரை சேர்ந்த ராஜலட்சுமி என்கிற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டு, தலை வெட்டப்பட்டுக் கொலை செய்யபட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்க வேண்டும். அப்படியே நாட்டையே உலுக்கினாலும், ஒரே வாரத்தில் மறக்கடிக்கப்படுகிறது. உதாரணமாக, காஷ்மீரில் எட்டு வயது பெண்குழந்தை ஆசிபா பலநாட்கள் கோவிலுக்குள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதில் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்படவில்லை என்பது தான் வேதனை. இவைகள் எல்லாம் தடுக்கப்பட என்னதான் வழி?

  குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும். இந்திய அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதம், 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியில் வல்லுறவு கொள்பவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படும் என்று சட்டம் இயற்றியுள்ளது. வரவேற்கப்படவேண்டிய ஒன்றானாலும், குற்றங்கள் விசாரணை செய்து நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறுவதற்கும் பலஆண்டுகள் ஆகி விடுகிறது.

  தண்டனைகள் மட்டும் குற்றங்களை முழுவதும் குறைத்துவிட முடியாது. பெற்றோர்கள் தங்களது ஆண்குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களிடத்தே, பெண்களும் இவ்வுலகத்தில் வாழ்வதற்கு சமஉரிமை உடையவர்கள்; ஆண்களுக்கு அடிமையாக, ஏவல் செய்பவர்களாக உருவாக்கப்பட்டவர்கள் அல்ல என்கிற உண்மையை உரத்துச் சொல்ல வேண்டும்.  சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை. தைரியம், பலம், அறிவு, இவைகளை எல்லாம் ஆணுக்கு மட்டுமே உரியகுணங்களாக சித்தரிக்கப்படுகிறது, அத்தகைய சூழலில் வளரும் பெண் குழந்தைகள் தங்களுக்கு புத்திசாலித்தனமும் சாமர்த்தியமும் குறைவு, மற்றும் பலவீனமானவர் என்று கருதத் தொடங்கி விடுகின்றனர். உதாரணமாக, ஏதாவது பொருளினைத் கைத்தவறி நழுவவிட்டால், ஆண்குழந்தை அதைபற்றிக் கவலைக்கொள்ளாது.

  வீட்டிலும் திட்டிவிட்டு விட்டு விடுவார்கள். அதே நேரத்தில் பெண் குழந்தைக்கு திட்டு மட்டுமல்ல, உனக்கு ஏன் இந்த கடினமான வேலை என்று கூறப்படும் போது பெண் குழந்தை தன்னால் கடினமானவற்றை செய்ய முடியாது என்று நம்பத் தொடங்குகிறது. இப்படியாக வளரும் அப்பருவத்திலேயே அதன் மனதில் நீ பலவீனமானவள் என்கிற ஆழமான விதை ஊன்றப்படுகிறது. நன்கு பயிற்சிப் பெற்ற தடகள வீராங்கனையுடனோ, குத்துச்சண்டை பயின்ற பெண்ணிடமோ அவ்வாறு பயிற்சிப் பெறாத ஆண்கள் மோதி வெற்றிப் பெறமுடியாது. ஆகவே ஆணோ, பெண்ணோ, நான் யாருக்கும் சளைத்தவரல்ல, என்கிற எண்ணமும், பயிற்சியும் பெற்றால் எதையும் செய்ய முடியும் என்பது தான் உண்மை.

  ஊடகங்கள் மற்றும் தொலைக் காட்சி தொடர்கள் பெண்களுக்கு எதிரானதாகவும் வன்முறையை தூண்டுபவையாகவும் உள்ளன. திரைப்படங்கள் போன்று தணிக்கைக்குழு இல்லையென்றாலும் சுயக்கட்டுப்பாடுகளோடு நம் வீட்டு பெண்களும் குழந்தைகளும் பார்ப்பதாக இருந்தால் எத்தகைய பொறுப்புணர்வோடு நடந்து கொள்வோமோ அந்த வகையில் நடந்து கொள்ள வேண்டும். அதேப்போன்று ஊடகங்கள் பெண்களுக்கு எதிரான கருத்துகளையும் கேலி செய்யும் செய்திகளையும் வெளியிடக்கூடாது.

  பெண்களையும் சகமனிதர்களாக பார்க்காமல் அவர்கள் தங்ககள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய கருவியாக பார்க்கும் மனோபாவமே அடிப்படை முறையான பாலினகல்வி கொடுக்காமையும், இத்தகைய தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கின்றன.

  மீடூ (நானும்கூட) இயக்கங்கள் தற்போது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வடிக்கால்களாக அமைந்துள்ளன. மேலைநாடுகளில் மட்டுமின்றி நமது நாட்டில் கூட, பாதிக்கப்பட்ட பெண்கள் சமூகவலைத்தளங்களில் தங்களுக்கு கொடுமை இழைத்தோரை குறித்த உண்மையை வெளியிடுவதன் மூலமாக, தவறு செய்தவர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. இது போன்று தவறு செய்தவர்களை வெளிப்படுத்தும் போது எதிர்காலத்தில் தவறு செய்ய முயற்சி செய்பவர்களை தடுக்க ஏதுவாகும். பெண்களுக்கு எதிராக தொடரும் இழிச்செயல்கள் முடிவுக்கு கொண்டு வர இந்நாளில் உறுதி ஏற்போம்.

  வழக்கறிஞர் நல்லினி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமூகத்தின் கண்கள் என வர்ணிக்கப்படும் பெண்கள் உலகம் தோன்றிய காலம் முதலே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான போராட்டத்தில்தான் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.
  இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதையும் சமீபத்தில் ‘மீ டூ’ என்ற பெரும் புயல் ஒன்று தாக்கி ஓய்ந்திருக்கிறது. ஆண்டாண்டு காலமாக பணித்தலங்களிலும், சமூகத்திலும் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைக்கு எதிராக பெண்கள் வெகுண்டெழுந்ததன் விளைவுதான் அந்த சூறாவளியாக சுழன்றடித்தது.

  சமூகத்தில் நல்லவர் போல வேடமிட்டு திரியும் பல பெருந்தலைகளின் பொய் முகங்கள் இந்த புயலில் அடித்து செல்லப்பட்டு உண்மை முகம் வெளிப்பட்டன. ஆணாதிக்க சமூகத்துக்கு சவுக்கடி கொடுத்தது மட்டுமின்றி, மங்கையர் அனுபவித்து வரும் துயர்களுக்கு எதிரான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதில் ‘மீ டூ’ இயக்கம் பாராட்டு பெற்றது.

  ஏராளமான பெண் பிரபலங்கள் பகிரங்கமாக பாலியல் புகார் கூறிய போது, உலகறிந்த மகளிருக்கே இந்த நிலை என்றால், ஊரறியா பெண்டிரின் நிலைமை எப்படியிருக்கும்? என்ற கேள்வி எழுந்தது. பெண்களுக்கு வெளியில் எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற எண்ணமும் தோன்றியது.

  ஆனால் வெளியிடங்களை விட பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய வீட்டில்தான் அவர்களுக்கு அதிக பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கு உதாரணமாக சமீபத்திய 2 நிகழ்வுகளை கூற முடியும்.

  ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த கடீரா என்ற இளம்பெண் கடந்த 13 ஆண்டுகளாக தனது சொந்த தந்தையால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு 2 குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார். இடையில் சிலமுறை கருக்கலைப்பும் செய்திருக்கும் அவர், தற்போது தந்தையின் கொடூரத்தை உலகறியச்செய்து தண்டனை பெற்றுத்தருவதற்காக கோர்ட்டுகளின் படியேறி வருகிறார்.

  அடுத்ததாக மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்த 4 வயது சிறுமியின் நிலை இன்னும் மோசமானது. இரவில் குடிபோதையில் வரும் அவளது தந்தை பெல்ட்டால் அடிப்பது, கடிப்பது, ஊசியால் குத்துவது என தனது பாலியல் வக்கிரங்களை சிறுமியிடம் காட்டியுள்ளார். மாதர் சங்கத்தினரின் தலையீட்டால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

  மேற்படி சம்பவங்கள் அனைத்தும் ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது போலத்தான். ஏனெனில் சமீபத்தில் ஐ.நா. வெளியிட்டு இருக்கும் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவொன்று இதைத்தான் உறுதி செய்திருக்கிறது.  அதாவது பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமாக அவர்களது சொந்த வீடே இருப்பதாக ஐ.நா.வின் போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு அமைப்பு கண்டுபிடித்து உள்ளது. அதற்கு ஆதாரமாக சில புள்ளி விவரங்களை அந்த அமைப்பு வெளியிட்டு இருக்கிறது.

  அதன்படி உலக அளவில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 87 ஆயிரம் பெண்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் 34 சதவீதம் பேர் தனது துணைவராலும், 24 சதவீதம் பேர் பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் போன்ற உறவுகளாலும் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர்.

  குறிப்பாக ஒரு மணி நேரத்துக்கு 6 பெண்கள் என நாளொன்றுக்கு சராசரியாக 137 பெண்கள் குடும்ப அங்கத்தினரால் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இப்படி கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.

  இந்தியாவிலும் இத்தகைய குடும்ப வன்முறைக்கு பலியாகும் பெண்களின் எண்ணிக்கை அபரிமிதமாகவே இருக்கிறது. இங்கு 15 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 27 சதவீதம் பேர் குடும்பத்தினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.

  தேசிய குடும்ப நல ஆய்வு என்ற பெயரில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அந்த ஆய்வு முடிவுகளின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 3-ல் ஒருவர் இத்தகைய வன்முறையில் சிக்கியிருக்கிறார். இந்த வன்முறை சம்பவங்கள் நகர்ப்புறங்களை விட (23 சதவீதம்) கிராமங்களிலேயே அதிகமாக (29 சதவீதம்) இருக்கிறது.

  திருமணமான பெண்களில் 31 சதவீதத்தினர் உடல், உணர்வு மற்றும் பாலியல் ரீதியாக தங்கள் துணையால் (கணவர் மற்றும் முன்னாள் கணவர்) துயர்களை அடைகின்றனர். இதில் 27 சதவீதத்தினர் உடல் ரீதியாகவும், 13 சதவீதத்தினர் உணர்வு ரீதியாகவும் துன்பங்களை அடைவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. தங்கள் வாழ்க்கை துணையால் வன்முறைக்கு ஆளாகும் பெண்களில் 3-ல் ஒருவருக்கு உடல் ரீதியான காயங்கள் உண்டாகிறது.

  திருமணமாகாத பெண்களை பொறுத்தவரை தாய் அல்லது மாற்றாந்தாய் மூலம் 56 சதவீதத்தினரும், தந்தை அல்லது சித்தப்பா மூலம் 33 சதவீதம் பேரும், சகோதர-சகோதரிகள் மூலம் 27 சதவீதம் பேரும் துயர்களை சந்திக்கின்றனர். மேலும் உறவினர் (27 சதவீதம்), முன்னாள் அல்லது இந்நாள் ஆண் நண்பர் (18 சதவீதம்), நண்பர் அல்லது அறிமுகமானவர் (17 சதவீதம்) மற்றும் குடும்ப நண்பர் (11 சதவீதம்) போன்றவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்.

  இப்படி வீட்டில் அரங்கேறும் வன்முறையை சந்திக்கும் இந்திய பெண்களின் துயரப்பட்டியல் நீளுகிறது. இந்தியாவை பொறுத்தவரை வரதட்சணை பிரச்சினை, ஆணவக்கொலை, குழந்தை திருமணம், பாலியல் அத்துமீறல் போன்ற குற்றங்களால் வீட்டுக்குள்ளே பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. கல்வியறிவு இல்லாத பாமரர்கள் முதல் கற்றறிந்த அறிஞர்கள் வரை பெண்களை இரண்டாம் தர மக்களாகத்தான் பார்க்கின்றனர். வீட்டுக்குள் அடைபட்டு கிடந்த பெண்கள் வெளியே வந்து வியத்தகு சாதனைகள் பல புரிந்த போதும், அவர்களுக்கு எதிரான குற்ற செயல்கள் இன்னும் குறைந்தபாடில்லை.

  சமூகத்தின் கண்கள் என வர்ணிக்கப்படும் அவர்கள் உலகம் தோன்றிய காலம் முதலே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான போராட்டத்தில்தான் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். நாகரிகமும், கலாசாரமும் எவ்வளவுதான் உலகை நவீனத்துவத்தை நோக்கி நகர்த்தினாலும் பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் என்னவோ மனிதகுலம், இன்னும் பின்தங்கி இருப்பதாகவே கூற முடியும். இதில் வீட்டு அங்கத்தினர்களாலும் அவர்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது வேதனை அளிப்பதாகவே இருக்கிறது.

  அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு, மன்னிப்பு, நட்பு போன்ற பண்பு நலன்களால் உருவாக்கப்பட்டது தான் வீடு. அதை விடுத்து வெறும் நான்கு சுவர்களால் மட்டும் கட்டப்பட்ட ஒரு மாளிகையை வீடு என்று கூற முடியாது. அது வெறும் உயிரற்ற கட்டிடமாகவே இருக்க முடியும்.

  - வினி ஜெசிகா, விரிகோடு.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தற்போது சிறுமிகளும், டீன்ஏஜ் பெண்களும் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக்கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு காரணமாக இருக்கின்றன.
  பெற்றோரின் முக்கியமான கடமைகள் எவை? என்று கேட்டால், உடனே பல பெற்றோர்கள் ‘குடும்பத்துக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பது, குடும்பத்தை சரியான முறையில் நிர்வகிப்பது, குழந்தைகளை நன்றாக படிக்கவைப்பது..’ என்று சொல்வார்கள். இவை எல்லாம் கடமைகள்தான். அவைகளைவிட முக்கிய கடமைகளில் ஒன்று, காலத்துக்கு ஏற்ற விஷயங்களை கவனமாக பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களது மனதில் பதியவைப்பது!

  தற்போது சிறுமிகளும், டீன்ஏஜ் பெண்களும் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக்கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு காரணமாக இருக்கின்றன. பெற்றோர் கவனமாக இருந்து, பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஊட்டும் கடமையை செய்தால் அவர்கள் அது தொடர்புடைய சிக்கல்களில் மாட்டிக்கொள்வதை தவிர்க்கலாம்.

  இதை சிறுமிகளுக்கும், டீன்ஏஜ் பெண்களுக்கும் சொல்லிக்கொடுப்பது எளிது. பாலியல்ரீதியாக பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் இப்போது அடிக்கடி நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி அதில் இருந்து தப்பிக்கவேண்டும் என்றும் வழிகாட்டவேண்டும். இதை பற்றி பேசும்போது குடும்பத்தில் உள்ள அனைவருமே அதில் கலந்துகொள்ளவேண்டும். தங்கள் கருத்துக்களையும் பக்குவமாக எடுத்துரைக்கவேண்டும்.

  பெண்கள் இப்போது எல்லா இடங்களுக்கும் தனியாக செல்லவேண்டியதிருக்கிறது. அங்கே அவர்கள் அறிமுகமற்ற நபர்களை சந்திக்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அறிமுகமற்ற ஆண்களோடு பேசும்போது எப்படி எல்லாம் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டும் என்பதை மகள்களுக்கு கற்றுக்கொடுங்கள். அப்படிப்பட்டவர்களிடம் தங்களை பற்றிய தனிப்பட்ட தகவல்களை எந்த அளவுக்கு பகிர்ந்துகொள்ளலாம். செல்போன் எண்ணை கொடுக்கலாமா? கூடாதா? என்பதையும் அவர்களுக்கு சொல்லித்தரவேண்டும்.

  செல்போன், இன்டர்நெட் போன்றவை மூலம்தான் சிக்கலுக்குரிய பந்தங்கள் உருவாகின்றன. அதனால் மகள் எதற்காக செல்போன், இன்டர்நெட் போன்றவைகளை பயன்படுத்துகிறாள் என்பதை பெற்றோர் கண்காணிக்கவேண்டும். அதற்காக அம்மா, மகளிடம் தோண்டித்துருவி துப்பறிய வேண்டியதில்லை. அவளது நண்பர்கள் யார், அவர்களது நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதை எல்லாம் அம்மா அறிந்திருக்கவேண்டும். எப்போதும் அவர்கள் நட்பில் ஒரு கண்வைத்திருப்பது நல்லது.

  பள்ளி இறுதிக்காலத்திலே இப்போது காதல் பூத்துவிடுகிறது. அது ஹார்மோன் செய்யும் விந்தையால் ஏற்படு்ம் இனக்கவர்ச்சிதான். நட்பின் புனிதத்தை எடுத்துக்கூறி, எல்லோரிடமும் ஒரே மாதிரி நட்பு பாராட்ட கற்றுக்கொடுங்கள். நட்பில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருப்பதை உணர்த்துங்கள். நட்பு எல்லைதாண்டி காதலாகிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

  ஒருவேளை காதல் தொடர்பு ஏதாவது இருப்பதாக அறிந்தால், நிலைகுலைந்து போகாதீர்கள். மகளை அடக்குதல், அடித்தல், முடக்கிப்போடுதல் போன்றவை எதிர்விளைவுகளையும், பழிவாங்கும் உணர்வுகளையும் தோற்றுவித்துவிடும். அதனால் காதலின் நிஜங்களை புரியவைத்து மனதளவில் மாற்றத்தை உருவாக்கவேண்டும். சரியான பருவத்தில் ஏற்படும், சரியான காதலுக்கு தான் ஒருபோதும் எதிரியல்ல என்பதை புரியவைத்து, பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முன்வரவேண்டும்.  இப்போது டீன்ஏஜ் பெண்கள் உடை உடுத்தும் விஷயத்தில் அதிக சுதந்திரத்தை எதிர்பார்க்கிறார்கள். அவர்களிடம் மாடர்ன் டிரஸ் அணியும் ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் அது அவள் உடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதைப் பார்த்து சரியான முறையில் அணியச் செய்யவேண்டும். உடல் உறுப்புகளை பாதுகாப்பதில் உடையின் பங்கு என்ன என்பதை மகள்களுக்கு புரியவைக்கவேண்டும்.

  உங்கள் மகள் எப்போதும் உங்களுக்கு மகளாகத்தான் தெரிவாள். நீங்கள் அவளை எப்போதும் ஒரே மாதிரிதான் பார்ப்பீர்கள். ஆனால் வயதுக்கு தக்கபடி அவள் உடலில் மாற்றங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். அவள் உடல் வளர்ந்துகொண்டே இருக்கும். அப்போது சமூகத்தின் பார்வை மாறிக்கொண்டே இருக்கும். அந்த பார்வையின் அர்த்தங்களை அவளுக்கு புரியவைத்து, அவளை எப்போதும் ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறுங்கள்.

  உங்கள் மகளுக்கு எல்லா நேரமும் தைரியத்தையும், சமயோசிதத்தையும் ஊட்டிக்கொண்டே இருங்கள். ‘முடியாது’, ‘கூடாது’ ‘அதெல்லாம் நடக்காது’ என்று சொல்லும் தைரியம் எந்த பெண் களிடம் எல்லாம் இருக்கிறதோ அவர்கள் எதிரிகளின் எந்த வலையிலும் எளிதாக சிக்குவதில்லை. ‘முடியாது’ என்று சொல்ல தைரியம் இல்லாத பெண்களே பெரும்பாலும் பிரச்சினைகளில் சிக்குகிறார்கள்.

  ஆண் ஒருவர் அனாவசியமாக பெண்ணின் உடலைத் தொடுதல், உடலை வர்ணித்தல், அனாவசிய அழைப்பு விடுத்தல் போன்ற எதிலாவது ஈடுபட்டால் அந்த நிமிடத்திலே விழிப்படைந்து கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் காட்டத் தெரியவேண்டும். ‘இந்த மாதிரி வேலைகளை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே’ என்று தைரியமாக சொல்லவேண்டும். அவ்வாறு தைரியமாக சொன்னால், ‘இந்தப் பெண்ணிடம் தன் எதிர்பார்ப்பு எதுவும் நடக்காது’ என்று அவன் ஒதுங்கி விடுவான்.

  டீன்ஏஜில் ஒரு பெண் செக்ஸ் பற்றி எதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை எல்லாம் அவள் தன் தாய் மூலம் தெரிந்துகொள்வது நல்லது. தவறான புத்தகங்கள், தோழிகள், படங்கள் மூலம் அவள் தெரிந்துகொள்ள விரும்புவது நல்லதாக இருக்காது. அதனால் பாலியல் விஷயங்கள் பற்றி உங்கள் மகளிடம் பேசுங்கள். எல்லாவற்றையும் நாசுக்காக அவளுக்கு உணர்த்துங்கள். நீங்கள் உழைத்துக் களைத்து உங்கள் மகள்களுக்கு பொன், பொருள் சேர்த்து வைப்பது முக்கியமல்ல. அவர்கள் வாழ சரியான முறையில் வழிகாட்ட வேண்டியதே மிக அவசியம். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print