search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stop Violence Against Women"

    விவரங்கள் அறியாமல் இணையத் தொடர்புகளுக்குள் செல்வதை விட்டுவிடுங்கள். ஊர், பெயர் தெரியாத எவரிடமும் அந்தரங்கம் பகிராதீர்கள். நம்பிப் போகலாம் என்று, காதல் என்று எண்ணி காமச்சாக்கடைக்குள் விழுந்துவிடாதீர்கள்.
    மனிதன் ஒரு ‘சமூக விலங்கு’ என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் மனிதனுக்குள் மிருகம் புகுந்து, மனிதம் மரணித்துப்போய் வெகு காலமாகிறது. எங்கும் பச்சைப் புல்வெளி போர்த்திட, இயற்கையின் தாலாட்டாக பல்வேறு மொழி திரைப்பட கதாநாயகர்கள் இந்த ஊரின் வயல் வெளிகளிலும், தோப்புகளிலும் கதாநாயகிகளோடு பாடிக் கொண்டிருந்ததையே, பல வருடங்களாகப் பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு, உள்ளூர் ஓநாய் வில்லன்கள் தமது வீடுகளுக்குள்ளேயே வந்து படம் எடுத்ததைப் பார்க்கத் தவறிவிட்டார்கள்.

    மலையும், மலை சூழ்ந்த பூமியும் கண்ணீர் தேசமாகிவிட்டது. இணையவழி குற்றங்கள் என்பதில் எல்லா எல்லைக் கோடுகளையும் தாண்டி, உலக நாடுகள் உறக்கம் தொலைத்து சிண்டைப் பிய்த்துக்கொண்டு தீர்வைத் தேடிக் கொண்டிருக்கின்றன. முகநூல் என்றால் என்ன? டிக்டாக் என்றால் என்ன? இன்ஸ்டாகிராம் என்றால் என்ன? என்ற அடிப்படைப் பொருள் கூட அறியாத பல பெற்றோர்கள், பிள்ளைகளுக்காக பாசத்தின் அடிமைகளாக மாறிப்போய் வாங்கி கொடுத்த ஒற்றைச் சாதனம் தான் இன்று சமூகத்தின் அத்தனை அழுக்குகளும் சங்கமம் ஆகும் இடமாக மாறிவிட்டது.

    இன்று இரவுக்குள் பிறந்தநாள் விழாவின் போது ஸ்மார்ட்போன் தரவில்லையென்றால், ‘செத்துப்போவேன்’ என்று நெருப்பில் எரிந்து போன கொத்தனாரின் பெண் ஒரு புறம், என் பிள்ளையின் பிறந்த நாளுக்கு ஒரு லட்சம் ரூபாய் தொலைபேசி தந்தேன் என்று பெருமை பேசும் பெற்றோர் மறுபுறம். கண்டிப்பு என்றால் என்னவென்றே அறியாமல் வளர்க்கப்படும் ஒரு சமுதாயம் மிக எளிதில் யாரையும் தொடர்புகொள்ள வைக்கும் சமூக ஊடகம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

    நான் இதில் தான் பாடம் படிக்கிறேன். தகவல் தேடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு பெற்றோரை ஏமாற்றும் பிள்ளைகள், 24 மணி நேரமும் இணையத்தொடர்பிலேயே வைத்திருக்கும், வாட்ஸ்-அப்பும், டிக்டாக்கும் எதைக்கொண்டு வந்தது?

    “தலைவாரி பூச்சூடி உன்னை, பாடசாலைக்கு போ என்று சொன்னாள் உன் அன்னை” என்றார் பாரதிதாசன். ஆனால் காலம் காலமாக வளர்த்த பெற்றோரை ஏமாற்றிவிட்டு பத்துநாள் பழகிய ஒருவனின் மயக்க மொழி கேட்டு, பண்ணை வீட்டிற்கும், விடுதிக்கும் சென்றுவிட்டு ‘உன்னை நம்பித் தானே வந்தேன் என்று கதறும் குரல் கேட்கும் போது கண்ணுக்குள் வராத அந்தப்பெற்றோரும், அவர்கள் கண்ணீருமே நமது அக்கறை தற்போதைக்கு. நான் கடந்த 15 வருடங்களாக இது இலவசமாக வந்த சனியன் என்று எல்லா ஊடகங்களின் மூலமாகவும் கதறிக்கொண்டிருந்தாலும், இதன் எண்ணிக்கை கூடியது போலவே, குற்றங்களும் கூடிய வண்ணமே உள்ளது.

    24 மணி நேரமும் பணி மற்றும் பணத்தின் பின்னால், பதவிகளின் பின்னால், மனிதர்கள் போக தனித்துவிடப்படும் ஆண், பெண் பிள்ளைகள் தொழில் நுட்பத்தின் நுணுக்கங்கள் அறியாமல் யாராவது விரிக்கும் வலையில் சிக்கிவிடுகிறார்கள்.

    வாட்ஸ்-அப், முகநூல் போன்றவை சமூகக்கேடுகள் என்று உச்சநீதிமன்றம் உணரவே பத்தாண்டுகள் ஆயிற்று. வெறுப்பு, பகைமை, மதவெறி போன்றவற்றை ஊட்டி வளர்ப்பவை இவைதான் என்று சொன்ன அவர்களுக்கே வாட்ஸ்-அப் நிறுவனம், ஒரு செய்தியுனுடைய மூலம் என்ற தொடக்கப்புள்ளியை எங்களால் தர இயலாது என்று அரசாங்கத்திற்கே அல்வா கொடுக்கும் பன்னாட்டு ஊடக உரிமையாளர்கள், இப்படி சட்டம் தொழில்நுட்பம் எல்லாமே என்னவென அறியாமல் இளைய சமுதாயத்திடம் கருவிகள் கொடுத்த அரசுகள் எதையுமே இதைப்பற்றிக் கற்பிக்கவில்லை என்பது மிகப்பெரும் சோகம்.முகநூலிலும், வாட்ஸ்-அப்களிலும் மார்க் ஜூக்கர் பெர்க் என்ற வணிக மூளை விடுத்த வலைபற்றி அரசுகளுக்கே தெரியவில்லை எனும்போது அப்பாவிகள் எந்த மூளைக்கு?

    இப்போதைக்குள்ள தகவல் தொழில்நுட்ப சட்டப்படி எல்லாவிதமான குற்றங்களும் ஜாமீனில் விடக்கூடியவை, சமாதானம் செய்யக்கூடியவை (ஒரு சில பிரிவுகள் தவிர) இப்படி எளிமையான சட்டத்தின்மூலம் நார் நாராக கிழிக்கப்படும் மனித வாழ்வவைக் காக்கும் முயற்சியில் இன்னும் அரசுகளே போக வேண்டிய தூரம் அதிகம்.

    முகம் அற்ற மனிதர்களோடு உறவு கொள்ள வைக்கும் அறியாமையை தொழில்நுட்பமே அறிமுகம் செய்கிறது. பள்ளி தொடங்கி கல்லூரிகள் வரை கண்டிப்பு காட்டினால் விமர்சனம் செய்யும் சூழல் மாறி எங்கே தொடங்கலாம் என்ற நம்பிக்கை இப்போது தான் அரும்புகிறது.

    நிர்பயா வழக்கு, மும்பையின் பெண் பத்திரிகையாளர் வழக்கு, அயனாவரம் வழக்கு என்று தொடர்ந்து வந்தாலும் அவற்றில் இருந்து எந்தப்பாடத்தையும் நாம் படிக்கவில்லை.இந்தப் பொள்ளாச்சி வழக்கிலும், தொடக்கத்திலேயே விதிமுறைகளை மீறிப் புலனாய்வை திசைத்திருப்பும் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் தேவையற்ற அரசியல் குறுக்கீட்டால் இந்த வழக்கும் தடம் மாறலாம்.

    பிள்ளைகள் பெற்றோர் சொல் கேட்டு நடக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. விவரங்கள் அறியாமல் இணையத் தொடர்புகளுக்குள் செல்வதை விட்டுவிடுங்கள். ஊர், பெயர் தெரியாத எவரிடமும் அந்தரங்கம் பகிராதீர்கள். நம்பிப் போகலாம் என்று, காதல் என்று எண்ணி காமச்சாக்கடைக்குள் விழுந்துவிடாதீர்கள். அறிமுகம் இல்லாத அக்கவுண்டுக்கு லைக், ஷேர் வேண்டாம். தெரியாத தொலைபேசி அழைப்புகளை தொடவே வேண்டாம். (ரூ.2 ஆயிரம் தொலைபேசியில் கூட பதிவு செய்யும் வசதி உண்டு.) புகைப்படம், விலாசம் தரவே வேண்டாம். குறிப்பாக ‘செல்பி’ வேண்டவே வேண்டாம். இவை தவிர எப்போதாவது ஓய்வு கிடைத்தால் பெற்றோருடன் பேசுங்கள்.

    வே.பாலு, வழக்கறிஞர்.
    ×