என் மலர்

  ஆரோக்கியம்

  பெண்களுக்கு எதிரான வன்முறையும், பாதுகாக்கும் சட்டங்களும்...
  X

  பெண்களுக்கு எதிரான வன்முறையும், பாதுகாக்கும் சட்டங்களும்...

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் தங்களை மேம்படுத்திக் கொள்வது அவசியமானது. தங்களுக்கு சட்டப்படியுள்ள உரிமைகளையும், பாதுகாப்பையும் உணரும்போதும் அவர்கள் சமூகத்தின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முடியும்.
  21 -ம் நூற்றாண்டிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வது வேதனை. இன்றைய காலக்கட்டத்தில் அவர்களை பாதுகாக்கும் வகையில் பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அறியாமையாலும், அச்சத்தாலும் அவை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

  பெண்களுக்கு அநீதிகளும், கொடுமைகளும், எல்லா தரப்பிலும், எல்லா வயதினருக்கும் பாகுபாடின்றி சரளமாக இழைக்கப்படுகிறது. கருவிலே அழிப்பது, சிசுக்கொலை என தொடங்கி வாழ்நாள் இறுதிவரை கொடுமைகள்தொடர் கதையாக தொடர்கிறது.

  பள்ளிக்கூடம், கல்லூரி, வேலைப்பார்க்குமிடம், வழிப்பாட்டு தலங்கள், பஸ், ரெயில், என எல்லா இடங்களிலும் பெண்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. இதைத்தவிர ஆணவ கொலைகளையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. பெண்கள், மனிதர்களாக, அவர்களுக்கும், அறிவு, ஆற்றல் உள்ளன என்பதை கருத்தில் கொள்ளாது ஆண் சமூகம் அவர்களை இன்பம் துய்க்கும் பொருளாக மட்டுமே பார்ப்பது கொடுமையிலும் கொடுமை. குடும்ப சூழலை எடுத்துக்கொண்டாலும் பெண்கள் சுதந்திர மனப்பான்மையுடன் செயல்பட முடியாத நிலை தானே நிலவுகிறது.

  தாய் தந்தையர் கடும் சொற்களால் கண்டிப்பது, காயம் ஏற்படும்படி அடிப்பது, மன உளைச்சல் ஏற்படும்படி தண்டிப்பது என்று பல விதமான கொடுமைகளை சிறுவயதில் இருந்தே பெண்கள் எதிர்கொள்கிறார்கள். பத்து வயதில், பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது வகுப்பில் முதல் இடம் பெறவில்லை என்று அறையில் பூட்டிவைக்கப்பட்ட மாணவி, விலை உயர்ந்த பேனாவை தொலைத்து விட்டாள் என்பதற்காக வீட்டிற்கு வெளியே பல மணிநேரம் நிற்க வைக்கப்பட்ட சிறுமி என்பன போன்ற நிகழ்வுகளை அன்றாடம் நாம் காண்கிறோம்.

  பெண்கள் என்றால் கண்ணுக்கு அழகாக, லட்சணமாக இருக்கவேண்டும் என்கிற மூடக்கருத்து பல பெண்களின் வாழ்கையை சீரழிக்கிறது. கருப்பாக இருக்கிறாய், குண்டாக இருக்கிறாய் என்று விமர்சித்து அவர்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை உண்டாக்குதல் ஒருபுறம் என்றால்,.மறு புறம் உனக்கு பாடத் தெரியுமா ஆடத் தெரியுமா என்று கேட்டு அவர்களை கடையில் விற்கும் பொருள்கள் போல பார்க்கப்படுகிறது.

  சின்னஞ்சிறு சிறுமியர்களை பலநாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வு கொள்ளும் கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன. வேலை செய்யும் இடங்களில் உடன் பணியாற்றும் ஊழியர்கள், மேலதிகாரிகள் என பாலியல் தொடர்பான சித்திரவதைகள் தொடர்கின்றன. குழுக்களாக ஆண்கள், பெண்கள் கூடியிருக்கும்போது பாலியல் தொடர்பான நகைச்சுவைகள், சீண்டல்களை பெண்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளன. தன் இச்சைக்கு இணங்காத பெண்ணின் மீது அமிலம் வீசி தாக்குதல், ஊர்திகளை கொண்டு ஏற்றி கொல்லுதல், பட்டப்பகலில் அரிவாளால் வெட்டி கொலைசெய்தல் என்ற பாதுகாப்பற்ற நிலையில் பெண்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

  திருமணமாகி கணவர் வீட்டுக்கு செல்லும் பெண்களுக்கு வரதட்சணை கொடுமை, ஓயாத வீட்டு வேலைகள், மனைவியின் விருப்பு வெறுப்புகளை கருத்தில் கொள்ளாது மேற்கொள்ளப்படும் உடலுறவுகள், கட்டாய கருச்சிதைவுகள் என தொடரும் சித்திரவதைகள் நாளுக்கு நாள் அரங்கேறி கொண்டே இருக்கின்றன.. இத்தகைய சூழலில், பெண்களுக்கு சட்டம் அளிக்கும் பாதுகாப்புகள் என்ன என்பதை அறிவோம்.

  பெண்கள் பாதுகாப்பு சட்ட விதிகள் 2005-ன் படி, குடும்பத்தில் ஏற்படும் சச்சரவுகளை தீர்த்துக் கொள்ளும் வகையில் இரண்டு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள், 2018-ல், சுமார் 2,785 சச்சரவுகளை நீதிமன்றம் செல்லாமலேயே தீர்த்து வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு 5 பெண்களில், இரண்டு பெண்கள், கணவர்களால், வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 1983-ல் இந்திய தண்டனை சட்டம் 498-ன் பிரிவின்படி கிரிமினல் குற்றமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் புகார்கள் கொடுக்க எல்லா பெண்களும் முன்வருவதில்லை. நிதி நிலைமை, குழந்தைகளின் எதிர்காலம், சமூகப் பார்வை போன்றவை புகார் அளிக்கத் தடைகளாக உள்ளன.

  வரதட்சணை தொல்லையால் பெண்களை தீக்கிரையாக்கும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடியது. வரதட்சணை தடுப்பு சட்டம் பெருமளவில் இத்தகைய குற்றங்களை குறைத்துவிட்டது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலமாக, பெண்கள் தைரியமாக காவல்நிலையத்துக்கு தாங்களாவே சென்று முறையிட வாய்ப்பு அதிகரித்தது. இருந்தாலும், பல இடங்களில், விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், வன்கொடுமைகள் திரைமறைவில் அரங்கேறி வருகின்றன.

  வரதட்சணை தடுப்பு சட்டம் (1961), பணியிடங்களில் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் (2013), கடத்தல் தடுப்பு சட்டம் (1986), சதி தடுப்பு சட்டம் (1987), பெண்களை அநாகரிகமாக சித்தரித்தல் (தடுப்பு) சட்டம் (1986), குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் (2005), என்று பெண்களுக்காக சட்டங்கள் உள்ளன. இது தவிர, இந்தியக் குற்றவியல் சட்டமும் (திருத்தப்பட்டது 2013) பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உள்ளது. மேலும், இந்து திருமண சட்டத்தின்படி, கணவனால் இழைக்கப்படும் கொடுமையில் இருந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் பெற சட்டத்தில் வழியுள்ளன. பரஸ்பர உடன்பாட்டின்படி விவாகரத்து பெற வழிவகுக்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை கிடைக்க சட்டங்கள் வழிவகுக்கின்றன.

  பாதிக்கப்பட்ட பெண்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கவேண்டும். அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரிப்பார்கள். மீண்டும் அத்தகைய பாதிப்புகள் ஏற்படாதவாறு தக்க ஆலோசனை கூறுவர். ஒருவேளை, இம்முயற்சி கைக்கூடவில்லை யென்றால் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் முழுமையாக விசாரணை செய்து தக்க ஆலோசனைகள் வழங்குவார். இந்த முயற்சியிலும் வெற்றிப்பெற முடியவில்லையெனில் சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

  பெண்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் தங்களை மேம்படுத்திக் கொள்வது அவசியமானது. தங்களுக்கு சட்டப்படியுள்ள உரிமைகளையும், பாதுகாப்பையும் உணரும்போதும் அவர்கள் சமூகத்தின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முடியும். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் அவமானங்களையும், வன்முறைகளையும் முதலில் மற்றவர்களுடன் பேசவேண்டும். அலுவலகமாக இருந்தால் சக பெண் ஊழியர்களிடம் பேச வேண்டும். அவர்கள் அறியும்படி செய்யவேண்டும். தனியாக போராடுவதைவிட குழுவாக இணைந்து எதிர்கொள்ளும்போது பலன்கள் கூடுதலாக கிடைக்கும். மேலும், பெண்கள் தங்கள் ஆண் குழந்தைகளை வளர்க்கும்போது அவர்களை பொறுப்புள்ளவர்களாகவும், பெண்களை மதிக்கக்கூடிய தன்மையுடனும் உருவாக்கவேண்டும்.

  தாட்சாயணி, ஐகோர்ட்டு வக்கீல், சென்னை.
  Next Story
  ×