என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைபர் கிரைம் போலீசார்"

    • சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் போலீசார் மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் தேசிக பரமாச்சாரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
    • விசாரணையின்போது ஆதீனத்தை தவிர வேறு யாரும் ஆதீன மடத்திற்குள் இருக்கக் கூடாது என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுரை வழங்கியிருந்தனர்.

    மதுரை:

    மதுரை ஆதீன மடத்தின் 293-வது ஆதீனம் ஞான சம்பந்தர் தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் கடந்த மே மாதம் 2-ந்தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் தனது காரில் புறப்பட்டு சென்றார்.

    அப்போது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் தன் மீது மோதி விபத்து ஏற்பட்டதாகவும், தன்னை சிலர் கொலை செய்ய முற்பட்டதாகவும் கூறி மதுரை ஆதீனம் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதில் குறிப்பாக "குல்லா மற்றும் தாடி வைத்த நபர்கள்" கொலை செய்ய முயற்சித்ததாக கூறியிருந்தார். இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை பகுதியில் நடைபெற்ற விபத்து குறித்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டு தவறான தகவல்களை மதுரை ஆதீனம் தரப்பினர் வெளியிடுவதாக, கூறி அறிக்கை வெளியிட்டனர்.

    வாகன விபத்து குறித்து தவறான தகவல்களை பரப்பி மத மோதலை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யக் கோரி சென்னை எழுப்பூர் அருகே உள்ள அயனாவரத்தைச் சேர்ந்த ஐகோர்ட்டு வக்கீல் ராஜேந்திரன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் போலீசார் மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் தேசிக பரமாச்சாரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே முன்ஜாமின் கோரி மதுரை ஆதீனம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார். அப்போது மதுரை ஆதீனத்திற்கு 60 வயதுக்கு மேலே ஆனதால் நேரில் ஆஜராக கட்டாயம் இல்லை, போலீசார் நேரில் சென்று விசாரணை செய்து கொள்ளலாம் எனவும் போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில் மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்துவதற்காக சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் போலீசார் மீனாட்சியம்மன் கோவில் அருகே தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் அமைந்துள்ள மதுரை ஆதீன மடத்திற்கு நேரில் வருகை தந்தனர். முன்னதாக விசாரணையின்போது ஆதீனத்தை தவிர வேறு யாரும் ஆதீன மடத்திற்குள் இருக்கக் கூடாது என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுரை வழங்கியிருந்தனர்.

    அதன்படி ஆதீன மடத்தில் இருந்த ஊழியர்கள், பணியார்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து மதுரை ஆதீனத்திடம் விசாரணை தொடங்கியது.

    சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் பத்மகுமாரி தலைமையிலான 3 போலீசார் விசாரணையை தொடங்கினர். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் முதன்முறையாக மதுரை ஆதினத்திடம் விசாரணை நடத்தி வருகிறார். சைபர் கிரைம் போலீசாரின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விளக்குத்தூண் போலீஸ் உதவி கமிஷனர் சூரக்குமரன் மதுரை ஆதின மடத்திற்குள் சென்றார்.

    அப்போது அங்கு திரண்ட பா.ஜ.க. நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. 

    • முதற்கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீசார், சாட்சியங்கள் என 130 பேருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.
    • இன்னும் ஒரு மாதத்தில் விசாரணை நிறைவடைந்து விடும்.

    கோவை:

    தனியார் யூடியூப் சேனலில் பெண் போலீசார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கோவை மாநகர சைபர் கிரைம் பெண் போலீஸ் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். அந்தந்த மாவட்ட போலீசாரும் தாங்கள் செய்த வழக்குகளில் அவரை கைது செய்து வந்தனர்.

    இந்த நிலையில் சவுக்கு சங்கர் தன் மீது உள்ள அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்துக்கு மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    சுப்ரீம் கோர்ட்டு, சவுக்கு சங்கர் மீது பதியப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை கோவைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பதியப்பட்ட 15 வழக்குகள் கோவை சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டன.

    பழைய எப்.ஐ.ஆர்களை கொண்டு கோவையில் வழக்கை விசாரிக்க முடியாது என்பதால் கோவை சைபர் கிரைம் போலீசார் 15 வழக்குகளையும் புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    இதையடுத்து கோவை சைபர் கிரைம் போலீசார், முதற்கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீசார், சாட்சியங்கள் என 130 பேருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதில் இதுவரை 129 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், இதுவரை பெரும்பாலான சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளோம். இன்னும் ஒரு மாதத்தில் விசாரணை நிறைவடைந்து விடும். விசாரணை முடிந்ததும் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியை தொடங்க உள்ளோம் என்றனர்.

    • பணத்தை இழந்தவர்கள் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க சைபர் கிரைம் போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் மோசடி பேர்வழிகள் நூதன முறையில் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். மோசடிகாரர்கள் விரிக்கும் வலையில் படித்தவர்களும் பணத்தை இழந்து வருகின்றனர்.

    இந்நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாக 'ஷாப்பிபை' உள்பட பல்வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்து முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக ஆன்லைன் மோசடி கும்பல் ஆசை வார்த்தை கூறினர்.

    ரூ.28 ஆயிரம் முதலீடு செய்தால் 30 நாளில் ரூ.1 லட்சத்து 800 தருவதாகவும் அல்லது தங்கமாக பெற்றுக்கொள்ளலாம் என அதில் கூறப்பட்டு இருந்தது.

    இதனை நம்பிய புதுச்சேரியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்தனர். ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு எந்த பணமும் வரவில்லை. இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மோசடி கும்பல் பொதுமக்களை ஏமாற்றி பல கோடி பணத்தை மோசடி செய்துள்ளனர்.

    இதுகுறித்து பணத்தை இழந்தவர்கள் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ‘பயோமெட்ரிக்’ தரவுகளையும், புகைப்படங்களையும் மூன்றாவது நபரிடம் வழங்கும் ஆபத்து உள்ளது.
    • மோசடியினால் பாதிக்கப்பட்டால் ‘1930’ என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.

    சென்னை:

    மாநில சைபர் கிரைம் போலீசார் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-

    'ஜிப்லி' செயற்கை நுண்ணறிவு கலையின் பயன்பாடு அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. ஆனால் 'ஜிப்லி' கலையில் இருக்கும் ஆபத்து குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. 'ஜிப்லி' வரைகலை புகைப்படங்களை வழங்குவதற்கு இப்போது பல்வேறு செல்போன் செயலிகள் உள்ளன. இவற்றில் அங்கீகாரம் இல்லாத செயலிகளும் உள்ளன.

    ஆனால், பொதுமக்கள், அறியாமையினால் அங்கீகாரம் இல்லாத செயலிகளிலும் 'ஜிப்லி' அனிமேஷன் புகைப்படங்களை பெறுவதற்காக தங்களது 'பயோமெட்ரிக்' தரவுகளையும், புகைப்படங்களையும் வழங்குகின்றனர். இதன் மூலம் அங்கீகாரமற்ற செயலிகள், ஒருவரது 'பயோமெட்ரிக்' தரவுகளையும், புகைப்படங்களையும் மூன்றாவது நபரிடம் வழங்கும் ஆபத்து உள்ளது.

    அங்கீகாரம் இல்லாத செயலிகள், ஒருவரது 'பயோமெட்ரிக்', புகைப்படங்களை விளம்பர நிறுவனங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் விற்கும்போது, அவை 'டீப் பேக்கு'களில் பயன்படுத்தும் அபாயமும் உள்ளது. 'ஜிப்லி' அனிமேஷன் புகைப்படங்களை இலவசமாக வழங்கும் இணையதளம், செல்போன் செயலிகளுக்குள் ஒருவர் செல்லும்போது, அவரது கைப்பேசியும், கணினியும் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுவதற்கும், அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் திருடும் வாய்ப்பும் இருக்கிறது.

    எனவே இப்படிப்பட்ட இணையத்தளங்களையும், செயலிகளையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற மோசடியில் பொதுமக்கள் சிக்காமல் இருக்க, அங்கீகாரம் இல்லாத செயலிகள், இணையத்தளங்களில் இருந்து வால் பேப்பர்கள், ஆர்ட் பேக்குகள் உள்ளிட்ட எதையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

    பரிவர்த்தனை, சுய விவரங்களை பதிவிடும் முன்பு சம்பந்தப்பட்ட இணையத்தளத்தின் நம்பகத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற மோசடியினால் பாதிக்கப்பட்டால் '1930' என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வரன் தேடும் இணையதளங்களில் பதிவு செய்து உள்ளவர்களின் சுயவிவரங்களின் உண்மைத்தன்மையை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
    • செல்போனில் ‘வீடியோ' அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    சென்னை:

    திருமண பந்தம் கை கூடுவதற்கு உறுதுணையாக இருக்கும் வரன் தேடும் இணையதளங்களிலும் 'ஆன்லைன்' மோசடி கும்பல் ஊடுருவி உள்ளது. இந்த இணையதளத்தில் புகைப்படம், வேலை, சம்பளம் போன்ற சுய விவரங்களை தவறாக பதிவிட்டு போலி கணக்கை உருவாக்கி பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    தமிழ்நாட்டில் இந்த மோசடி சம்பவம் தொடர்பாக 379 புகார்கள் பதிவாகி உள்ளன.

    இந்த மோசடி எவ்வாறு அரங்கேறுகிறது? இந்த மோசடியில் சிக்காமல் தப்பிப்பது எப்படி? என்பது குறித்து 'சைபர் கிரைம்' போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு வருமாறு:-

    திருமண தகவல் இணையதளத்தில் போலி கணக்குகளுடன் ஊடுருவி உள்ள மோசடி கும்பலை சேர்ந்தவர்களின் குறியில் சிக்குபவர்களிடம் (மணப்பெண் அல்லது மணமகன்), நான் உங்களை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று இனிக்க, இனிக்க பேசி வசியப்படுத்துவார்கள். திருமணத்துக்குபின்னர் நாம் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும். ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி விடுவார்கள்.

    அதன்பின்னர் அவர்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் போலி முதலீட்டு இணையதள முகவரியை பரிந்துரை செய்வார்கள். மோசடி கும்பலின் மாய வலையில் சிக்கி பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு முதலில் லாபத்தொகையை தருவது போன்று நம்பிக்கையை உருவாக்குவார்கள். பெரிய தொகையை முதலீடு செய்யும் போது 'அபேஸ்' செய்து அனைத்து தொடர்புகளையும் தூண்டித்துவிட்டு திருமண தகவல் இணையதளத்தில் இருந்து வெளியேறி விடுவார்கள்.

    எனவே வரன் தேடும் இணையதளங்களில் பதிவு செய்து உள்ளவர்களின் சுயவிவரங்களின் உண்மைத்தன்மையை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    செல்போனில் 'வீடியோ' அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 'ஆன்லைன்' மூலம் அறிமுகமானவரின் ஆலோசனையை ஏற்று ஒரு போதும் பணத்தை முதலீடு செய்ய கூடாது.

    இந்த மோசடி கும்பல் தங்கள் மோசடி திட்டத்துக்கு www.oxgatens.com, www.oxgatens.net, www.cityindexmain.com, www.cityindexlimited.com போன்ற போலி முதலீட்டு இணையதளங்களை பயன்படுத்துகின்றனர். இது போன்ற மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள், சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகளை கண்டறிந்தவர்கள் 'சைபர் கிரைம்' போலீசாரின் 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை உடனடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம் என்றும் 'சைபர் கிரைம்' போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • எந்த செயலியையும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தான் டவுன்லோடு செய்ய வேண்டும்.
    • வேறு எந்த இணைப்பிலும் டவுன்லோடு செய்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

    தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இன்றைய காலகட்டத்தில் நமது பயன்பாட்டுக்காக செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் ஏராளமான 'ஆப்'கள் வந்துள்ளன.

    அந்த வகையில் நமக்கு தகவல்கள் பரிமாற்றத்துக்கு பேரூதவியாக இருப்பது வாட்ஸ்அப் ஆகும்.

    இந்த வாட்ஸ்அப்பில் உள்ள குழுக்கள் மூலம் தற்போது நமது தனிபட்ட தகவல்களையும், வங்கி கணக்குகளையும் திருடி நமது பணத்தை அபகரித்து விடுகின்றனர்.

    வாட்ஸ்அப் குழுக்களில் செல்போனில் வாட்ஸ்அப் பிங்க் எனும் பெயரில் பச்சை நிறத்தை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றுவதாக கூறும் லிங்க் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.

    தனிப்பட்ட தகவல்களை ஹேக் செய்யும் ஆபத்தான வைரஸ் இதுவாகும். முதலில் வாட்ஸ்அப் குழுக்களில் பிங்க் லிங்கை அனுப்பி பதிவிறக்கத்திற்கு இணைப்பை கிளிக் செய்ய கேட்டுக்கொள்ளப்படுவார்கள். பதிவிறக்கம் செய்யும் போது லிங்கில் மறைந்திருக்கும் ஆபத்தான வைரசும் சேர்ந்து பதிவிறக்கம் ஆகிவிடும்.

    கிளிக் செய்தவுடன் இந்த வைரஸ் உடனடியாக மொபைலில் முழுமையாக பரவி வாட்ஸ்அப் குழுவில் பதிவிடும் நபர் எந்த குழுவில் இருந்தாலும் அந்த குழுவில் உள்ள நபருக்கு பிங்க் வாட்ஸ்அப் அப்டேட் என்று தானாகவே பதிவாகிறது.

    இந்த லிங்கை யாராவது தொட்டால் வாட்ஸ்அப் முழுவதும் ஹேக் செய்து வங்கி கணக்குகள் முதல் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடப்படும். இது மட்டுமல்லாமல் போனில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், தொலைபேசி எண்கள் உள்பட பல தகவல்கள் திருடப்படுகின்றன.

    இந்த வைரசை தடுப்பதற்கான முதல் வழிமுறை இந்த லிங்கை யாரும் தொடக்கூடாது. உடனடியாக லிங்கை கிளியர்சாட் கொடுத்து விலக்கி விடுவதே சிறந்த வழி முறையாகும்.

    எந்த செயலியையும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தான் டவுன்லோடு செய்ய வேண்டும். வேறு எந்த இணைப்பிலும் டவுன்லோடு செய்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

    போலீசார் இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கையை கொடுத்துள்ளனர்.

    • தொடர்ந்து வழங்கப்பட்ட ‘டாஸ்க்’ செய்து முடித்தவுடன் அடுத்தடுத்து ரூ.175, ரூ.225 வங்கி கணக்கில் பணம் வந்தது.
    • கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பதால் ரூ.4 லட்சம் டெபாசிட் செய்தால் தான் பணத்தை எடுக்க முடியும் என தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சசிதரன் (வயது 23). இவர் புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த 3-ந்தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    அதில் 3 ஓட்டல்களுக்கு 'ரேட்டிங்' கொடுத்தால் ரூ.150 சம்பாதிக்கலாம் என்று ஒரு 'டாஸ்க்' வழங்கப்பட்டது.

    அதை செய்ததும் ரூ.150-ஐ பெறுவதற்கு டெலிகிராம் மூலமாக லிங்க் வந்தது. அந்த இணைப்பில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் சசிதரன் பதிவிட்டார். உடனே அவரின் வங்கி கணக்கில் ரூ.150 வரவு வைக்கப்பட்டது.

    அவருக்கு தொடர்ந்து வழங்கப்பட்ட 'டாஸ்க்' செய்து முடித்தவுடன் அடுத்தடுத்து ரூ.175, ரூ.225 வங்கி கணக்கில் பணம் வந்தது. மேலும் ரூ.ஆயிரம் டெபாசிட் செய்து ரூ.1,300 பெற்றிருக்கிறார். தொடர்ந்து ஆன்லைன் மற்றும் வங்கி கணக்கு மூலமாக 23 முறை ரூ.7 லட்சத்து 78 ஆயிரத்து 232 செலுத்தினார்.

    அதன்பின் அவரது வங்கி கணக்கில் ரூ.13 லட்சத்து 44 ஆயிரத்து 384 இருப்பு உள்ளதாக காட்டியது. அந்த தொகையை சசிதரனால் எடுக்க முடியவில்லை. அப்போது அவரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருந்தது.

    இதுபற்றி கேட்டபோது கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பதால் ரூ.4 லட்சம் டெபாசிட் செய்தால் தான் பணத்தை எடுக்க முடியும் என தெரிவித்தனர்.

    அதன் பின்னரே அவர்கள் பணம் மோசடி செய்திருப்பது சசிதரனுக்கு தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'ஆன்லைனில் யாரும் முதலீடு செய்ய வேண்டாம். புதுவையில் நாளுக்கு நாள் ஆன்லைனில் முதலீடு செய்து பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழக்கிறார்கள். இதில் படித்தவர்கள் தான் அதிக பேர் ஏமாறுகிறார்கள் என்பது வேதனைக்குரியது.

    ஆன்லைனில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருகிறோம், கூடுதல் வட்டி தருகிறோம் என்று சொன்னால் பொதுமக்கள் நம்ப வேண்டாம்' எனக்கூறினர்.

    • ஆர்டருக்கான பணம் செலுத்தப்பட்டவுடன், இணைய தளத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது.
    • விலைகள் மிகவும் குறைவாக இருப்பதால், தங்கள் பண்டிகை கொண்டாட்டங்களுக்காக இணைய தளத்தில் ஆர்டர்களை ஆர்வத்துடன் செய்கிறார்கள்.

    சென்னை:

    தீபாவளி பட்டாசை ஆன்லைனில் விற்பனை செய்வதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக சைபர்கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளிப் பண்டிகை காலத்தில் பட்டாசுகளுக்கான தேவை அதிகரிப்பதால், சைபர் குற்றவாளிகள் போலி இணையதளங்களை உருவாக்கி நம்ப முடியாத விலையில் பட்டாசுகளை வழங்குவதாக உறுதியளித்து மோசடி செய்வதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். எனவே பொதுமக்கள் இந்த மோசடி பற்றிய விழிப்புணர்வோடு இருப்பதும், இத்தகைய மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதும் அவசியமாகும்.

    பொதுமக்கள் https://luckycrackers.com/ என்ற இணைய தளத்திற்குச் சென்று ஆர்டரைச் செய்தபின் பின்னர் வாட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு ஆர்டரின் ஸ்கிரீன் ஷாட்டை அனுப்புகிறார்கள். விலைகள் மிகவும் குறைவாக இருப்பதால், தங்கள் பண்டிகை கொண்டாட்டங்களுக்காக இணைய தளத்தில் ஆர்டர்களை ஆர்வத்துடன் செய்கிறார்கள்.

    ஆர்டருக்கான பணம் செலுத்தப்பட்டவுடன், இணைய தளத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதனால் சம்பாதித்த பணத்தையும் இழந்து மிகவும் ஏமாற்றம் அடைகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்தில் இந்த மோசடி தொடர்பாக மொத்தம் 25 வழக்குகள் பதிவாகி உள்ளன. நீங்கள் பட்டாசு வாங்கும் இணைய தளத்தின் சட்டபூர்வமான தன்மையை எப்போதும் சரி பார்க்கவும், வாடிக்கையாளர் மதிப்புரைகளைப் பார்க்கவும், அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்ணுக்கான லேண்ட்லைன் எண் இணைய தளத்தில் உள்ளதா? எனச் சரி பார்த்து, பாதுகாப்பான கட்டண முறைகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்யவும்.

    நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகி இருந்தால், உடனடியாக சைபர்கிரைம் கட்டணமில்லா உதவி எண். 1930-ஐ டயல் செய்து புகார் அளிக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெண் ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
    • வழக்கில் குற்றம் நிரூப்பிக்கப்பட்டதால் முருகனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 44). தனியார் நிறுவன ஊழியர். இவர் உறவினர் பெண் ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி மோகன் முன்னிலையில் நடந்து வந்தது.

    இந்த வழக்கில் குற்றம் நிரூப்பிக்கப்பட்டதால் முருகனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    பின்னர் முருகன் தான் செய்த தவறை உணர்ந்து நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து குற்றவாளிகளுக்கான நன்னடத்தை கால சட்டம் 1958-ன் கீழ் தண்டனையை ரத்து செய்து முருகனை விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

    • ஆதித்யாவின் செல்போன் காதலியின் கைக்கு கிடைத்தது. அதில் புகைப்படங்கள் இருக்கும் கேலரியை திறந்து பார்த்தார்.
    • கேலரி முழுவதையும் பார்த்தபோது கால் சென்டர் நிறுவனத்தில் வேலை செய்யும் வேறு சில பெண்களின் நிர்வாண புகைப்படங்களும் இருந்தன.

    பெங்களூரு:

    பெங்களூரு பெல்லந்தூரில் இயங்கி வரும் கால் சென்டர் நிறுவனத்தில் 23 வயது இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.

    இப்பெண் தன்னுடன் பணிபுரிந்த ஆதித்யா சந்தோஷ் (25) என்பவரை 4 மாதங்களாக காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் அந்தரங்கமாக இருந்தபோது புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.

    இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ஆதித்யாவின் செல்போன் காதலியின் கைக்கு கிடைத்தது. அதில் புகைப்படங்கள் இருக்கும் கேலரியை திறந்து பார்த்தார். அப்போது தன் நிர்வாண புகைப்படம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    மேற்கொண்டு கேலரி முழுவதையும் பார்த்தபோது கால் சென்டர் நிறுவனத்தில் வேலை செய்யும் வேறு சில பெண்களின் நிர்வாண புகைப்படங்களும் இருந்தன. ஒட்டுமொத்தமாக பெண்களின் 13 ஆயிரம் நிர்வாண புகைப்படங்கள் கேலரிக்குள் இருந்தன.

    இது குறித்து கால் சென்டர் நிறுவன அதிகாரிகள் கவனத்திற்கு இளம்பெண் கொண்டு சென்றார். அவர்கள் ஒயிட் பீல்டு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து ஆதித்யா சந்தோஷ் கைது செய்யப்பட்டார். அவரது செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதனை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் புகைப்படங்கள் எடுத்து இளம்பெண்களை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் கால் சென்டர் பெண் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பெரும்பாலும் வங்கி பரிவர்த்தனைகள் அதிகம் செய்வோரிடமும், தொழில் அதிபர்களிடமும் தான் குற்றவாளிகள் குறிவைத்து மோசடி செய்கிறார்கள்.
    • பெண்கள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    ஈரோடு:

    தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு புதிய மோசடிகள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருகிறது.

    இது குறித்து போலீசார் என்னதான் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினாலும் ஆங்காங்கே மோசடி சம்பவங்கள் நடைபெற்று தான் வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக செல்போன் மூலம் வங்கி அதிகாரி போல் பேசி மோசடியில் ஈடுபடும் சம்பவம் நடந்து வருகிறது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்கள் செல்போன் எண்ணிற்கு வேறு மாநில காவல் அதிகாரிகள் பேசுவதாக கூறி வி.பி.எண்.+ 2222856817, 2244444121 போன்ற எண்களில் இருந்து செல்போன் அழைப்பு மூலமாகவோ அல்லது வாட்ஸ்-அப் கால், மெசஞ்சர் கால், ஸ்கைப் லிங்க் இதுபோன்ற ஆன்லைன் கால் மூலமாகவோ தொடர்பு கொண்டால் அதை நிராகரித்து விட வேண்டும்.

    தங்களுடைய ஆதார் அட்டை மூலம் செல்போன் எண் ஒன்று வாங்கப்பட்டுள்ளதாகவும், அந்த செல்போனில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்தால் அதை யாரும் நம்ப வேண்டாம். தங்களிடம் ரகசியமாக பேச வேண்டும் என்பதால் தனியறையில் அமர்ந்து பேசுமாறும் உடன் இருக்கக்கூடாது என்று கூறினால் அதையும் தவிர்க்க வேண்டும்.

    பெரும்பாலும் வங்கி பரிவர்த்தனைகள் அதிகம் செய்வோரிடமும், தொழில் அதிபர்களிடமும் தான் குற்றவாளிகள் குறிவைத்து மோசடி செய்கிறார்கள். அதனால் இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் யாரும் வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் ஆகியவற்றில் வரும் விளம்பரத்தில் பார்ட் டைம் ஜாப் தொடர்பான செய்திகளை நம்ப வேண்டாம்.

    பெண்கள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். குற்றவாளிகள் தங்களது புகைப்படங்களை மார்பிங் செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப் போவதாக மிரட்டி பணம் பறிக்கக்கூடும். கடந்த சில மாதங்களாக இது போன்ற மோசடி அதிகமாக நடைபெறுவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    இது தொடர்பாக ஏதேனும் சந்தேகமாக இருந்தால் 1930 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். அல்லது சைபர் கிரைம் போலீசாரின் இணையதள முகவரி www.CyberCrime.gov.in தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வன்கொடுமை ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
    • தொடர்ச்சியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    தேனியில் ஒரு விடுதியில் தங்கி இருந்த போது அவரது காரில் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததாக தேனி போலீசார் தனியாக வழக்கு போட்டிருந்தனர். 2-வதாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அவர் மீது சென்னை, சேலம், திருச்சியிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை

    சென்னையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத் தின் பெண் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 294பி, 354-டி, 506(1), 509 மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டுள்ளனர்.

    தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி அளித்த புகாரில் 294-பி, 5061) ஆகிய 2 சட்டப் பிரிவுகளின் கீழ் சென்னை சைபர்கிரைம் போலீசார் மேலும் ஒரு வழக்கையும் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் சென்னை யில் மட்டும் அவர் மீது நேற்று இரவு 2 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

    திருச்சி மாநகரைச் சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவுபடுத்துதல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    சேலம் மாநகரில் பணி புரியும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் கீதா, சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் பெண் போலீசார் குறித்து யூ டியூபர் சங்கர் கூறிய கருத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் விசா ரணை நடத்தி சவுக்கு சங்கர் மீது தகாத வார்த்தை யில் பேசுவது, அரசு ஊழி யரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அவதூறாக பேசு வது, துன்புறுத்தல், கண்ணி யத்தை குலைப்பது ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதன் மூலம் சவுக்கு சங்கர் மீது மொத்தம் 6 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. இதில் கோவை மற்றும் தேனியில் போடப்பட்ட வழக்குகளில் அவர் கைதாகி சிறையில் உள்ளார். மற்ற 4 வழக்குகளிலும் அடுத்தடுத்து சவுக்கு சங்கரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ×