search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Online Cheating"

    • குயவர்பாளையம் பெண் டெலிகிராம் மூலம் பகுதி நேர வேலை என கூறியதை நம்பி ரூ.88 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.
    • கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ. 40 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்து போனார்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது.

    இதில் புதுச்சேரியில் என்ஜினீயர், டாக்டர் என நன்கு படித்தவர்கள் தான் அதிகம் ஏமாந்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் புதுச்சேரியில் 10 பேர் சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் ரூ.8.25 லட்சத்தை இழந்துள்ளனர். வில்லியனுார் பெண் ஒருவர், குறைந்த விலையில் துணிகள் கிடைக்கும் என சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தை நம்பி மர்மநபர் கூறிய வங்கி கணக்கில் ரூ. 6 ஆயிரத்தை செலுத்தி ஏமாந்துள்ளார்.

    இன்ஸ்டாகிராம் மூலம் பகுதி நேர வேலை என கூறியதை நம்பி அரியாங்குப்பம் பெண் ரூ. 90 ஆயிரத்தையும், முதலியார்பேட்டை பெண் ரூ.21 ஆயிரத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளனர்.

    வேலை தேடி ஆன்லைனில் பதிவு செய்திருந்த சின்ன காலாப்பட்டு வாலிபரை தொடர்பு கொண்ட மர்மநபர், ஸ்பைஸ் ஜெட் மனிதவள மேம்பாட்டு அதிகாரி பேசுவதாக கூறி வேலை உறுதியாகி விட்டது. சில கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி ரூ.2 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி உள்ளார்.

    குயவர்பாளையம் பெண் டெலிகிராம் மூலம் பகுதி நேர வேலை என கூறியதை நம்பி ரூ.88 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.

    சாரத்தை சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்மநபர் வங்கியில் இருந்து பேசுவதாகவும், கே.ஓய்.சி.யை அப்டேட் செய்வதாக கூறி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.7,500 அபேஸ் செய்து உள்ளார்.

    லாஸ்பேட்டை வாலிபருக்கு, கிரெடிட் கார்டு வந்துள்ளதாக வந்த லிங்க்கை ஓபன் செய்து வங்கி தகவலை பதிவிட்ட அடுத்த நொடியே அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 24 ஆயிரம் அபேஸ் ஆனது. காமராஜர் சாலையைச் சேர்ந்த பெண்ணிடம், மர்மநபர் கூரியர் கம்பெனியில் இருந்து பேசுவதாகவும், டெலிவரி ஆகாத பொருள் குறித்து அறிய அவர் அனுப்பிய மொபைல் அப்ளிக்கேஷன் இன்ஸ்டால் செய்து, தகவல் பதிவிட்டதும் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.19 ஆயிரம் திருடப்பட்டது.

    வி.மணவெளியை சேர்ந்தவர் வாட்ஸ்அப்பில் வந்த விளம்பரத்தை பார்த்து, தாய்லாந்து சுற்றுலா செல்ல தொடர்பு கொண்டுள்ளார். விமான டிக்கெட், ரூம் புக்கிங் செய்ய ரூ. 3 லட்சம் வங்கி கணக்கில் செலுத்திய பின்பு மர்மநபர் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

    இதேபோன்று, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ. 40 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்து போனார்.

    இதுதொடர்பான புகார்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஆர்டருக்கான பணம் செலுத்தப்பட்டவுடன், இணைய தளத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது.
    • விலைகள் மிகவும் குறைவாக இருப்பதால், தங்கள் பண்டிகை கொண்டாட்டங்களுக்காக இணைய தளத்தில் ஆர்டர்களை ஆர்வத்துடன் செய்கிறார்கள்.

    சென்னை:

    தீபாவளி பட்டாசை ஆன்லைனில் விற்பனை செய்வதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக சைபர்கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளிப் பண்டிகை காலத்தில் பட்டாசுகளுக்கான தேவை அதிகரிப்பதால், சைபர் குற்றவாளிகள் போலி இணையதளங்களை உருவாக்கி நம்ப முடியாத விலையில் பட்டாசுகளை வழங்குவதாக உறுதியளித்து மோசடி செய்வதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். எனவே பொதுமக்கள் இந்த மோசடி பற்றிய விழிப்புணர்வோடு இருப்பதும், இத்தகைய மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதும் அவசியமாகும்.

    பொதுமக்கள் https://luckycrackers.com/ என்ற இணைய தளத்திற்குச் சென்று ஆர்டரைச் செய்தபின் பின்னர் வாட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு ஆர்டரின் ஸ்கிரீன் ஷாட்டை அனுப்புகிறார்கள். விலைகள் மிகவும் குறைவாக இருப்பதால், தங்கள் பண்டிகை கொண்டாட்டங்களுக்காக இணைய தளத்தில் ஆர்டர்களை ஆர்வத்துடன் செய்கிறார்கள்.

    ஆர்டருக்கான பணம் செலுத்தப்பட்டவுடன், இணைய தளத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதனால் சம்பாதித்த பணத்தையும் இழந்து மிகவும் ஏமாற்றம் அடைகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்தில் இந்த மோசடி தொடர்பாக மொத்தம் 25 வழக்குகள் பதிவாகி உள்ளன. நீங்கள் பட்டாசு வாங்கும் இணைய தளத்தின் சட்டபூர்வமான தன்மையை எப்போதும் சரி பார்க்கவும், வாடிக்கையாளர் மதிப்புரைகளைப் பார்க்கவும், அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்ணுக்கான லேண்ட்லைன் எண் இணைய தளத்தில் உள்ளதா? எனச் சரி பார்த்து, பாதுகாப்பான கட்டண முறைகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்யவும்.

    நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகி இருந்தால், உடனடியாக சைபர்கிரைம் கட்டணமில்லா உதவி எண். 1930-ஐ டயல் செய்து புகார் அளிக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டாக்டர் ஆன்லைன் செயலி மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதியில் இருந்து அக்டோபர் 4-ந்தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ.90 லட்சத்தை முதலீடு செய்தார்.
    • பெங்களூரு நகரில் நடந்து வரும் தொடர் சைபர் குற்றங்களால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு கன்னிங்காம் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் டாக்டர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைன் செயலி மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து அந்த டாக்டர் ஆன்லைன் செயலி மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதியில் இருந்து அக்டோபர் 4-ந்தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ.90 லட்சத்தை முதலீடு செய்தார்.

    இதையடுத்து சம்மந்தப்பட்ட செயலியை தொடர்பு கொண்டு கேட்டபோது டாக்டர் செய்த முதலீட்டில் ரூ.40 லட்சம் லாபம் ஈட்டியதாக சொன்னார்கள். இதையடுத்து லாபத்தொகையை டாக்டர் திருப்பி கேட்டார். அப்போது அவர்கள் லாபத்தொகையை கொடுக்க ரூ.8 லட்சம் வழிகாட்டுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினர்.

    இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த டாக்டர் பெங்களூரு ஐகிரவுண்ட்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு நகரில் நடந்து வரும் தொடர் சைபர் குற்றங்களால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    • குறைந்த அளவு முன்தொகை செலுத்தினால், மாதந்தோறும் ஊதியம் போல் பணம் வந்து கொண்டிருக்கும் என்று கூறி மோசடி செய்யும் கும்பல் அதிகரித்துள்ளது.
    • தொடக்கத்தில் குறைந்த அளவு லாபத்தை கொடுக்கும் கும்பல், நாளடைவில் அதிக அளவு பணத்தை பறித்து கொண்டு ஏமாற்றி விடுகின்றனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள சங்கர்நகர் பாலாஜி நகரை சேர்ந்தவர் இமானுவேல். இவரது மகன் சார்லஸ் (வயது 31). இவர் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது செல்போன் வாட்ஸ்அப்பில் கடந்த செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் குறுந்தகவல் மற்றும் லிங்க் வந்துள்ளது.

    தொடர்ந்து அவரது செல்போனுக்கு வந்த அழைப்பில் எதிர்புறம் பேசிய நபர், வாட்ஸ்அப்பில் அனுப்பிய அந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் அதிக அளவு பொருட்கள் ஆர்டர் செய்யுங்கள். விளம்பரங்களை பாருங்கள். அப்போது உங்களுக்கு ரேட்டிங் அதிகரித்து லாபமாக பணம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

    இதனை உண்மை என்று நம்பிய சார்லஸ், அதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பேசிய அந்த நபர், வாட்ஸ்அப்பில் 2 வங்கி கணக்குகளை அனுப்பி விடுவதாகவும், அதில் பணம் செலுத்துமாறும் கூறியுள்ளார். அவ்வாறு அனுப்பும் பணத்திற்கு வட்டியுடன் கூடுதல் லாபம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

    இதனை நம்பிய சார்லஸ் கடந்த செப்டம்பர் 9-ந்தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக 2 வங்கி கணக்குகளுக்கும் பணம் செலுத்தி வந்துள்ளார். இவ்வாறாக அவர் நேற்று முன்தினம் வரை ரூ.13 லட்சத்து 44 ஆயிரத்து 803 செலுத்திய நிலையில் அவருக்கு எந்த லாபமும் வரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த சார்லஸ் நேற்று நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ரமா வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்மநபர் குறித்து விசாரித்து வருகிறார். நெல்லை மாவட்டத்தில் இதுபோன்ற மோசடிகள் அதிக அளவில் நடக்கிறது. குறிப்பாக யூ-டியூப்பில் விளம்பரங்களை பார்த்து அதற்கு ரேட்டிங்கை அதிகரிக்க செய்ய வேண்டும். இதற்கு குறைந்த அளவு முன்தொகை செலுத்தினால், மாதந்தோறும் ஊதியம் போல் பணம் வந்து கொண்டிருக்கும் என்று கூறி மோசடி செய்யும் கும்பல் அதிகரித்துள்ளது.

    தொடக்கத்தில் குறைந்த அளவு லாபத்தை கொடுக்கும் அந்த கும்பல், நாளடைவில் அதிக அளவு பணத்தை பறித்து கொண்டு ஏமாற்றி விடுகின்றனர். வீட்டில் இருக்கும் பெண்கள் அதிக அளவில் இதுபோன்ற மோசடியில் சிக்கும் நிலையும் இருந்து வருகிறது. மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில் ஒவ்வொரு கிராமம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் எவ்வளவோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இனியும் இதுபோன்ற மோசடிகளில் யாரும் சிக்கிவிட வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • தனது காதலனிடம் இருந்து எந்த தகவலும் வராததால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த இளம்பெண் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து இளம்பெண்ணிடம் மோசடி செய்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    வடமாநிலத்தை சேர்ந்த லாவண்யா (வயது 26) என்ற பெண், புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி. படித்து வருகிறார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். காதலர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு சில மாதங்களாக பேசாமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் லாவண்யாவின் இன்ஸ்டாகிராம் செயலியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? காதல் பிரச்சனையா? தொழிலில் பிரச்சனையா? எதுவாக இருந்தாலும் நாங்கள் மாந்திரீக முறையில் தீர்த்து வைக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது அவர் தனது காதலுடன் பிரச்சனை இருப்பதாக கூறினார்.

    எதிர்முனையில் பேசியவர், நான் சொல்கிற சில விஷயங்களை செய்து, மாந்திரீக பூஜைக்கும் ஒத்துழைப்பு கொடுத்தால் உங்கள் காதலரை சேர்த்து வைக்கிறோம் என்று கூறினார். பின்னர் அந்த பெண்ணிடம் அவர் மாந்திரீக பொருட்கள் வாங்க வேண்டும், பல பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய லாவண்யா பல்வேறு தவணைகளாக ரூ.5 லட்சத்து 84 ஆயிரத்து 340 அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

    இருப்பினும் தனது காதலனிடம் இருந்து எந்த தகவலும் வராததால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து லாவண்யாவிடம் மோசடி செய்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடர்ந்து வழங்கப்பட்ட ‘டாஸ்க்’ செய்து முடித்தவுடன் அடுத்தடுத்து ரூ.175, ரூ.225 வங்கி கணக்கில் பணம் வந்தது.
    • கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பதால் ரூ.4 லட்சம் டெபாசிட் செய்தால் தான் பணத்தை எடுக்க முடியும் என தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சசிதரன் (வயது 23). இவர் புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த 3-ந்தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    அதில் 3 ஓட்டல்களுக்கு 'ரேட்டிங்' கொடுத்தால் ரூ.150 சம்பாதிக்கலாம் என்று ஒரு 'டாஸ்க்' வழங்கப்பட்டது.

    அதை செய்ததும் ரூ.150-ஐ பெறுவதற்கு டெலிகிராம் மூலமாக லிங்க் வந்தது. அந்த இணைப்பில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் சசிதரன் பதிவிட்டார். உடனே அவரின் வங்கி கணக்கில் ரூ.150 வரவு வைக்கப்பட்டது.

    அவருக்கு தொடர்ந்து வழங்கப்பட்ட 'டாஸ்க்' செய்து முடித்தவுடன் அடுத்தடுத்து ரூ.175, ரூ.225 வங்கி கணக்கில் பணம் வந்தது. மேலும் ரூ.ஆயிரம் டெபாசிட் செய்து ரூ.1,300 பெற்றிருக்கிறார். தொடர்ந்து ஆன்லைன் மற்றும் வங்கி கணக்கு மூலமாக 23 முறை ரூ.7 லட்சத்து 78 ஆயிரத்து 232 செலுத்தினார்.

    அதன்பின் அவரது வங்கி கணக்கில் ரூ.13 லட்சத்து 44 ஆயிரத்து 384 இருப்பு உள்ளதாக காட்டியது. அந்த தொகையை சசிதரனால் எடுக்க முடியவில்லை. அப்போது அவரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருந்தது.

    இதுபற்றி கேட்டபோது கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பதால் ரூ.4 லட்சம் டெபாசிட் செய்தால் தான் பணத்தை எடுக்க முடியும் என தெரிவித்தனர்.

    அதன் பின்னரே அவர்கள் பணம் மோசடி செய்திருப்பது சசிதரனுக்கு தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'ஆன்லைனில் யாரும் முதலீடு செய்ய வேண்டாம். புதுவையில் நாளுக்கு நாள் ஆன்லைனில் முதலீடு செய்து பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழக்கிறார்கள். இதில் படித்தவர்கள் தான் அதிக பேர் ஏமாறுகிறார்கள் என்பது வேதனைக்குரியது.

    ஆன்லைனில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருகிறோம், கூடுதல் வட்டி தருகிறோம் என்று சொன்னால் பொதுமக்கள் நம்ப வேண்டாம்' எனக்கூறினர்.

    • போனில் பேசிய நபர் மாணவியின் ஆண் நண்பரை போலவே குரலை மாற்றி பேசி ஏமாற்றி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
    • மாணவிக்கு தெரிந்த நபர்கள் யாரும் இதுபோன்று பேசி ஏமாற்றினார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு நேற்று செல்போன் அழைப்பு வந்தது. போனில் பேசிய நபர் மாணவியின் ஆண் நண்பர் போலவே பேசினார்.

    அப்போது அவர் தனக்கு அவசரமாக மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுவதாகவும், உடனடியாக ரூ. 50 ஆயிரம் பணம் அனுப்பமுடியுமா? என்றும் கேட்டுள்ளார்.

    இதை உண்மை என்று நம்பிய மாணவி ஆண் நண்பர் கூறிய எண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் இது தொடர்பாக தனது நண்பரை தொடர்பு கொண்டு மாணவி கேட்டபோதுதான் மோசடி நபர் ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது.

    போனில் பேசிய நபர் மாணவியின் ஆண் நண்பரை போலவே குரலை மாற்றி பேசி ஏமாற்றி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மோசடி நபர் தொழில்நுட்ப ரீதியாக மாணவியின் ஆண் நண்பரின் குரலை தெரிந்து கொண்டு வெளி மாநிலத்தில் இருந்து ஏமாற்றினாரா? என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

    அதே நேரத்தில் மாணவிக்கு தெரிந்த நபர்கள் யாரும் இதுபோன்று பேசி ஏமாற்றினார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • பல்வேறு தவணைகளாக அந்த வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சத்து 87 ஆயிரம் அனுப்பினார்.
    • செலுத்திய தொகைக்கான லாபத்தொகையோ அல்லது செலுத்திய பணத்தையோ திருப்பி கொடுக்கவில்லை.

    கோவை:

    கோவை கள்ளிமடையை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 30). இவருடைய செல்போனுக்கு டெலிகிராமில் இருந்து ஒரு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலை செய்தால் நல்ல ஊதியம் கிடைக்கும் எனவும், அதில் உள்ள லிங்கை அழுத்தவும் என்று கூறப்பட்டு இருந்தது.

    உடனே அவர் அந்த லிங்கை அழுத்தி உள்ளே சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு பேசியதுடன், டெலிகிராமில் குரூப் தொடங்கப்பட்டு உள்ளது, அதில் உங்கள் எண்ணையும் இணைத்து உள்ளோம். உங்களுக்கு ஆன்லைனில் நல்ல வேலை இருக்கிறது. உங்களுக்கு கொடுக்கப்படும் வேலை தொடர்பாக அந்த குரூப்பிலேயே தகவல் அனுப்பி வைக்கப்படும் என்றனர்.

    மேலும் அதை வைத்து நீங்கள் வேலை செய்தால் அதிகளவில் பணம் சம்பாதிக்கலாம் என்றும், அதற்காக நீங்கள் அவ்வப்போது பணமும் செலுத்த வேண்டும் என்றும் கூறி இருந்தது. இதனை நம்பிய அவர் பல்வேறு தவணைகளாக அந்த வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சத்து 87 ஆயிரம் அனுப்பினார். ஆனால் அவர்கள் கூறியபடி அவருக்கு செலுத்திய தொகைக்கான லாபத்தொகையோ அல்லது செலுத்திய பணத்தையோ திருப்பி கொடுக்கவில்லை.

    இதுகுறித்து அந்த குழுவில் அவர் கேட்டபோது, மேலும் அதிக பணம் அனுப்புமாறு கூறியுள்ளது. அப்போதுதான் அவருக்கு அந்த நிறுவனம் போலி என்பதும், தனக்கு ஆன்லைனில் தகுந்த வேலை கொடுப்பதாக கூறி நூதன முறையில் பணம் பெற்று ஏமாற்றியதும் தெரியவந்தது. இது தொடர்பாக பிரியங்கா, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சைபர் கிரைம் போலீசார் மோசடி கும்பலின் வங்கி கணக்கை முடக்கி வங்கி அதிகாரிகளுடன் பேசி ரூ.68 ஆயிரத்தை மீட்டு அந்த பெண்ணிடம் கொடுத்தனர்.
    • மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    இன்றைய நவீன உலகில் ஆன்லைன் மோசடி பல வகைகளில் நடைபெற்று வருகின்றன. செல்போனில் வரும் மெசேஜ் மற்றும் ஆன்லைனில் வரும் விளம்பரத்தை நம்பி பணத்தை பறிகொடுப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

    அதேபோல் ஈரோட்டில் ஒரு பெண் ஆன்லைன் மோசடி கும்பலிடம் கவர்ச்சிகரமான திட்டத்தை நம்பி பணத்தை இழந்து உள்ள சம்பவம் நடந்துள்ளது.

    ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவரின் செல்போன் எண்ணிற்கு சமீபத்தில் ஒரு மெசேஜ் வந்துள்ளது.

    அந்த மெசேஜை அவர் திறந்து பார்த்தபோது அதில் குறைந்த முதலீட்டில் நிறைய லாபம் பெறலாம் என கவர்ச்சிகரமான திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒரு செல்போன் எண்ணும் பதிவிடப்பட்டிருந்தது.

    இது உண்மை என நம்பி அந்த பெண் அந்த மெசேஜில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அதில் பேசிய நபர் நீங்கள் குறைந்த முதலீடு செய்தால் சில மாதங்களில் நிறைய லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    அதன்படி அந்தப் பெண் ரூ.50 ஆயிரத்தை அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். பின்னர் 2-வது முறையாக ரூ.32 ஆயிரத்தை அனுப்பி உள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். ரூ 14 ஆயிரம் மட்டும் அந்த பெண்ணிற்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு மீதம் உள்ள ரூ. 68 ஆயிரத்தை அனுப்பவில்லை.

    இது குறித்து அந்த பெண் கேட்டபோது ஒவ்வொரு நாளும் ஏதாவது காரணம் சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் இது குறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த மோசடி கும்பல் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது அந்த செல்போன் அழைப்பு பெங்களூரில் இருந்து வந்துள்ளது தெரியவந்தது. அந்த வங்கி கணக்கு ஆந்திராவில் உள்ள வங்கி கணக்கு என தெரிய வந்தது.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அந்த வங்கி கணக்கை முடக்கி வங்கி அதிகாரிகளுடன் பேசி ரூ.68 ஆயிரத்தை மீட்டு அந்த பெண்ணிடம் கொடுத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆன்லைன் வேலை என்ற பெயரில் பெயரளவில் நேர்முகத் தேர்வு நடத்தி வேலையில் சேர்த்துக் கொள்வதாக கூறுவது வழக்கம்.
    • சம்பளம் தர வேண்டுமெனில் டெபாசிட் தொகை தேவை எனக்கூறி ஆயிரக்கணக்கான ரூபாய் பெற்றுள்ளனர்.

    நாகர்கோவில்:

    நாடு முழுவதும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பலால் ஏராளமானோர் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். பணத்தை இழந்த சிலர் தங்கள் உயிரை விட்டுள்ளனர்.

    சைபர் கிரைம் போலீசார் அவ்வப்போது சில மோசடி கும்பலை கைது செய்தாலும், மோசடிகள் நின்ற பாடில்லை. இதில் ஆன்லைன் மூலம் வேலை தருவதாக கூறி வாலிபர்களிடம் பணம் பறிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இது தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் மும்பையை சேர்ந்த ராஜா என்பவர் மலேசியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

    இவர் மும்பை, மலேசியா, நாகர்கோவில் போன்ற பல்வேறு பகுதிகளில் ஒரு கும்பலை வைத்து ஆன்லைன் மூலம் வேலை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்ததும், இதில் ஈடுபட்ட ஒருவர் நாகர்கோவில் அருகே உள்ள பூதப்பாண்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட திட்டுவிளைவு பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் சாரோன் (வயது 30)என்பதும் தெரியவந்தது.

    அவர் தற்போது சொந்த ஊரில் இருப்பதை அறிந்த மும்பை சைபர் கிரைம் சி.ஐ.டி. ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர், பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசாரின் துணையுடன் திட்டுவிளை குருசடி வந்தனர்.

    அங்கு வீட்டில் இருந்த பிரின்ஸ் சாரோனிடம் விசாரணை நடத்தியதில் மோசடியில் அவருக்கு பங்கு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து சுமார் 100 சிம் கார்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்ட பிரின்ஸ் சாரோனை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவரை விசாரணைக்காக போலீசார் மும்பை அழைத்துச் செல்ல உள்ளனர்.

    100 சிம் கார்டுகள் வைத்திருந்தது ஏன் என்பது பற்றி பிரின்ஸ் சாரோனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    ஆன்லைன் வேலை என்ற பெயரில் பெயரளவில் நேர்முகத் தேர்வு நடத்தி வேலையில் சேர்த்துக் கொள்வதாக கூறுவது வழக்கம். பின்னர் சம்பளம் தர வேண்டுமெனில் டெபாசிட் தொகை தேவை எனக்கூறி ஆயிரக்கணக்கான ரூபாய் பெற்றுள்ளனர். மேலும் வேலைக்கு டெபாசிட் தொகை என்ற பெயரிலும் பணம் பெற்றுள்ளனர். அதன் மூலம் சுமார் 100 கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்துள்ளது. அதன் பின்னர் தங்களது சிம் கார்டை அகற்றிவிட்டு புதிய சிம் கார்டை பயன்படுத்தி மற்றொரு மோசடியில் ஈடுபடுவது உண்டு. இதனால் தான் 100-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் அவனிடம் இருந்துள்ளது.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • ஆன்லைன் மோசடிகள் குறித்து காவல்துறையினர் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதனை பலரும் கண்டு கொள்வதில்லை.
    • இதற்கு உதாரணமாக நெல்லை அருகே, ஆன்லைன் செயலி ஒன்றில் ஒரே நாள் இரவில் ரூ.1 லட்சம் வரை இழந்த ஐ.டி.ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

    நெல்லை:

    ஆன்டிராய்டு செல்போன்கள் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய காலத்தில், நித்தம் நித்தம் உருவாகும் புது புது செயலிகளில் சில செயலிகள் மோசடிக்கு பயன்படுத்தப்படுகிறது.

    குறிப்பாக இளைஞர்களையும், சிறுவர்களையும் மையப்படுத்திய சில செயலிகள் அவர்களை ஆன்லைனில் அடிமையாக்குவதோடு, லட்சக்கணக்கில் பணத்தையும் கறந்து விடுகிறார்கள்.

    இதுபோன்ற ஆன்லைன் மோசடிகள் குறித்து காவல்துறையினர் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதனை பலரும் கண்டு கொள்வதில்லை.

    இதற்கு உதாரணமாக நெல்லை அருகே, ஆன்லைன் செயலி ஒன்றில் ஒரே நாள் இரவில் ரூ.1 லட்சம் வரை இழந்த ஐ.டி.ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் தடி ஜெயசூர்யா(வயது 22). பி.டெக். பட்டதாரியான இவர் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    இதற்காக நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே பண்டாரகுளத்தில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார். அவருடன் அதே ஊரை சேர்ந்த நண்பர் ஒருவரும் தங்கி உள்ளார்.

    நேற்று காலை தனது நண்பரை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு, அறைக்கு திரும்பிய ஜெயசூர்யா மாலை 5 மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டும்.

    ஆனால் அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவரது நண்பர் அவரை தேடி அறைக்கு சென்றார். அப்போது வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவஇடத்திற்கு இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    ஜெயசூர்யா தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நேற்று முன்தினம் அவரது செல்போனுக்கு ஒரு மேசேஜ் வந்ததும், அதில் மாடல் அழகியின் புகைப்படத்தை காட்டி, குறிப்பிட்ட ஒரு செயலியை டவுன்லோடு செய்யுமாறு அழைப்பு வந்ததும் தெரிய வந்தது.

    அந்த செயலியை ஜெயசூர்யா டவுன்லோடு செய்துள்ளார். அதில் ஏராளமான மாடல் அழகிகளின் கிளுகிளுப்பான புகைப்படங்கள் இருந்துள்ளது. அந்த அழகிகளுடன் ஜாலியாக பேசுவதற்கு, பழகுவதற்கு, உல்லாசமாக இருப்பதற்கு என தனித்தனியாக பணம் நிர்ணயித்துள்ளனர்.

    அதில் மணிக்கு ரூ.2500 முதல் ரூ.20 ஆயிரம் வரை இருந்ததாகவும், அவற்றில் சில அழகிகளின் பெயரில் ஜெயசூர்யா பணத்தை கட்டி உள்ளார். ஆனால் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் சென்ற பின்னர் செயலியில் இருந்து உரிய பதில்கள் வரவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் மீண்டும், மீண்டும் அந்த செயலியில் உள்ள பல்வேறு அழகிகளின் பெயரில் பணத்தை கட்டி ஒரே நாளில் ரூ.1 லட்சம் வரை கட்டி உள்ளார். ஆனால் பணத்தை இழந்தது மட்டுமே மிச்சம் ஆகி உள்ளது. குறிப்பிட்ட அழகிகளிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அதன் பின்னர் அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.

    இதனால் நேற்று காலை அவர் செயலியில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு தான் கட்டிய பணத்தை மட்டுமாவது திரும்ப தந்து விடுங்கள் என கேட்டுள்ளார். அப்போது மறுமுனையில் பேசியவர்கள் அவரை திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்வேதாவின் செல்போனை தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் ரூ.1.30 லட்சத்தை ஆன்லைனில் செலுத்தினால் ரூ.11 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
    • அதற்கு ஸ்வேதா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என தெரிவித்தார். இதையடுத்து எதிர் முனையில் பேசிய மர்மநபர் ஸ்வேதா வங்கி கணக்கிற்கு ரூ.50,000 அனுப்பினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், மங்கலகிரி அடுத்த நவலூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா சவுத்ரி. (வயது22). இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை செய்து வந்தார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடி வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் ஸ்வேதாவின் செல்போனை தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் ரூ.1.30 லட்சத்தை ஆன்லைனில் செலுத்தினால் ரூ.11 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அதற்கு ஸ்வேதா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என தெரிவித்தார். இதையடுத்து எதிர் முனையில் பேசிய மர்மநபர் ஸ்வேதா வங்கி கணக்கிற்கு ரூ.50,000 அனுப்பினார்.

    2 நாட்கள் கழித்து மீண்டும் ஸ்வேதாவை தொடர்பு கொண்ட மர்மநபர் தற்போது ரூ.1.30 லட்சத்தை தனது வங்கி கணக்குக்கு செலுத்துமாறு வங்கி கணக்கு எண்ணை செல்போனிற்கு அனுப்பினார்.

    இதையடுத்து ஸ்வேதா மர்மநபர் அனுப்பிய ரூ.50 ஆயிரத்துடன் சேர்த்து ரூ.1.30 லட்சத்தை அனுப்பி வைத்தார். இதையடுத்து மர்ம நபரின் செல்போன் என்னை ஸ்வேதா தொடர்பு கொண்ட போது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் ஸ்வேதா விரக்தி அடைந்து யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

    இந்த நிலையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் இருந்து ஸ்வேதாவிற்கு போன் செய்து வெள்ளிக்கிழமை வேலைக்கு நேரில் வருமாறு தகவல் தெரிவித்தனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை ஐதராபாத் செல்வதற்காக ஸ்வேதா குடும்பத்தினர் காரில் செல்ல தயாராக இருந்தனர். அப்போது வெளியில் சென்று வருவதாக ஸ்வேதா தனது பைக்கை எடுத்துக் கொண்டு சென்றார்.

    சிறிது நேரம் கழித்து சில்லக்கல்லு ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ள உள்ளதாக தனது தாய்க்கு போன் செய்தார். அவரது தாயார் ஸ்வேதா செல்போனை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து ஸ்வேதாவின் தாயார் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது ஸ்வேதாவின் செல்போன் மட்டும் ஏரிக்கரை மீது இருந்தது. போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சில்லக்கல்லு ஏரியில் ஸ்வேதாவை தேடினர். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை ஸ்வேதாவின் உடல் ஏரியில் மிதந்தது. போலீசார் ஸ்வேதாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு ஸ்வேதாவிடம் பணத்தை ஏமாற்றியது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×