search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி பல்கலைக்கழக மாணவியிடம் ரூ.6 லட்சம் பறிப்பு: ஆன்லைனில் நூதன மோசடி
    X

    புதுச்சேரி பல்கலைக்கழக மாணவியிடம் ரூ.6 லட்சம் பறிப்பு: ஆன்லைனில் நூதன மோசடி

    • தனது காதலனிடம் இருந்து எந்த தகவலும் வராததால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த இளம்பெண் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து இளம்பெண்ணிடம் மோசடி செய்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    வடமாநிலத்தை சேர்ந்த லாவண்யா (வயது 26) என்ற பெண், புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி. படித்து வருகிறார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். காதலர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு சில மாதங்களாக பேசாமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் லாவண்யாவின் இன்ஸ்டாகிராம் செயலியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? காதல் பிரச்சனையா? தொழிலில் பிரச்சனையா? எதுவாக இருந்தாலும் நாங்கள் மாந்திரீக முறையில் தீர்த்து வைக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது அவர் தனது காதலுடன் பிரச்சனை இருப்பதாக கூறினார்.

    எதிர்முனையில் பேசியவர், நான் சொல்கிற சில விஷயங்களை செய்து, மாந்திரீக பூஜைக்கும் ஒத்துழைப்பு கொடுத்தால் உங்கள் காதலரை சேர்த்து வைக்கிறோம் என்று கூறினார். பின்னர் அந்த பெண்ணிடம் அவர் மாந்திரீக பொருட்கள் வாங்க வேண்டும், பல பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய லாவண்யா பல்வேறு தவணைகளாக ரூ.5 லட்சத்து 84 ஆயிரத்து 340 அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

    இருப்பினும் தனது காதலனிடம் இருந்து எந்த தகவலும் வராததால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து லாவண்யாவிடம் மோசடி செய்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×