search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் ஒரே நாளில் 10 பேரிடம் ரூ.8.¼ லட்சம் ஆன்லைன் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை
    X

    புதுச்சேரியில் ஒரே நாளில் 10 பேரிடம் ரூ.8.¼ லட்சம் ஆன்லைன் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

    • குயவர்பாளையம் பெண் டெலிகிராம் மூலம் பகுதி நேர வேலை என கூறியதை நம்பி ரூ.88 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.
    • கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ. 40 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்து போனார்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது.

    இதில் புதுச்சேரியில் என்ஜினீயர், டாக்டர் என நன்கு படித்தவர்கள் தான் அதிகம் ஏமாந்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் புதுச்சேரியில் 10 பேர் சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் ரூ.8.25 லட்சத்தை இழந்துள்ளனர். வில்லியனுார் பெண் ஒருவர், குறைந்த விலையில் துணிகள் கிடைக்கும் என சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தை நம்பி மர்மநபர் கூறிய வங்கி கணக்கில் ரூ. 6 ஆயிரத்தை செலுத்தி ஏமாந்துள்ளார்.

    இன்ஸ்டாகிராம் மூலம் பகுதி நேர வேலை என கூறியதை நம்பி அரியாங்குப்பம் பெண் ரூ. 90 ஆயிரத்தையும், முதலியார்பேட்டை பெண் ரூ.21 ஆயிரத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளனர்.

    வேலை தேடி ஆன்லைனில் பதிவு செய்திருந்த சின்ன காலாப்பட்டு வாலிபரை தொடர்பு கொண்ட மர்மநபர், ஸ்பைஸ் ஜெட் மனிதவள மேம்பாட்டு அதிகாரி பேசுவதாக கூறி வேலை உறுதியாகி விட்டது. சில கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி ரூ.2 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி உள்ளார்.

    குயவர்பாளையம் பெண் டெலிகிராம் மூலம் பகுதி நேர வேலை என கூறியதை நம்பி ரூ.88 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.

    சாரத்தை சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்மநபர் வங்கியில் இருந்து பேசுவதாகவும், கே.ஓய்.சி.யை அப்டேட் செய்வதாக கூறி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.7,500 அபேஸ் செய்து உள்ளார்.

    லாஸ்பேட்டை வாலிபருக்கு, கிரெடிட் கார்டு வந்துள்ளதாக வந்த லிங்க்கை ஓபன் செய்து வங்கி தகவலை பதிவிட்ட அடுத்த நொடியே அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 24 ஆயிரம் அபேஸ் ஆனது. காமராஜர் சாலையைச் சேர்ந்த பெண்ணிடம், மர்மநபர் கூரியர் கம்பெனியில் இருந்து பேசுவதாகவும், டெலிவரி ஆகாத பொருள் குறித்து அறிய அவர் அனுப்பிய மொபைல் அப்ளிக்கேஷன் இன்ஸ்டால் செய்து, தகவல் பதிவிட்டதும் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.19 ஆயிரம் திருடப்பட்டது.

    வி.மணவெளியை சேர்ந்தவர் வாட்ஸ்அப்பில் வந்த விளம்பரத்தை பார்த்து, தாய்லாந்து சுற்றுலா செல்ல தொடர்பு கொண்டுள்ளார். விமான டிக்கெட், ரூம் புக்கிங் செய்ய ரூ. 3 லட்சம் வங்கி கணக்கில் செலுத்திய பின்பு மர்மநபர் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

    இதேபோன்று, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ. 40 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்து போனார்.

    இதுதொடர்பான புகார்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×