search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரையோர மக்கள்"

    • படிப்படியாக மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
    • ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    சென்னை:

    சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரே நாளில் பெய்த பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அடையாறு ஆற்றில் கட்டுக்கடங்காமல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் அடையாறு ஆற்றின் கரையோரம் இருந்த வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சென்னை நகரின் பல பகுதிகளும் வெள்ளக் காடானது. ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அடையாறு ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்ய உத்தரவிட்டார். அதன்படி அடையாறு ஆற்றின் கரையோரம் வசித்த குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டன. அங்கு 9500 குடும்பங்கள் வசித்து வந்தது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அவர்கள் படிப்படியாக மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 4,500 குடும்பங்கள் அடையாறு ஆற்றின் கரையோரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளன.

    கோட்டூர்புரம் சித்ரா நகரில் அடையாறு ஆற்றின் கரையோரம் 206 குடும்பத்தினர் வசித்து வந்தனர். இவர்களை அங்கிருந்து வெளியேற்றி வேறு இடத்தில் மறுகுடி யமர்வு செய்யும் பணிகள் நேற்று தொடங்கியது. சென்னை மாநகராட்சி, நீர்வள ஆதாரத்துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டன. இந்த 206 குடும்பங்களும் மறைமலை நகர் அருகில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து அங்கு வசித்த பொதுமக்கள் தங்கள் உடைமைகளுடன் கோட்டூர்புரம் சித்ரா நகரில் இருந்து புறப்பட்டு சென்றனர். பொதுமக்கள் வீடுகளை காலி செய்து விட்டு சென்றதும் கோட்டூர்புரம் சித்ரா நகரில் புல்டோசர் அடையாறு ஆற்றின் கரையோரம் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது. தற்போது ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    ×