search icon
என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • நாடு முழுவதும், 27 லட்சம் கோடி ரூபாய், 44 கோடி மக்களுக்கு சென்றடைந்தது.
    • நிறைய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட நிறைய மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளர் நரசிம்மன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வருகை தந்தார்.

    அப்போது அவர் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

    கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் கொளுத்தும் வெயில் என்று பாராமலும், வேலை நாட்களிலும் இந்த பிரசார கூட்டத்திற்கு மக்கள் திரண்டுள்ளனர். இதனை கண்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைக்கு இரண்டு, மூன்று கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறனே். மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற கோஷம் ஒலித்து வருகின்றன.

    எதிர்கட்சியாக காங்கிரஸ் கட்சியினர், தி.மு.க.வினர் பாராளுமன்றத்தில் கிருஷ்ணகிரியை பற்றியோ, ஓசூரை பற்றியோ என்ன கேள்விகளை எழுப்பினர்கள் என்று பெரிய கேள்விகுறியாக உள்ளது.

    நிறைய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட நிறைய மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. இதில் பி.எம். முத்ரா யோஜன திட்டத்தின் மூலம் ஏழை எளியோருக்கு சிறு,குறு தொழில்கள் தொடங்க வங்கி மூலம், எந்த ஒரு ஆவணமின்றி குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டுள்ளது.


    நாடு முழுவதும், 27 லட்சம் கோடி ரூபாய், 44 கோடி மக்களுக்கு சென்றடைந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் 5 ஆயிரம் 427 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 6.34 லட்சம் பேருக்கு கடன் கிடைத்துள்ளது. அதேபோன்று ஸ்டார் அப்திட்டம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 465 பேருக்கு ரூ.60 கோடி கிடைத்துள்ளது. இதில் குறிப்பாக பெண்கள், எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவினரும் பயன் அடைந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் 2.75 லட்சம் பேரின் வீட்டிற்கு குழாய் மூலம் நேரடியாக குடிநீர் மூலம் விநியோக செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் நேரிடையாக வழங்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கும் திட்டம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறத்தில் 18,600 பேருக்கு பிரதமர் மோடி வீடு கட்டி கொடுத்துள்ளார். அதேபோல் மாவட்டத்தில் நகர்ப்புறத்தில் 7460 பேருக்கு பிரதமர் மோடியின் பெயரில் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு மூலம் ஒரு ரூபாய் செலவில்லாமல், எந்தவொரு ஆவணம் காட்டாமல் கேஷ் லெஸ் என்ற முறையில் இலவச சிகிச்சை அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 64 ஆயிரம் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 2.35 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளனர்.

    கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில் தொழில் வளர்ச்சி அடைந்து உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் துறையில் தி.மு.க.வினர் வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். போதை பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் முதலமைச்சர் குடும்பத்துடன் தொடர்பில் இருந்துள்ளார்.

    முன்னதாக அவர் டெல்லியில் இருந்து பெங்களூரு விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் மூலம் வந்தார். அங்கிருந்து கார் மூலம் ஓசூரில் உள்ள பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில் பா.ஜ.க., பா.ம.க., மற்றும் கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தை முடித்துவிட்டு அவர் காரில் அங்கிருந்து புறப்பட்டு பெங்களூருவுக்கு சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சாவூருக்கு புறப்பட்டார்.

    • அரிய வகை மரங்கள் மற்றும் செடி கொடிகள் தீயில் கருகி சேதமானது.
    • வனப்பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு காட்டுத் தீ ஏற்படுவதை கண்காணித்து வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்குட்பட்ட அய்யூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடும் வெப்பத்தால் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது.

    இதனால், அரிய வகை மரங்கள் மற்றும் செடி கொடிகள் தீயில் கருகி சேதமானது. காட்டு தீயால் வனப்பகுதியில் வாழ்ந்து வரும் பறவைகள், உள்ளிட்ட வனவிலங்குகள் பாதிக்கப்பட்டது.

    இதனையடுத்து, ஓசூர் வன கோட்ட உயிரின காப்பாளர் கார்த்திகேயனி உத்தரவின் பேரில், தேன் கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன், தலைமையில் வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு வனப்பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு காட்டுத் தீ ஏற்படுவதை கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தொழுவபெட்டா வனப்பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மல்லேசப்பா (வயது29) என்பவர் வனப்பகுதிக்கு தீ வைத்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து வனப்பகுதியில் தீ வைத்த குற்றத்திற்காக அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    வனத்துறையினர் மல்லே சப்பாவை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி தருமபுரி சிறையிலடைத்தனர்.

    வனப்பகுதிகளில் அத்துமீறி நுழைந்து தீ விபத்து ஏற்பட காரணமாக இருப்பவர்கள் மீது வனச்சட்டங்களின் படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் வித்யாராணியை ஆதரித்து சீமான் பேசினார்.
    • சம்பவத்தால் பிரசார கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வித்யாராணி வீரப்பனை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை மத்தூர், பர்கூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து இரவு கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் வித்யாராணியை ஆதரித்து சீமான் பேசினார்.

    அப்போது சீமான் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது கூட்டத்தில் இருந்து ஒரு வாலிபர் திடீரென்று ஓடிவந்து அவரை கட்டி பிடித்து செல்பி எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    உடனே ஆதரவாளர்கள் ஓடிவந்து அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தி மேடையில் இருந்து கீழே இறங்கிவிட்டனர்.

    இதனால் சீமான் அந்த வாலிபரை முறைத்தபடி திட்டினார். இதனைத்தொடர்ந்து அவர் தனது பேச்சை தொடர்ந்தார். இந்த சம்பவத்தால் பிரசார கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    • மத்தூரம்மா கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளிக்கு அருகில் உஸ்கூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு, பிரசித்தி பெற்ற மத்தூரம்மா என்ற கிராம தேவதை கோவில் தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    திருவிழாவில் அதிக உயரத்தில் மிக பிரம்மாண்டமான தேர் அமைக்கப்பட்டு அதில் அம்மனை வைத்து ஊர்வலமாக இழுத்துச் செல்வது வழக்கம். மேலும் டிராக்டர் மற்றும் எருதுகளை கட்டி தேரை இழுத்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விழாவில் 25-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டும், மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றும் மத்துரம்மாவை வழிபட்டு செல்வார்கள்.

    அந்த வகையில், மத்தூரம்மா கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மிக பிரம்மாண்டமான 127 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தேரில், அம்மனை வைத்து இழுத்துச் சென்ற போது, ஹிலல்லிகே என்ற கிராமத்தில், எதிர்பாராதவிதமாக தேர் சரிந்து கீழே விழுந்தது. அப்போது அந்த பகுதியில் பக்தர்கள், பொதுமக்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வங்கி சார்பில் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.15 லட்சம் வரை பணம் வங்கி ஊழியர்கள் நிரப்பி சென்றுள்ளனர்.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    குருபரப்பள்ளியில் ஏ.டி.எம்.மில் வெல்டிங் எந்திரம் மூலம் உடைத்து ரூ.10 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதிக ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மர்ம நபர்கள் துணிகரமாக கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளதால் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் சார்பில் ஒரு ஏ.டி.எம். எந்திரம் வைக்கப்பட்டு உள்ளது.

    அந்த ஏ.டி.எம். உள்ள பகுதியில் சுற்றி ஓட்டல்கள், பெட்ரோல் பங்க, தனியார் கார் கம்பெனி உள்பட பெரும் நிறுவனங்கள் மற்றும் சிறிது தொலைவில் தொலைவில் குருபரப்பள்ளி போலீஸ் நிலையமும் அமைந்துள்ளது.

    இதன் காரணமாக ஏ.டி.எம். உள்ள அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் பகுதியாகவே காணப்படும்.

    இந்த நிலையில் நேற்று இரவு வங்கி சார்பில் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.15 லட்சம் வரை பணம் வங்கி ஊழியர்கள் நிரப்பி சென்றுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் ஏ.டி.எம். எந்திரம் இருக்கும் அறையில் நுழைந்தனர். அப்போது அவர்கள் கருப்பு மையை கொண்டு அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பூசி உள்ளனர். பின்னர் அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை வெல்டிங் எந்திரம் மூலம் உடைத்து அதில் இருந்து ரூ.10 லட்சம் வரை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் இன்று காலையில் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் வங்கி அதிகாரிகளுக்கும், குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஏ.டி.எம்.மில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களின் குறித்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இந்த பகுதியில், போலீஸ் நிலையம் அருகில் இருந்த போதிலும் ஏ.டி.எம்.மில் மர்ம நபர்கள் துணிச்சலாக வெல்டிங் எந்திரம் மூலம் அறுத்து எடுத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • சர்வீஸ் வாகனத்தில் வந்தவர்களிடம் 45 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளுக்கு மட்டுமே உரிய ஆவணம் இருந்துள்ளது.

    ஓசூர்:

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குறிப்பாக ஓசூர் அருகே மாநில எல்லையோர பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் நேற்று இரவு ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த கூரியர் சர்வீஸ் வாகனத்தை அவர்கள் மடக்கி சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி, தங்க நகைகள் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த வாகனத்தை ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று அதில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து சோதனை செய்தனர். மேலும் கூரியர் சர்வீஸ் வாகனத்தில் வந்தவர்களிடம் வாகனத்தில் கொண்டு சென்ற பொருட்களுக்கான ஆவணங்களை சோதனை செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தங்க நகைகளை இந்த கூரியர் சர்வீஸ் நிறுவனத்தினர் பெற்று கொண்டு ஓசூரில் உள்ள பிரபல ஜுவல்லரிக்கு எடுத்து சென்றது தெரிய வந்தது.

    அதிகாரிகள் சோதனை செய்ததில், கூரியர் சர்வீஸ் வாகனத்தில் மொத்தம் 69 பெட்டிகளில் தங்க நகைகள் இருந்தது. ஆனால் கூரியர் சர்வீஸ் வாகனத்தில் வந்தவர்களிடம் 45 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளுக்கு மட்டுமே உரிய ஆவணம் இருந்துள்ளது. மீதமுள்ள 24 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து 69 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதன் மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் எனவும் தங்க நகைகளின் மொத்த எடை 30 கிலோ எனவும் கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை சீல் வைத்து, வாகனத்தின் மூலம் ஓசூர் அரசு கருவூல அலுவலகத்திற்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பஸ் நிலையம் வந்த பொது அந்த 2 பெண்களும் அவசர அவசரமாக பஸ்சில் இருந்து இறங்கி சென்றுள்ளனர்.
    • போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

    மத்தூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூர் மாவட்டம் டூப்பனஅள்ளி இந்திரா நகரையை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், இவரது மனைவி சத்யா மற்றும் குழந்தைகளுக்கு பள்ளியின் கோடை விடுமுறையொட்டி சத்யாவின் அம்மா வீடான திருவண்ணாமலையில் குழந்தைகளுக்களை விட்டுவிட்டு மீண்டும் சத்யா, அவரது தங்கை லட்சுமி, கணவர் ஸ்ரீகாந்த் ஆகிய 3 பேரும் நேற்று இரவு திருவண்ணாமலையிலிருந்து பெங்களூர் நோக்கி அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்பொழுது மத்தூர் அருகே பஸ் வந்தபோது 2 பெண்கள் சத்யாவின் இருக்கைக்கு பின் உரசியவாறு நின்று கொண்டு கையில் இருந்த காசை 2, 3 முறை கீழே போட்டு எடுப்பது போல் நடித்து வந்தனர்.

    இந்நிலையில் மத்தூர் பஸ் நிலையம் வந்த பொது அந்த 2 பெண்களும் அவசர அவசரமாக பஸ்சில் இருந்து இறங்கி சென்றுள்ளனர். இதை சந்தேகித்த சத்யா அவரது பையை பார்த்துள்ளார். அப்பொழுது பையில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 6 பவுன் தங்க நகை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சத்திய கூச்சலிட்டு அழுதுள்ளார்.

    பின்னர் டிரைவர் அந்த பஸ்சை மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு ஓட்டி சென்றார். இதையடுத்து மத்தூர் போலீசார் சத்திய கூறிய அடையாளத்தின் பெயரில் மத்தூர் பஸ் நிலையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர்.

    அதில் 2 பெண்கள் ஊத்தங்கரை செல்லும் பஸ்சில் ஏறி சென்றது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அந்த பஸ் ஊத்தங்கரை செல்வதற்கு முன்னே சாமல்பட்டி அருகே பஸ்சை நிறுத்தி அதில் பயணித்த 2 பெண்களையும் பிடித்து பரிசோதனை செய்தனர். அப்பொழுது அதில் ஒரு பெண்னின் உள்ளாடையில் தங்க நகை இருந்தது தெரிய வந்தது. பின்னர் நகையை மீட்டு அந்த 2 பெண்களையும் கைது செய்து மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் லட்சுமி புரத்தைச் சேர்ந்த பிரியா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கருத்தம்மா என்கிற கார்த்திகா என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் மத்தூர் போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

    • நாங்கள் கூட்டணியில் தான் இருக்கிறோம், அதிமுக தான் கூட்டணியில் இருந்து விலகி உள்ளது.
    • சமூக நீதி எங்கள் உயிர் மூச்சு. சமூக நீதிக்காக போராடும் ஒரே தலைவர் ராமதாஸ்.

    கிருஷ்ணகிரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    பாமக- பாஜகவுன் கூட்டணி சேர்வது புதிதல்ல. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் 6 ஆண்டுகள் பாமக கூட்டணியில் இருந்தது.

    திமுகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதை முதலமைச்சர் ஆச்சரியத்துடன் பார்க்கின்றார்.

    நாங்கள் கூட்டணியில் தான் இருக்கிறோம், அதிமுக தான் கூட்டணியில் இருந்து விலகி உள்ளது.

    2014ம் ஆண்டு எனக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். எப்போதும் தர்மபுரி மக்களுக்கு உண்மையாக இருப்பேன். என் மீது நம்பிக்கை வைத்ததற்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்.

    நான் அப்போது கொண்டு வந்த திட்டங்கள் முழுமை அடையவில்லை. நிலுவையில் உள்ள திட்டங்களை சௌமியா அன்புமணி முடித்து வைப்பார்.

    பிரச்சினையும், தீர்வும் நமக்கு நன்றாக தெரிகிறது. அதிகாரம் வந்தால் ஒரே நாளில் தர்மபுரியின் 90 சதவீத பிரச்சிவைகளையும் தீர்க்க முடியும்.

    தர்மபுரி மக்களின் முன்னேற்றம் தான் எனக்கு முக்கிய வேலை. மேடைக்காக பேசவில்லை, உணர்வுப்பூர்வமாக பேசுகிறேன். திட்டங்கள் முழுமை அடையாததற்கு காரணம், முன்பு நீங்கள் தேர்வு செய்த எம்.பி.

    பாமக நிறுவனர் ராமதாஸ் போராடியதால் தான் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் வந்தது.

    முதல்வர் ஸ்டாலினும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தர்மபுரிக்கு என்ன செய்தனர் ?

    பாஜகவுடன் திமுக ஏன் முன்பு கூட்டணிக்கு சென்றது? பல முறை நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்துள்ளோம், புதிதாக சேரவில்லை.

    சமூக நீதி எங்கள் உயிர் மூச்சு. சமூக நீதிக்காக போராடும் ஒரே தலைவர் ராமதாஸ். எந்த கூட்டணியில் இருந்தாலும் சமூக நீதியில் சமரசம் கிடையாது.

    யார் பிரதமராக இருந்தாலும் சமூக நீதியை நாங்கள் விட்டு கொடுத்ததில்லை. அதிமுகவிற்கு, பாமக துரோகம் செய்யவில்லை.

    உழைத்து உழைத்து, மாறி மாறி உங்களை நாங்கள் முதல்வராக்கி வருகிறோம். வன்னியர்களுக்கு மனதார இட ஒதுக்கீடு அளித்ததா அதிமுக ? கடுமையாக போராட்டம் நடத்தினோம். அப்போதும் இட ஒதுக்கீடு அளிக்கவில்லை.

    தேர்தல் நெருங்கும் சமயத்தில் இட ஒதுக்கீட்டை அதிமுக அறிவித்தது. எனக்கு சீட்டு வேண்டாம். இட ஒதுக்கீடு கொடுத்தால் போதும் என்றார் ராமதாஸ்.

    இட ஒதுக்கீட்டை வைத்து பேரம் பேசினார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமிக்கு சமூக நீதி பற்றி கவலை கிடையாது. அரைகுறையாக சட்டம் வந்ததால்தான் நீதிமன்றம் ரத்து செய்தது.

    நாங்கள் இல்லை என்றால் அதிமுக ஆட்சி எப்போதோ முடிந்திருக்கும். நாங்கள் துரோகம் செய்யவில்லை, தியாகம் செய்தோம்.

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இட ஒதுக்கீடு பற்றி பேசினார்களா ? ஒரு அதிமுக எம்எல்ஏ-ஆவது பேசினாரா ?

    பாமக துரோகம் செய்யவில்லை, துரோகம் செய்தது அதிமுக தான். என் மனதில் அவ்வளவு ஆதங்கம் இருக்கிறது.

    காலம் முழுவதும் அதிமுகவுடன் இருப்போம் என ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொடுத்தோமா ? கருணாநிதி இருந்திருந்தால் இந்நேரம் கையெழுத்து போட்டிருப்பார்.

    நமது நோக்கம் தர்மபுரியின் வளர்ச்சி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கவுஸ்பீக்கு ஆதரவாக அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும் ராஜாவை திட்டினார்.
    • விக்னேஷ் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குண்டுப்பட்டி கிராமத்தில் 17 குடியிருப்பு வீடுகள் உள்ளன.

    இக்கிராமத்தின் குடிநீர் தேவைக்காக கிராமத்தின் மையப்பகுதியில் புளியம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 26-ந் தேதி அன்று ராஜா (வயது55) என்பவர் அதே பகுதியில் உள்ள சின்டெக்ஸ் டேங்க் அருகே கட்டி வரும் புதிய குடியிருப்பு வீட்டிற்கு பைப் மூலம் தண்ணீர் எடுத்துள்ளார். இதனை அருகே குடியிருக்கும் கவுஸ்பீ என்பவர், தட்டி கேட்டார்.

    இதைத்தொடர்ந்து ராஜா கட்டிடத்திற்கு எடுத்து சென்ற குடிநீர் பைப் லைனை அகற்றியுள்ளார். இதனால் ராஜாவுக்கும், கவுஸ்பீக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் பேச்சுவார்த்தை முற்றிவிட, கவுஸ்பீயின் மருமகள் பாத்திமா (30) வீட்டிலிருந்து வெளியே வந்து ராஜாவை திட்டியுள்ளார். அப்போது கவுஸ்பீக்கு ஆதரவாக அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும் ராஜாவை திட்டினார்.

    அப்போது அவர் ராஜவையும் அவரது மகன்கள் மணி (25), பிரபு (23) ஆகியோரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ராஜாவின் மகன் மணி வீட்டிலிருந்த கட்டையை எடுத்து வந்து விக்னேஷை தாக்க முயன்றார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இதனை விக்னேஷ் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதனால், குடிநீர் பிடிப்பதில் தகராறு பிரச்சனை, மத பிரச்சனையாக மாறியதாக புரளி கிளம்பியது. மேலும், இந்த வீடியோ மாவட்டம் முழுவதும் பரவியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விக்னேஷ், மணி, பிரபு ஆகிய 3 பேரை கைது செய்து தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள பழனிசாமி மற்றும் வெண்ணிலா ஆகியோரை தேடி வருகின்றனர். இதுகுறித்து கைதான கவுஸ்பீ கூறியதாவது:- எங்களுக்குள் குடிநீர் பிடிப்பதில் தான் தகராறு ஏற்பட்டது. மற்றபடி சமூக வலைதளங்களில் வெளியானது அனைத்தும் புரளி என்று தெரிவித்தார்.

    • குடுவையை கைப்பற்றி போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்துள்ளனர்.
    • 2 அடி உயர முள்ள முழுமையான குடுவை ஒன்றும், உடைபட்ட சிறிய ரக 4 குடுவைகளும் இருந்தது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமையப்பெற்றுள்ளது.

    இப்பள்ளிக்கு சுற்று சுவர் உள்ள நிலையில், அதற்கு கேட் அமைப்பதற்காக கடந்த 28-ந்தேதி அன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜசேகரன், ஜே.சி.பி. வாகனத்தை அழைத்து பள்ளம் எடுத்துள்ளார். அப்போது சுமார் 5 அடி வரை பள்ளம் எடுத்தபோது, முக்கோண வடிவில் கல் ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். உடனே ஜே.சி.பி. எந்திரத்தை நிறுத்தச்சொல்லியதோடு, அந்த வாகனத்தை உடனே அனுப்பியுள்ளனர். பின்னர் கட்டிட மேஸ்திரி சிலம்பு மற்றும் குமார் உதவியுடன் கடப்பாரை கொண்டு முக்கோண வடிவ கல்லை அகற்றியுள்ளனர். அப்போது அந்த கல்லுக்கடியில் சுமார் 2 அடி உயர முள்ள முழுமையான குடுவை ஒன்றும், உடைபட்ட சிறிய ரக 4 குடுவைகளும் இருந்தது. பின்னர் தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் சத்திய மூர்த்தி ஆகிய இருவரும் குடுவையை எடுத்து பள்ளிக்கு சென்று வைத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த கட்டிட மேஸ்திரி சிலம்பு தாமோதரஹள்ளி கிராம நிர்வாக அலுவலர் கவுரிசங்கரை சந்தித்தபோது, நடந்த இந்த விபரத்தினை தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக பள்ளிக்கு சென்று குடுவை பற்றிய விபரத்தை கேட்டுள்ளார். அவர்களும் அதை ஒப்புக்கொண்டுள்ளனர். குடுவையில் உள்ளவற்றை அகற்றிவிட்டு தண்ணீர் விட்டு சுத்தமாக கழுவி வைத்திருந்த குடுவையை கிராம நிர்வாக அலுவலரிடம் காண்பித்தனர். கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போச்சம் பள்ளி வட்டாட்சியர் மகேந்திரன், தலைமை ஆசிரியரிடம் விசாரித்த போது, உள்ளே ஒன்றும் இல்லை எனவும் சுத்தமாக வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். குடுவை கிடைத்தவுடன் ஏன் தெரிவிக்கவில்லை என கேட்டதற்கு, பதில் ஏதும் அளிக்காமல் இருந்ததாக வட்டாட்சியர் தெரிவித்தார்.

    தற்போது குடுவையை கைப்பற்றி போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்துள்ளனர்.

    தொல்லியல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளதாகவும், அவர்கள் வந்தவுடன் ஒப்படைத்து விடுவதாக வட்டாட்சியர் மகேந்திரன் தெரிவித்தார்.

    மேலும் பழங்காலத்து குடுவை கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் வைத்திருந்ததால் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் மீது நாகரசம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பதாக வட்டாட்சியர் தெரிவித்தார்.

    • தமிழக எல்லையான பிலி குண்டுலுவில் திடீரென நீர் வரத்து இரு தினங்களுக்கு முன்பு அதிகரித்தது.
    • தொடர்ந்து நேற்று நிலவரப்படி வினாடிக்கு 400 கன அடியாக நீர்வரத்து குறைந்தது.

    ஓகேனக்கல்:

    கர்நாடகா அணைகளில் இருந்து கர்நாடகா மக்களுக்கு குடிநீர் தேவைகளுக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் தமிழக எல்லையான பிலி குண்டுலுவில் திடீரென நீர் வரத்து இரு தினங்களுக்கு முன்பு அதிகரித்தது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த இரு தினங்க ளுக்கு முன்பு வினாடிக்கு 150 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் வினாடிக்கு வினாடிக்கு 1000 கன அடியாக அதிகரித்தது.

    தொடர்ந்து நேற்று நிலவரப்படி வினாடிக்கு 400 கன அடியாக நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில் தற்போது நிலவரப்படி வினாடிக்கு 700 கன அடியாக மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டி செல்கின்றன. 

    • தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி, ரூ.10 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 6 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சீதாராம் மேடு ஜலகண்டேஸ்வரர் நகரை சேர்ந்த லோகேஷ் குமார் (வயது35). இவர், பேரண்டபள்ளி பகுதியில் தனியார் கிரஷர் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி, பெங்களூரிலிருந்து அவர் காரில் வந்தபோது, ஓசூர் சோதனைச்சாவடி பகுதியில் அவரது காரை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி, ரூ.10 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் பிரியங்காவிடம் ஒப்படைத்தனர். தனது கிரஷரில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக அந்த பணத்தை அவர் பெங்களூரிலிருந்து, ஒரு தொழிலதிபரிடம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை, ஓசூர் ஜலகண்டேஸ்வரர் நகரில் உள்ள லோகேஷ் குமாரின் வீட்டில், ஓசூர் வருமான வரித்துறை துணை இயக்குனர் விஷ்ணு பிரசாத் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து சோதனை நடைபெற்றது. இந்த நிலையில், அவரது வீட்டில் இருந்து ஒரு சூட்கேசை கைப்பற்றி போலீஸ் ஜீப்பில் அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

    அதில் இருந்த 100 பவுன் நகை மற்றும் ரூ.1.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கிரஷர் உரிமையாளர் லோகேஷ் குமார், கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ பசவராஜின் உதவியாளர் மஞ்சுநாத்தின் மருமகன் ஆவார்.

    இந்த அதிரடி சோதனை ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×