என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் பிடிப்பதில் தகராறு: வீடியோ பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டவர் உள்பட 3 பேர் கைது
    X

    குடிநீர் பிடிப்பதில் தகராறு: வீடியோ பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டவர் உள்பட 3 பேர் கைது

    • கவுஸ்பீக்கு ஆதரவாக அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும் ராஜாவை திட்டினார்.
    • விக்னேஷ் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குண்டுப்பட்டி கிராமத்தில் 17 குடியிருப்பு வீடுகள் உள்ளன.

    இக்கிராமத்தின் குடிநீர் தேவைக்காக கிராமத்தின் மையப்பகுதியில் புளியம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 26-ந் தேதி அன்று ராஜா (வயது55) என்பவர் அதே பகுதியில் உள்ள சின்டெக்ஸ் டேங்க் அருகே கட்டி வரும் புதிய குடியிருப்பு வீட்டிற்கு பைப் மூலம் தண்ணீர் எடுத்துள்ளார். இதனை அருகே குடியிருக்கும் கவுஸ்பீ என்பவர், தட்டி கேட்டார்.

    இதைத்தொடர்ந்து ராஜா கட்டிடத்திற்கு எடுத்து சென்ற குடிநீர் பைப் லைனை அகற்றியுள்ளார். இதனால் ராஜாவுக்கும், கவுஸ்பீக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் பேச்சுவார்த்தை முற்றிவிட, கவுஸ்பீயின் மருமகள் பாத்திமா (30) வீட்டிலிருந்து வெளியே வந்து ராஜாவை திட்டியுள்ளார். அப்போது கவுஸ்பீக்கு ஆதரவாக அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும் ராஜாவை திட்டினார்.

    அப்போது அவர் ராஜவையும் அவரது மகன்கள் மணி (25), பிரபு (23) ஆகியோரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ராஜாவின் மகன் மணி வீட்டிலிருந்த கட்டையை எடுத்து வந்து விக்னேஷை தாக்க முயன்றார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இதனை விக்னேஷ் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதனால், குடிநீர் பிடிப்பதில் தகராறு பிரச்சனை, மத பிரச்சனையாக மாறியதாக புரளி கிளம்பியது. மேலும், இந்த வீடியோ மாவட்டம் முழுவதும் பரவியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விக்னேஷ், மணி, பிரபு ஆகிய 3 பேரை கைது செய்து தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள பழனிசாமி மற்றும் வெண்ணிலா ஆகியோரை தேடி வருகின்றனர். இதுகுறித்து கைதான கவுஸ்பீ கூறியதாவது:- எங்களுக்குள் குடிநீர் பிடிப்பதில் தான் தகராறு ஏற்பட்டது. மற்றபடி சமூக வலைதளங்களில் வெளியானது அனைத்தும் புரளி என்று தெரிவித்தார்.

    Next Story
    ×