search icon
என் மலர்tooltip icon

    சென்னை

    • காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபோதும் கர்நாடக அரசு திறக்கவில்லை.
    • அணைகளில் அதிகமாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான்.

    சென்னை:

    இன்று (மே 1-ந் தேதி) உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் அமைந்துள்ள மே தின நினைவுச் சின்னத்துக்கு தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மே தின நினைவு சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, தலைமை நிலைய செயலாளரான தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், டி.கே.எஸ்.இளங்கோவன், தொ.மு.க. பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்.பி., அமைச்சர் சி.வி.கணேசன், சென்னை மேற்கு மாவட்டக் கழக செயலாளர் நே.சிற்றரசு, பகுதிச் செயலாளர் மதன்மோகன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

     

    இதனை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகனை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபோதும் கர்நாடக அரசு திறக்கவில்லை. என்றைக்காவது கர்நாடகா அரசு நாங்கள் தண்ணீர் திறந்து விடுகிறோம் என்று சொல்லி இருக்கிறார்களா? இல்லை. அணைகளில் அதிகமாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான். குறைவாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான். காவிரி ஒழுங்காற்று குழு தண்ணீரை திறந்து விடுமாறு கூறியும் திறக்க மாட்டேன் என்று கர்நாடக அரசு கூறுகிறது.

    ஆகையால் மத்திய அரசை கர்நாடக அரசு மதிக்காமல் இருக்கிறது. இதில் கேள்வி கேட்க வேண்டியது சுப்ரீம் கோர்ட்டுதான். எனவே காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கருணாநிதியின் பல்வேறு திறன்கள் குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்தும் 5 பக்கங்கள் கொண்ட பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.
    • கட்டுமான ஆர்வலர் கலைஞர், செம்மொழி கலைஞர் என 11 தலைப்புகளில் கருணாநிதி சிறந்து விளங்கிய துறைகள், அவர் செய்த சாதனைகள் இடம் பெற்றுள்ளது.

    சென்னை:

    2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 9-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாடமாகச் சேர்க்கப்பட்டன.

    இந்நிலையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் நடப்பாண்டில் உரைநடை பகுதியில் "பன்முகக் கலைஞர்" என்ற தலைப்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பல்வேறு திறன்கள் குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்தும் 5 பக்கங்கள் கொண்ட பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

     

    குழந்தை உள்ளக் கலைஞர், போராட்ட கலைஞர், பேச்சு கலைஞர், நாடக கலைஞர், திரை கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ் கலைஞர், கவிதை கலைஞர், கட்டுமான ஆர்வலர் கலைஞர், செம்மொழி கலைஞர் என 11 தலைப்புகளில் கருணாநிதி சிறந்து விளங்கிய துறைகள், அவர் செய்த சாதனைகள் இடம் பெற்றுள்ளது.

    மேலும், இந்த பாடப் பகுதியின் இறுதியில் தமிழ் வெல்லும் என்று அவரின் கையெழுத்தையும் பதித்துள்ளனர். பல்வேறு திறன்கள் மூலம் அரசியல் மற்றும் எழுத்து உலகிலும் சிறந்து விளங்கினார் என்பதற்காக அவரின் திறமைகளை விளக்கும் வகையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ஒரு பாடமாகச் சேர்த்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கோடை வெயிலை சமாளிக்க, மக்கள் மலைவாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்துச் செல்கின்றனர்.
    • பொது போக்குவரத்து ஓட்டுநர்கள் மலைப் பகுதியில் ஓட்டி பழக்கமானவர்களா என்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பாதையில் ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றபோது, சுமார் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

    தகவலறிந்து சென்ற தீயணைப்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். சம்பவ இடத்திலேயே 4 பேர் இறந்ததாகவும், மருத்துவமனையில் மேலும் 2 பேர் இறந்ததாகவும், 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கோடை வெயிலை சமாளிக்க, மக்கள் மலைவாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்துச் செல்கின்றனர். எனவே, அரசு உடனடியாக உரிய அதிகாரிகளை பணிக்கு அமர்த்தி, அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சோதனை சாவடி அமைத்து, பேருந்து மற்றும் இதர வாகன ஓட்டுநர்களை பரிசோதனை செய்யவும், பொது போக்குவரத்து ஓட்டுநர்கள் மலைப் பகுதியில் ஓட்டி பழக்கமானவர்களா என்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த விபத்தில் பலியான 6 பேர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கிடவும்; பலத்த காயமடைந்தோருக்கு ரூ. 2 லட்சமும், சிறு காயமடைந்தோருக்கு ரூ. 50 ஆயிரமும், அரசின் சார்பில் நிதியுதவி வழங்கிடவும், உயர் மருத்துவ சிகிச்சை அளித்திடவும் அரசை வலியுறுத்துகிறேன்.

    இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும், மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும், எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாராளுமன்ற தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவை எதிா்கொண்ட தமிழ்நாட்டில் தோ்தலுக்கான ஆயத்தப்பணிகள் மற்றும் நடத்தை விதிகள் தற்போதும் அமலில் உள்ளது.
    • இடைத்தோ்தல் நடத்த தங்களுடைய நிா்வாகம் தயார் நிலையில் இருப்பதாக தோ்தல் ஆணையத்திடம் ஏற்கனவே தெரிவித்துள்ளனா்.

    புதுடெல்லி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி, உடல் நலக்குறைவால் கடந்த 6-ந்தேதி காலமானாா். இதையடுத்து அத்தொகுதி காலியானதாக ஏப்ரல் 8-ந்தேதி அறிவிக்கப்பட்டது.

    தோ்தல் விதிகளின்படி, ஒரு சட்டப்பேரவை அல்லது பாராளுமன்ற தொகுதி அதன் உறுப்பினரின் உயிரிழப்பாலோ, ராஜினாமா அல்லது வேறு காரணங்களுக்காகவோ காலியானதாக அறிவிக்கப்பட்டால், அத்தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தோ்தல் நடத்தப்படவேண்டும்.

    இந்த நிலையில் தற்போது பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடத்தப்படும் தோ்தலில் 6 கட்டங்களுக்கான தோ்தல் அறிவிக்கை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 6 கட்ட ஓட்டுப்பதிவுக்கான தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2 கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது.

    அடுத்து 7-ம் கட்ட தேர்தலுக்கான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் வரும் மே 7-ந்தேதி வெளியிட உள்ளது. அப்போது விக்கிரவாண்டி தொகுதிக்கும் சேர்த்து 7-ம் கட்ட தோ்தல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

    7-ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ளது. அன்று விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தோ்தல் நடத்தப்படுவதாக இருந்தால் அதற்கான அறிவிக்கையை வருகிற 7-ந்தேதியன்று தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.

    பாராளுமன்ற தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவை எதிா்கொண்ட தமிழ்நாட்டில் தோ்தலுக்கான ஆயத்தப்பணிகள் மற்றும் நடத்தை விதிகள் தற்போதும் அமலில் உள்ளது.

    இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கும் சோ்த்து இடைத்தோ்தலை நடத்தினால் தனியாக அத்தொகுதிக்கு ஆகும் முன்னேற்பாடுகள், செலவினம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை குறைக்கலாம் என்று ஆணையம் கருதுகிறது.

    இந்த விவகாரத்தில் மாவட்ட தோ்தல் அதிகாரி, மாநில தோ்தல் அதிகாரி ஆகியோா் இடைத்தோ்தல் நடத்த தங்களுடைய நிா்வாகம் தயார் நிலையில் இருப்பதாக தோ்தல் ஆணையத்திடம் ஏற்கனவே தெரிவித்துள்ளனா்.

    இதையடுத்து ஜூன் 1-ந்தேதி இடைத்தோ்தல் நடத்துவதற்கான சாத்தியத்தை தலைமைத் தோ்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைதான 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
    • நேற்று சுமார் 9 மணி நேரமாக சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடந்தினர்.

    சென்னை:

    பா.ஜ.க. நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சென்னையில் இருந்து ரூ.4 கோடி கடந்த மாதம் 26-ந் தேதி நெல்லைக்கு கொண்டு சென்றபோது தாம்பரத்தில் சிக்கியது.

    பணத்தை ரெயிலில் கொண்டு சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேர் மீது தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த வழக்கு தாம்பரம் போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. வழக்கு ஆவணங்கள் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைதான 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் 3 பேரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியது. அவர்கள் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகினர்.

    நேற்று சுமார் 9 மணி நேரமாக சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடந்த நிலையில், மீண்டும் சம்மன் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    3 பேரின் வாக்குமூலத்தை குறுக்கு விசாரணை செய்த பின்பு மீண்டும் விசாரணைக்கு அழைக்க உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    செல்போன் உரையாடல்களை கைப்பற்றி இருப்பதால் அது தொடர்பாகவும் மீண்டும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

    இவர்களிடம் பணத்தை கொடுத்தது யார்? நெல்லையில் யாரிடம் பணத்தை கொடுக்க சென்றனர் என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றது.

    3 பேரின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் மற்றும் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

    • உழைப்பு, காதல், பசி இந்த மூன்றுமே மண்ணுலகை இயக்கும் மகா சக்திகள்...
    • இந்தப் பாட்டு இந்த மூவருக்கு மட்டுமல்ல உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம்...

    சென்னை :

    மே தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து இன்று எக்ஸ் தள பக்கத்தில் 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' என்ற பாடலை வெளியிட்டு கூறியிருப்பதாவது,

    உழைப்பு, காதல், பசி

    இந்த மூன்றுமே

    மண்ணுலகை இயக்கும்

    மகா சக்திகள்

    அந்த உழைப்பு

    உரிமை பெற்றநாள்

    இந்த நாள்

    தூக்குக் கயிற்றுக்குக்

    கழுத்து வளர்த்தவர்களும்

    குண்டுகள் குடைவதற்காக

    நெஞ்சு நீட்டியவர்களும்

    வீர வணக்கத்துக்குரியவர்கள்

    இந்தச் சிறப்பு நாளுக்கு

    ஒரு சிவப்புப் பாடல் காணிக்கை

    எழுத்து வைரமுத்து

    இசை இளையராஜா

    குரல் ஜேசுதாஸ்

    இந்தப் பாட்டு

    இந்த மூவருக்கு மட்டுமல்ல

    உழைக்கும் தோழர்

    ஒவ்வொருவருக்கும் சொந்தம்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.
    • விபத்தில் உற்றாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன்.

    விபத்து குறித்த தகவல் நேற்று கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.

    இவ்விபத்தில் உற்றாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலின் போது தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவியுடன் வந்து அவர் வாக்களித்தார்.
    • தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் முழுமையாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ள முடியாத நிலை உள்ளது.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போகாத ஊர்களுக்கும், குக்கிராமங்களுக்கும் சென்று 24 நாட்களாக பிரசாரம் செய்திருந்தார்.

    தமிழ்நாடு முழுவதும் 39 பாராளுமன்ற தொகுதிகளில் 8,465 கிலோ மீட்டர் பயணம் செய்து 122 பிரசார முனைகளில் 3,726 நிமிடங்கள் பேசி மக்களை கவர்ந்தார். அவரது பேச்சை இறுதி வரை கலையாமல் மக்கள் ரசித்து கேட்டனர்.

    தேர்தலின் போது தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவியுடன் வந்து அவர் வாக்களித்தார்.

    தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் முழுமையாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ள முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 10 நாள் பயணமாக லண்டன் புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து நேற்று காலை 9.50 மணிக்கு விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து லண்டன் சென்றுள்ளார்.

    ஓய்வுக்காக லண்டன் சென்றுள்ளதால் அவரது பயண நிகழ்ச்சிகள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவர் 10-ந்தேதி சென்னை திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் மே தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • உழைப்பாளர்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட உறுதியேற்போம்!

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று, தொழிலாளர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம். இது மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் பங்களிப்புகள் இந்த நாளில் நினைவு கூரப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

    இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் மே தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த "மே தின" நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதை மனதில் கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட உறுதியேற்போம்! என கூறியுள்ளார்.

    • வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.
    • கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.86.50-க்கும் பார் வெள்ளி ரூ.86,500-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று சவரன் ரூ.54 ஆயிரத்திற்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ஒரு சவரன் ரூ.53,080-க்கும் கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,635-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.86.50-க்கும் பார் வெள்ளி ரூ.86,500-க்கும் விற்பனையாகிறது.

    • ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம்!
    • உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்!

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் உழைப்பாளர் தினத்தில் வாழ்த்திப் போற்றுவோம்!

    மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க - ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம்! உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்!

    இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

    • சென்னையில் வணிக சிலிண்டர் 1911 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • கடந்த மாதமும் வணிக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது.

    சென்னை:

    எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு சமையல் மற்றும் வணிக சிலிண்டர் விலையை மாற்றியமைக்கும். அந்த வகையில் மாதத்தின் முதல் நாளான இன்று விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை 19 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை வரை 1930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தற்போது 19 ரூபாய் குறைக்கப்பட்டு 1911 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஆனால் சமையல் சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை. சென்னையில் 1911 ரூபாய் விற்பனை செய்யப்படும் நிலையில் டெல்லி, மும்பை, கொல்கத்தா பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் விலையில் சிறிது மாற்றம் இருக்கும்.

    கடந்த மாதமும் வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×