search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விக்கிரவாண்டி தொகுதி"

    • புகழேந்தி மரணம் அடைந்த நிலையில் அது பற்றி மாவட்ட கலெக்டர் தமிழக சட்டசபை செயலகத்துக்கு முறைப்படி சனிக்கிழமையன்று தகவல் தெரிவித்திருந்தார்.
    • ஒரு சட்டமன்ற உறுப்பினர் மரணம் அடைந்தால் 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி வெள்ளிக்கிழமையன்று தேர்தல் பிரசார மேடையில் மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மரணம் அடைந்தார். அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    புகழேந்தி மரணம் அடைந்த நிலையில் அது பற்றி மாவட்ட கலெக்டர் தமிழக சட்டசபை செயலகத்துக்கு முறைப்படி சனிக்கிழமையன்று தகவல் தெரிவித்திருந்தார். அதை பெற்றுக்கொண்ட சட்டசபை செயலகம் தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது.

    விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. மரணமடைந்த காரணத்தால் அந்த தொகுதி காலியிடமாக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.

    இது தொடர்பாக அரசிதழிலும் இன்று வெளியிடப்படுகிறது.

    ஒரு சட்டமன்ற உறுப்பினர் மரணம் அடைந்தால் 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் இப்போது நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளதால் விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதத்திற்குள் (மே) இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இதுபற்றி இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு டெல்லிக்கு அறிக்கை அனுப்பியவுடன் இது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விக்கிரவாண்டி தொகுதிக்கு மே மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படுமா? அல்லது பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு இடைத்தேர்தல் நடைபெறுமா? என்பது ஓரிரு நாளில் தெரிய வரும்.

    • விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரான புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானார்
    • அண்ணன் புகழேந்தி அவர்களுடைய மரணம் கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் - உதயநிதி

    விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரரான புகழேந்தி மறைவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,

    "விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரும் - விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் புகழேந்தி அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.

    கழகப்பணி, மக்கள் பணி இரண்டிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அர்ப்பணிப்போடு பணியாற்றிய ஆற்றல் மிகு செயல்வீரர். அண்ணன் புகழேந்தி அவர்களுடைய மரணம் கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

    இத்துயரமான நேரத்தில் அண்ணன் புகழேந்தி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், கழகத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் அவர்களின் பணிகள் என்றும் நிலைத்திருக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • அயரா உழைப்பாலும், மக்கள் பணியாலும் படிப்படியாக வளர்ந்து, கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் புகழேந்தி உயர்ந்தார்.
    • புகழேந்தியின் மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி, கழகத்திற்கும் பேரிழப்பாகும்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் புகழேந்தி எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும், அதிர்ச்சியும் வேதனை தருகிறது.

    கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கழகத்தின் வெற்றிக்காகத் தேர்தல் பணிகளை ஆற்றி வந்தார். நேற்றைய என்னுடைய பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், சற்றே மயக்கம் வர, மருத்துவமனைக்குச் சென்றார். உடனடியாக நானும் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு, அவரது உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், அவர் நம்மைவிட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

    1973-இல் கழகத்தின் கிளைச் செயலாளராகத் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கிய புகழேந்தி, தமது அயரா உழைப்பாலும், மக்கள் பணியாலும் படிப்படியாக வளர்ந்து, கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உயர்ந்தார்.

    1996-இல் ஒன்றியத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான பணிகளை மேற்கொண்டவர். விக்கிரவாண்டி தொகுதி மக்களோடு, மக்களாக இருந்து அவர்களுக்கான அனைத்துப் பணிகளையும் அக்கறையுடன் மேற்கொண்டு வந்த புகழேந்தியை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அந்த மக்கள் அனுப்பி வைத்தனர். எப்போது என்னைச் சந்திக்க வந்தாலும், தொகுதி மக்களுக்கான கோரிக்கைகளுடன்தான் வருவார். அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுச் செல்வார். கழகத் துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடிக்கு உற்ற துணையாக விளங்கி - மக்களோடு மக்களாக வாழ்ந்த புகழேந்தியின் மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி, கழகத்திற்கும் பேரிழப்பாகும்.

    ஈடுசெய்ய முடியாத அவரது பேரிழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளர்.

    • மேடையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ. புகேழந்தி மயக்கம் ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
    • அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புகழேந்திக்கு முதல் உதவி செய்தனர்.

    விக்கிரவாண்டி:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    இதற்காக வேட்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் முன்னதாகவே வருகை தந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகைக்கு காத்திருந்தனர். நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதற்கு முன்பு மேடையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ. புகேழந்தி மயக்கம் ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்த அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புகழேந்திக்கு முதல் உதவி செய்தனர்.

    இதையடுத்து லட்சுமணன் எம்.எல்.ஏ. பதட்டத்துடன் அங்கு ஓடி வந்து மேடைக்கு கீழே அமர்ந்திருந்த அவரது மகன் செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்து மேடைக்கு அழைத்தார்.

    பின்னர் புகழேந்தி எம்.எல்.ஏ.வை கைத்தாங்கலாக அழைத்து சென்று முதலமைச்சருக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு ஏ.சி. அறையில் ஓய்வெடுக்க வைத்தனர். ஆனாலும் அவருக்கு சரியாகாததால் பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை 10.35 மணியளவில் புகழேந்தி எம்.எல்.ஏ. பரிதாபமாக உயிரிழந்தார்.

    மரணம் அடைந்த புகழேந்திக்கு கடந்த 4 வருடங்களாகவே கல்லீரல் பிரச்சனை இருந்து வந்தது. அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பிறகுதான் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இந்த நிலையில்தான் அவர் மேடையில் மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

    புகழேந்தி எம்.எல்.ஏ. தற்போது விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.

    புகழேந்தி எம்.எல்.ஏ. மரணம் அடைந்ததை அறிந்ததும் அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். அங்கு அவரது உடலை பார்வையிட்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    ×