search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை எக்ஸ்பிரஸ்"

    • நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.
    • வழக்கு விசாரணைக்கு நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.

    தாம்பரம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நயினார் நாகேந்திரன் ஓட்டலில் வேலை பார்த்த சதீஷ், பெருமாள் உள்பட3 பேரை கைது செய்து தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 3 பேரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் நயினார் நாகேந்திரன், ஆசைதம்பி, சென்னை அபிராமிபுரத்தை சேர்ந்த பா.ஜனதா மாநில தொழில் துறை பிரிவின் தலைவர் கோவர்தனன், பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஜெய்சங்கர், நவீன், பெருமாள் உள்ளிட்டோர் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது. வழக்கு விசாரணைக்கு நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து நேற்று ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் ஆகியோர் தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன், இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் ஆஜரானார்கள்.

    அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 2-வது சம்மன் அனுப்ப ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • சென்னையில் 2 இடங்களில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • பல்வேறு இடங்களில் இருந்து பணத்தை வாங்கி மொத்தமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் வைத்து பைகளில் அடுக்கி உள்ளனர்.

    தாம்பரம்:

    சென்னையில் இருந்து நெல்லை செல்லும் ரெயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு செல்லப்படுவதாக பறக்கும் படையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது.

    இந்த பணம் நெல்லை தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக எடுத்துச் செல்லப்படுவதாகவும் தகவல் பரவியது.

    இதைத் தொடர்ந்து அந்த பணத்தை பிடிக்க பறக்கும் படையினர் அதிரடியாக களம் இறங்கினார்கள். நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்வதற்காக தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இதையடுத்து தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயிலை மடக்கி ரூ.4 கோடி பணத்தை கைப்பற்ற பறக்கும் படையினர் முடிவு செய்தனர்.

    நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.40 மணி அளவில் தாம்பரம் ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. அங்கு ரெயிலை நிறுத்தி சோதனை செய்வதற்காக பறக்கும் படை அதிகாரிகளும், போலீசாரும் தயார் நிலையில் இருந்தனர்.

    பறக்கும் படை அதிகாரியான செந்தில்பாலமணி, துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி, உதவி கமிஷனர் நெல்சன் மற்றும் போலீஸ் படையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

    எஸ்-1 பெட்டியில் இருந்து எஸ்-10 பெட்டி வரைக்குள் ஏதாவது ஒரு ரெயில் பெட்டியிலேயே ரூ.4 கோடி பணத்தை எடுத்துச் செல்பவர்கள் பயணிப்பதாகவும் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவலை தெரிவித்தவர் கூறி இருந்தார்.

    இதையடுத்து பறக்கும் படையினர் சுமார் ½ மணி நேரம் ரெயிலை நிறுத்தி பயணிகளின் உடமைகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது எஸ்-7 பெட்டியில் பயணம் செய்த 3 பேர் வைத்திருந்த 6 பைகளில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பறக்கும் படை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து அந்த பணத்தை அப்படியே பைகளோடு கைப்பற்றி பறக்கும் படை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். தாம்பரம் போலீஸ் நிலையத்துக்கு பலத்த பாதுகாப்போடு பைகளை கொண்டு சென்ற பறக்கும் படையினர் பணம் எண்ணும் எந்திரத்தின் மூலமாக எவ்வளவு பணம் உள்ளது? என்று எண்ணிப் பார்த்தனர்.

    அப்போது அதில் ரூ.3 கோடியே 99 லட்சம் பணம் இருந்தது. இந்த பணத்தை தாம்பரம் தாசில்தார் நடராஜனிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    ரூ.4 கோடி பணத்தை எடுத்துச்சென்ற 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களது பெயர் சதீஷ், நவீன், பெருமாள் என்பது தெரிய வந்தது. இவர்களில் சதீசும், நவீனும் சகோதரர்கள் ஆவர். சதீஷ் பா.ஜனதா கட்சி நிர்வாகியாக உள்ளார்.

    இருவரும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் வேலை செய்து வருவதும், பெருமாள் என்பவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பதும் தெரிய வந்தது.

    3 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நெல்லை தொகுதி தேர்தல் செலவுக்காக பணத்தை கொண்டு செல்வதாக கூறினார்கள். சட்ட விரோதமாக ரெயிலில் கடத்தப்பட்ட இந்த பணத்துக்கு கணக்கு ஏதும் இல்லாத நிலையில் 3 பேர் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

    நெல்லையில் போய் இறங்கியதும் அங்கு ஒருவர் வருவார். அவரிடம் பணத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறியே எங்களிடம் இவ்வளவு பணமும் கொடுத்து அனுப்பப்பட்டிருப்பதாகவும் 3 பேரும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து இந்த பணத்தை நெல்லையில் வாங்குவதற்கு தயாராக இருந்த நபர் யார்? என்பது பற்றியும், பணம் எங்கிருந்து எடுத்து வரப்பட்டது? என் பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

    கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் இருந்தே ரூ.4 கோடி பணமும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் நெல்லை தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று பறக்கும் படை அதிகாரிகள் கருதுகிறார்கள்.

    இதைத் தொடர்ந்து ரூ.4 கோடி பணத்தின் முழு பின்னணியையும் அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள்.

    இதன்படி சென்னையில் 2 இடங்களில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் என்பவர் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார்.

    அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள புளுடைமண்ட் ஓட்டலிலும் இன்று பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இந்த 2 இடங்களிலும் மேலும் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    ரூ.4 கோடி பணம் எப்படி ஒரே இடத்துக்கு கொண்டு வரப்பட்டது? எங்கெல்லாம் வசூல் செய்யப்பட்டது? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்து உள்ளன. சென்னை கிரீன்வேஸ் ரோடு, யானைக்கவுனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பணத்தை வாங்கி மொத்தமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் வைத்து பைகளில் அடுக்கி உள்ளனர்.

    பின்னர் ரெயில் மூலமாக பணத்தை எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டு கைதான 3 பேருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    • தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
    • நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் 17-ம் தேதி மாலையுடன் முடிவடைகிறது. இதனால் அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50,000-க்கு மேல் பணம் வைத்திருப்போர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் அப்பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் கார்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், தாம்பரம் ரெயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய அதிரடி சோதனையில் 6 பைகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பணத்துடன் பிடிபட்ட 3 பேரையும் தாம்பரம் காவல்நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×