search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை"

    • இந்திய மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • மெட்ரோ ரெயில்களில் ஒப்பிடும் போது இதுவே மிக நீளமான 'யு' கர்டர் ஸ்பான் ஆகும்.

    இந்திய மெட்ரோ ரெயில் கட்டுமானத்தில் முதன்முதலாக புதுமையான புல்லர் ஆக்சில் முறையைப் பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

    நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் மேம்பட்ட கிரேன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 20 மீட்டர் உயரத்திற்கு 30 மீட்டர் யு கர்டரைக் கொண்டு செல்வதற்கும், அமைப்பதற்கும் மேம்பட்ட புல்லர் ஆக்சில் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    இதுகுறித்து இந்திய மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் இந்திய மெட்ரோ திட்டங்களில், முதன்முறையாக மேம்பட்ட கிரேன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 20 மீ உயரத்திற்கு 30 மீ யு கர்டரைக் கொண்டு செல்வதற்கும், அமைப்பதற்கும் மேம்பட்ட புல்லர் ஆக்சில் அமைப்பை அறிமுகப்படுத்தி, சென்னை மெட்ரோ ரெயில் மைல்கல்லில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளது. இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற மெட்ரோ ரெயில்களில் ஒப்பிடும் போது இதுவே மிக நீளமான 'யு' கர்டர் ஸ்பான் ஆகும்.

    பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த கனரக வாகனம் 12 அச்சுகளில் தலா 8 டயர்களுடன் மொத்தம் 96 டயர்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மெட்ரோ இரயில் கட்டுமானத்தில் U Girder பணிக்கு தேவையான தடையற்ற போக்குவரத்து, எடை விநியோகம் நிலைத்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மை போன்ற பணிகள் உறுதி செய்யப்படும்.

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் திட்ட குழுவினர் இணைந்து இந்த புல்லர் ஆக்சில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 30மீ நீளமுள்ள 185 மெட்ரிக் டன் எடை கொண்ட U-கர்டரைக் வெற்றிகரமாக நிறுவியுள்ளது.

    சென்னை மெட்ரோ இரயில் திட்டக் குழு இதுபோன்ற புதுமையான தீர்வுகளை கட்டுமான பணிகளில் பயன்படுத்துவதால், இந்திய மெட்ரோ துறையின் வரலாற்று மைல்கல் சாதனையை அடையாளப்படுத்துவது மட்டுமல்லாமல், சிக்கலான மற்றும் லட்சியத் திட்டங்களைத் துல்லியமாகவும் நிபுணத்துவத்துடனும் செயல்படுத்த பெரிதும் உதவுகிறது.

    ஒக்கியம்பேட்டை மற்றும் காரப்பாக்கம் இடையே முதல் நீளமான 'யு' கர்டர் ஸ்பான் இன்று (10.01.2024) அமைக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரெயில்

    நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள் மற்றும் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த நிகழ்வின் போது உடன் இருந்தனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • 1978 -ம் ஆண்டு ‘இனிக்கும் இளமை’ என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
    • வைதேகி காத்திருந்தாள் படம் விஜயகாந்த் திரை வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

    மனதில் என்ன தோன்றுகிறதோ?

    யாராக இருந்தாலும் வெளிப்படையாகவும் தைரியமாகவும் துணிந்து சொல்லக்கூடியவர் விஜயகாந்த். இதனால் அவர் இழந்தது அதிகம்.

    அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நியாயத்தின் பக்கம் இருந்து கொண்டு ஓங்கி குரல் கொடுத்து வந்தார் விஜயகாந்த்.

    அவரது சுபாவத்தை தான் நடிக்கும் படங்களிலும் வெளிப்படுத்தினார்.

    நாராயணன் விஜயராஜாக மதுரை திருமங்கலத்தில் பிறந்து சினிமா மீது கொண்டிருந்த ஆர்வத்தால் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு தந்தையுடன் சேர்ந்து அவரது ரைஸ் மில் நிர்வாகத்தை கவனிக்க தொடங்கினார்.

    இதைத்தொடர்ந்து 1978 -ம் ஆண்டு 'இனிக்கும் இளமை' என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அப்போது படத்தின் இயக்குனர் காஜா அவருக்கு விஜய காந்த் என்ற பெயரை சூட்டினார். 1979-ம் ஆண்டு அகல் விளக்கு என்ற படத்தில் நடித்தார்.

    அடுத்ததாக 1980-ம் ஆண்டு இவர் நடித்த தூரத்து இடி முழக்கம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 1981-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குனராக அறிமுகமாகி அவர் இயக்கிய முதல் படமான சட்டம் ஒரு இருட்டறை விஜய காந்த்துக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது.

    இந்தப் படம் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

    விஜயகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி பதிப்பில் ரஜினியும், தெலுங்கு பதிப்பில் சிரஞ்சீவியும் நடித்திருந்தனர். அங்கும் படம் வெளியாகி வெற்றியை பெற்றது. எஸ்.ஏ.சந்திர சேகருடன் 17 படங்களில் விஜயகாந்த் நடித்திருக்கிறார்.

    அடுத்ததாக அவர் நடித்து வெளிவந்த வைதேகி காத்திருந்தாள் படம் விஜயகாந்த் திரை வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

    அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம், என் புருஷன் எனக்கு மட்டும்தான் போன்ற குடும்ப பாங்கான படங்களின் மூலம் பெண்களிடையே அதிக கவனத்தை ஈர்த்தார்.

    தொடர்ந்து பல படங்களில் நடித்து ரஜினி, கமல் ஆகியோருக்கு இடையே தனக்கென ஒரு தனி இடத்தை சினிமா துறையில் உருவாக்கினார்.

    விஜயகாந்த் படம் என்றாலே அதிரடி சண்டை படம் தான் என்று திரையரங்கிற்கு வரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அப்படியே திருப்தி செய்தார்.

    சண்டை காட்சிகளில் சுவரில் காலை ஊன்றி கொண்டு சுற்றி சுற்றி எதிரிகளை பந்தாடும் காட்சிகளில் தனக்கென்று ஒரு தனி முத்திரையை பதித்தார்.

    அந்தக் காட்சிகள் விஜயகாந்தின் அடையாளச் சின்னமாகவே இதுவரை இருந்து வருகிறது. பல படங்களில் சண்டை காட்சிகளில் டூப் நடிகர்களை பயன்படுத்தாமல் அவரே துணிச்சலாக நடித்தார்.

    1984-ல் பதினெட்டு படங்களும், 1985-ல் பதினேழு படங்களும் நடித்து சாதனை செய்தார்.

    புரட்சிகரமான பல படங்களில் நடித்ததால் ரசிகர்களால் புரட்சி கலைஞர் என்ற பட்டம் விஜயகாந்துக்கு சூட்டப்பட்டது.

    தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக மற்ற மொழி படங்களில் நடிப்பதை திட்டவட்டமாக மறுத்து வந்தார். பல புதுமுக இயக்குனர்களை உருவாக்கிய பெருமை விஜயகாந்தை சேரும். அரவிந்தராஜ் இயக்கிய ஊமை விழிகள், ஆர்.கே.செல்வமணியின் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் என அவரால் அறி முகப்படுத்தப்பட்ட இயக்குனர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

    அவரது நடிப்பில் வெளிவந்த கேப்டன் பிரபாகரன் படம் நூறு நாட்கள் தாண்டி சாதனை படைத்தது. இதையொட்டி விஜயகாந்த் கேப்டன் என்று அனைத்து தரப்பினராலும் அழைக்கப்பட்டார்.

    ஊமை விழிகள், செந்தூரப்பூவே, புலன் விசாரணை போன்ற படங்களில் தன் வயதுக்கு அதிகமான கதாபாத்திரங்களில் தயங்காமல் நடித்துள்ளார்.

    விஜயகாந்த் 36 ஆண்டுகள் சினிமா உலகில் சகாப்தம் படைத்துள்ளார். இந்த 36 ஆண்டுகளில் அவர் 156 படங்களில் நடித்துள்ளார். 2015-ம் ஆண்டு அவரது மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளிவந்த சகாப்தம் படமே அவரது கடைசி படம். அதில் விஜயகாந்த் கவுரவ தோற்றத்தில் நடித்து இருந்தார்.

    1979-ம் ஆண்டு முதல் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய விஜயகாந்த் அதன்பிறகு கதாநாயகன் ஆகி சினிமாவில் உச்சம் தொட்டார். சினிமா உலகம் உள்ள வரை விஜயகாந்தின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

    • உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.
    • முதியவரின் இதயம் ஸ்ரீகாகுளம் ஜேம்ஸ் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் வனஸ்தலிபுரத்தை சேர்ந்த 11 வயது சிறுமி இதய நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு மாற்று இதயம் பொருத்தினால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இதய மையத்தில் இதயம் தானம் கேட்டு பதிவு செய்தனர். இந்த நிலையில் ஸ்ரீகா குளத்தை சேர்ந்த 50 வயது முதியவர் ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.

    இதனையடுத்து முதியவரின் இதயத்தை சிறுமிக்கு பொருத்த ஏற்பாடு செய்தனர். இதற்காக முதியவரின் இதயம் ஸ்ரீகாகுளம் ஜேம்ஸ் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.

    அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விசாகப்பட்டினத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சிறப்பு விமான மூலம் திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இதய மைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு இதயமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதன் மூலம் 11 வயது சிறுமி உயிர் பிழைத்தார்.

    இது இந்த ஆஸ்பத்திரியில் 10-வது வெற்றிகரமான இதய மாற்று அறுவை சிகிச்சை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • எவரெஸ்ட், தெனாலி (வட அமெரிக்கா), கிளிமாஞ்சாரோ (ஆப்பிரிக்கா), எல்ப்ரஸ் (ஐரோப்பா) ஆகிய சிகரங்களில் ஏறி கொடி நாட்டி உள்ளார்.
    • முற்றிலும் பனி சூழ்ந்திருக்கும் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான சிகரமான வின்சனில் ஏற முடிவு செய்தார்.

    கேரளாவை சேர்ந்த ஷேக் ஹசன்கான் மாநில அரசில் பணியாற்றி வருகிறார். இவர் தனது ஓய்வு நாட்களில் உலகின் மிக உயர்ந்த மலை சிகரங்களில் ஏறி சாதனை படைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    அந்தவகையில் எவரெஸ்ட், தெனாலி (வட அமெரிக்கா), கிளிமாஞ்சாரோ (ஆப்பிரிக்கா), எல்ப்ரஸ் (ஐரோப்பா) ஆகிய சிகரங்களில் ஏறி கொடி நாட்டி உள்ளார்.

    இதன் தொடர்ச்சியாக முற்றிலும் பனி சூழ்ந்திருக்கும் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான சிகரமான வின்சனில் ஏற முடிவு செய்தார். இதற்காக அங்கு சென்ற ஷேக் ஹசன்கான், கடும் சவால்களை கடந்து வின்சன் சிகரத்தில் ஏறி இந்திய கொடியை பறக்க விட்டுள்ளார்.

    உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் வின்சன் சிகரத்தில் இந்திய கொடியை பறக்கவிட்டு நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள ஷேக் ஹசன்கானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    • தாய்-சேய் நட்பு மருத்துவமனை முயற்சியை செயல்படுத்திய முதல் மாநிலம் கேரளா.
    • வருகிற 31-ந்தேதிக்குள் இந்த பெயர் மாற்றத்தினை முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்- மந்திரி மற்றும் மந்திரிகள் இணைந்து சென்று மக்களை சந்திக்கும் நவ கேரள சதஸ் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி மலப்புரம் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பினராய் விஜயன் பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    தாய்-சேய் நட்பு மருத்துவமனை முயற்சியை செயல்படுத்திய முதல் மாநிலம் கேரளா. மற்ற மாநிலங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை காட்டிலும் கூடுதல் சேவைகளை வழங்கி நாட்டிற்கு முன்னோடியாக நமது மாநிலம் திகழ்கிறது.

    சுகாதாரத்துறை முழுவதும் மாநில கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், சமீபத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. வருகிற 31-ந்தேதிக்குள் இந்த பெயர் மாற்றத்தினை முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. பெயர் மாற்றத்தின் மூலம், சுகாதாரத்துறையில் மாநிலத்தின் சாதனைகளுக்கான பெருமையை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு திருட முயற்சிக்கிறது. இது ஆரோக்கியமான செயல் அல்ல.

    மேலும் கேரளா, கோ-பிராண்டிங்கை மேற்கொள்ளவில்லை என்று கூறி, பல்வேறு மானியங்கள், ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்களில் மத்திய பங்கை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மாவட்ட விளையாட்டு போட்டியில் ரிதம் சிறப்பு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • ஆசிரியை கிறிஸ்டி வரவேற்றார்.

    Virudhunagar News Rhythm Special School students achievement

    ராஜபாைளயம்

    உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நடைபெற்றது. போட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். போட்டியினை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    இந்த போட்டியில் ராஜபாளையம் ரிதம் சிறப்பு பள்ளியை சேர்ந்த 5 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். மாணவி கனிமொழி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் கவுரி முதலிடமும், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கான கிரிக்கெட் பந்து எரிதலில் சுஹேல் முதலிடமும், மற்றும் தடை தாண்டி ஓடுதல் பெண்கள் பிரிவில் அமலா முதலிடமும், ஆண்கள் பிரிவில் நந்தகுமார் முதலிடம் வெற்றி பெற்றனர். மேலும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜீவிதா மூன்றாம் இடமும், ஓடி நீளம் தாண்டுதலில் ஆண்கள் பிரிவில். தீபக் மூன்றாம் இடமும், தடைகளை தாண்டி ஓடுதல் ஆண்கள் பிரிவில் சிவகுருநாதன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

    போட்டியில் வென்ற மாணவர்களை ரிதம் சேரிடபிள் டிரஸ்ட் மேனேஜிங்டிரஸ்டி கதிரேசன், செகரட்டரி,பால்ராஜ் மற்றும் டிரஸ்டிகள் கோடியப்பன், ,கவுதமன், இளங்குமரன் ஆகியோர் பாராட்டினார்கள். முதல்வர் வெங்கட்டரமணன் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் அருண் வெங்கடேஷ் நன்றி கூறினார்..முன்னதாக ஆசிரியை கிறிஸ்டி அனைவரையும் வரவேற்றார்..

    • 9 ஆண்டு கால முயற்சியில் தற்பொழுது வெற்றியும் கண்டுள்ளார்.
    • தற்பொழுது கொடைக்கானலில் விளையக்கூடிய குங்குமப்பூ காஷ்மீரை காட்டிலும் தரம் உயர்ந்ததாக உள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் மலைக்காய்கறிகள் விளைச்சலுக்கு அதிக பெயர் பெற்றது. இங்கு முக்கிய காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீட்ரூட், காலிபிளவர், பீன்ஸ், காரட், புரோக்கோலி போன்ற பல்வேறு வகையான காய்கள் பயிரிடப்பட்டு வருகிறது. உலக அளவில் கர்ப்பிணி பெண்கள் தங்கள் குழந்தைகள் சிவப்பாக பிறக்க குங்குமப்பூவை பாலில் கலந்து குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

    இந்த குங்குமப்பூ உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடுகள் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான். அடுத்து இந்தியாவில் நமது காஷ்மீர் மாநிலம் ஆகும். ஆனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் குங்குமப்பூ குறைந்த அளவில் உள்ளதால் ஆண்டுக்கு பல ஆயிரம் கிலோ வெளிநாட்டில் இருந்து வாங்கும் நிலை உள்ளது. தற்பொழுது இந்தியாவில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் மேல் மலை கிராமமான கவுஞ்சி மற்றும் பூண்டி மலை கிராமங்களில் மூர்த்தி என்ற விவசாயி கடந்த 2014ம் ஆண்டு முதல் தொடர்ந்து முயற்சி செய்து காஷ்மீரிலிருந்து குங்குமப்பூ விதை கிழங்கு வாங்கி பசுமை குடில் அமைத்து விவசாயம் செய்தார். 9 ஆண்டு கால முயற்சியில் தற்பொழுது வெற்றியும் கண்டுள்ளார். தனது ஒரு ஏக்கர் நிலத்தில் குங்குமப்பூ பயிரிட்டு சாகுபடி செய்தார்.

    இது குறித்து அவர் கூறும்போது, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இதற்கான பயிற்சி மற்றும் அறிவுரைகளின்படி தனது முயற்சியை தொடர்ந்ததாக தெரிவித்தார். மேலும் காஷ்மீருக்கு அடுத்தபடியாக குங்குமப்பூ பயிரிட கொடைக்கானலில் சீதோஷ்ண நிலை மற்றும் குளிர் முக்கிய காரணமாக உள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ.4 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் பயிரிட்டால் சில ஆயிரங்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால் குங்குமப்பூ சாகுபடிக்கு 55 நாட்கள் முதல் 60 நாட்கள் போதுமானது. 15 கிலோ குங்குமப்பூ விதை கிழங்கு வாங்கி தற்பொழுது அதனை 40 கிலோவாக உருவாக்கி உள்ளேன். தற்பொழுது கொடைக்கானலில் விளையக்கூடிய குங்குமப்பூ காஷ்மீரை காட்டிலும் தரம் உயர்ந்ததாக உள்ளது. மேலும் கொடைக்கானலில் விளையும் குங்குமப்பூவுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. இந்த புது முயற்சியை மற்ற விவசாயிகளும் மேற்கொள்ள வேண்டும் என்றார். 

    • முதல் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
    • சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பிரமோதினி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஏ.வி.பி. கல்வி குழுமத்தில் படிக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பயனடையும் நோக்கில் உங்கள் கனவுகளை தேடி கண்டடையுங்கள் என்ற தலைப்பில் சிறப்பு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி கலையரங்கில் 2 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    பள்ளி அறக்கட்டளை பொருளாளர் லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் டயானா வரவேற்றார். இதில் சென்னை ஐ.ஐ.டி.யை சேர்ந்த பகவதி, கோவை எஸ்.என்.எஸ். கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த ஞானசேகரன் மற்றும் கோவையை சேர்ந்த அஸ்வின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட இஸ்ரோ விஞ்ஞானி பி.ஹெச்.எம்.தாருகேஷா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சந்திரயான்-3 வெற்றிக்குப் பின்னர் ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது. அறிவியல் மற்றும் அதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் நன்மையை பற்றியும், இந்த உலகத்திற்கு விஞ்ஞானிகளின் அவசியத்தை பற்றியும், இந்தியர்கள் ஏன் விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதை பற்றி பேச விரும்புகிறோம். ஆர்வமும் சவால்களும் நிறைந்த பல படிப்புகள் உள்ளன. அதில் ஒன்று தான் விண்வெளி ஆராய்ச்சி பொறியாளர் அல்லது விஞ்ஞானிக்கான படிப்பு.

    இந்தியாவின் லட்சிய சந்திர பயணமான சந்திரயான்-3 கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந்தேதி நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கான ஒரு மகத்தான சாதனையாகும். இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டம். இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் முதல் உள்நாட்டுப் பணி என்பதால் ககன்யான் முக்கியத்துவம் வாய்ந்தது. இது வெற்றி பெற்றால், விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

    ககன்யானின் வெற்றி விண்வெளி பயணங்களில் இன்னும் பல சோதனைகளுக்கு வழிவகுக்கும். இது தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் இந்தியாவின் கனவுக்கும் ஒரு பூரணம் கொடுக்கும். இந்திய விண்கலத்தின் மூலம் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது தான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த விண்கலத்தில் 3 பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகின்றன.ககன்யான் என்பது முழுமையான தன்னாட்சி கொண்ட 3.7 டன் எடையுள்ள விண்கலம் ஆகும். இதில் மூன்று பேர் சுற்றுப்பாதைக்கு சென்று புவிக்கு திரும்பக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதில் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளி முதல்வர் பிரியா ராஜா, காந்திநகர் ஏ.வி.பி. சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பிரமோதினி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • பாரதியாா் பல்கலைக்கழக தோ்வு முடிவுகளின்படி தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
    • பிரபாகரன் 3-ம் இடத்தையும், மாணவி உதயமலா் 4-ம் இடத்தையும் பெற்றுள்ளனா்.

    உடுமலை:

    2022 - 23 ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற பாரதியாா் பல்கலைக்கழக தோ்வு முடிவுகளின்படி தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 15 போ் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். இதில் இளநிலை பட்ட வகுப்புகளில் மாணவி பாண்டீஸ்வரி புள்ளியியல் துறையில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கமும், அரசியல் அறிவியல் துறையில் மாணவி வேதநாயகி 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கமும், மின் வணிகவியல் துறையில் மாணவன் பிரபாகரன் 3-ம் இடத்தையும், மாணவி உதயமலா் 4-ம் இடத்தையும் பெற்றுள்ளனா்.

    இதுதவிர தாவரவியல் துறையில் மாணவி லிடியா 3-ம் இடத்தையும், கே.ரமணி 10-ம் இடத்தையும், இயற்பியல் துறையில் மாணவி அா்ஸ்மா 7-ம் இடத்தையும், வேதியியல் துறையில் மாணவன் பொன் ஜீவகன் 6-ம் இடத்தையும், தமிழ் துறையில் மாணவி சத்யசுப்ரபானு 10-ம் இடத்தையும் பிடித்துள்ளனா்.

    முதுநிலை பட்ட வகுப்புகளில் சுற்றுலாவியல் துறையில் மாணவி ஷாலினி பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், மாணவன் பத்மநாதன் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கமும், புள்ளியியல் துறையில் மாணவி சந்தியா முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், வேதியியல் துறையில் மாணவன் கிஷோா் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும் வென்றுள்ளனா். பொருளியல் துறையில் மாணவி பி.அபிதா 5-ம் இடத்தையும், இயற்பியல் துறையில் மாணவி கே.அனிஸ் பாத்திமா 10-ம் இடத்தையும் பெற்றுள்ளனா். இந்நிலையில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வா் கல்யாணி மற்றும் துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள், முன்னாள் மாணவா் சங்க அறக்கட்டளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனர்.

    • 4 சுற்றுகளில் வென்று இறுதி சுற்றில் 2-ம் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர்.
    • வெற்றிபெற்றவர்களும் கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    மன்னார்குடி:

    பாரதிதாசன் பல்கலை க்கழக அளவிலான கல்லூரி களுக்கு இடையேயான மகளிர் கபடி போட்டி திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது.

    இதில் 26 கல்லூரிகள் கலந்து கொண்டன.

    இதில் மன்னார்குடி அடுத்த மேலவாசல் குமாரபுரத்தில் உள்ள சதாசிவம் கதிர்காமவள்ளி மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 4 சுற்றுகளில் வென்று இறுதி சுற்றில் 2-ம் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர்.

    இதில் மாணவிகள் அட்சயா, சவுமியா, சரண்யா ஆகியோர் பல்கலைக்கழக பெண்கள் கபடி அணியில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை தலைவர் காளிதாஸ் கோப்பையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

    வெற்றிபெற்ற மாணவிகளை கல்லூரி நிறுவனர் சதாசிவம், முதல்வர் நாகரெத்தினம், உடற்கல்வி இயக்குனர் சசிரேகா ஆகியோர் பாராட்டினர்.

    • பெரம்பலூரில் நடன செவ்வியல் போட்டி நடைபெற்றது
    • தனலட்சுமி சீனிவாசன் பள்ளி மாணவி சாதனை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கலா உற்சவப் போட்டிகளான வாய்ப்பாட்டு இசைசெவ்வியல், நடனம் செவ்வியல், நாடகம், இசைக்கருவி தாளவாத்தியம், காண்கலை, இருபரிமாணம் காண்கலை, முப்பரிமாணம் நடனம், பாரம்பரிய நாட்டுப்புறவகை, உள்ளூர் தொன்மை பொம்மை விளையாட்டுகள் போன்ற பல்வேறு வகையான போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட சாரணர் கூட்ட அரங்கில் நடைபெற்றன.

    இதில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

    போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி வே.ஹாசினி நடன செவ்வியல் போட்டியில் பங்கேற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    மேலும் வருகின்ற 17-ந் தேதி சேலத்தில் வைஷ்யா கல்லூரியில் நடைபெறும் மாநில அளவிலான கலை பண்பாட்டு போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

    நடன செவ்வியல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    பள்ளியின் முதன்மை முதல்வர், துணை முதல்வர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    .

    • தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமான நாட்களில் சுமார் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறுவது உண்டு.
    • வெள்ளிக்கிழமை மாலையில் இருந்தே மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் ரூ.708 கோடிக்கு மது விற்பனை செய்து டாஸ்மாக் நிர்வாகம் வசூலை குவித்து உள்ளது.

    தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமான நாட்களில் சுமார் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறுவது உண்டு. விடுமுறை காலங்களில் ரூ.175 கோடி வரை விற்பனை அதிகரிக்கும். ஆனால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் விற்பனையாகும் மது பானங்களின் சாதனை ஒவ்வொரு ஆண்டும் முறியடிக்கப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளில் வந்தது. இதனால் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்தே மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    மது அருந்துபவர்கள் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்களும் மது குடித்து குதூகலம் அடைந்தனர்.

    தீபாவளி பண்டிகைக்காக மது குடித்தவர்கள், தொடர் விடுமுறை காரணமாக மது குடிப்பவர்கள் என பல காரணங்களால் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் டாஸ்மாக் கடைகளில் வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்களாக விற்பனைகளை கட்டியது. இதில் ரூ.708 கோடி மதிப்பிலான மது பானங்கள் விற்பனையாகி உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை மட்டும் ரூ.241.02 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. சனிக்கிழமை ரூ.220.85 கோடிக்கும், ஞாயிற்றுக் கிழமை ரூ.246.78 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றது.

    இந்த 3 நாட்களில் மட்டும் ரூ.708 கோடி மது விற்பனை நடந்துள்ளது. மது பிரியர்கள் 3 நாட்களும் மது குடித்து குதூகலம் அடைந்துள்ளனர்.

    இதில் 11-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை மண்டலத்தில் ரூ.48.12 கோடிக்கும் திருச்சி-ரூ.40.02 கோடிக்கும், சேலம்-ரூ.39.78 கோடிக்கும், மதுரை ரூ.52.73 கோடிக்கும் கோவையில் ரூ.40.20 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது. 12-ந்தேதி (ஞாயிறு) மண்டலவாரியாக சென்னையில் ரூ.52.98 கோடி, திருச்சி ரூ.55.60 கோடி, சேலம் ரூ.46.62 கோடி, கோவை ரூ.39.61 கோடி அளவுக்கு மது விற்கப்பட்டது.

    கடந்த ஆண்டு தீபாவளி 2 நாள் மது விற்பனை ரூ.431 கோடியாகும். இந்த ஆண்டு 2 நாள் விற்பனை ரூ.467.69 கோடியாகும். இதன்மூலம் கடந்த ஆண்டு சாதனையை இந்த ஆண்டு விற்பனை முறியடித்து உள்ளது.

    ×