search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    156 படங்களில் நடித்து சாதனை: 36 ஆண்டுகள் சினிமா உலகில் சகாப்தம் படைத்த விஜயகாந்த்
    X

    156 படங்களில் நடித்து சாதனை: 36 ஆண்டுகள் சினிமா உலகில் சகாப்தம் படைத்த விஜயகாந்த்

    • 1978 -ம் ஆண்டு ‘இனிக்கும் இளமை’ என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
    • வைதேகி காத்திருந்தாள் படம் விஜயகாந்த் திரை வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

    மனதில் என்ன தோன்றுகிறதோ?

    யாராக இருந்தாலும் வெளிப்படையாகவும் தைரியமாகவும் துணிந்து சொல்லக்கூடியவர் விஜயகாந்த். இதனால் அவர் இழந்தது அதிகம்.

    அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நியாயத்தின் பக்கம் இருந்து கொண்டு ஓங்கி குரல் கொடுத்து வந்தார் விஜயகாந்த்.

    அவரது சுபாவத்தை தான் நடிக்கும் படங்களிலும் வெளிப்படுத்தினார்.

    நாராயணன் விஜயராஜாக மதுரை திருமங்கலத்தில் பிறந்து சினிமா மீது கொண்டிருந்த ஆர்வத்தால் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு தந்தையுடன் சேர்ந்து அவரது ரைஸ் மில் நிர்வாகத்தை கவனிக்க தொடங்கினார்.

    இதைத்தொடர்ந்து 1978 -ம் ஆண்டு 'இனிக்கும் இளமை' என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அப்போது படத்தின் இயக்குனர் காஜா அவருக்கு விஜய காந்த் என்ற பெயரை சூட்டினார். 1979-ம் ஆண்டு அகல் விளக்கு என்ற படத்தில் நடித்தார்.

    அடுத்ததாக 1980-ம் ஆண்டு இவர் நடித்த தூரத்து இடி முழக்கம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 1981-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குனராக அறிமுகமாகி அவர் இயக்கிய முதல் படமான சட்டம் ஒரு இருட்டறை விஜய காந்த்துக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது.

    இந்தப் படம் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

    விஜயகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி பதிப்பில் ரஜினியும், தெலுங்கு பதிப்பில் சிரஞ்சீவியும் நடித்திருந்தனர். அங்கும் படம் வெளியாகி வெற்றியை பெற்றது. எஸ்.ஏ.சந்திர சேகருடன் 17 படங்களில் விஜயகாந்த் நடித்திருக்கிறார்.

    அடுத்ததாக அவர் நடித்து வெளிவந்த வைதேகி காத்திருந்தாள் படம் விஜயகாந்த் திரை வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

    அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம், என் புருஷன் எனக்கு மட்டும்தான் போன்ற குடும்ப பாங்கான படங்களின் மூலம் பெண்களிடையே அதிக கவனத்தை ஈர்த்தார்.

    தொடர்ந்து பல படங்களில் நடித்து ரஜினி, கமல் ஆகியோருக்கு இடையே தனக்கென ஒரு தனி இடத்தை சினிமா துறையில் உருவாக்கினார்.

    விஜயகாந்த் படம் என்றாலே அதிரடி சண்டை படம் தான் என்று திரையரங்கிற்கு வரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அப்படியே திருப்தி செய்தார்.

    சண்டை காட்சிகளில் சுவரில் காலை ஊன்றி கொண்டு சுற்றி சுற்றி எதிரிகளை பந்தாடும் காட்சிகளில் தனக்கென்று ஒரு தனி முத்திரையை பதித்தார்.

    அந்தக் காட்சிகள் விஜயகாந்தின் அடையாளச் சின்னமாகவே இதுவரை இருந்து வருகிறது. பல படங்களில் சண்டை காட்சிகளில் டூப் நடிகர்களை பயன்படுத்தாமல் அவரே துணிச்சலாக நடித்தார்.

    1984-ல் பதினெட்டு படங்களும், 1985-ல் பதினேழு படங்களும் நடித்து சாதனை செய்தார்.

    புரட்சிகரமான பல படங்களில் நடித்ததால் ரசிகர்களால் புரட்சி கலைஞர் என்ற பட்டம் விஜயகாந்துக்கு சூட்டப்பட்டது.

    தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக மற்ற மொழி படங்களில் நடிப்பதை திட்டவட்டமாக மறுத்து வந்தார். பல புதுமுக இயக்குனர்களை உருவாக்கிய பெருமை விஜயகாந்தை சேரும். அரவிந்தராஜ் இயக்கிய ஊமை விழிகள், ஆர்.கே.செல்வமணியின் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் என அவரால் அறி முகப்படுத்தப்பட்ட இயக்குனர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

    அவரது நடிப்பில் வெளிவந்த கேப்டன் பிரபாகரன் படம் நூறு நாட்கள் தாண்டி சாதனை படைத்தது. இதையொட்டி விஜயகாந்த் கேப்டன் என்று அனைத்து தரப்பினராலும் அழைக்கப்பட்டார்.

    ஊமை விழிகள், செந்தூரப்பூவே, புலன் விசாரணை போன்ற படங்களில் தன் வயதுக்கு அதிகமான கதாபாத்திரங்களில் தயங்காமல் நடித்துள்ளார்.

    விஜயகாந்த் 36 ஆண்டுகள் சினிமா உலகில் சகாப்தம் படைத்துள்ளார். இந்த 36 ஆண்டுகளில் அவர் 156 படங்களில் நடித்துள்ளார். 2015-ம் ஆண்டு அவரது மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளிவந்த சகாப்தம் படமே அவரது கடைசி படம். அதில் விஜயகாந்த் கவுரவ தோற்றத்தில் நடித்து இருந்தார்.

    1979-ம் ஆண்டு முதல் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய விஜயகாந்த் அதன்பிறகு கதாநாயகன் ஆகி சினிமாவில் உச்சம் தொட்டார். சினிமா உலகம் உள்ள வரை விஜயகாந்தின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

    Next Story
    ×