search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்வெளி திட்டம்"

    • முதல் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
    • சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பிரமோதினி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஏ.வி.பி. கல்வி குழுமத்தில் படிக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பயனடையும் நோக்கில் உங்கள் கனவுகளை தேடி கண்டடையுங்கள் என்ற தலைப்பில் சிறப்பு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி கலையரங்கில் 2 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    பள்ளி அறக்கட்டளை பொருளாளர் லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் டயானா வரவேற்றார். இதில் சென்னை ஐ.ஐ.டி.யை சேர்ந்த பகவதி, கோவை எஸ்.என்.எஸ். கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த ஞானசேகரன் மற்றும் கோவையை சேர்ந்த அஸ்வின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட இஸ்ரோ விஞ்ஞானி பி.ஹெச்.எம்.தாருகேஷா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சந்திரயான்-3 வெற்றிக்குப் பின்னர் ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது. அறிவியல் மற்றும் அதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் நன்மையை பற்றியும், இந்த உலகத்திற்கு விஞ்ஞானிகளின் அவசியத்தை பற்றியும், இந்தியர்கள் ஏன் விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதை பற்றி பேச விரும்புகிறோம். ஆர்வமும் சவால்களும் நிறைந்த பல படிப்புகள் உள்ளன. அதில் ஒன்று தான் விண்வெளி ஆராய்ச்சி பொறியாளர் அல்லது விஞ்ஞானிக்கான படிப்பு.

    இந்தியாவின் லட்சிய சந்திர பயணமான சந்திரயான்-3 கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந்தேதி நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கான ஒரு மகத்தான சாதனையாகும். இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டம். இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் முதல் உள்நாட்டுப் பணி என்பதால் ககன்யான் முக்கியத்துவம் வாய்ந்தது. இது வெற்றி பெற்றால், விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

    ககன்யானின் வெற்றி விண்வெளி பயணங்களில் இன்னும் பல சோதனைகளுக்கு வழிவகுக்கும். இது தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் இந்தியாவின் கனவுக்கும் ஒரு பூரணம் கொடுக்கும். இந்திய விண்கலத்தின் மூலம் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது தான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த விண்கலத்தில் 3 பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகின்றன.ககன்யான் என்பது முழுமையான தன்னாட்சி கொண்ட 3.7 டன் எடையுள்ள விண்கலம் ஆகும். இதில் மூன்று பேர் சுற்றுப்பாதைக்கு சென்று புவிக்கு திரும்பக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதில் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளி முதல்வர் பிரியா ராஜா, காந்திநகர் ஏ.வி.பி. சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பிரமோதினி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×