search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Govt"

    • ஜூலை மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரணைக்குக் கொண்டு வருவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
    • வழக்கை விசாரித்து வந்த நீதிபதியும் கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றும் சென்று விட்டார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 26-ந்தேதி தொடங்க இருக்கும் நிலையில், நடப்பாண்டிலும் தமிழ்க் கட்டாயப்பாடம் இல்லை; மொழிச் சிறுபான்மையினர் நடப்பாண்டில் அவர்களின் தாய்மொழிப் பாடத்தில் தேர்வு எழுதலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் அந்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாததற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணமாகும்.

    தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்திற்கு எதிராக 2015-16-ம் ஆண்டில் மொழிச் சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2023-ம் ஆண்டு முதல் செயல்படுத்த ஆணையிட்டது. ஆனாலும், அதை மதிக்காத பள்ளிகள் உச்சநீதிமன்றத்திற்கு சென்றன. கடைசி நேரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததால் கடந்த ஆண்டு மட்டும் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டத்திலிருந்து விலக்கு அளித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூலையில் நீதிமன்றம் திறக்கப்பட்ட பின்னர் இவ்வழக்கை விசாரித்து தீர்ப்பளிப்பதாக அறிவித்தது.

    ஆனால், ஜூலை மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரணைக்குக் கொண்டு வருவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதியும் கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றும் சென்று விட்டார். அதன் விளைவு தான் நடப்பாண்டிலும் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, அடுத்த ஆண்டு முதல் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முன்னாள் படை வீரர்களின் சொந்த வீட்டிற்கு அவர்களின் சொந்த பயன்பாட்டில் குடியிருப்பாக பயன்படுத்தப்படும் கட்டிடத்திற்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும்.
    • முன்னாள் படை வீரர் வருமானவரி செலுத்துபவராக இருக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்கள் சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    முன்னாள் படை வீரர்களின் சொந்த வீட்டிற்கு அவர்களின் சொந்த பயன்பாட்டில் குடியிருப்பாக பயன்படுத்தப்படும் கட்டிடத்திற்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும் என்றும் முன்னாள் படை வீரர் வருமானவரி செலுத்துபவராக இருக்கக் கூடாது என்றும் அதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    • யுத்த காலத்தில் தமிழகம் வந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது.
    • சிஏஏ சட்டம் யாருக்கும் எதிரானது கிடையாது.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * சிஏஏ சட்டம் பற்றி தெரியாமல் பல்வேறு அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர்.

    * சிங்கள தமிழர்கள் 11 ஆண்டுகள் இங்கு தங்கி இருந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

    * யுத்த காலத்தில் தமிழகம் வந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது.

    * மக்களை குழப்பி, திசை திருப்பும் வகையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.

    * குடியுரிமை வழங்குவதற்கான அதிகாரம் மத்திய அரசிற்கு மட்டுமே உள்ளது.

    * 2019-ம் ஆண்டுக்கு பிறகு 1,414 பேருக்கு குடியுரிமை வழங்கியுள்ளோம்.

    * அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் 31 மாவட்டங்களில் சிஏஏ அமல்படுத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    * சிஏஏ சட்டம் யாருக்கும் எதிரானது கிடையாது.

    * இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உள்பட யாருடைய குடியுரிமையையும் பறிக்க முடியாது.

    * 4 லட்சத்து 5 ஆயிரம் பேர் அகதிகளாக இந்தியாவில் உள்ளனர்.

    * சட்டத்தில் என்ன தவறு, குளறுபடி உள்ளது என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.

    * சமத்துவ மக்கள் கட்சியை கூட்டாக பா.ஜ.க.வில் இணைத்துள்ளார், மோடி குடும்பம் பெரிதாகி உள்ளது.

    * இலங்கையில் இருந்து வந்த அனைத்து அகதிகளுக்கும் சட்டத்திற்குட்பட்டு குடியுரிமை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    • பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
    • அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

    சென்னை:

    தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பல முன்னோடித்திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வகையில் நடைமுறைபடுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

    அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து, 01.07.2023 முதல் ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கிட அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

    அவ்வகையில், ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.01.2024 முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு பணியாளர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக 01.01.2024 முதல் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.

    இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய்.2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
    • தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஆவின் உள்ளிட்ட துறைகளின் சார்பில் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

    கோவை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (13-ந்தேதி) கோவை மாவட்டம் பொள்ளாச்சி வருகிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழாவில் முடிவு பெற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.

    இதுதொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (13-ந் தேதி) பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெறும் அரசு விழாவில் ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

    வனத்துறை, ஆனைமலை புலிகள் காப்பகம், பொதுப்பணித்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, எரிசக்தி துறை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, காவல்துறை, தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஆவின் உள்ளிட்ட துறைகளின் சார்பில் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

    பொதுப்பணித்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, அயலக தமிழர் நலன் மற்றும் மறு வாழ்வு துறை, கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

    மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, தோட்டக்கலைத் துறை, மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், நகராட்சி நிர்வாகம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

    இவ்விழாவில், அமைச்சர்கள், கலெக்டர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), பொள்ளாச்சி சார் ஆட்சியர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விபத்தில் காவலர் ராஜேஷ் உயிரிழந்துள்ளது காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
    • காவலர் ராஜேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் காலராக பணிபுரிந்துவரும் ராஜேஷ் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி காவல் சரகம், சீர்காழி நத்தம் சாலையின் தடுப்பில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையடைந்தேன்.

    இவ்விபத்தில் காவலர் ராஜேஷ் உயிரிழந்துள்ளது காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.

    காவலர் ராஜேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    • மதுரை சின்னப்பிள்ளைக்கு, வீடு வழங்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு தரப்பில் வாக்குறுதி தரப்பட்டது.
    • சின்னப்பிள்ளைக்கு, 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

    மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "இந்திய ஒன்றியத்திலேயே முதன் முறையாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடங்கிய மகளிர் சுய உதவிக்குழுவில் இணைந்து, கிராமப்புற மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்த மதுரை சின்னப்பிள்ளை அவர்களுக்கு, வீடு வழங்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு தரப்பில் வாக்குறுதி தரப்பட்டது.

    மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை. 2 ஆண்டு கால காத்திருப்புக்குப் பின், இதுகுறித்த வேதனையை சின்னப்பிள்ளை வெளிப்படுத்தியிருந்தார்.

    இதையறிந்த நம்முடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், சின்னப்பிள்ளை அவர்களுக்கு தமிழ் நாடு அரசு சார்பில் 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் புதிய வீடும், 380 சதுர அடி நிலத்திற்கான பட்டாவும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

    'மகளிர் மேம்பாடு' எனும் கலைஞர் அவர்களின் கனவை நனவாக்க உழைத்த சின்னப்பிள்ளைக்கு, 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு என் அன்பும், வாழ்த்தும் என்று உதயநிதி பதிவிட்டுள்ளார்.

    • மாணவர் சேர்க்கைப் பணியை கல்வித்துறை தீவிரப்படுத்தி வருகிறது.
    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து பணிகளையும் வேகப்படுத்தி உள்ளார்.

    சென்னை:

    அரசு பள்ளிகளில் 2024-25-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 1-ந்தேதி தொடங்கியது. பள்ளிக்கல்வித்துறை மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறது. வழக்கமாக மாணவர் சேர்க்கை ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும்.

    ஆனால் இந்த வருடம் முன் கூட்டியே நடத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உபகரணங்கள், ஸ்மார்ட் வகுப்பறை, காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஒவ்வொரு பகுதியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று வரை 80 ஆயிரம் மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,411 மாணவர்கள் சேர்க்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. தொடக்கப் பள்ளியில் 4,959 பேரும் மேல்நிலைப் பள்ளியில் 5,452 பேரும் சேர்ந்துள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் 3,890 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7,770 பேரும் சேர்ந்து அடுத்தடுத்து முதலிடத்தில் உள்ளனர்.

    1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளிகளில் மட்டும் 46,586 பேரும் நடுநிலைப் பள்ளிகளில் 21,853 பேரும் சேர்ந்துள்ளனர். உயர்நிலைப் பள்ளிகளில் 6,287 பேரும், மேல்நிலைப் பள்ளிகளில் 5,350 பேரும் அரசு பள்ளிகளில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    தொடர்ந்து மாணவர் சேர்க்கைப் பணியை கல்வித்துறை தீவிரப்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதற்கான அனைத்து பணிகளையும் வேகப்படுத்தி உள்ளார்.

    • இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு புதிய வீடு வழங்கப்படுகிறது.
    • வீடு கட்டும் பணி இந்த மாதமே தொடங்கப்படும்.

    சென்னை :

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிடம் கடந்த 2000-ஆம் ஆண்டில் "ஸ்த்ரிசக்தி" புரஸ்கார் விருது பெற்றவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை அவர்கள். அவர் சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.

    இந்த செய்தியினை கேள்விப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பத்மஸ்ரீ சின்னப் பிள்ளைக்கு புதியதாக வீடு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவுறுத்தினார்.

    இதன்படி பத்மஸ்ரீ சின்னப் பிள்ளைக்கு ஏற்கெனவே அரசால் வழங்கப்பட்டுள்ள ஒரு செண்ட் வீட்டு மனையுடன் பில்லுச்சேரி ஊராட்சி, திருவிழாப்பட்டி கிராமத்தில் கூடுதலாக 380 சதுர அடி நிலத்திற்கான பட்டா வழங்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு புதிய வீடு வழங்கப்படுகிறது. வீடு கட்டும் பணி இந்த மாதமே தொடங்கப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
    • முதலமைச்சர் உரிய பதில் அளிக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    * பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.

    * கஞ்சா போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    * ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள் உள்ள நிலையில் டி.ஜி.பி.கையில் விருது பெறுகிறார்.

    * போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தி.மு.க. நிர்வாகி தொடர்பில் உள்ளார்.

    * செய்தி வெளிவந்த பிறகே ஜாபர் சாதிக் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    * ஜாபர் சாதிக் தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க வேண்டும்.

    * தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    * முதலமைச்சர் உரிய பதில் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தமிழ் மகன் உசேன், கே.பி.முனுசாமி, வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • அதியமானுக்காகக் காஞ்சியிலிருந்து ஆட்சிப் புரிந்த தொண்டைமானிடம் தூது சென்று நிகழவிருந்த போரை நிறுத்திய பெருமை மிக்கவர் அவவையார்.
    • உலக வரலாற்றில் இரண்டு வேந்தர்களுக்கிடையில் தூது சென்ற பெரு மடந்தையராகப் பெருமை கொண்டவர் அவ்வையார் ஆவார்.

    சென்னை:

    ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருக்கும் புலவர் பெருமாட்டியருள் அவ்வையாரின் அருமைத் திருப்பெயர் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும் திருப்பெயரும் தவப்பெயருமாகும்.

    'அகர முதல எழுத்தெல்லாம்' என்பது போல ஒளவை முதல அறிவெல்லாம் என்று அறிவுக்கே பரியாய நாமமாக அவ்வையார் ஆண், பெண், இளைஞர், முதியவர் என எல்லோராலும் வழிபாட்டுணர்ச்சியோடு வணங்கப்படுகிறார்.

    அதியமானுக்காகக் காஞ்சியிலிருந்து ஆட்சிப் புரிந்த தொண்டைமானிடம் தூது சென்று நிகழவிருந்த போரை நிறுத்திய பெருமை மிக்கவர் அவவையார். உலக வரலாற்றில் இரண்டு வேந்தர்களுக்கிடையில் தூது சென்ற பெரு மடந்தையராகப் பெருமை கொண்டவர் அவ்வையார் ஆவார்.

    சேரமான் மாரி வண்கோவும், சோழன் ராச சூயம் வேட்ட பெரு நற்கிள்ளியும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் ஒருங்கிருப்பக் கண்டு உவந்து' என்றும் தமிழ் மூவேந்தர்கள் இவ்வாறே இருப்பீர்களாக' என அறிவுறுத்திய புலமைச் செல்வியார் ஆவார். நெடுமான் அஞ்சி போர்க் களத்தில் வேல் பாய்ந்து இறந்தபோது, அவ்வையார் வருந்திப் பாடிய கையறு நிலைப்பாட்டு மிகவும் உருக்கம் வாய்ந்தது.

    சங்கப் புலமைப் பெரும் செவ்வியராகிய இப்பெருமாட்டியார் பாடியனவாக உள்ள ஐம்பத்தொன்பது பாடல்களுள் அகப்பொருள் பற்றியன இருபத்தாறாகும். எஞ்சிய முப்பத்து மூன்று பாடல்களுள் புறப்பொருளுக்குரியன வாய்ப் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.

    மாந்தர் குலத்திற்குப் பெருமை சேர்த்த அவ்வை பெருமாட்டியாரைப் போற்றும் வகையில் உலக மகளிர் நாளான 08.03.2024 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ் வளர்ச்சித் துறையால், சென்னை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவ்வையாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்தலும், தமிழ்ப் பெருமாட்டியின் திருவுருவப்படத்திற்கு மலர் வணக்க நிகழ்வும் நடைபெற உள்ளன. அமைச்சர் பெருமக்கள், மேயர், துணை மேயர், அரசு உயர் அலுவலர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள், பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    • முதலமைச்சர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிக்கப்பட்ட திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்தும் வைக்க உள்ளார்.
    • நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பொள்ளாச்சி மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்து பயனாளிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பொள்ளாச்சி:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 13-ந்தேதி பொள்ளாச்சிக்கு வருகிறார். அங்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடக்கிறது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த விழா பொள்ளாச்சி வடக்கிபாளையம் பிரிவு ஆச்சிப்பட்டியில் உள்ள மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்காக அந்த இடத்தில், மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடக்க உள்ளது. இந்த நிலையில் விழா நடைபெற உள்ள இடத்தை இன்று அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வருகிற 13-ந்தேதி பொள்ளாச்சியில் 20 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

    இதுமட்டுமின்றி இந்த விழாவில், முதலமைச்சர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிக்கப்பட்ட திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்தும் வைக்க உள்ளார்.

    இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பொள்ளாச்சி மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்து பயனாளிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விழா நடத்துவதற்காக இந்த மைதானத்தை தேர்ந்தெடுத்துள்ளோம். அதனை இன்று பார்வையிட்டுள்ளோம். இங்கு பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் தொட ங்கி நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தி.மு.க இருக்காது என பிரதமர் மோடி கூறியுள்ளாரே என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் அவர்கள் இப்படி சொல்ல, சொல்ல சொல்ல நாங்கள் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறோம். அவர்கள் சொல்வது எங்களுக்கு இன்னும் வேகமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை தான் கொடுக்கிறது என தெரிவித்தார்.

    ஆய்வின் போது கலெக்டர் கிராந்திகுமார் பாடி, சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யா, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தளபதி முருகேசன், நகர மன்ற தலைவர் ஷியமளா நவநீத கிருஷ்ணன், தி.மு.க. நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் இருந்தனர்.

    ×