என் மலர்
நீங்கள் தேடியது "property tax"
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் சொத்துவரி உயர்த்தப்பட்டது. முந்தைய சென்னை மாநகராட்சி பகுதியில் குடியிருப்புகளுக்கு 600 சதுர அடி வரை 50 சதவீதமும், 601 முதல் 1200 சதுர அடி கட்டிடங்களுக்கு 75 சதவீதமும், 1201 முதல் 1800 சதுர அடி கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், 1800 சதுர அடி மேல் உள்ள கட்டிடங்களுக்கு 150 சதவீதமும் சொத்து சரி உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு 100 சதவீதமும், குடியிருப்பு அல்லாத பகுதிகளுக்கு 150 சதவீதமும் உயர்த்தப்பட்டது.
2011-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
வரி விதிக்கப்பட்ட பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு 50 சதவீதமும், முந்தைய சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், திரையரங்குகளுக்கு புதிய முறையில் கட்டிடத்தின் பரப்பளவு, அடிப்படை தெரு கட்டணம் அடிப்படையில் சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. காலி மனைக்கு 50 பைசாவாக இருந்த சொத்து வரி சதுர அடிக்கு ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சொத்து வரி பொது சீராய்வு மேற்கொள்வது குறித்து பொது மக்களிடம் ஆட்சேபனை கருத்தினை கேட்டு அறிவிப்பாக வெளியிட்டது. அறிவிப்பு வெளியிட்ட 30 நாட்களுக்குள் ஆட்சேபனையை தெரிவிக்க அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. கடந்த 11-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. 50-க்கும் குறைவான ஆட்சேபனை கடிதங்கள் வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து சொத்து வரி உயர்வு குறித்து மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 30-ந் தேதி நடைபெறும் மாநகராட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
அதைத் தொடர்ந்து சொத்து வரி உயர்வு குறித்து ஒவ்வொருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப வருவாய்த் துறை முடிவு செய்துள்ளது. ஜூன் மாதம் முழுவதும் இந்த பணி நடைபெறும்.
இது குறித்து மாநகராட்சி வருவாய் அதிகாரி சுகுமார் பாபு கூறியதாவது:-
சொத்து வரி உயர்வு குறித்து ஆட்சேபனை தெரிவித்து 40 மனுக்கள் மட்டுமே வந்துள்ளன. அவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும். அறிவிக்கப்பட்ட சொத்து வரி உயர்வு ஒவ்வொரு கட்டிடங்களுக்கும் எவ்வளவு உயர்ந்துள்ளது என்ற விவரம் நோட்டீஸ் மூலம் தெரிவிக்கப்படுகிறது. ஜூன் மாதம் முழுவதும் 13 லட்சம் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்படும்.
2022-23 முதல் அரையாண்டிற்கான சொத்து வரி விவரம் முழுமையாக தெரிவிக்கப்படும். அதன்படி சொத்து வரி வசூலிக்கும் பணி தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் ஆணையின்படி சொத்துவரி செலுத்துவோரின் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் சொத்து வரி செலுத்துவோர் வரி உயர்வுக்கு தங்களது ஆட்சேபணைகளை தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இந்த ஆட்சேபணைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், மீண்டும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதின் அடிப்படையில் புதிய சொத்து வரி தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைகளை சிறிதும் கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் அதே வரியை தீர்மானித்திருப்பது மக்களின் உணர்வுகளை அரசு செவிசாய்க்கவில்லை என்ற நிலையை உருவாக்கி விடும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
மேற்கண்ட வரி உயர்வு மட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் 6 சதமான சொத்து வரி உயர்த்தப்பட வேண்டுமெனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தினால் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் 6 சதவீதமான வரி உயர்வு ஏற்பட்டு 10 ஆண்டுகளில் நூறு சதவிகித சொத்து வரி உயர்வு ஏற்படும்.
இதன் காரணமாக சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் மிகப்பெரும் வரிச்சுமைக்கு ஆளாக்கப்பட வேண்டிய நிலைமை உருவாகும். எனவே, ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதமான வரி உயர்வு என்பதை முழுமையாக கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் காஞ்சிபுரத்தில் நடந்த கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரு ஆண்டுக் கால தி.மு.க. ஆட்சியிலே எதிர்பார்த்த மக்கள் இன்றைக்கு ஏமாந்து போய் இருப்பது வருத்தத்துக்குரியது, கொடுத்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக தி.மு.க. செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது,
தமிழகத்தில் மட்டும் கல்வியை அரசியல் ஆக்குவது ஒருபோதும் ஏற்புடையதல்ல. புதிய கல்விக் கொள்கையில் ஏற்படும் சந்தேகங்களை விளக்க மத்திய அரசு இருக்கும் போது, இதனை முறையாக எடுத்துக் கொண்டு சென்று சந்தேகங்களை தீர்க்க வேண்டியது அரசின் கடமை.
இந்த புதிய கல்விக் கொள்கையைப் பற்றி தமிழக அரசு பல ஆலோசனைகளை கூறலாம். ஆனால் எதையும் செய்யாமல் கண்மூடித்தனமாக இதனை எதிர்ப்பது ஏற்புடையதல்ல. கல்வியிலே அரசியலை புகட்டுவது பெற்றோர்களும் மாணவர்களும் 100 சதவிகிதம் ஏற்புடையதல்ல.
மக்கள் நலனிலே அக்கறைக்கொண்ட ஆட்சியாளர்களாக மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற காரணத்தால் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைத்து, மக்கள் மீது உள்ள சுமையை மத்திய அரசு குறைத்து வருகிறது. இனிவரும் நாட்களிலும் மத்திய அரசு விலையினை குறைக்கும்.
ஆனால் தி.மு.க. அரசு பெட்ரோல்-டீசல், கேஸ் விலையை குறைக்க மாட்டோம், சொத்து வரியை உறுதியாக உயர்த்துவோம் என சொல்லுவது மட்டுமல்லாமல், ஆண்டுக்கு ஒரு முறை சொத்துவரியினை உயர்த்துவோம் என கூறுவது மக்கள் விரோதபோக்கு.
மேலும் மக்கள் மீது ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
- 15.10.2022-க்குள் சொத்துவரி செலுத்தியவர்களுக்கு ரூ.4.67 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
- தாமதமாக செலுத்தும் சொத்துவரிக்கு கூடுதலாக 2 சதவீதம் தனிவட்டி சேர்த்து செலுத்த வேண்டும்.
சென்னை :
சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி சட்ட விதிகளின்படி, ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல் 15 நாட்களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, செலுத்தப்படும் சொத்து வரியில் 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
2022-23ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சொத்துவரி சீராய்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது 2-ம் அரையாண்டுக்கான சொத்துவரி பொது சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் கடந்த 1-ந்தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது. 18-ந்தேதி வரை 5.17 லட்சம் சொத்து உரிமையாளர்கள் நிலுவை இல்லாமல் சொத்து வரியை செலுத்தி உள்ளனர்.
2-ம் அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் அதாவது 15.10.2022-க்குள் சொத்துவரி செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு ரூ.4.67 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சட்ட விதிப்படி, தாமதமாக சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையுடன் கூடுதலாக 2 சதவீதம் தனிவட்டி, அதாவது அபராதத்துடன் சேர்த்து செலுத்த வேண்டும். எனினும், சொத்துவரி சீராய்வின்படி உயர்த்தப்பட்ட சொத்துவரியை இதுவரை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரி மதிப்பீட்டிற்குரிய உயர்த்தப்பட்ட சொத்துவரியை தனிவட்டி இல்லாமல் செலுத்துவதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, சொத்துவரி சீராய்வின்படி உயர்த்தப்பட்ட சொத்துவரியை இதுவரை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதிக்குள் சொத்து வரியை செலுத்தி 2 சதவீத தனிவட்டியை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சொத்து வரி உயர்த்தப்படும் போது அதன் அடிப்படையில் குடிநீர் வரியும் உயர்த்தப்படுவது வழக்கம்.
- சொத்தின் ஆண்டு மதிப்பை கணக்கிட்டு 30 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது.
சென்னை:
சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், குடியிருப்புகளுக்கு சொத்து வரி கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்டது. இதற்கு மாநகராட்சி மன்ற ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை நகரின் பழைய பகுதிகளுக்கு சொத்து வரி அதிகமாகவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குறைவாகவும் சொத்துவரி உயர்த்தப்பட்டது. ஆண்டு மதிப்பு மற்றும் சொத்து அமைந்து உள்ள தெருவின் மதிப்பு அடிப்படையில் சொத்து வரி உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதல்-அரையாண்டுக்கான சொத்து வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல்-செப்டம்பர் மாதத்திற்கான சொத்துவரி இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். சென்னையில் 12½ லட்சம் சொத்துவரி உரிமையாளர்கள் உள்ளனர்.
சொத்துவரியை தொடர்ந்து மின்கட்டணமும் உயர்த்தப்பட்டது. அவை இந்த மாதம் முதல் நடைமுறைக்கு வருகின்றது.
இந்த நிலையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியும் 7 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. சொத்து வரி உயர்த்தப்படும் போது அதன் அடிப்படையில் குடிநீர் வரியும் உயர்த்தப்படுவது வழக்கம். சொத்தின் ஆண்டு மதிப்பை கணக்கிட்டு 30 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது.
இதில் 23 சதவீதம் சொத்துவரியாக மாநகராட்சி வசூலிக்கிறது. 7 சதவீதம் குடிநீர் வரியாக சென்னை குடிநீர் வாரியம் வசூலிக்கிறது. குடிநீர் வரி உயர்வும் கடந்த ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது.
எப்போதெல்லாம் சொத்து வரி உயர்த்தப்படுகிறதோ அப்போது குடிநீர் வரியும் உயரும் என்று குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 7.75 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. சொத்துவரி உயர்த்தப்பட்ட அளவில் 7 சதவீதம் குடிநீர் வரி வசூலிக்கப்படும்.
உதாரணத்துக்கு ஒருவருக்கு சொத்துவரி ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்ந்து இருக்குமானால் உயர்த்தப்பட்ட ரூ.500-க்கு 7 சதவீதம் குடிநீர் வரி உயர்வு கணக்கிடப்படும். இது வழக்கமான நடைமுறை தான். கடந்த 10 வருடத்திற்கு மேலாக குடிநீர் வரி உயர்த்தப்படவில்லை.
2022-23 நடப்பு ஆண்டிற்கான முதல் அரையாண்டு குடிநீர் வரி தற்போது வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.120 கோடி வருவாய் கூடுதலாக கிடைக்கும்.
உயர்த்தப்பட்ட குடிநீர் வரி குறித்து தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினர்.
- சொத்துவரி, தொழில்வரி இந்த மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் அவர்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படும்.
- தொடர் நோட்டீசுக்கு விளக்கம் தராமல் இருந்து வரும் உரிமையாளர்களின் சொத்து சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர். குடியிருப்பு வீடுகளாகவும் வணிக பகுதியாகவும் இவை கணக்கிடப்படுகிறது. சொத்து வரி ஆண்டுக்கு இருமுறை அரையாண்டு வீதம் வசூலிக்கப்படுகிறது.
சொத்துவரி உயர்த்தப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. புதிய சொத்து வரி மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.1200 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் சொத்து வரியை வசூலிக்க வருவாய் துறை ஊழியர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
முதல் அரையாண்டு காலம் இந்த மாதத்துடன் முடிவதால் ரூ.700 கோடி வசூலிக்க வேண்டும். ஆனால், இதுவரையில் ரூ.490 கோடி தான் வசூல் ஆகி இருப்பதாக வருவாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்னும் ரூ.210 கோடி வசூலிக்க வேண்டிய நிலையில் இலக்குடன் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. புதிய சொத்துவரி மட்டுமல்லாமல் ஏற்கனவே செலுத்தாமல் நிலுவையில் உள்ள சொத்து வரியையும் செலுத்த உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
சொத்துவரி செலுத்தாமல் இருந்து வரும் உரிமையாளர்கள் மீது சீல் வைப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல தொழில் வரி செலுத்தவும் இந்த மாதம் வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தொழில் வரியாக ரூ.250 கோடி வசூலிக்க வேண்டும்.
தொழில் செய்யக் கூடிய நிறுவனங்கள், தொழில் வரி செலுத்த வேண்டும். அதற்கான காலக்கெடுவும் இம்மாதத்துடன் முடிவதால் அதனையும் வசூலிக்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சொத்துவரி, தொழில்வரி இந்த மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் அவர்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படும். தொடர் நோட்டீசுக்கு விளக்கம் தராமல் இருந்து வரும் உரிமையாளர்களின் சொத்து சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது.
- பொதுமக்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டு அவை கடிதங்களாக பெறப்பட்டன.
பல்லடம் :25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரி சீராய்வு செய்யப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதன்படி நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகள், கடைகள் உள்ளிட்டவற்றுக்கு 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது.பல்வேறு தரப்பினரும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.
இது குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டு அவை கடிதங்களாக பெறப்பட்டன. சொத்து வரி உயர்வு தொடர்பாக நகராட்சி கூட்டத்திலும் ஆலோசிக்கப்பட்டு, எதிர்ப்புகளுக்கு இடையே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சொத்து வரி உயர்த்துவதற்கான கட்டடங்களின் நீள, அகலம், உயரம் உள்ளிட்டவை அளவீடு செய்யும் பணி நடந்தது. இதையடுத்து, புதிய வார்டுக்கு மாற்றம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. சீராய்வு செய்யப்பட்ட சொத்து வரி வசூல் செய்யும் பணி, கடந்த 2 மாதங்களுக்கு நிறுத்தப்பட்டிருந்தது.தற்போது புதிய உயர்த்தப்பட்ட சொத்து வரி வசூல் செய்யும் பணி துவங்கியுள்ளது. புதிய சொத்து வரி, பெயர் மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளையும் இனி மேற்கொள்ளலாம் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
- சொத்துவரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் வர்த்தக சங்கத்தினர் வலியுறுத்தினர்.
- திட்டப்பணிகளை விரைவாக முடிக்க இந்த சங்கம் வலியுறுத்தி வருகிறது.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தின் 84-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சங்க தலைவரும், ராம்கோ குரூப் சேர்மனுமான பி.ஆர். வெங்கட்ராம ராஜா தலைமையில் ராஜபாளையம்- தென்காசிரோட்டில் உள்ள பி.எஸ்.குமாரசாமி ராஜா நூற்றாண்டு விழா திருமணமண்டபத்தில் நடந்தது.
முதன்மை சிறப்பு விருந்தினராக இதயம் வி.ஆர். முத்து கலந்து கொண்டு பேசினார். துணைத்தலைவர் பத்மநாபன் வரவேற்றார். செயலாளர் வெங்கடேஸ்வர ராஜா ஆண்டறிக்கை வாசித்தார். செயலாளர் நாராயணசாமி முதன்மை விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.
ராஜபாளையம் தொழில் வர்த்தகசங்க தலைவரும், ராம்கோ குரூப் சேர்மனுமான பி.ஆர். வெங்கட்ராமராஜா தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது:-
ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் வணிகர் நலனை மட்டுமல்லாது பொதுமக்கள் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. ராஜபாளையத்தில் தாமதமாக நடைபெற்று வரும் ெரயில்வே மேம்பால பணிகள், தாமிரபரணி குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை, புறவழிச்சாலை ஆகிய திட்டப்பணிகளை விரைவாக முடிக்க இந்த சங்கம் வலியுறுத்தி வருகிறது.
மற்ற மாநகராட்சி, நகராட்சி சொத்து வரியை விட ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரி அதிகமாக இருப்பதால் அடிப்படை சொத்து வரி விகிதத்தை குறைத்து அதற்கு பின் சொத்து வரியை நிர்ணயிக்கும் படி தொடர்ந்து கோரி வருகிறோம்.
போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க ெரயில்வே சுரங்க பாதை பணிகளையும் விரைந்து முடிக்க வலியுறுத்தி வருகிறோம். கூடுதல் ெரயில் வசதிகள், மின் மயமாக்கல் பணி இவற்றையும் விரைந்து முடிக்க கோரி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. புதிய நிர்வாகிகளை தொழிலதிபர் டைகர்சம்சுதின் முன்மொழிந்தார். கார்த்திக் வழிமொழிந்தார்.
ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க தலைவராக பி. ஆர். வெங்கட்ராமராஜா, துணைத்தலைவர்களாக என் .கே. ஸ்ரீகண்டன்ராஜா, ஆர்.பத்மநாபன், செயலாளர்களாக எம் .சி. வெங்கடேஸ்வரராஜா, ஆர்.நாராயணசாமி, இணைச் செயலாளராக கே.மணிவண்ணன், பொருளாளர் பி.எம். ராமராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இணை செயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார். கூட்டத்தில் கிளை சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சொத்து வரி விதிப்பை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
- சொத்து வரியை எந்த காரணம் கொண்டும் குறைக்கப்போவதில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் சூசகமாக தெரிவித்துள்ளனர்.
சென்னை:
சென்னையில் சொத்துவரியை வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சீரமைக்கப்பட்ட சொத்துவரி பற்றி வீட்டின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் சுமார் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சொத்துவரி குறித்த அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சொத்துவரி மிக அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி கூறி இருந்தது. அதன்படி சுமார் 4 ஆயிரம் பேர் சென்னை மாநகராட்சியில் கடிதம் கொடுத்தனர்.
என்றாலும் சொத்து வரி விதிப்பை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சொத்து வரியை எந்த காரணம் கொண்டும் குறைக்கப்போவதில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் சூசகமாக தெரிவித்துள்ளனர். அதிருப்தியில் இருப்பவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
இதற்கிடையே சொத்து வரியை நீண்ட நாட்களுக்கு நிலுவையில் வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது புதிய அதிரடி நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி சொத்து வரியை நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருக்கும் வீடுகளை சீல் வைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.
அதற்கு முன்னதாக வரி நிலுவையில் உள்ள கட்டிடங்களுக்கு 3 முறை நோடடீஸ் வழங்கி, 6 மாதம் அவகாசம் கொடுக்கப்படும். வீட்டு உரிமையாளர்களே வீட்டை அளந்து வரி விதிப்பு பற்றி தெரிவிக்கலாம். இதில் அலட்சியம் காட்டினால் வீடு சீல் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் சொத்து வரியை முழுமையாக வசூல் செய்தால் ஆண்டுக்கு சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,400 கோடி வருமானம் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. உயர்த்தப்பட்ட சொத்துவரி முழுமையாக வசூலிக்கப்பட்டால் சென்னை மாநகராட்சிக்கு மேலும் பல நூறு கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு சொத்து வரி எவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளது என்பதை ஆன்லைன் மூலம் சென்னை மாநகராட்சி வழங்கி வருகிறது.
- அதன்படி தஞ்சை ரெயிலடியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமை வகித்தார்.
தஞ்சாவூர்:
மின் கட்டணம், சொத்து வரி, விலைவாசி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி தஞ்சை ரெயிலடியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமை வகித்தார்.
ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் குமரேசன், மாவட்டத் தலைவர் பாலா என்கிற பாலமுருகன், மாவட்டத் துணைத் தலைவர் இளங்கோவன், வழக்கறிஞர் பிரிவு சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சொத்து வரி உயர்வு அதிகமாக இருப்பதாக கூறி 3,552 புகார்கள் மாநகராட்சிக்கு இதுவரையில் வந்துள்ளன.
- அதற்கு உரிய விளக்கத்தை அதிகாரிகள் இன்று முதல் அளிக்கிறார்கள்.
சென்னை:
சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு சொத்து வரி கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து உயர்த்தப்பட்டது. 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை பல்வேறு வகையாக பிரித்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரின் பழைய பகுதிகளுக்கு அதிகமாவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குறைந்த விகிதத்திலும் ஒவ்வொரு தெருக்களின் மதிப்பு அடிப்படையில் சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரி எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே செலுத்தப்பட்ட சொத்து வரி எவ்வளவு போன்ற விவரங்கள் ஒவ்வொருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
சொத்து வரி செலுத்தக்கூடிய 13 லட்சம் பேருக்கு சொத்து வரி உயர்வு விளக்க நோட்டீஸ் கடந்த மாதம் முதல் தபால் மூலம் அனுப்பப்படுகிறது. இருப்பினும் சொத்து வரி உயர்வு அதிகமாக இருப்பதாக கருதினால் மாநகராட்சி ஆணையரிடம் முறையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் சொத்து வரி உயர்வு அதிகமாக இருப்பதாக கூறி 3,552 புகார்கள் மாநகராட்சிக்கு இதுவரையில் வந்துள்ளன. அதற்கு உரிய விளக்கத்தை அதிகாரிகள் இன்று முதல் அளிக்கிறார்கள்.
மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி அறிவுறுத்தலின் பேரில் மண்டல துணை கமிஷனர்கள் சொத்து வரி புகாருக்கு உரிய விளக்கத்தை ஆன்லைன் வழியாக வழங்குகிறார்கள்.
இதுகுறித்து மாநகராட்சி துணை கமிஷனர் விஷ்ணு மகாஜன் கூறியதாவது:-
சொத்து வரி உயர்வு அதிகமாக இருப்பதாக பல புகார்கள் வந்துள்ளன. சொத்து வரியை நாங்கள் குறைக்க முடியாது. அரசின் உத்தரவை தொடர்ந்து சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி மன்ற கூட்டத்திலும் சொத்துவரி உயர்வுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. சொத்துவரி எவ்வாறு கணக்கிடப்பட்டது என்ற விவரத்தை ஆன்லைன் வழியாக கொடுக்கிறோம். நியாயமான புகார்களுக்கு தகுந்த விளக்கங்கள் தரப்படுகின்றன.
ஆன்லைன் வழியாக சொத்துவரி புகார் கொடுத்தவர்களுக்கு உயர்வு விளக்கம் கூற தகுந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கார சென்னையாக மாற்ற சொத்துவரியை குறித்த காலத்தில் செலுத்தி உதவிட வேண்டும். சொத்து வரியை முன்கூட்டியே செலுத்துபவர்களுக்கு சினிமா டிக்கெட், கேஷ்பேக் சலுகை வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சிக்கு பெறப்பட்ட புகார்களால் அதிகமாக அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், திரு.வி.க.நகர், அம்பத்தூரில் இருந்து வந்துள்ளது. மத்திய சென்னையில் இருந்து 1986 புகார்களில் 221-ல் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
வடசென்னை பகுதியில் இருந்து பெறப்பட்ட 668 புகாரில் 10 மட்டுமே சரி செய்யப்பட்டுள்ளது. தென் சென்னையில் இருந்து பெற்ற 878 மனுக்களில் 94-க்கு மட்டும் தீர்வு காணப்பட்டுள்ளது.






