search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நோட்டீசை பார்த்ததும் அதிர்ச்சி- சென்னையில் சொத்துவரி கூடுதலாக வசூலிப்பதாக 3,552 பேர் புகார்
    X

    நோட்டீசை பார்த்ததும் அதிர்ச்சி- சென்னையில் சொத்துவரி கூடுதலாக வசூலிப்பதாக 3,552 பேர் புகார்

    • சொத்து வரி உயர்வு அதிகமாக இருப்பதாக கூறி 3,552 புகார்கள் மாநகராட்சிக்கு இதுவரையில் வந்துள்ளன.
    • அதற்கு உரிய விளக்கத்தை அதிகாரிகள் இன்று முதல் அளிக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு சொத்து வரி கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து உயர்த்தப்பட்டது. 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை பல்வேறு வகையாக பிரித்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை நகரின் பழைய பகுதிகளுக்கு அதிகமாவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குறைந்த விகிதத்திலும் ஒவ்வொரு தெருக்களின் மதிப்பு அடிப்படையில் சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சொத்து வரி எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே செலுத்தப்பட்ட சொத்து வரி எவ்வளவு போன்ற விவரங்கள் ஒவ்வொருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    சொத்து வரி செலுத்தக்கூடிய 13 லட்சம் பேருக்கு சொத்து வரி உயர்வு விளக்க நோட்டீஸ் கடந்த மாதம் முதல் தபால் மூலம் அனுப்பப்படுகிறது. இருப்பினும் சொத்து வரி உயர்வு அதிகமாக இருப்பதாக கருதினால் மாநகராட்சி ஆணையரிடம் முறையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் சொத்து வரி உயர்வு அதிகமாக இருப்பதாக கூறி 3,552 புகார்கள் மாநகராட்சிக்கு இதுவரையில் வந்துள்ளன. அதற்கு உரிய விளக்கத்தை அதிகாரிகள் இன்று முதல் அளிக்கிறார்கள்.

    மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி அறிவுறுத்தலின் பேரில் மண்டல துணை கமிஷனர்கள் சொத்து வரி புகாருக்கு உரிய விளக்கத்தை ஆன்லைன் வழியாக வழங்குகிறார்கள்.

    இதுகுறித்து மாநகராட்சி துணை கமிஷனர் விஷ்ணு மகாஜன் கூறியதாவது:-

    சொத்து வரி உயர்வு அதிகமாக இருப்பதாக பல புகார்கள் வந்துள்ளன. சொத்து வரியை நாங்கள் குறைக்க முடியாது. அரசின் உத்தரவை தொடர்ந்து சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சி மன்ற கூட்டத்திலும் சொத்துவரி உயர்வுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. சொத்துவரி எவ்வாறு கணக்கிடப்பட்டது என்ற விவரத்தை ஆன்லைன் வழியாக கொடுக்கிறோம். நியாயமான புகார்களுக்கு தகுந்த விளக்கங்கள் தரப்படுகின்றன.

    ஆன்லைன் வழியாக சொத்துவரி புகார் கொடுத்தவர்களுக்கு உயர்வு விளக்கம் கூற தகுந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கார சென்னையாக மாற்ற சொத்துவரியை குறித்த காலத்தில் செலுத்தி உதவிட வேண்டும். சொத்து வரியை முன்கூட்டியே செலுத்துபவர்களுக்கு சினிமா டிக்கெட், கேஷ்பேக் சலுகை வழங்குகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநகராட்சிக்கு பெறப்பட்ட புகார்களால் அதிகமாக அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், திரு.வி.க.நகர், அம்பத்தூரில் இருந்து வந்துள்ளது. மத்திய சென்னையில் இருந்து 1986 புகார்களில் 221-ல் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

    வடசென்னை பகுதியில் இருந்து பெறப்பட்ட 668 புகாரில் 10 மட்டுமே சரி செய்யப்பட்டுள்ளது. தென் சென்னையில் இருந்து பெற்ற 878 மனுக்களில் 94-க்கு மட்டும் தீர்வு காணப்பட்டுள்ளது.

    Next Story
    ×