search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chinna Pillai"

    • மதுரை சின்னப்பிள்ளைக்கு, வீடு வழங்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு தரப்பில் வாக்குறுதி தரப்பட்டது.
    • சின்னப்பிள்ளைக்கு, 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

    மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "இந்திய ஒன்றியத்திலேயே முதன் முறையாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடங்கிய மகளிர் சுய உதவிக்குழுவில் இணைந்து, கிராமப்புற மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்த மதுரை சின்னப்பிள்ளை அவர்களுக்கு, வீடு வழங்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு தரப்பில் வாக்குறுதி தரப்பட்டது.

    மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை. 2 ஆண்டு கால காத்திருப்புக்குப் பின், இதுகுறித்த வேதனையை சின்னப்பிள்ளை வெளிப்படுத்தியிருந்தார்.

    இதையறிந்த நம்முடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், சின்னப்பிள்ளை அவர்களுக்கு தமிழ் நாடு அரசு சார்பில் 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் புதிய வீடும், 380 சதுர அடி நிலத்திற்கான பட்டாவும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

    'மகளிர் மேம்பாடு' எனும் கலைஞர் அவர்களின் கனவை நனவாக்க உழைத்த சின்னப்பிள்ளைக்கு, 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு என் அன்பும், வாழ்த்தும் என்று உதயநிதி பதிவிட்டுள்ளார்.

    • இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு புதிய வீடு வழங்கப்படுகிறது.
    • வீடு கட்டும் பணி இந்த மாதமே தொடங்கப்படும்.

    சென்னை :

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிடம் கடந்த 2000-ஆம் ஆண்டில் "ஸ்த்ரிசக்தி" புரஸ்கார் விருது பெற்றவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை அவர்கள். அவர் சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.

    இந்த செய்தியினை கேள்விப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பத்மஸ்ரீ சின்னப் பிள்ளைக்கு புதியதாக வீடு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவுறுத்தினார்.

    இதன்படி பத்மஸ்ரீ சின்னப் பிள்ளைக்கு ஏற்கெனவே அரசால் வழங்கப்பட்டுள்ள ஒரு செண்ட் வீட்டு மனையுடன் பில்லுச்சேரி ஊராட்சி, திருவிழாப்பட்டி கிராமத்தில் கூடுதலாக 380 சதுர அடி நிலத்திற்கான பட்டா வழங்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு புதிய வீடு வழங்கப்படுகிறது. வீடு கட்டும் பணி இந்த மாதமே தொடங்கப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வறுமையில் வாடும் எனக்கு அரசு உதவ வேண்டும் என்று பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார். #ChinnaPillai

    மதுரை:

    இந்திய அளவில் பெண்களின் சுய தொழில் முன்னேற்றம் மற்றும் மகளிர் வாழ்வியல், சமூக வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் மதுரையை சேர்ந்த சமூக சேவகி சின்னப்பிள்ளை (வயது 67). இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.

    விருது கிடைத்தது குறித்து சின்னப்பிள்ளையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    எனக்கு விருதுகள் என்பது புதிது அல்ல. தமிழக அரசிடம் கடந்த ஆண்டு அவ்வையார் விருது வாங்கினேன். இப்போது பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. இருந்த போதிலும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று எனக்கு விருது கொடுத்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்.

    மதுரை மாவட்டத்தில் கிராமப்புற பெண்கள் சுய தொழில் மற்றும் குடும்ப நிதி தேவையை சீரும் சிறப்புமாக ஈடுகட்டும் வகையில் நாங்கள் கடந்த 1990-ம் ஆண்டு களஞ்சியம் மகளிர் சுய உதவி குழு அமைப்பை தொடங்கினோம்.

    இதன் காரணமாக எண்ணற்ற பெண்கள் கந்துவட்டி தொல்லையில் இருந்து மீட்கப்பட்டனர். கடந்த 1990-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது பெண்களுக்கு சுய சார்பு மற்றும் சுதந்திரம் கிடைத்துள்ளது.

    இருந்த போதிலும் பெண்கள் இன்னும் கந்து வட்டி கடனில் சிக்கி அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அரசு வங்கிகள் மட்டுமின்றி சிறு, குறு தொழில் நிதி நிறுவனங்களும் பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க முன்வர வேண்டும்.

    இன்றைய காலகட்டத்தில் பெண்களை அதிகம் பாதிப்பு அடைய செய்வது கணவர்களின் மதுப்பழக்கம், மற்றும் சிறு வயது திருமணம் ஆகியவைதான். கணவரின் குடிப்பழக்கம் காரணமாக பெண்கள் இன்றைக்கு குடும்பம் நடத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    இத்தகைய சூழ்நிலையில் அரசாங்கமே மதுபான கடைகளை நடத்துவது வேதனை தருகிறது. எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் மதுபான கடைகளை மூட வேண்டும்.

    எனக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு அவ்வையார் விருது கொடுத்து கவுர வித்தது. அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்று கோரிக்கை விடுக்க தயாராக இருந்தேன். ஆனாலும் அதிகாரிகள் என்னை முதல்வரின் பக்கத்தில் செல்லக்கூட அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

    வறுமையில் வாடும் எனக்கு தமிழக அரசு ரூ. 1000 விதவை உதவித் தொகையை மட்டுமே வழங்குகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்ட எனக்கு மருந்து மாத்திரைகள் வாங்கவே இந்த பணம் செலவாகி விடுகிறது. எனவே எனக்கு அரசு ஏதாவது உதவி செய்தால் கஷ்டம் இல்லாமல் வாழ்வேன். மேலும் ஏழை மாணவ-மாணவிகளுக்கு அரசு வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும்.

    மதுரை மாவட்டத்தில் சிறு வயது திருமணம் தொடர்பாக களஞ்சியம் அமைப்புக்கு தகவல் வந்தால் சம்பந்தப்பட்ட பெற்றோரை அழைத்து பேசி அறிவுரை கூறி வருகிறோம். எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது மகிழ்ச்சி தருகிறது. இது நான் சமூக சேவையில் மேலும் சிறப்பாக செயல்பட தூண்டுகோலாக இருக்கும்.

    இவ்வாறு சின்னப்பிள்ளை கூறினார். #ChinnaPillai

    தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூடவேண்டும் என்று அவ்வையார் விருது பெற்ற மதுரை சின்னப்பிள்ளை தெரிவித்தார். #chinnapillai
    மதுரை:

    கிராமப்புற பெண்களை மேம்படுத்துதல் மற்றும் சமூக சேவைகளில் சிறந்து விளங்குபவர் சின்னப்பிள்ளை(வயது66). முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இவரது காலைத் தொட்டு வணங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மதுரை மாவட்டம் அப்பன்திருப்பதி அருகே உள்ள பில்லுசேரியைச் சேர்ந்த இவர், சமீபத்தில், தமிழக அரசின் அவ்வையார் விருதினை, முதல்-அமைச்சர் பழனிசாமியிடம் இருந்து பெற்றார்.

    விருதுபெற்று மதுரை வந்த சின்னப்பிள்ளை இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்களை மேம்படுத்தும் வகையில் 1990-ம் ஆண்டு 4 பெண்களை ஒருங்கிணைத்து களஞ்சியம் மகளிர் சுய உதவிக் குழுவை தொடங்கினேன். இன்று 16 மாநிலங்களில் 10 லட்சம் பெண்கள் எங்கள் குழுவில் உள்ளனர்.

    கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற பாடுபட்டதற்காக அப்போதைய பிரதமர் வாஜ்பாய், சக்தி புரஸ்கார் விருது வழங்கியது எனது பணிக்கு உற்சாகம் அளித்தது. அந்த விருது எனக்கு மட்டுமல்ல 10 லட்சம் பெண்களுக்கும் உத்வேகத்தை அளித்தது.

    தமிழகத்தில் இன்று மது குடித்து நிறைய பேர் இறந்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    அப்போது நிருபர்கள், அவ்வையார் விருது பெறும்போது முதல்வரை சந்தித்த நீங்கள், இதனை அவரிடம் தெரிவித்திருக்கலாமே என கேட்டனர். விருது வழங்கும் விழாவில் நன்றி எனக்கூற மட்டுமே எனக்கு அறிவுறுத்தப்பட்டது. வேறு எதுவும் பேச அனுமதி இல்லை என்றார். #chinnapillai


    ×