என் மலர்
நீங்கள் தேடியது "Minister Anbil Mahesh Poyyamozhi"
பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவர்களுக்கு இணைய வழி சேவைகள் மற்றும் 2022-23-ம் கல்வி ஆண்டு நாட்காட்டி, ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாட்காட்டி வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் அதற்கான தமிழ்வழி சான்றிதழை பள்ளிக்கு சென்று வாங்கி வந்தனர். இனி சான்றிதழ்கள் ஆன்லைன் வழியாக வழங்கப்படும்.
அதேபோல் இணை படிப்புகளுக்கான சான்றிதழ், மைக்ரேஷன் சான்றிதழ் உள்ளிட்ட 25 வகையான சான்றிதழ்கள் இனி ஆன்லைன் வழியாக இ-சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
இது எளிதான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் பள்ளிகளில் ஆசிரியர்கள் 100-க்கும் மேலான பதிவேடு பராமரித்து வருகிறார்கள். இதனால் கால விரயம் ஏற்படுகிறது. மேலும் வேலை பளுவும் அதிகரிக்கிறது.
இதனை எளிதாக்கும் வகையில் 38 வகையான பதிவேடுகள் இணைய வழியில் பராமரிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆசிரியர்கள் விடுப்புகள் தொடர்பாக விண்ணப்பிப்பதற்கும், படிப்பதற்கு வெளிநாடு செல்ல அனுமதி பெறுவதற்கும் கல்வி அலுவலகங்களை நாட வேண்டி இருந்தது. அவை எளிதாக்கப்பட்டு இருக்கும் இடத்திலேயே விண்ணப்பித்து இந்த பணி பலன்களை பெறலாம். ஆசிரியர்களுக்கு எந்தெந்த நாட்களில் பயிற்சி அளிப்பது என்பது குறித்து நாட்காட்டியும் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இது தவிர காலாண்டு, அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளும் அந்த நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கொரோனாவால் இரண்டு ஆண்டுகள் பள்ளி செயல்படும் நாட்கள் மாறுபட்டு இருந்தது. வருகிற கல்வியாண்டு முதல் வழக்கமான முறையில் வகுப்புகள் நடைபெறும்.
ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 13-ந்தேதி 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஜூன் 20-ந்தேதி 12-ம் வகுப்புகளுக்கும், ஜூன் 27-ந்தேதி 11-ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைக்கப்பட்ட பாடப்பகுதிக்கு அப்பாற்பட்ட வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தால் அந்த வினாக்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இரண்டு மார்க், ஐந்து மார்க் வினாக்கள் பாடத்துக்கு வெளி பகுதியில் இருந்து கேட்டதாக தெரிய வந்துள்ளது. அதனால் மாணவர்கள் பயப்பட தேவையில்லை. மதிப்பெண் குறையும் என்றோ தேர்ச்சி பெறாமல் ஆகி விடுவோமோ என்று பயப்பட வேண்டாம்.
தொழிற்கல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்வது குறித்து நிதித்துறையிடம் இருந்து ஒப்புதல் வரவேண்டும். நீட் தேர்வு விலக்குக்கான முயற்சி தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து நீட் பயிற்சி அளிக்கப்படும். வரும் கல்வியாண்டில் பயிற்சி பெற 16 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 44 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அவர்கள் பள்ளியில் தங்களது பெயர்களை பதிவு செய்து விட்டு பின்னர் இடைநிற்றதால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும்
- இந்த ஆண்டில் 9,494 புதிய ஆசிரியர்களை பணியில் அமர்த்த உள்ளோம்.
திருச்சி:
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார்.
இதில் 322 பேருக்கு பட்டா, 20 பேருக்கு குடும்ப அட்டை, 6 மாற்று திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம், 64 பேருக்கு கல்மந்தை காலணியில் குடியிருப்பு ஒதுக்கீடு உள்ளிட்ட நல திட்டங்கள் ரூ.60 லட்சத்து 22 ஆயிரத்து 510 மதிப்பில் வழங்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டும், சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்த படியும் எந்த காலத்திலும் செல்போனுக்கு அனுமதி கிடையாது. அதையும் மீறி வகுப்பறைக்கு மாணவர்கள் யாராவது செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும். அது திருப்பி தரப்படமாட்டாது என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக்கொள்கிறோம்.
கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் பெரும் உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களின் கவன சிதறலை போக்கும் வகையில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் முதல் ஐந்து நாட்கள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்பு தான் வகுப்புகள் தொடங்கும். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி தொடங்கிய உடன் தன்னார்வ அமைப்புகள் மற்றும் காவல் துறையை சேர்ந்தவர்களை கொண்டு புத்தாக்க பயிற்சி வழங்கப்படும்.
இதில் காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு போக்சோ உள்ளிட்ட சட்டங்கள் குறித்தும், மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.
நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. நாம் கொடுத்த அழுத்தத்தினால் தான் ஆளுநர் நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பினார். எந்த சட்டப்போராட்டமாக இருந்தாலும் முதலமைச்சர் அதில் வெற்றி பெறுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை வழங்கும் படி நேரடியாக பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்தார். அதன் காரணமாக ஜி.எஸ்.டி. நிலுவை தொகை மாநிலத்திற்கு வழங்கப்பட்டது.
முதலமைச்சர் கொடுக்கும் குரல் நியாயமான குரல் என ஒட்டுமொத்த இந்தியாவே ஒத்துக்கொள்கிறது. அது போலத்தான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற குரலும் நியாயமான குரல். அதில் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
தனியார் பள்ளிகள் அங்கு படிக்கும் மாணவர்களை சீறுடை, புத்தகம் உள்ளிட்டவற்றை பள்ளிகளிலேயே வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது. அதேபோல் அரசு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு அவர்களின் மாற்றுச்சான்றிதழை உடனடியாக தாமதமின்றி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
12 வயதுக்கு மேற்பட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அரசு பள்ளியில் சேரும் மாணவர்களை தக்க வைக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். இந்த ஆண்டில் 9,494 புதிய ஆசிரியர்களை பணியில் அமர்த்த உள்ளோம்.
பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் இல்லம்தேடி கல்வியின் தேவை இருக்கிறது. இல்லம் தேடி கல்வி திட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளோம். இரண்டாண்டுகளுக்கு பின் இந்தாண்டு தான் வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் போது தான் இல்லம் தேடி கல்வி திட்டத்தை படிப்படியாக நாம் நிறுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எச்1 என்1 வகை இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியானது.
- பருவநிலை மாற்றம் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது
சென்னை:
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காய்ச்சல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு எச்1 என்1 வகை இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனால், ஆஸ்பத்திரியிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
பருவநிலை மாற்றம் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு இன்யுளூயன்சா காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தற்போது, தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் வீடு திரும்புவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒவ்வொரு பள்ளிகளிலும் உயர் கல்வி வழிகாட்டு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
- மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அங்கு கவுன்சிலிங் எடுத்துக்கொள்ளலாம்.
திருச்சி:
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு தேவையான திட்டங்கள் தொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ.வும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமூக நீதி என்பது அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். பணம் இருப்பவர்களுக்கு ஒரு கல்வி, இல்லாதவர்களுக்கு ஒரு கல்வி என்று இருக்கக்கூடாது என்பது முதல்வரின் கொள்கையாக இருக்கின்றது.
எல்லோருக்கும் சமத்துவமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம். ஆகவே இலவசங்களை நாங்கள் சமூக நீதியாக தான் பார்க்கின்றோம். நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்து இருப்பதாக சொல்லி இருக்கிறீர்கள். நீட் தேர்வு வேண்டாம் என சட்ட போராட்டம் ஒரு பக்கம் நடந்தாலும் நீட் தேர்வு இருக்கும் வரை மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஹைடெக் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
மனரீதியாகவும் அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளிகளிலும் உயர் கல்வி வழிகாட்டு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அங்கு கவுன்சிலிங் எடுத்துக்கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் ஹெல்ப்லைன் நம்பர்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் பல மாணவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். எந்த சூழலிலும் மாணவர்கள் தன்னம்பிக்கை இழக்க கூடாது.
உயிரை மாய்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட வேண்டாம். அதனால் நீங்கள் ஒன்றும் சாதிக்க போவதில்லை. மாறாக பெற்றோருக்கும் இந்த சமூகத்துக்கும் நீங்கள் கவலையை கொடுத்துவிட்டு செல்கிறீர்கள் என்பதே உண்மை. நீட் தேர்வை ரத்து செய்ய ஒட்டுமொத்த கட்சிகள் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றைக்கு ஜனாதிபதி வரை கொண்டு சென்று இருக்கின்றோம்.
சமீபத்தில் கேரளா வந்த உள்துறை மந்திரி அமித்ஷாவிடமும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். நீட் தேர்வில் இருந்து கண்டிப்பாக விலக்கு பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒவ்வொரு பள்ளிகளும் உள்ள மாணவர்கள் 6 முதல் எட்டாம் வகுப்பு வரையிலும், 9 முதல் பத்தாம் வகுப்பு வரையிலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தனி பிரிவாகவும் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
- அனைத்து மாணவர்களுக்கும் நூலகத்தில் உள்ள ஒரு நூல் வாரம் ஒன்றுக்கு வழங்கப்படும். நீங்கள் இதனை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு சென்று படித்து முடித்தவுடன் நூலகத்திற்கு திருப்பி தந்து விட வேண்டும்.
திருச்சி :
பள்ளி மாணவர்கள் தங்களது பாட இடைவேளைகளை பயன்படுத்தி அவர்களின் வாசிப்பு திறனையும் படைப்புத்திறனையும் வளர்த்துக்கொள்ள பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளிகளில் வாசிப்பு இயக்க தொடக்க விழா நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளில் வாசிப்பு இயக்க தொடக்க விழா திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது;-
இந்த திட்டத்தின் படி ஒவ்வொரு பள்ளிகளும் உள்ள மாணவர்கள் 6 முதல் எட்டாம் வகுப்பு வரையிலும், 9 முதல் பத்தாம் வகுப்பு வரையிலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தனி பிரிவாகவும் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் நூலகத்தில் உள்ள ஒரு நூல் வாரம் ஒன்றுக்கு வழங்கப்படும். நீங்கள் இதனை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு சென்று படித்து முடித்தவுடன் நூலகத்திற்கு திருப்பி தந்து விட வேண்டும். பின்னர் படித்த நூல் குறித்து விமர்சனம் எழுதலாம் ஓவியம் வரையலாம் நாடகமும் நடத்தலாம் அது மட்டும் அல்லாமல் நூல் அறிமுகம் புத்தக ஒப்பீடு கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்தல். ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் என மாணவர்களின் படைப்புகள் பள்ளிகளில் சேகரிக்கப்படும்.
இதில் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கெடுக்கலாம். அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூன்று பேர் என்கிற வகையில் 114 பேர் தேர்வு செய்யப்பட்டு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறவிருக்கும் முகாமில் பங்கேற்பார்கள்.
இதில் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உடன் அந்த குழந்தைகள் உரையாடும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அறிவுப்பயணம் என்ற பெயரில் வெளிநாடு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு உலக புகழ் பெற்ற நூலகங்கள் ஆவண காப்பகங்களை பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கவுன்சிலிங் தேவையில்லை
தற்போது தினமும் நூலகத்துக்குச் சென்று புத்தகத்தை படிப்பதற்காக பாட நேரங்களில் 20 நிமிடம் மாணவர்களுக்கு ஒதுக்கி தரப்பட்டுள்ளது.
இப்போது உள்ள மாணவ மாணவிகளுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். என்னைப் பொருத்தமட்டில் நூலகத்தில் இருந்து ஒரு புத்தகத்தை நீங்கள் எடுத்துச் சென்று அதை உள்வாங்கினாலே சிறந்த கவுன்சிலிங் ஆக இருக்கும். புத்தகம் படிப்பதால் மன மாற்றம் ஏற்படும்.
புதிய உலகை படைப்பதற்கு மாணவர்கள் உலக அறிவை பெற வேண்டும். ஒரு புத்தகத்தை படித்து உள்வாங்கி அதை விமர்சனமாக எழுதும் போது நீங்களும் படைப்பாளியாக மாற முடியும். மாணவர்களையும் படைப்பாளிகளாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் முதலமைச்சர் இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். இந்த வாய்ப்பினை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மன அழுத்தத்தின் காரணமாக மாணவ செல்வங்கள் விபரீதமான முடிவை எடுக்கின்றனர்.
- மாணவர்களை விளையாட்டு துறைகளின் மீது கவனத்தை செலுத்த வைப்பதன் மூலம் அவர்களுக்கு புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
3-வது மண்டலமாக இன்று திருப்பூரில் பள்ளிக்கல்வி துறை சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாணவ மாணவிகளின் நலன் கருதி அரசாங்கம் கூறியுள்ள திட்டங்களை எப்படி வெற்றிகரமாக செயல்படுத்துவது என பள்ளி கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மன அழுத்தத்தின் காரணமாக மாணவ செல்வங்கள் விபரீதமான முடிவை எடுக்கின்றனர். அவர்களை விளையாட்டு துறைகளின் மீது கவனத்தை செலுத்த வைப்பதன் மூலம் அவர்களுக்கு புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.
நடக்க கூடாத சோக நிகழ்வு கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது. குழந்தைகள் முழுமையாக தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும். இது போன்ற சம்பவங்களில் காரணகர்த்தா யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் எளிதாக இதில் இருந்து தப்பிவிட முடியாது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 2 மருத்துவர்கள் என நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சதுரங்க போட்டி மாணவர்களுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
- தமிழக முதல்-அமைச்சர் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
தென்காசி:
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தென்காசி வந்துள்ளார்.
2-ம் நாளான இன்று காலை தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு மாதிரி பள்ளியில் நடந்த பள்ளிகள் அளவிலான சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கிவைத்து பேசியதாவது:-
ஐரோப்பாவில் சதுரங்க விளையாட்டானது தோன்றினாலும் சாதனையாளர்கள் அனைவரும் இந்தியர்களாக உள்ளனர். தமிழகத்தில் பிரக்யானந்தா போன்று அரசு பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் திறமை மூலம் சாதனைகள் பல புரிய வேண்டும்.
சதுரங்க போட்டி மாணவர்களுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும். நமது தமிழக முதல்-அமைச்சர் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். என்றும் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மத்தியில் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் இடம் பெற்றுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டது, மாணவர் சேர்க்கை, கல்வி உபகரணங்கள் முறையாக வழங்கப்பட்டது குறித்து ஆய்வு செய்வதற்காக ஆலோசனை கூட்டத்திற்கு பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு செய்துள்ளது.
- அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் வருகிற 15-ந்தேதி சென்னையில் நடக்கிறது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகம், நோட்டு புத்தகம் அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் ஏழை-எளிய மாணவர்கள் இதன் மூலம் பயன் அடைந்து வருகிறார்கள்.
2022-2023-ம் கல்வி ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள் பள்ளி திறந்து முதல் நாள் முதல் வழங்கும் பணி தொடங்கின.
அதற்கு முன்னதாகவே அனைத்து மாவட்டங்களுக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பப்பட்டன. அவை பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிப்பில் சென்றன. வகுப்புகள் படிப்படியாக தொடங்கியவுடன் மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு முறையாக கிடைக்கவில்லை என்ற புகார்கள் வந்தது. அரசியல் கட்சி தலைவர்களும் பாடப்புத்தகங்களை முறையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இந்த நிலையில் பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டது, மாணவர் சேர்க்கை, கல்வி உபகரணங்கள் முறையாக வழங்கப்பட்டது குறித்து ஆய்வு செய்வதற்காக ஆலோசனை கூட்டத்திற்கு பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு செய்துள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் வருகிற 15-ந்தேதி சென்னையில் நடக்கிறது.
இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செயலாளர் காகர்லா உஷா, ஆணையாளர்கள் நந்தகுமார் மற்றும் இணை இயக்குனர்கள் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டத்தில் சீருடை வினியோகம், எண்ணும் எழுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், துணை தேர்வு, இல்லம் தேடிக் கல்வி திட்டம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
மேலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வலியுறுத்துவது, மாணவ-மாணவிகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால் வகுப்புகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
- தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
- இதன்படி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கட்டடங்கள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இன்று நடந்தது. முகாமை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார்.
பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகோபால், மதுரை கலெக்டர் அனிஷ்சேகர், முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பள்ளிக்கல்வித்துறையில் அடுத்தடுத்து செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக இந்த பயிற்சி முகாமில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளிக்கல்வித்துறையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்காக இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் மதிப்பெண்களை கண்டு மனம் தளரக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமைகள் உண்டு. மதிப்பெண் குறைந்த மாணவ-மாணவிகள் தோல்வியடைந்து விட்டோம் என்ற விரக்தி அடையாமல் அடுத்த கட்ட தேர்வில் வெற்றி பெற்று தனித்திறமையை மேம்படுத்திக் கொள்வதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜூலை மாதமே மீண்டும் தேர்வு நடத்தப்பட்டு தடையில்லாமல் உயர்கல்வியை மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்துள்ளோம். தேர்வில் மதிப்பெண் குறைந்தவர்கள் தோல்வி என்ற எண்ணத்தை மாற்றி திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இதற்காக பெற்றோர்களும் மற்ற மாணவர்களுடன் குழந்தைகளை ஒப்பிடக்கூடாது. ஆசிரியர்களும், பெற்றோரும், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி தனித்திறமைகளை ஊக்கப்படுத்த வேண்டும்.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கட்டடங்கள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2500 பள்ளிகளில் மரத்தடி வகுப்புகள் நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.
வருகிற ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் இவைகள் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சருடன் கலந்து பேசி அதற்கான நிதி ஒதுக்கீடு பெற்று தரப்படும். அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் காலி பணி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது 9474 காலிபணி இடங்கள் உள்ளன. தற்போது ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையும் கருத்தில் கொண்டு அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட 10 உபகரணங்கள் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். இதற்கு கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வித்திறனை மேம்படுத்த முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். தேசிய கல்விக் கொள்கையை விட நமது மாநிலத்தில் சிறந்த முறையில் மாணவர்களுக்கு கல்வியை போதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தற்போது 90 சதவீத மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
- வகுப்பறையில் பறிமுதல் செய்யப்படும் செல்போன் திரும்ப வழங்கப்படமாட்டாது என அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
திருச்சி:
திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் ரூ.60.22 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நீட் தேர்வுக்கு எதிரான முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் குரல் நியாயமானது. பல சட்ட போராட்டங்களில் வெற்றி பெற்றதுபோல் நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டத்திலும் முதல்-அமைச்சர் வெற்றி பெறுவார்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்து வருகிறது. எனவே உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம்.
இந்தக் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களை தக்கவைத்துக் கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 9 ஆயிரத்து 494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்திருப்பது உண்மை தான். செல்போனை மாணவர்கள் வகுப்பறைகளுக்கு கொண்டு வரக்கூடாது. மீறி கொண்டு வந்தால் செல்போன் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவை மீண்டும் தரப்படமாட்டாது.
மாணவர்கள் மனதளவில் இறுக்கத்துடன் உள்ளனர். எனவே 11, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளி திறந்து 5 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்படமாட்டாது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மூலம் மாணவர்களுக்கு நாள்தோறும் 2 மணிநேரம் உளவியல் பயிற்சிகள், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படும்.
தனியார் பள்ளியில் கட்டாய மாற்றுச் சான்றிதழ் கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம். தற்போது 90 சதவீத மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்தாத 10 சதவீத மாணவர்கள் சுகாதாரத் துறை மூலமாக உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
- பள்ளிகளிலேயே எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
- இதற்கென தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர் என அரசு அறிவித்துள்ளது.
சென்னை:
தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் நடத்தப்பட்டு வந்த எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் இனி அங்கன்வாடி மையங்களில் செயல்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
இதற்கு அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து பள்ளிகளிலேயே எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 2,381 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்குள் அமைந்த அங்கன்வாடி மையங்கள் பரிசோதனை அடிப்படையில் எல்.கே.ஜி.-யு.கே.ஜி., வகுப்புகளாக மாற்றப்பட்டு, சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்த காரணத்தால், கூடுதல் எண்ணிக்கையில் இருந்த ஆசிரியர்கள் எல்.கே.ஜி.-யு.கே.ஜி., வகுப்புகளை எடுக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால், அரசுப் பள்ளிகளின் தரத்தினை உயர்த்திட, இந்த அரசு கடந்த ஓராண்டாக எடுத்து வரும் பல்வேறு சிறப்பு முயற்சிகளின் காரணமாக, சுமார் 7 லட்சம் மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் மட்டும் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் பல்வேறு வகுப்புகளில் புதிதாக சேர்ந்துள்ளனர். இதன் காரணமாக, அரசுப் பள்ளிகளில் கூடுதலாக கடந்த கல்வியாண்டில் 3,000 வகுப்புகள் தொடங்கப்பட்டன.
அதிகமான எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கையினால் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவை அதிகரித்ததையடுத்து, எல்.கே.ஜி.-யு.கே.ஜி., வகுப்புகளில் பாடம் எடுக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள், பணி மாறுதல் வாயிலாக 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக அண்மையில் சென்றுள்ளனர்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் தொடர்ந்து அவர்களது கல்வியினை தங்கு தடையின்றி பெற அனைத்து நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், எல்.கே.ஜி.-யு.கே.ஜி., வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைக்கிணங்க, அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி.-யு.கே.ஜி., வகுப்புகள் தொடர்ந்து நடைபெற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்கென தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழிஇன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி திருச்சி தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு இன்று முதல் விருப்ப மனு அளிக்கப்படுகிறது. வருகிற 30-ந்தேதி வரை மாவட்ட அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.
தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழையின் காரணமாக வேளாண் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. தமிழக முதலமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர் தலைமையில் அமைத்த குழு அதன் சேத அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
மேலும் மத்திய குழுவினரும் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு சென்றிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட அளவுக்கு முதல்வர் நிச்சயமாக நிவாரணம் வழங்குவார். நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 5 லட்சத்து 85 ஆயிரம் மாணவ மாணவிகள் புதிதாக சேர்ந்து உள்ளார்கள்.
வழக்கமாக அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 66 லட்சமாக இருக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் அது 77 லட்சமாக உயர்ந்துள்ளது. பள்ளிகளின் மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப கட்டமைப்புகளை உடனடியாக உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பாலியல் தொந்தரவுகளில் இருந்து மாணவ-மாணவிகளை காப்பாற்றுவது தொடர்பாக நேற்றைய தினம் மாவட்ட கல்வி அலுவலர்களுடன் கலந்தாலோசித்து உள்ளேன்.

ஏற்கனவே கொரோனா பிரச்சனை காரணமாக பள்ளிகள் திறப்பது பெரும் சிரமமாக இருந்தது. திறந்த பின்னர் மழையின் காரணமாக பள்ளிக்கூடங்களை இடைவிடாமல் கொண்டு செல்ல இயலவில்லை. பள்ளிக்கூடங்கள் அனைத்தும் தினமும் இயங்க தொடங்கும் சூழலில் மேற்கண்ட உளவியல் கவுன்சிலிங் அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.
அதுமட்டுமல்லாமல் பாலியல் ரீதியிலான புகார் எண் சரியாக செயல்படுகிறதா? என்பதையும் இன்றைய தினம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.






